இந்திய ரிசர்வ் வங்கியின் தன்னிச்சையான செயல்பாட்டுக்கு எதிராகவும், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் பிரச்னை குறித்த மெத்தனத்துக்கு ஆதரவாகவும் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் ஒரு தீர்ப்பு வேதனையளிக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி பொதுத் துறை வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. அதன் மூலம், வட்டித் தவணை செலுத்தத் தவறிய ரூ.2,000 கோடிக்கும் அதிகமான கடன்களைத் தேசியத் தொழில் நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் ("நேஷனல் கம்பெனி லா டிரிபியூனல்') ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் ரிசர்வ் வங்கியின் உத்தரவு.
தேசியத் தொழில் நிறுவனச் சட்டத் தீர்ப்பாயம்
வட்டித் தொகையைச் செலுத்தாத கணக்குகள் தவணைத் தவறினால், அடுத்த 180 நாள்களுக்குள் கடனைத் திருப்பித் தருவதற்கான திட்ட வரைமுறையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்யாமல் போனால், அந்தத் தொழில் நிறுவன வாடிக்கையாளர்களை, தேசியத் தொழில் நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்.
தேசியத் தொழில் நிறுவன சட்டத் தீர்ப்பாயம் அந்தக் கடன் தொகையை வாராக் கடனாகக் கருதி, திவால் சட்டத்தின் அடிப்படையில் வசூல் செய்ய நடவடிக்கை எடுக்கும்.
வாராக் கடன் பட்டியலுக்குத் தள்ளப்பட்டிருக்கும் எரிசக்தித் துறை உள்ளிட்ட சில துறையைச் சேர்ந்த நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தை அணுகின. நிலக்கரி அல்லது எரிவாயு பற்றாக்குறை, மின்சாரப் பகிர்வு நிறுவனங்கள் பணம் தராமல் போனது உள்ளிட்ட தங்களை மீறிய காரணங்களால்தான் வங்கிகளில் பெற்ற கடனுக்கு வட்டியும் செலுத்த முடியாமல், கடனையும் திருப்பிக் கொடுக்க முடியாமல் தாங்கள் தடுமாறுவதாகவும், அதனால் தங்களது நிறுவனங்களை திவால் சட்டத்தின் அடிப்படையில் அணுக முற்படுவது தவறு என்றும் உச்சநீதிமன்றத்தில் அந்த நிறுவனங்கள் முறையீடு செய்தன. அவற்றின் முறையீட்டை ஏற்றுக்கொண்டு இந்திய ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்திருக்கிறது.
தீர்ப்பு
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு, வங்கித் துறை சீர்திருத்தத்துக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். அனைத்து பொதுத் துறை வங்கிகளும் தங்களது வரவு-செலவுக் கணக்கில் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிக்கவும், வாராக் கடன் பிரச்னையை எதிர்கொள்ளவும் கடந்த நான்கு ஆண்டுகளாக இந்திய ரிசர்வ் வங்கி வற்புறுத்தி வருகிறது. வங்கிகளில் வாராக் கடன் குறித்த உண்மை நிலவரத்தை வெளிப்படைத்தன்மையுடன் எதிர்கொள்ளவும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் ரிசர்வ் வங்கி வற்புறுத்தி வருகிறது. 40-க்கும் அதிகமான வாராக் கடன் கணக்குகளை தேசியத் தொழில் நிறுவன சட்டத் தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க பொதுத் துறை வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருக்கிறது.
பொதுத் துறை வங்கிகளில் ரூ.2,000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கியிருக்கும் 70-க்கும் அதிகமான நிறுவனங்களின் மொத்த வாராக் கடன் நிலுவைத் தொகை ரூ.80 லட்சம் கோடி. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் தொகை ரூ.9.20 லட்சம் கோடி. அதாவது, வங்கிகள் வழங்கியிருக்கும் மொத்தக் கடன் தொகையில் இது 10.2%. பொதுத் துறை வங்கிகள் கடனாக வழங்கியிருக்கும் மேலே குறிப்பிட்ட ரூ.9.20 லட்சம் கோடி என்பது மக்களின் வரிப் பணம் என்பதை மறந்துவிடக் கூடாது.
அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் வாராக் கடன் பிரச்னையை எதிர்கொள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்கள் மூலம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகள் தோல்வியடைந்தன. பெரும்பாலான வாராக் கடனாளிகளும் நீதிமன்றத்தை அணுகித் தடையுத்தரவு பெற்று, வழக்கு நிலுவையில் இருப்பதால் கடனைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருகிறார்கள்.
2009
2009-இல் உலகின் பெரிய பொருளாதாரங்கள் என்று கருதப்படும் ஜி-20 நாடுகளின் வரிசையில் மிகக் குறைந்த வங்கி வாராக் கடன் நிலுவையில் இருக்கும் நாடாக இந்தியா இருந்தது. இப்போது உலகின் மிக அதிகமான வாராக் கடன் நிலுவையில் உள்ள நாடாக, முந்தைய இரண்டாவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாலும் (2009-2014), இன்றைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாலும் (2014-2019) நாம் மாற்றப்பட்டிருக்கிறோம் என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பிட்டாக வேண்டும்.
பொதுத் துறை வங்கிகளில் கடன் பெற்றிருக்கும் எல்லா நிறுவனங்களும் வேண்டுமென்றே கடனைத் திருப்பித் தராத நிறுவனங்கள் என்றோ, விஜய் மல்லையா, நீரவ் மோடி போன்ற மோசடியாளர்கள் என்றோ வகைப்படுத்திவிட முடியாது. எரிசக்தித் துறை நிறுவனங்கள் பெற்ற கடன், வாராக் கடனாக மாறியதற்கு அவர்களை மீறிய சில காரணங்கள் இருக்கின்றன.
பொதுத் துறை வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்புவதற்கு முன்பு, வாராக் கடன்களாக மாறியிருக்கும் கணக்குகளின் உண்மையான பின்னணியை ஆராய்ந்து விதிவிலக்கு வழங்கியிருக்கலாம். அந்தத் துறைகளின் முறையீடுகளை ரிசர்வ் வங்கியே பரிசீலித்திருந்தால், அவை நீதிமன்றத்தை அணுகியிருக்காது. ரிசர்வ் வங்கி கடுமையான நிலைப்பாட்டை மேற்கொண்டதன் விளைவால், நல்ல நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு, இப்போது உச்சநீதிமன்றத்தால் ஒட்டுமொத்தமாகத் தடுக்கப்பட்டு விட்டது.
போலி நிறுவனங்களுக்கும், மோசடியாளர்களுக்கும் வாராக் கடன்களுக்கும் சாதகமாகத் தீர்ப்பு மாறிவிட்டிருப்பது வேதனையளிக்கிறது. மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் இது குறித்து உடனடியாகத் தீவிர ஆலோசனை மேற்கொண்டு பிரச்னையை அணுகி அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொண்டாக வேண்டும்.