TNPSC Thervupettagam
February 19 , 2019 2137 days 2984 0

ஒரு அறிமுகம்

  • 16-வது மக்களவையின் கடைசி அமர்வானது 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று நிறைவு பெற்றது.
  • 16-வது மக்களவையின் கூட்டத் தொடர்கள் 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றன.
  • 16-வது மக்களவையின்போது 133 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இதே காலகட்டத்தில் 45 அவசர நிலைச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன.
  • இந்த மக்களவையில் 219 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
  • 16-வது மக்களவையின் கடைசி அமர்வில் முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்வதற்கான மசோதா 2018-ஆனது நிறைவேற்றப்பட்டது. மேலும் இதே அமர்வில் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக (திருத்த) மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
  • மக்களவையில் உள்ள 543 இடங்களில் 282 இடங்களைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இக்கட்சி 15-வது மக்களவையில் பெற்ற இடங்களை விடக் கூடுதலாக 166 இடங்களை இந்த மக்களவையில் பெற்றுள்ளது.
  • மக்களவையின் மொத்த இடங்களில் (545) 10 சதவிகிதம் இடங்களைப் பெற்ற கட்சியே எதிர்க் கட்சியாக அங்கீகரிக்கப்படும் என்ற இந்திய பாராளுமன்ற விதிகளின்படி, 16-வது மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் இல்லாமல் செயல்படுகிறது.
  • 16-வது மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) 44 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 இடங்களைப் பிடித்து 3-வது இடத்தில் உள்ளது.
  • மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே அறிவிக்கப்பட்டுள்ளார்.
  • ஏறத்தாழ 3 பத்தாண்டுகளுக்குப் பிறகு 282 இடங்களுடன் முழுப் பெரும்பான்மை பெற்ற அரசாக இந்த அரசு உருவெடுத்துள்ளது.
  • இந்த மக்களவையானது அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது (62). இவர்களில் 44 உறுப்பினர்கள் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.
  • முதல் முறையாக அதிக அளவிலான பெண் அமைச்சர்கள் அரசின் அமைச்சரவையில் (Cabinet) இடம்பெற்றுள்ளனர். 2 பெண் அமைச்சர்கள் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
  • 16-வது மக்களவையில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு மழைக்காலக் கூட்டத் தொடரில் 2018-ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று விவாதிக்கப்பட்டது.
  • முதலாவது மக்களவை தொடங்கியதிலிருந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு விவாதிக்கப்படுவது இது 27-வது முறையாகும்.

 

பணிக் காலம்
  • 16-வது மக்களவையானது 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 18 அமர்வுகளில் கலந்து கொண்டது.
  • தனது முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்த அரசாங்கத்தினால் மிகக் குறுகிய காலமே பணியாற்றிய (1615 மணி நேரங்கள்) இரண்டாவது மக்களவை இதுவேயாகும்.
  • முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்த மக்களவைகளில் மிக மோசமான ஒன்று 15-வது மக்களவையாகும். இந்த 15-வது மக்களவையானது தனது பட்டியலிடப்பட்ட நேரத்தில் அமளிகளின் மூலம் பெருமளவு நேரத்தை வீணாக்கியுள்ளது.
  • மேலும் 16-வது மக்களவையின் பணிக் காலமானது ஒரு முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்த அனைத்து அரசாங்கங்களின் சராசரி பணிக் காலத்தை விட 40 சதவிகிதம் குறைவாகும்.
  • இது 331 நாட்கள் அமர்வில் கலந்து கொண்டுள்ளது. முழு ஆட்சிக் காலம் உடைய மக்களவையானது சராசரியாக 468 நாட்கள் அமர்வில் கலந்து கொண்டது.
  • இதற்கு முன்பு இருந்த அனைத்து அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது சட்டங்கள் குறித்த நடவடிக்கைகளில் அதிக நேரத்தை செலவிட்ட 2-வது மக்களவையாக 16-வது மக்களவை உருவெடுத்துள்ளது.
  • இதற்கு முன் 1952-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மக்களவை மட்டுமே சட்டங்கள் குறித்து அதிக நேரம் விவாதித்துள்ளது.
  • 16-வது மக்களவையானது மொத்த அமர்வுகளின் நேரத்தில் 32 சதவிகித நேரத்தை சட்டமன்ற நடவடிக்கைகளில் செலவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமர்வுகளின் சராசரி நேரமான 25 சதவிகிதத்தை விட அதிகமாகும்.
  • 16-வது மக்களவையானது இதற்கு முன்பிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை விடக் கூடுதலாக 1 மசோதாவை நிறைவேற்றி, அதாவது 180 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட 180 மசோதாக்களில் 47 மசோதாக்கள் நிதிநிலை அறிக்கை தொடர்பானவையாகவும் மீதமுள்ள 133 மசோதாக்கள் இதர மசோதாக்களாகவும் உள்ளன. இந்த மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இதர மசோதாக்களானது முன்பிருந்த மக்களவையினால் நிறைவேற்றப்பட்ட இதர மசோதாக்களை விட 15 சதவிகிதம் அதிகமாகும்.

