- உழவர் சமூகத்தினர் இன்று சீரோடும் சிறப்போடும் இன்றி வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் போதிய உழைப்பு இல்லையா, திறன் இல்லையா, நேர்த்திதான் இல்லையா? எல்லாம் உண்டு; ஆனால், மதிப்பு இல்லை, வருமானம் இல்லை, விலையில்லை; இன்னும் சொல்லப்போனால் உயிர் நாடிகூட சில சமயத்தில் போய்விடுவதுண்டு.
வாராக் கடன்
- கடன் தள்ளுபடி என்பது தொழிலதிபர்களுக்கு மட்டும்தானா? ஒரு தனிமனிதருக்குக் கிடையாதா? இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்குப்படி ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ 90 நாள்களில் கடனைச் செலுத்தாவிட்டால் அது வாராக் கடன் ஆகும். தற்போது வாராக் கடனின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. வாங்கிய கடனை வேண்டுமென்றே செலுத்தாமல் வெளிநாடுகளில் வசிக்கும் தொழிலதிபர்களும் உள்ளனர்.
- அதே நேரத்தில் வெயிலில் மாடு மாதிரி உழைத்து சிறுகச் சிறுக வங்கியில் கடன் வாங்கும் கூலித் தொழிலாளியும், விவசாயியும் கடனைச் செலுத்தாவிட்டால் மிஞ்சுவது ஜப்தி, அவமரியாதை என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால், தாங்கள் வாங்கிய கடனை எப்படியாவது செலுத்திவிடவேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்கள் விவசாயிகள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
- மேலும், ஒரு விவசாயி தன் தோட்டத்தில் கூலிவேலை செய்வோருக்கு, தன்னிடம் பணம் இல்லையென்றாலும் எப்படியாவது யாரிடமாவது கடன் பெற்று கூலிப் பணத்தை சரியான நேரத்தில் கொடுத்து விடுவார்.
- உழவர்களுக்கும், வியாபாரிக்கும் உள்ள வித்தியாசத்தை ஓய்வு பெற்ற நூலகர் ஒருவர் இவ்வாறு அழகாகக் கூறினார்: "முள் தராசில் சரியான அளவைவிட ஒரு கத்திரிக்காய் கூடுதலாக ஒருவர் போடுகிறார் என்றால், அவர் விவசாயி; அதுவே அளந்து அளந்து கூடுதலாக வந்த ஒரு கத்திரிக்காயை தராசில் இருந்து எடுத்து விடுகிறார் என்றால் அவர் வியாபாரி. ஏனெனில், உழுதவன் என்றுமே கணக்குப் பார்க்க மாட்டான். அவனின் நோக்கமே தான் விளைவித்ததை விற்று மக்கள் பசியாற வேண்டும் என்பதே' என்றார்.
- உலகின் 26 நாடுகளில் (ஓஇசிடி) விவசாயம் தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வறிக்கை ஒன்றை பொருளாதார கூட்டுறவு மேம்பாட்டு நிறுவனம் 2017-இல் வெளியிட்டது. அதன்படி இந்தியா உள்பட மூன்று நாடுகளில் விவசாயம் லாபகரமாக இல்லை. அதிலும், இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாகவே விவசாயம் நஷ்டத்தில்தான் உள்ளது என்றும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக உணவுப் பொருள்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே முக்கியக் காரணம் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. மேலும், விவசாய வருமானம் 2000-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை சராசரியாக 14 சதவீத அளவுக்கு சரிவைச் சந்தித்தது என்றும் 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டில் இது ஆண்டுக்கு 6 சதவீத சரிவைச் சந்தித்தது என்றும் கூறுகிறது.
உற்பத்திப் பொருள்
- அதிலும் 2000-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்திய விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பொருளுக்கான சர்வதேச சந்தை விலையில் மிகக் குறைவாகவே பெற்றுள்ளனர். அதற்கு ஏற்றுமதிக்கு தடை விதித்தது, சர்வதேச அளவில் உணவுப் பொருள்கள் விலை குறைந்து வரும்போது அதை பரிசீலிக்காதது, முக்கியமாக விவசாயத்தில் முதலீடுகளை அதிகரிக்காமல் அரசு மானியத்தையே தொடர்ந்து வழங்கி வந்தது போன்றவை காரணமாகக் கருதப்படுகின்றன.
- உணவுப் பொருளுக்கு நுகர்வோர் தரும் விலைக்கும் விவசாயி அந்தப் பொருளை விளைவித்ததற்கு பெரும் தொகைக்கும் இடையே இயல்பாகவே பெரும் வித்தியாசம் இருப்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது.
இடைத்தரகர்கள்
- இதற்கிடையில் இடைத்தரகர்கள்தான் அதிகம் லாபம் பெறுகிறார்கள் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதற்கான உதாரணம் 2017-ஆம் ஆண்டில் காரிஃப் பருவத்தில் கோதுமை, சமையல் எண்ணெய், சோயா முதலான பயிர்களின் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியது.
- இவை எல்லாம் ஒருபுறம் என்றால், இயற்கையின் பாதிப்பும் மறுபக்கம் விவசாயிகளின் கழுத்தை அவ்வப்போது நெரித்து விடுகிறது. பாசனம் இன்றி தவிக்கும் நெல் மணிகள், காற்றுக்கு அச்சப்படும் வாழைகள், மழைக்கு ஏங்கும் பயிர்கள், புயலுக்கு தப்ப ஆசைப்படும் தென்னைகள், வெள்ளத்தில் சிக்கிவிடாது தப்பிக்க முயலும் பாசன ஏரிகள் ஆகியவற்றைக் கடந்து தப்பித்து காசு பார்த்தால்தான் அடுத்த போகம். இல்லையேல் வாங்கிய கடன் வட்டி போட்டு குட்டி போட ஆரம்பித்து விடும்.
- "இவற்றையெல்லாம் பார்த்து நான் வீழ்ந்து விடுவேன் என்று நினைத்தாயோ' என்று முழங்கி பல விவசாயிகள் பீனிக்ஸ் பறவையாய் எழுந்து வெற்றிநடை போடுகின்றனர். இந்தியாவில் உள்ள 62 சதவீத விவசாயிகள் 80 ஹெக்டேருக்கும் குறைவான நிலத்தில் சாகுபடி செய்து வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்தாலும் வேறு ஒரு தொழிலுக்கு இவர்கள் மாறுவதில்லை. காரணம், அவர்களின் உயிர்நாடி ஏர்நாடிதான்.
- எனவே, விவசாயிகளின் நலன் காக்க வேளாண் விளைபொருள்களின் விலையை அனைத்து விவசாயிகளுக்கும் தகவல் தொழில்நுட்ப உதவியுடன் தெரியப்படுத்த வேண்டும்; செயலிழந்து வரும் உழவர் சந்தைகளுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும்; மாற்றுப் பயிர் மற்றும் சுழற்சி முறையில் பயிர் சாகுபடி செய்ய விவசாயிகளை அறிவுறுத்த வேண்டும்; இதற்கான சந்தை தொடர்பை அரசாங்கம் விவசாயிகளுக்கு ஏற்படுத்தித் தர வேண்டும்.
- மத்திய அரசின் கெளரவ உதவித் தொகையை அதிகரிக்க மாநில அரசும் இந்தத் திட்டத்தில் இணைய வேண்டும். எனவே, உழவர்களின் கரங்களை வளப்படுத்தி உழவர்க்கும் வந்தனை செய்வோம்.
நன்றி: தினமணி (20-07-2019)