TNPSC Thervupettagam

120/80 - உயிர் காக்கும் எண்கள்!

October 19 , 2024 88 days 141 0

120/80 - உயிர் காக்கும் எண்கள்!

  • இதயத்துக்கு முக்கிய எதிரி ‘மரபணுப் பிறழ்வுகள்’ (Mutations) எனப் பார்த்தோம். இடிமழையின்போது மின்னலை எப்படித் தவிர்க்க முடியாதோ, அப்படி மரபணுப் பிறழ்வை நம்மால் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். அதேவேளை, தவிர்க்க முடிந்த எதிரிகளும் நம் இதயத்துக்கு இருக்கிறார்கள். அவற்றைப் பற்றி இப்போது பார்ப்போம்.

மறைந்து தாக்கும் நோய்!

  • இதயத்துக்கு எதிரிகள் என்று சொன்னதும் என் நினைவுக்கு முதலில் வருவது ‘ரத்தக் கொதிப்பு’தான். கடந்த நூற்றாண்டில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் அதிக அளவு பதிவாகியிருந்த இந்த நோய், இப்போது நம் நாட்டிலும் சர்வசாதாரணமாகிவிட்டது. ஆரம்பத்தில் இது நகரவாசிகளிடம்தான் காணப்பட்டது. இப்போது கிராமவாசிகளிடமும் காணப்படுகிறது.
  • கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே ரத்தக் கொதிப்பு ஏற்பட்டது. இப்போது 20 வயது இளைஞருக்கும் இது ஏற்படுகிறது. உயிரிழப்பை ஏற்படுத்தும் நோய்ப் பட்டியலில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், ரத்தக் கொதிப்பு பல பேருக்கு எந்த அறிகுறியும் காட்டாமல் மறைந்திருக்கிறது. திடீரென்று ஒருநாள் தன் கோர முகத்தைக் காட்டுகிறது. அப்போதுதான் இப்படி ஒரு நோய் இருப்பதே அவர்களுக்குத் தெரியவருகிறது. எனவே தான், இதை ‘மறைந்து தாக்கும் நோய்’ (Silent Killer) என்கிறோம்.
  • போலீஸ் தேர்வுக்குச் சென்றிருந்த ஓர் இளைஞர் என்னிடம் வந்தார். “டாக்டர், போலீஸ் செலக்சனுக்குப் போனதில் எல்லாத் தேர்விலும் ஜெயிச்சிட்டேன். கடைசியா மெடிக்கல் டெஸ்ட் பண்ணினாங்க. அதில எனக்கு ‘பீ.பி.’ அதிகமா இருக்குன்னு சொல்லி ரிஜெக்ட் பண்ணிட்டாங்க. எனக்கு அவங்க சொன்னதில் நம்பிக்கை இல்லை. எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை. எனக்கு வயசு 22. இந்த வயசுலேயும் ‘பீ.பி.’ கூடுமா?” என்று கேட்டார்.
  • நான் அவரைப் பரிசோதித்தேன். ‘பீ.பி.’ 170/110 என்றது. “உங்களுக்கு ‘பீ.பி.’ அதிகமாக இருப்பது உண்மைதான். வயதானால்தான் ‘பீ.பி.’ கூடும் என்பதில்லை. எவருக்கும் ‘பீ.பி.’ கூடலாம். இதற்கு இப்போது நல்ல மருந்துகள் உள்ளன. சீக்கிரமே கட்டுப்படுத்திவிடலாம். வேலைக்கும் சென்றுவிடலாம்” என்று தைரியம் சொல்லி அனுப்பினேன். ஒரு வாரத்தில் அவருக்கு ‘பீ.பி.’ கட்டுப்பட்டது. அடுத்தமுறை நடந்த போலீஸ் தேர்வில் அவர் தேர்வாகிவிட்டார்.
  • நடைமுறையில், 100ல் 65 பேருக்கு ரத்தக் கொதிப்பு இருப்பது வெளியில் தெரிவதில்லை என்பதைச் சுட்டிக்காட்டத்தான் இதைச் சொன்னேன். அடுத்து, ரத்தக் கொதிப்பு என்றாலே முதியவர்களுக்கு வருவது என்று ஒரு தவறான கற்பிதமும் இருக்கிறது. அதை உடைப்பதற்காகவும் இதைப் பதிவு செய்தேன்.
  • இன்றைய அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறையில் இளம் வயதில் ரத்தக் கொதிப்பு வருவது அதிகரித்துவருகிறது. ஒரு தேசியப் புள்ளிவிவரம் சொன்னால் அதிர்ச்சி யாகத்தான் இருக்கும். இந்தியாவில் இளம் வயதில் உள்ளவர்களில் கால் வாசிப் பேருக்கு ரத்தக் கொதிப்பு இருக் கிறது. இவர்களிலும்கூட கால் வாசிப் பேர்தான் சிகிச்சை எடுத்துக்கொள்கிறார்கள்.

