TNPSC Thervupettagam
December 16 , 2017 2564 days 2207 0
இணையவெளி [Cyber Space]

மு.முருகானந்தம்

- - - - - - - - - - - - - - - -

காற்று வெளியிடைக் கண்ணம்மா

நின்றன் காதலை எண்ணிக் களிக்கின்றேன்!

-என்று பாரதி பேரன்பின் ஆனந்தத்தைக் “காற்றுவெளி-யின்” ஊடாகக் கண்டார்;

  • இந்த “வெளி” என்பது ஒரு இடத்தின் பரப்பைக் குறிக்கும்; அண்ட வெளி, விண் வெளி, காற்று வெளி, மின் வெளி (e-space), என்று பல விதங்களில் இச்சொல்லாடல் பயனிலுள்ளது.
  • காட்டு வெளியில் சுற்றிய மனிதன் வீடு கட்டினான்; வீட்டுக்கு வெளியே சுற்றிய மனிதன் நாடு கட்டினான்; நாட்டுக்கு வெளியே சுற்றிய மனிதன் இணையம் கட்டினான்; இந்த இணைய வெளியில் தான் இப்பொழுது மனிதன் சுற்றிக் கொண்டிருக்கின்றான்.

இணையவெளி என்றால் என்ன ?

  • கணினி வலைகளாலான தகவல்கள் பரிமாறப்படுகின்ற கருத்து ரீதியான கற்பனைச் சூழலே இணையவெளி எனப்படுகின்றது.
  • “The Notional Environment in which Communication over Computer Networks occurs”.

(அல்லது)

தகவல் / தரவு / தொடர்பு / இயற்பியல் சம்பந்தப்பட்டதும், அவைகளை உருவாக்க, சேமிக்க, மாற்றியமைக்க, பரிமாற, பங்கிட, பயன்படுத்த உதவுவதும் மின்னணுக்கள் மற்றும் மின்காந்த அலைகளால் இயங்குவதுமான உலகளாவிய இயங்குதளமே இணையவெளி எனப்படுகின்றது.

இணையவெளி எவற்றை உள்ளடக்கியுள்ளது ?

  • இணையவெளி என்பது பல கூறுகளைக் கொண்டுள்ளது. அவையெல்லாம் இணைந்து தான் இவ்வெளி உருவாகின்றது. சூரியன் , சந்திரன், கிரகங்கள், பல நட்சத்திரங்கள், அவற்றிற்கிடையேயான ஈர்ப்பு விசைகள் மற்றும் மின்காந்த வீசல் என்று பல இணைந்து உருவாகும் அண்டவெளியை நினைவு கூர்ந்தால் இணையவெளியினைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.
  • இணைய வெளியில் பின்வரும் கூறுகள் உள்ளன.
  1. சாதனங்கள்கருவிகள்: இவை இவ்வெளியின் செயல் அலகுகள் எனலாம். அறிதிறன்பேசி (Smart Phone), கணினிகள், வழங்ககம் (Server), சைகைக் கம்பங்கள் (Signal Towers) போன்ற எல்லா வித கருவிகளும் இதில் அடங்கும்.
  2. வன்பொருளும் மென்பொருளும்: (Hardware and Software) பிணைந்து உருவாகும் தனித்தனி கணினி அமைப்புகள் இவ்வெளியின் அடிப்படையாகும். சாதனமும் – கருவியும் உறுப்புகள் என்றால் ‘கணினி அமைப்புகள் உயிர் எனலாம்.
  3. கணினிகளுக்கிடையிலான வலையமைப்புகள்
  4. பல வலைகள் ஒன்றிணைந்த பெரும்பின்னல்கள்
  5. ஊடாடுகின்ற தரவுகள்
  • இணைய வெளியில் உள்ள மேற்கண்ட கூறுகள் ஒன்றை ஒன்று கட்டுப்படுத்துமாறு அமைந்துள்ளன; ஆனால் இவையெல்லாம் சேர்ந்து ‘இணையவெளியைக்’ கட்டுப்படுத்த இயலாது. உறுப்புகளைக் கட்டுப்படுத்தினாலும் (மூளை → இதயம்), உறுப்புகளில் இயங்குகின்ற உயிரை எதனாலும் கட்டுப்படுத்த முடியாது என்பதே அதற்குரிய சான்றாகும்.

