நாட்டில் இப்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழ்நிலையில், வேலையின்மை, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்காதது, போதிய அளவுக்கு வேலைவாய்ப்பை உருவாக்காமல் முன்னிறுத்திக் காட்டப்படும் வளர்ச்சி ஆகியவை கவலை தரும் பிரச்னைகளாக உள்ளன. ஆளும் கட்சியாக இருப்பவர்கள் எப்போதுமே இந்த ஒரு கேள்வியை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. "எங்கே புதிய வேலைவாய்ப்புகள்?' என்பதுதான் அது.
வேலைவாய்ப்பு
பொருளாதாரக் கொள்கைகளைப் பொருத்தவரையில் முதலீட்டை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை அதிகரிப்பது, தொழில் தொடங்கும் நடைமுறைகளை எளிதாக்குவது, உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அரசு அதிகம் செலவிடுவது போன்றவை வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் குறிப்பிடத்தக்க வகையில் பங்கு வகிக்கும் என்பது உண்மை.
இதே பொருளாதாரக் கொள்கைகள் திரும்பத் திரும்ப அமல்படுத்தப்படும் அதே நேரத்தில், வேலைவாய்ப்பு உருவாக்கம் குறித்த சில நுட்பமான உண்மைகள் புரிந்து கொள்ளாமல் விடப்படுகின்றன என்பதே மிகவும் கவலையளிக்கும் விஷயம்.
தேசிய அளவில்.....
தேசிய அளவில் மிகப் பிரமாண்டமான முறையில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தொடங்கியும் வைக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் பலவற்றின் நிலை, விரைவிலேயே சிறகொடிந்த பறவையாக மாறிவிடுகின்றன.
இதில், திட்டங்கள் சரியாக இல்லையா அல்லது பன்முகத்தன்மையான மாநிலங்களைக் கொண்ட நமது நாட்டில், அங்குள்ள அரசு இயந்திரங்கள் திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தவில்லையா எனக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
முக்கியமாக, கட்சி ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் கொள்கை வேறுபாடுள்ள மாநில அரசுகள் மத்திய அரசின் திட்டங்களை எந்த அளவுக்குச் சிறப்பாக நிறைவேற்றுகின்றன என்பது முக்கியமானது. மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தாலும், மத்தியில் ஆளும் கூட்டணியில் உள்ள கட்சி, மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் திட்டங்கள் வெகு இயல்பாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன.
அதே நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசின் திட்டங்கள் முழுவீச்சில் அமல்படுத்தப்படுவது என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், திட்டங்களால் மக்களுக்கு அதிகபட்ச பயன்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்குப் பதிலாக, அதற்கான நற்பெயரை யார் பெறுவது என்பதில்தான் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
இதுபோன்ற அபாயகரமான அரசியல் விளையாட்டு கைவிடப்படாவிட்டால், சிறந்த திட்டங்களை நிறைவேற்றி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது என்பது கடைசிவரை கானல் நீராகவே இருக்கும். முக்கியமாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களில் இது மிகவும் சிக்கலான பிரச்னையாக உருவாகிறது.
மற்ற துறைகளில்
வேளாண்மைத் துறை, தொழில் துறை, பல்வேறு சேவைத் துறை என வெவ்வேறு மூன்று துறைகளிலும் வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். இந்தத் துறைகளிலும்கூட ஒவ்வொரு பிராந்தியத்திலும் வெவ்வேறு பிரச்னைகள் உள்ளன.
மகாராஷ்டிரத்தில் விதர்பா பகுதியில் வறட்சியால் பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் கேரளத்தில் பல பகுதிகளில் மழை, வெள்ளத்தால் விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. வேளாண்மைத் துறையில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கையாக வங்கிகளிலிருந்து விவசாயத்துக்கு கடன் கிடைப்பதை எளிதாக்குவது உள்ளிட்ட கொள்கைகளை அரசு அறிவிக்கிறது.
விவசாயக் கடன் வட்டியில் சலுகை உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டும், கிராமப்பகுதிகளில் கந்து வட்டிக்குக் கடன் கொடுப்பவர்களிடமிருந்து விவசாயிகளை மீட்க முடியாத நிலையே உள்ளது.
இதனால், பல அவலங்கள் நிகழ்கின்றன.
தொழில்துறை வளர்ச்சியில் முக்கியமாக குறு மற்றும் சிறு தொழில் துறைகள் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவில் ஊக்குவிக்கப்படாமலேயே உள்ளன.
தொழில்முனைவோருக்கு போதிய அளவில் கடன் கிடைக்கவில்லை என்பது இப்போது வரை பெரும் பிரச்னைதான். கடன் கொடுப்பதில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் வங்கிகள் செயல்படுவது போன்றவை சிறு, குறு தொழில் துறைகளைப் பாதிக்கிறது. சேவைகள் துறைகளிலும் இதேபிரச்னைதான் நீடிக்கிறது.
இது தொடர்பாக தெளிவான கொள்கைகளை அரசு வகுத்துள்ளது என்றாலும், நடைமுறை என்று வரும்போது விவசாயிகளும், சிறு தொழில் புரிவோரும் பெரிய மாற்றத்தைச் சந்திக்க முடியவில்லை. பல திட்டங்களை அரசு அறிவித்தும், கொள்கைகளை வடிவமைத்தும் அவை விழலுக்கு இறைத்த நீராகவே உள்ளன.