சரி, ரத்தக் கொதிப்பு என்றால் என்ன

  • இதயம் அனுப்பும் ரத்தம் நம் உடலுக்குள் லட்சம் கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாய்கிறது என்று பார்த்தோம். அந்தப் பாய்ச்சலுக்கு ஓர் உந்துவிசை தேவை. அதுதான் நம் ரத்த அழுத்தம். இது இதயத்தில் பிறக்கிறது. ரத்தக் குழாய்களில் வசிக்கிறது. இதற்கான ‘ஆதார் எண்’ 120/80 மெர்க்குரி. இதில் 120 என்பது ‘சிஸ்டாலிக் பி.பி.’ (Systolic Pressure). இதயத்திலிருந்து ரத்தம் வெளியேறும்போது ஏற்படும் அழுத்தம் இது. 80 என்பது ‘டயஸ்டாலிக் பீ.பி.’ (Diastolic Pressure). ரத்தம் இதயத்துக்குள் செல்லும்போது உண்டாகும் அழுத்தம் இது. இந்த இரண்டும் நமக்கு உயிர் காக்கும் எண்கள்.
  • ‘பீ.பி.’ 120/80 என்பது எல்லாருக்கும் சொல்லி வைத்ததுபோல் இருக்காது. ஒரே வயதுதான் என்றாலும் ஆளுக்கு ஆள், எடை, உயரம் போன்றவை வித்தியாசப் படுவதுபோல, சிறிது வித்தியாசப்படலாம். ஆகவேதான், 130/80க்கும் குறைவாக உள்ள ‘பீ.பி.’யை ‘நார்மல்' என எடுத்துக் கொள்கிறோம். 130/80 முதல் 139/89 வரை உள்ள ‘பீ.பி.’யை ‘அதிகபட்ச நார்மல்’ என்கிறோம். இது 140/90க்கு மேல் அதி கரித்தால் ‘ரத்தக் கொதிப்பு’ (Hypertension) என்கிற எல்லைக்குள் கால் பதிக்கிறீர்கள் என்கிறோம்.

அடிப்படைக் காரணம்:

  • சாலையில் செல்லும் ஆர்ப்பாட்ட பேரணியை ஒழுங்குபடுத்த ‘சிஆர்பிஎஃப்’ (CRPF) வீரர்கள் அணிவகுத்து நிற்பதைப் போல, உடலில் ‘பீ.பி.’யை ஒழுங்குபடுத்த ‘ராஸ்’ (RAAS) வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். நொதியும் ஹார்மோன்களும் கலந்த இந்த வீரர்களைச் சிறுநீரகங்கள், அட்ரீனல் சுரப்பிகள், கல்லீரல், நுரையீரல் ஆகியவை அனுப்பிவைக்கின்றன. இவர்களில் யாராவது கண் அசந்தால் போதும், ‘பீ.பி.’ தன் நிலை மறந்து, 120/80 எனும் எல்லையைத் தாண்டி தலைவலி, தலைசுற்றல் என ஆர்ப்பாட்டம் செய்யும்.

சில விநோதங்கள்:

  • தலைசுற்றலுக்காக என்னிடம் சிகிச்சைக்கு வந்திருந்த ஒரு பெரியவருக்கு ‘பீ.பி.’ 180/120 என்று இருந்தது. அதிர்ச்சி அடைந்த நான், “இத்தனை நாள்களாக உங்கள் ‘பீ.பி.’யைச் சோதிக்கவில்லையா?’’ என்றேன். “ஏன் டாக்டர் கேட்கிறீர்கள்?”. “உங்களுக்கு ‘பீ.பி.’ மிகவும் அதிகமாக இருக்கிறது!”. “எனக்கு நார்மல் ‘பீ.பி.’யே அதுதான், டாக்டர்!” என்றார் அவர் ரொம்ப அலட்சியமாக. இப்படித் தங்களுக்கு ‘பீ.பி.’ எகிறி இருப்பது தெரியாமல் இருப்பவர்கள் ஒருபுறம் இருக்க, சில பாய்ண்டுகள் அதிகமாகிவிட்டாலே ஏதோ வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று பயந்து களேபரம் செய்கிறவர்களும் நம்மிடையே இருக்கிறார்கள்.
  • இன்னொரு விநோதம் இது. சிலருக்குச் சிறப்பு நிபு ணர்களிடம் செல்லும் போது மட்டும் ‘பீ.பி.’ கூடுதலாக இருக்கும். அவர்கள் குடும்ப டாக்டரிடம் பரிசோதிக்கும்போது அது சரியாகவே இருக்கும். இதை ‘ஒய்ட் கோட்’ ரத்தக் கொதிப்பு என்கிறோம். இதற்கு நேர்மாறாக ஒரு வகை ரத்தக் கொதிப்பும் இருக்கிறது. அது என்ன? அடுத்து பார்ப்போம்.

நன்றி: இந்து தமிழ் திசை (19 – 10 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்