இணையமும் இணையவெளியும் ஒன்றாகுமா ? (Internet Vs Cyberspace)

  • இரண்டும் ஒன்றில்லை; உங்களுக்கு உயிருண்டா ?... உள்ளது; அது எங்கு உள்ளது ?... கைகளிலா ?... கால் விரல் நுனியிலா ?... உயிர் போன்ற இணையவெளியில் உள்ள ஒரு பின்னலே ‘இணையம்’ ஆகும்.
  • உருவமுடைய / தொடக்கூடிய [Tangible] – அருவமான / தொட முடியாத [Intangible] பலவற்றினை இணையவெளி உள்ளடக்கியுள்ளது.

இணையவெளி ஏன் முக்கியத்துவப்பட்டுள்ளது ?

  • முன்னரே சொன்னது போல இன்று மனிதகுலம் இணையவெளியில் தான் உலவுகின்றது. தனி மனிதன், சமூகம், அரசாங்கம், தானியங்கிகள் என எல்லாமே இணையவெளிக்குள் புகுந்து விட்டன. தகவல் தொடர்பு, பொழுது போக்கு, பணப் பரிமாற்றம், பொருளியல் கட்டுமானங்கள், பாதுகாப்புத்தளம், இயந்திரங்கள் என்றவாறு எல்லாவித செயல்பாடுகளும் இணையவெளியில் நடக்கின்றன. எனவே தான் புரிந்து கொள்ளுதல், பயன்படுத்துதல், பாதுகாப்பு, ஒருங்கிணைப்பு ரீதியாக இவ்வெளி முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • இதையொட்டி கடந்த நவம்பர் மாதம் உலக இணையவெளி மாநாடு (Global Conference on Cyberspace – GCCS 2017) ஆனது இந்தியாவில் நடைபெற்றது.

உலக இணையவெளி மாநாடு எங்கு ? எப்போது ?

  • உலகளாவிய அரசாங்கங்கள், குடிமைச் சமூகம் (Civil Society) , நிறுவனங்கள், தொழிலமைப்புகள் இணைந்து இணையவெளியின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விவாதிக்கும் களமாக இணையவெளி மாநாடு நடத்தப்படுகின்றது.
  • இதுவரை 5 மாநாடுகள் நடந்துள்ளன.
 
முதல் மாநாடு 2011 இலண்டன்
இரண்டாம் மாநாடு 2012 புடாபெஸ்ட்
மூன்றாம் மாநாடு 2013 சியோல்
நான்காம் மாநாடு 2015 தி ஹேக்
ஐந்தாம் மாநாடு 2017 புதுதில்லி
 
  • ஐந்தாவது மாநாடு ஆனது புதுதில்லியின் ஏரோ சிட்டியில் கடந்த நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது; இது மின்னணு தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் ஒருங்கிணைக்கப்பட்டது.

உலக இணையவெளி மாநாட்டின் (2017) இலக்கு என்ன ?

  • “உள்ளடக்கிய இணையவெளி” [Inclusive Cyberspace] என்பது தான் இம்மாநாட்டின் முதன்மையான நோக்கமாகும்.
  • உள்ளடக்குதல் [Inclusivity], நீடித்து நிலைத்தல் [Sustainability], மேம்பாடு [Development], பாதுகாப்பு [Security] மற்றும் சுதந்திரம் [Freedom] போன்றவற்றை நிறுவுவதற்கான கொள்கைக் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.
  • டிஜிட்டல் மக்களாட்சியை (Digital Democracy) நிலைநிறுத்துவதற்கு தொழில் நுட்பம் மற்றும் ஒத்துழைப்பை இணங்காணுதல்.
  • இணைய வெளிப் பாதுகாப்பினை திடப்படுத்த ஒத்துழைப்பை மேம்படுத்துதல்.
  • டிஜிட்டல் தூதுறவினைப் (Digital Diplomacy) பற்றிய பேச்சுக்களை முன்னெடுத்தல்.
  • இந்த நோக்கங்களை இலக்குகளாகக் கொண்டு நடைபெற்ற மாநாடு நான்கு கருத்தாக்கங்களினை ஒட்டி விவாதித்தது.
  GCCS 2017-ன் கருத்தாக்கங்கள் யாவை?