அனைத்துத் துறையிலும் முழு ஒத்துழைப்பையும் பெறுவது, திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவது ஆகியவற்றைக் கடைப்பிடித்தால் மட்டுமே மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ஆர்வமின்மைக்கு முடிவு கட்டப்பட்டு, உத்வேகம் ஊட்டப்பட வேண்டும்.
திட்டங்கள்
வேலைவாய்ப்புகளை அதிகரிப்பது தொடர்பான திட்டங்களில் ஊழலும், முறைகேடுகளும் தடுக்கப்பட்டால்தான் வளர்ச்சி எட்டப்படும்.
தொழில் தொடங்குவதற்குச் சிறந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இப்போது 8-ஆவது இடத்தில் இருக்கலாம். இது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஆர்வத்தையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும்.
ஆனால், நமது நாட்டில் தொழில்தொடங்கும் ஆர்வத்தில் உள்ள ஓர் இளைஞர், சிறிய அளவில் தொழிலைத் தொடங்க முயன்றால், அரசு அளிக்கும் சலுகைகளையும், உதவிகளையும் தொடர்புடைய துறைகள் மூலம் அவர் பெறுவது கடினமான விஷயம்தான். உள்ளாட்சி அமைப்புகள் முதல் பல்வேறு அரசுத் துறைகள் வரை பல்வேறு அனுமதிகளைப் பெற பெருமளவில் பணத்தை செலவிட வேண்டியுள்ளது.
இந்தியா முழுவதும் பரவியுள்ள பல்லாயிரக்கணக்கான அரசு அலுவலகங்களும், அரசு நிர்வாக அமைப்புகளும் சிறு தொழில் தொடங்குபவர்களிடம் இரக்கமற்ற வகையிலேயே செயல்படுகின்றன என்றால் அதுமிகையாகாது. இதனால், இந்தியாவில் சிறு, குறு தொழில் தொடங்குதல் என்பது இப்போது இல்லாவிட்டால் எப்போதாவது முழுமையாக முடிந்து போய்விடுமோ என்ற அச்சம் மேலோங்குகிறது.
மற்றொருபுறம் மிகப் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், அரசு நிர்வாகத்துடன் கைகோத்து அரசின் திட்டங்களை, தங்களுக்குக் கொள்ளை லாபம் கிடைக்கும் அளவுக்குப் பயன்படுத்துகின்றன. இதனால், சிறு தொழில் நடத்துவோர், நேர்மையற்ற போட்டியைச் சந்தித்து நொடிந்து போகும் நிலை ஏற்படுகிறது. இதில், அரசும் பெரிய அளவில் தலையிட முடிவதில்லை.
இதுபோன்ற பிரச்னைகளுக்கு நடுவே, விவசாயிகளும், சிறு தொழில் நடத்துவோரும் எப்படி தங்களையும் காத்துக் கொண்டு, வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும்? வேலைவாய்ப்பு உருவாக்கம் என்ற விஷயத்தில் உள்ள இதுபோன்ற பிரச்னைகள் இதுவரை கண்டுகொள்ளப்படவில்லை. தேசிய அளவில் அரசு வகுக்கும் கொள்கைகளும், அமல்படுத்தும் திட்டங்களும் விவசாயிகளின் பிரச்னையைத் தீர்ப்பதாகவும் பயனளிப்பதாகவும் இல்லை.
இந்த விஷயத்தில் அரசியல் வேறுபாடுகளை மறந்து தேசிய அளவில் மிகப் பெரிய கருத்தொற்றுமை தேவைப்படுகிறது. இதனை ஏற்படுத்தாவிட்டால், வேலைவாய்ப்பு உருவாக்கம் தொடர்பாக அளிக்கப்படும் வாக்குறுதிகள், கடைசி வரை வெறும் வாக்குறுதிகளாகவே இருக்குமே தவிர ஆக்கப்பூர்வமாக அமையாது.
வேலைவாய்ப்பு உருவாக்கம்
வேலைவாய்ப்பு உருவாக்கம் சார்ந்த திட்டங்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், நுட்பமான பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உண்மையான கூட்டாட்சி என்பது போட்டிபோட்டுச் செயல்படுவதல்ல, கைகோத்துச் செயல்படுவது என்பதை மத்திய, மாநில அரசுகள் உளப்பூர்வமாக உணர வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு அரசும் வாக்குறுதி அளிக்காமலேயே நிறைவேற்ற வேண்டிய கடமை இது. திட்டங்களைச் செயல்படுத்தும்போது மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகங்களில் காணப்படும் அலட்சியப் போக்கு, மோசமான நிர்வாகம் போன்றவை இலக்கை எட்டுவதில் பெரும் பிரச்னைகளையே ஏற்படுத்தும்.
"வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது. ஆனால், அது கடினமானது என்பதை நாம் எப்போது உணர்கிறோமோ, அப்போதே அது சற்று எளிதாக மாறிவிடுகிறது' என்பது அமெரிக்க எழுத்தாளர் ஸ்காட் பெக் தனது "தி ரோடு லெஸ் டிராவல்ட்' நூலில் தெரிவித்துள்ள கருத்து. வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் நாம் எதிர்கொள்ளும் சவால்களுக்கும் இந்த உண்மை பொருந்தும்.