மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம்
இந்திய நாட்டின் முதுகெலும்பு விவசாயம். மாறிவரும் பருவநிலை, இயற்கைச் சீற்றங்கள், சந்தைப்படுத்துதல், தொழிலாளர்களின் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாய மட்டுமின்றி விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கடந்த 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது முதல் விவசாயப் பணிகளுக்குக் கூலி ஆள்கள் தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் வேலைக்குச் செல்லும் பெரும்பாலானோர் கிராமப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயக் கூலிகளே இவர்களுக்கு விவசாய வேலையைவிட ஊரக வேலைவாய்ப்புத் திட்ட வேலை மிகவும் சுலபமாக இருப்பதால், இந்தத் திட்டத்தில் வேலைக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
இதன் காரணமாக, விவசாய வேலைக்குப் பணி செய்வோர் தட்டுப்பாடும், அதன் காரணமாக கூலி உயர்வும் அதிகரித்துள்ளது.
ஊரக வேலைவாய்ப்புத் திட்ட தொழிலாளர்களை, தற்போது தனியார் நிலங்களில் விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள அரசு அனுமதித்திருந்தாலும், அவர்கள் அந்தப் பணிகளுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படுகிறார்களா என்பது கேள்விக்குறியே!
வேளாண் பொருட்கள் இடைத்தரகர்கள்
விவசாயத்துக்கு கூலி ஆள்கள் கிடைக்காமல் வேளாண் பொருள்களை விளைவித்து, அவற்றை விற்பனைக்காக சந்தைகளுக்கும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கும் விவசாயிகள் கொண்டு செல்லும்போது, அங்கு இடைத்தரகர்கள், வியாபாரிகள் அவர்களுக்குள் மறைமுக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு மிகவும் மலிவான விலைக்கு விவசாயப் பொருள்களை வாங்குகின்றனர்.
மேலும், வேளாண் பொருள்களை வியாபாரிகள் பதுக்கி வைத்துக்கொண்டு தற்காலிக விலையேற்றத்தை உருவாக்குகின்றனர்.
இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளால், வேளாண் பொருள்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு கிடைக்கும் விலைக்கும், அவற்றை நுகர்வோர் வாங்கும் விலைக்கும் இடையே மாபெரும் வேறுபாடு ஏற்படுகிறது.
விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வந்தாலும், அவர்களின் பிரதான கோரிக்கையாக இருப்பது குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.
இந்தக் கோரிக்கை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, புது தில்லியில் கடந்த டிசம்பர் மாதம் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஒரே நேரத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தியாவில் உற்பத்தியாகும் வேளாண் பொருள்களில் 85 சதவீதப் பொருள்கள் உள்நாட்டு தேவையை நிறைவு செய்கின்றன. 15 சதவீதப் பொருள்களே வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
ஆனால், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் வேளாண் பொருள்களின் அளவு இந்தியாவைவிட அதிகமாகும்.
இந்தியாவில் விளை நிலங்களிலும், ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் பாதுகாப்பாக வைக்கப்படும் பகுதிகளிலும் வேளாண் பொருள்கள் அதிகளவில் வீணாகி வருகின்றன.
இந்தியாவில் ஆண்டுதோறும் உற்பத்திக்குப் பிறகு வீணாகும் உணவுப் பொருள்களின் மதிப்பு ரூ. 1 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
வேளாண்மை பரவலாக்குதல்
வேளாண் பொருள்களைப் பரவலாக்குவதன் மூலம் உணவுப் பொருள்கள் வீணாவதைத் தடுக்க முடியும். இதற்காக அரசு தனி அமைப்பை ஏற்படுத்துவதுடன், அதிகாரிகளையும் நியமித்து வேளாண் பொருள்கள் அதிக விளைச்சல் உள்ள பகுதியில் இருந்து தேவை உள்ள இடங்களுக்கு உடனடியாகக் கிடைக்க ஏற்பாடு செய்யலாம்.
மேலும், உணவுப் பொருள்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அரசு சார்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மத்திய அரசின் இணையதளம் குறித்து பரவலாக்குவதற்காக செல்லிடப்பேசி செயலியை உருவாக்கி, அது குறித்தும் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
வேளாண் பொருள்கள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊரக வேலைவாய்ப்புத் திட்டத் தொழிலாளர்களை அதிகளவில் விவசாயப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும். தற்போது தமிழக அரசு சார்பில் அமைக்கப்படும் வேளாண் பொருள்கள் பதப்படுத்தப்படும் மையம், சூரிய கூடார உலர்த்தி (சோலார் ட்ரையர்) உள்ளிட்டவற்றை ஏற்கெனவே உள்ள உழவர் சந்தைப் பகுதியில் அமைத்து, உழவர் சந்தையை நவீனப்படுத்தலாம்.
இயற்கை விவசாயம் குறித்தும், நெல், பருத்தி, வாழை உள்ளிட்ட வேளாண் பொருள்களின் வகைகள் குறித்தும் பாடத் திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் பள்ளிப் பருவத்திலிருந்தே விவசாயம் குறித்து மாணவர்கள் அறிந்து கொள்ள வாய்ப்பாக அமையும்.
மேலும், இயற்கை விவசாயத்தை விவசாயிகள் அதிகளவில் மேற்கொள்ளும் வகையில் கண்காட்சிகளை நடத்துவதுடன், கருத்தரங்கம் உள்ளிட்டவற்றையும் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
விவசாயிகள் வாங்கிய விவசாயக் கடன்களையும், வட்டிகளையும் வங்கிகள் தள்ளுபடி செய்வது அவர்களுக்கு தற்காலிகத் தீர்வாகத்தான் அமையும்.
எனவே, எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரையை அரசு முழுமையாக அமல்படுத்த முன்வர வேண்டும். விவசாயம் லாபகரமான தொழிலாக மாறினால், வேலையில்லாத் திண்டாட்டம் முடிவுக்கு வரும். படித்த இளைஞர்கள் பலர் விவசாயத்தில் ஈடுபட முன் வருவர்.