எல்லோருக்குமான இணையவெளி:

நீடித்த வளர்ச்சிக்கு

பாதுகாப்பான மற்றும் உள்ளடங்கிய இணையவெளி

(Or)

“Cyber 4 All: A Secure and Inclusive Cyberspace for Sustainable Development”

 
  • இந்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் நான்குப் பிரிவுகளாக இம்மாநாட்டு இலக்கு முன்னிலைப்படுத்தப்பட்டது.
  1. வளர்ச்சிக்கு இணையவெளி [Cyber 4 Growth]
  2. டிஜிட்டல் மயத்துக்கு இணையவெளி [Cyber 4 Digital inclusion]
  3. பாதுகாப்புக்கு இணையவெளி [Cyber 4 Digital Security]
  4. தூதுறவுக்கு இணையவெளி [Cyber 4 Diplomacy]
  வளர்ச்சிக்கு இணைய வெளி- எப்படி உதவும் ?
  • உலகின்5 பில்லியன் மக்கள் உலவுகின்ற தளமாக உருவாகியுள்ள இணையவெளி, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கு முதன்மைக் கருவியாகியுள்ளது.
  • தொழில், ஆளுகை மற்றும் தினசரி வாழ்க்கையின் பல புதுமைகளைப் படைக்க இது தளமாக உள்ளது.
  • மொபைல் ஆளுகை, டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தகவல் தொடர்புத் துறைகள் இன்றைய உலகின் வளர்ச்சியைத் தீர்மானிக்கின்றன.
    டிஜிட்டல் மயத்துக்கு இணையவெளி எப்படி உதவும் ?
  • “எல்லோரையும் உள்ளடக்கிய மற்றும் சமவாய்ப்புடைய சமூகமே“ மக்களாட்சியின் மகத்துவமாகும்; புதிய தொழில்நுட்பங்கள் மூலம் எல்லோரையும் ஒன்றிணைக்கும் வாய்ப்பை இணையவெளி வழங்குகின்றது.
  • மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் அடையாளம், எல்லோருக்கும் இணைய வசதி, டிஜிட்டல் கல்வி, டிஜிட்டல் வழியில் பொருளிய உள்ளடக்கம் ஆகியன இப்போது சாத்தியமாகி வருகின்றது.
  இணையவெளிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் என்ன ?
  • பாதுகாப்புக்கு இணையவெளி மற்றும் இணையவெளிப் பாதுகாப்பு ஆகிய இரண்டும் முக்கியமான, ஆனால் மாறுபட்ட கருத்தாக்கங்கள் ஆகும்.
  • சமீபத்தில், ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளின் கணினிகளைப் பாதித்த வான்னாகிரை’ (wannacry) தாக்குதலை நாம் அறிந்திருப்போம்; தொலைத்தொடர்பு, வங்கிகள், மின்கட்டமைப்பு, தனிநபர் தகவல் திருட்டுகள், அணு உலைப் பாதுகாப்பு மற்றும் இராணுவ ரகசியத் திருட்டுகள் போன்ற மிக முக்கிய கட்டமைப்புகளைப் பாதுகாக்க துரிதமாக செயல்பட வேண்டியுள்ளது.
  • மின்னஞ்சலின் கடவுச்சொல் திருட்டு, முகநூலில் தவறான படச்சித்தரிப்பு, ஆதார் தகவல்கள் திருட்டு, வலைதள முடக்கம் மற்றும் தீவிரவாதத் தகவல் பரிமாற்றம் என்ற எல்லாவிதத் தாக்குதல்களையும் தடுக்க உலகநாடுகள் ஒன்றிணைய வேண்டியுள்ளது.

இணையவெளியில் தூதுறவு எப்படிச் சாத்தியம் ?

