- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா (2023), நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு நடை பெற்றுள்ள மக்களவைத் தேர்தல் இது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலைவிட (78) குறைவான எண்ணிக்கையிலேயே (74) பெண்கள் இந்த முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
எண்ணிக்கையும் சதவீதமும்:
- 1957இல் 494 தொகுதிகளுக்கு நடைபெற்ற இரண்டாவது மக்களவைத் தேர்தலில் 1,474 ஆண்களும் 45 பெண்களும் போட்டியிட்டனர். ஆண்களில் 472 பேரும் பெண்களில் 22 பேரும் வென்றனர். இவர்களின் வெற்றி விகிதம் முறையே 32.02%, 48.89%. அதற்குப் பிறகு - தற்போதைய தேர்தல் வரை பெண்களின் வெற்றி விகிதமே அதிகம். அதாவது, பெண் வேட்பாளர்களுக்கு மக்கள் வாக்களிக்க விரும்புவதில்லை என்கிற பொதுப்புத்திக்கு மாறாக, பெண்களின் வெற்றி விகிதம் ஆண்களைவிட அதிகம். இருந்தாலும், எண்ணிக்கையின் அடிப்படையில் பெண்கள் பெரும் வீழ்ச்சியைத்தான் சந்தித்துவருகிறார்கள். இந்த முறை திரிணமூல் காங்கிரஸ் கட்சிதான் அதிக சதவீதத்தில் (38%) பெண்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இது பெருமிதமான புள்ளிவிவரம் போல் தோன்றினாலும் அக்கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 11 என்பது எண்ணிக்கைக்கும் சதவீதத்துக்குமான தோற்ற மயக்கத்தைக் காட்டுகிறது.
- இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தல் முதல் அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களிலும் மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்ட பெண்களின் சதவீதம் 4, 5, 6 என ஒற்றை இலக்கத்திலேயே இருந்துவந்தது. 1977 தேர்தலில் மிகக் குறைவாக 3.51% பெண்களே மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2009 தேர்தலில்தான் 10.6%ஆக உயர்ந்தது. இந்தச் சொற்ப உயர்வு நிகழ நெடுங் காலம் நாம் காத்திருந்தோம். ஆனால், இன்றுவரை மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் அதிகபட்ச எண்ணிக்கை 78 (2019 தேர்தல் 14.36%). 18ஆவது மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 8,360 வேட்பாளர்களில் 797 பேர் பெண்கள். 1996 தேர்தலில் அதிகபட்சமாக 13,353 ஆண்கள் போட்டியிட்டுள்ளனர். ஆனால், 70 ஆண்டுகள் கடந்தும்கூடப் பெண் வேட்பாளர்களின் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டவில்லை.
பாலினப் பாகுபாடு:
- மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்குப் போட்டி போட்டுக்கொண்டு ஆதரவு அளித்த தேசியக் கட்சிகள்கூட, இந்த மக்களவைத் தேர்தலில் முன்னோட்டமாக அதை நிறைவேற்ற நினைக்கவில்லை. தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தேர்தல் வாக்குறுதிகளில் பெண்களைமுன்னிலைப்படுத்திய திட்டங்களுக்குத்தான் முன்னுரிமை அளித்திருந்தன. பெண்களின் வாக்குக்காகப் பெண்கள் நலத் திட்டங்களை அறிவித்தவர்கள், அதற்குத் தகுந்த எண்ணிக்கையில் பெண்களைத் தேர்தல் களத்தில் நிற்கவைக்கவில்லை. அரசியல் என்பது பெண்களுக்கான களம் அல்ல என்கிற பொதுவான ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகவும் இதைக் கருதலாம்.
- 2023இல் உலகம் முழுவதும் 52 நாடுகள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்தின. அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் சராசரி எண்ணிக்கை 27.6%. இண்டர் பார்லிமெண்டரி யூனியன் (IPU) தரவின்படி, தற்போதைய உலக சராசரியைவிட (26.9%), இந்திய நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை மிகக் குறைவு (13.63%). அண்மையில், மெக்சிகோவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கிளாடியா ஷேன்பாம் அந்நாட்டின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 200 ஆண்டுகளில் இந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அவர்; போட்டியிட்ட இருவருமே பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில், அரசியல் அரங்கில் பாலினப் பாகுபாட்டைக் களைய இந்தியா பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 06 – 2024)