  • 16-வது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொத்த மசோதாக்களில், 25 சதவிகித மசோதாக்கள் பாராளுமன்ற குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 15-வது மக்களவையில் 71 சதவிகித மசோதாக்களும் 14-வது மக்களவையில் 60 சதவிகித மசோதாக்களும் பாராளுமன்ற குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

 

16-வது மக்களவையினால் நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான மசோதாக்கள்
  • கறுப்புப் பணம் (கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள்) மற்றும் வரி விதிப்பு மசோதா, 2015.
  • சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலம்) மசோதா, 2015.
  • நொடித்தல் மற்றும் திவால் குறியீடு, 2016.
  • பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்த மசோதா, 2016.
  • சரக்கு மற்றும் சேவைகள் வரி அறிமுகப்படுத்துதல் தொடர்பான 101-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, 2016.
  • ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மசோதா, 2017.
  • ஆதார் (நிதி மற்றும் இதர மானியங்களை வழங்குதல், பயன்கள் மற்றும் சேவைகள்) மசோதா, 2017.
  • மனநல சுகாதார மசோதா, 2017.
  • தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் அமைத்தலுக்கான 102-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, 2018 (அரசியலமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட ஷரத்து 338 B–ன் கீழ்).
  • பொருளாதாரக் குற்றமிழைத்துத் தப்பியோடியவருக்கான மசோதா, 2018.
  • பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்முறைத் தடுப்பு) திருத்த மசோதா, 2018.
  • 103-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா.

 

பின்வரும் மசோதாக்கள் காலாவதியாகின
  • குடிமக்கள் (திருத்த) மசோதா, 2019
  • முத்தலாக் என்று அறியப்படும் முஸ்லீம் பெண்கள் (திருமணங்கள் மீதான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2018
  • தேசிய மருத்துவ ஆணைய மசோதா
  • நுகர்வோர் பாதுகாப்பு மசோதா
  • மோட்டார் வாகன மசோதா
  • கடத்தல் தடுப்பு மசோதா.

 

நிதிநிலை அறிக்கை
  • 16-வது மக்களவை நிதிநிலை அறிக்கையில் 83 சதவிகிதத்தை விவாதிக்காமலேயே நிறைவேற்றியிருக்கின்றது.
  • 16-வது மக்களவையில் நிதிநிலை அறிக்கையின் 17 சதவிகிதம் மட்டுமே விவாதிக்கப்பட்டது. இது இதற்கு முன்பிருந்த இரண்டு மக்களவையை விட அதிகமாகும்.
  • 2018-19-ஆம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி தொடர்பான கோரிக்கைகள் 100 சதவிகிதமும் விவாதிக்கப்படாமலேயே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
  • இதே போன்று 2004-05-ஆம் ஆண்டுகளில் இருந்த 14-வது மக்களவையிலும் 2013-14-ஆம் ஆண்டுகளில் இருந்த 15-வது மக்களவையிலும் ஏற்பட்டிருக்கின்றன.