  • இன்று “வீடியோ கான்பரன்சிங்” எனப்படுகின்ற காணொளிக் காட்சிகள்பிரபலமடைந்து வருகின்றன. தனி நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், மாநிலங்கள் மற்றும் அரசாங்கங்கள் ஆகியன இணைய வெளியில் ஊடாடி புதிய அரங்குகளில் உரையாடுகின்றன;
  • இதே போன்று உலகளாவிய பன்னாட்டு அமைப்புகளுக்கிடையே இணையம் மூலமாக கூட்டங்களை நடத்திடவும் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது. இணையவெளியில் உருவாகும் கிளர்ச்சிக் கருத்துகளை அடக்கி ஆரோக்கியமான வளர்ச்சிக்கு வித்திட வேண்டும்;
  • நிலம்-நீர்-காற்று களங்களைத் தாண்டி புதியதாக உருவாகியுள்ள இணையத் தாக்குதலை எதிர்கொள்ள உலகம் ஒன்று திரள வேண்டியது அவசியமாகும்.
  • இணையவெளி மாநாட்டினை இந்தியா நடத்தி விட்டது. இந்தியா இணைய வெளியில் உலவத் தயாராக உள்ளதா ?....
  இந்தியாவின் இணையவெளி எப்படி உள்ளது ?
  • இந்தக் கட்டுரை பிரசவிக்கும் வேளையில் ‘Mygov’ செயலியின் அறிவிப்பு கணினித் திரையில் பளிச்சிட்டது; நமது நாட்டின் இணையவெளிச் செயல்பாட்டை ஆராயும் முன்னர் எனது திறன்பேசியை உருட்டிய போது சில விஷயங்கள் தெரிய வந்தது; “CMRL (சென்னை மெட்ரோ), Digilocker, AIR, IRCTC Connect, Learn Hindi (30 days), PIB, SBI Anywhere, Twitter, UMANG, YONO, MyGov மற்றும் BHIM” ஆகிய செயலிகளை தொடுதிரையில் காண நேர்ந்தது; தங்களிடமும் இதுவும் இன்ன பிற செயலிகளும் இருக்குமல்லவா ?... ஆக இந்தியர்களின் இணைய வெளி வளமாகத் தான் உள்ளது எனக் கருதிடலாம்.
  • இத்தகைய இணையப் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் இணைய வெளிக் கட்டமைப்பை உருவாக்கிடவும் அரசு பல திட்டங்களை தொடங்கியுள்ளது. அவற்றினை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோமா?
  1. டிஜிட்டல் இந்தியா (Digital India)
  2. JAM மும்மை (Jan dhan – Aadhar – Mobile Trinity)
  3. மின்னாளுகைத் திட்டம் (சான்று: பாரத்நெட்)
  4. பொதுச் சேவை மையம் (Common Service Centre)
  5. மின் பணப்பரிமாற்ற ஊக்குவிப்புகள் (சான்று: BHIM)
  6. தேசிய டிஜிட்டல்மய பண வழங்கல் திட்டம்
  7. பங்கேற்பு மின்னாளுகை (ஸ்வச் பாரத், )
  8. பிரதான் மந்திரி கிராமின் டிஜிட்டல் சக்ஸர்த்தா அபியான்
  9. மின்-நலம் (E-health) (அறிக்கைகளை “ஆதார் பதிவு அமைப்பு” மூலம் பெறுதல்)
  10. டிஜி லாக்கர் (Digilocker)
  11. ஓய்வூதியர்களுக்கு டிஜிட்டல் முறையில் வாழ்க்கைச் சான்றளித்தல்
  12. மின் – தேசிய வேளாண் சந்தை (eNAM)
  13. தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதன் சேவைகள் (IT & ITES)
  14. தேசிய இணையவெளிப் பாதுகாப்பு ஒருங்கிணைப்புகள்
  15. டிஜிட்டல் இராணுவம்
  16. மேக்ராஜ் திட்டம் (Meghraj)
  • இது போன்ற பல திட்டங்கள் மூலம் இந்திய அரசும் நாமும் இணையவெளியில் உலவத் தொடங்கி விட்டோம். அதற்கேற்ற புதிய திட்டங்களும் சட்டங்களும் அவ்வப்போது உருவாக்கப்படுகின்றன.
  • இணையவெளியைப் பற்றி சில விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்; இணையவெளி; மாநாடு; இந்தியா என்றவாறு இது அமைந்தது. இணைய வெளியில் உலவும் நாமும் நன்மைகளை ஏற்று, தீமைகளை விலக்கி நலவாழ்வு வாழ்வோம்!
 

இணைய வெளியிடைக் கண்ணம்மா ..... இந்தக்

கட்டுரை வருகுதடி!.....”

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்