 

உறுப்பினர்கள் – பின்னணி
  • 10 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் கொண்டுள்ள கட்சிகளிடையே சிவ சேனா உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையிலான கேள்விகளை எழுப்பியும் அதிக எண்ணிக்கையிலான விவாதங்களிலும் கலந்து கொண்டனர்.
  • இந்த மக்களவையை 15-வது மக்களவையுடன் ஒப்பிடும்போது, இந்த மக்களவையில் குற்ற வழக்குகளுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • 2009-ஆம் ஆண்டில், ஆய்வு நடத்தப்பட்ட 521 உறுப்பினர்களிடையே 158 (30%) உறுப்பினர்கள் குற்ற வழக்குகளைக் கொண்டுள்ளனர். இதில் 77 (15%) உறுப்பினர்கள் கடுமையான குற்ற வழக்குகளைக் கொண்டவர்களாக உள்ளனர்.
  • தற்போது ஆய்வு நடத்தப்பட்ட 542 உறுப்பினர்களில், 443 (82%) உறுப்பினர்கள் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பைக் கொண்டவர்களாக உள்ளனர்.
  • 15-வது மக்களவையில் ஆய்வு செய்யப்பட்ட 521 உறுப்பினர்களில், 300 (58%) உறுப்பினர்கள் மட்டுமே ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பைக் கொண்டுருந்தனர்.

வயது விவரம் – உறுப்பினர்கள்
  • 16-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 253 உறுப்பினர்கள் 55 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர்.
  • 15-வது மக்களவையில் 55 வயதைக் கடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 சதவிகிதம் இருந்தனர்.
  • மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், அதிக எண்ணிக்கையில் 55 வயதைக் கடந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.

  • கடந்த தேர்தலில் (2014) 71 (13%) உறுப்பினர்கள் மட்டுமே 40 வயதுக்கு கீழே உள்ளவர்களாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

பாலினம்
  • 16-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களில், 62 உறுப்பினர்கள் பெண்கள் ஆவர்.
  • நாட்டின் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த மக்களவையில் தான்.

  • 16-வது மக்களவையில் 12.45 சதவிகிதம் மட்டுமே பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
  • 15-வது மக்களவைக்காக 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 58 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

  • பெண் உறுப்பினர்கள் சராசரியாக 292 கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது ஆண்களின் சராசரியான 302-ஐ விட சற்று குறைவானதாகும்.

 

கல்வி விவரம் – உறுப்பினர்கள்
  • 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 சதவிகித உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஒரு இளங்கலைப் பட்டத்தைக் கொண்டுள்ளனர்.
  • இது 15-வது மக்களவையை விட சற்று குறைவானதாகும். 15-வது மக்களவையில் 79 சதவிகித உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஒரு இளங்கலைப் பட்டத்தைக் கொண்டிருந்தனர்.

  • அதே நேரத்தில் 16-வது மக்களவையில் உயர்நிலைக் கல்வித் தகுதி பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிவடைந்து 10 சதவிகிதமாக உள்ளது. ஆனால் 15-வது மக்களவையில் இது 17 சதவிகிதமாக இருந்தது.
  • 16-வது மக்களவையில் முனைவர் பட்டம் பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. ஆனால் 15-வது மக்களவையில் அது 3 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.

 

தொழில்சார் விவரம்
  • 16-வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், 27 சதவிகிதத்தினர் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் 24 சதவிகித உறுப்பினர்களும் வணிகத்தில் 20 சதவிகித உறுப்பினர்களும் உள்ளனர்.
  • இந்த விவரத்தை 15-வது மக்களவையுடன் நாம் ஒப்பிடும் போது, 28 சதவிகித உறுப்பினர்கள் அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும், 27 சதவிகிதத்தினர் விவசாயத்திலும் 15 சதவிகிதத்தினர் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

  • 1952–ல் உருவாக்கப்பட்ட முதலாவது மக்களவையின் தகவல்களைப் பார்க்கும்போது அதில் ஏராளமான உறுப்பினர்கள் வழக்குரைஞர்களாக (36%) இருந்தனர். இதற்கு அடுத்து 22 சதவிகித உறுப்பினர்கள் விவசாயத்திலும் 12 சதவிகித உறுப்பினர்கள் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.

 

- - - - - - - - - - - - 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்