16-வது மக்களவையின் கடைசி அமர்வானது 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று நிறைவு பெற்றது.
16-வது மக்களவையின் கூட்டத் தொடர்கள் 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றன.
16-வது மக்களவையின்போது 133 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் இதே காலகட்டத்தில் 45 அவசர நிலைச் சட்டங்களும் கொண்டுவரப்பட்டன.
இந்த மக்களவையில் 219 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் 203 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
16-வது மக்களவையின் கடைசி அமர்வில் முறைப்படுத்தப்படாத வைப்புத் திட்டங்களைத் தடை செய்வதற்கான மசோதா 2018-ஆனது நிறைவேற்றப்பட்டது. மேலும் இதே அமர்வில் ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவக (திருத்த) மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் உள்ள 543 இடங்களில் 282 இடங்களைப் பிடித்து பாரதிய ஜனதா கட்சி (தேசிய ஜனநாயகக் கூட்டணி) தனிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இக்கட்சி 15-வது மக்களவையில் பெற்ற இடங்களை விடக் கூடுதலாக 166 இடங்களை இந்த மக்களவையில் பெற்றுள்ளது.
மக்களவையின் மொத்த இடங்களில் (545) 10 சதவிகிதம் இடங்களைப் பெற்ற கட்சியே எதிர்க் கட்சியாக அங்கீகரிக்கப்படும் என்ற இந்திய பாராளுமன்ற விதிகளின்படி, 16-வது மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் இல்லாமல் செயல்படுகிறது.
16-வது மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி) 44 இடங்களை மட்டுமே பிடித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 37 இடங்களைப் பிடித்து 3-வது இடத்தில் உள்ளது.
மக்களவையில் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஏறத்தாழ 3 பத்தாண்டுகளுக்குப் பிறகு 282 இடங்களுடன் முழுப் பெரும்பான்மை பெற்ற அரசாக இந்த அரசு உருவெடுத்துள்ளது.
இந்த மக்களவையானது அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது (62). இவர்களில் 44 உறுப்பினர்கள் முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாவர்.
முதல் முறையாக அதிக அளவிலான பெண் அமைச்சர்கள் அரசின் அமைச்சரவையில் (Cabinet) இடம்பெற்றுள்ளனர். 2 பெண் அமைச்சர்கள் பாதுகாப்பிற்கான அமைச்சரவைக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
16-வது மக்களவையில் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு மழைக்காலக் கூட்டத் தொடரில் 2018-ஆம் ஆண்டு ஜூலை 20 அன்று விவாதிக்கப்பட்டது.
முதலாவது மக்களவை தொடங்கியதிலிருந்து நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு விவாதிக்கப்படுவது இது 27-வது முறையாகும்.
பணிக் காலம்
16-வது மக்களவையானது 2014-ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதல் 18 அமர்வுகளில் கலந்து கொண்டது.
தனது முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்த அரசாங்கத்தினால் மிகக் குறுகிய காலமே பணியாற்றிய (1615 மணி நேரங்கள்) இரண்டாவது மக்களவை இதுவேயாகும்.
முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்த மக்களவைகளில் மிக மோசமான ஒன்று 15-வது மக்களவையாகும். இந்த 15-வது மக்களவையானது தனது பட்டியலிடப்பட்ட நேரத்தில் அமளிகளின் மூலம் பெருமளவு நேரத்தை வீணாக்கியுள்ளது.
மேலும் 16-வது மக்களவையின் பணிக் காலமானது ஒரு முழு ஆட்சிக் காலத்தையும் நிறைவு செய்த அனைத்து அரசாங்கங்களின் சராசரி பணிக் காலத்தை விட 40 சதவிகிதம் குறைவாகும்.
இது 331 நாட்கள் அமர்வில் கலந்து கொண்டுள்ளது. முழு ஆட்சிக் காலம் உடைய மக்களவையானது சராசரியாக 468 நாட்கள் அமர்வில் கலந்து கொண்டது.
இதற்கு முன்பு இருந்த அனைத்து அரசாங்கங்களுடன் ஒப்பிடும்போது சட்டங்கள் குறித்த நடவடிக்கைகளில் அதிக நேரத்தை செலவிட்ட 2-வது மக்களவையாக 16-வது மக்களவை உருவெடுத்துள்ளது.
இதற்கு முன் 1952-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட முதலாவது மக்களவை மட்டுமே சட்டங்கள் குறித்து அதிக நேரம் விவாதித்துள்ளது.
16-வது மக்களவையானது மொத்த அமர்வுகளின் நேரத்தில் 32 சதவிகித நேரத்தை சட்டமன்ற நடவடிக்கைகளில் செலவிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த அமர்வுகளின் சராசரி நேரமான 25 சதவிகிதத்தை விட அதிகமாகும்.
16-வது மக்களவையானது இதற்கு முன்பிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைமையிலான அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை விடக் கூடுதலாக 1 மசோதாவை நிறைவேற்றி, அதாவது 180 மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
இந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட 180 மசோதாக்களில் 47 மசோதாக்கள் நிதிநிலை அறிக்கை தொடர்பானவையாகவும் மீதமுள்ள 133 மசோதாக்கள் இதர மசோதாக்களாகவும் உள்ளன. இந்த மக்களவையில் நிறைவேற்றப்பட்ட இதர மசோதாக்களானது முன்பிருந்த மக்களவையினால் நிறைவேற்றப்பட்ட இதர மசோதாக்களை விட 15 சதவிகிதம் அதிகமாகும்.
16-வது மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட மொத்த மசோதாக்களில், 25 சதவிகித மசோதாக்கள் பாராளுமன்ற குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 15-வது மக்களவையில் 71 சதவிகித மசோதாக்களும் 14-வது மக்களவையில் 60 சதவிகித மசோதாக்களும் பாராளுமன்ற குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
16-வது மக்களவையினால் நிறைவேற்றப்பட்ட சில முக்கியமான மசோதாக்கள்
கறுப்புப் பணம் (கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்துகள்) மற்றும் வரி விதிப்பு மசோதா, 2015.
சிறார் நீதி (குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலம்) மசோதா, 2015.
நொடித்தல் மற்றும் திவால் குறியீடு, 2016.
பினாமி பரிவர்த்தனைகள் (தடை) திருத்த மசோதா, 2016.
சரக்கு மற்றும் சேவைகள் வரி அறிமுகப்படுத்துதல் தொடர்பான 101-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, 2016.
ஒருங்கிணைந்த சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மசோதா, 2017.
ஆதார் (நிதி மற்றும் இதர மானியங்களை வழங்குதல், பயன்கள் மற்றும் சேவைகள்) மசோதா, 2017.
மனநல சுகாதார மசோதா, 2017.
தேசிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் அமைத்தலுக்கான 102-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா, 2018 (அரசியலமைப்பில் புதிதாக சேர்க்கப்பட்ட ஷரத்து 338 B–ன் கீழ்).
பட்டியலிடப்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (வன்முறைத் தடுப்பு) திருத்த மசோதா, 2018.
103-வது அரசியலமைப்புத் திருத்த மசோதா.
பின்வரும் மசோதாக்கள் காலாவதியாகின
குடிமக்கள் (திருத்த) மசோதா, 2019
முத்தலாக் என்று அறியப்படும் முஸ்லீம் பெண்கள் (திருமணங்கள் மீதான உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2018
தேசிய மருத்துவ ஆணைய மசோதா
நுகர்வோர் பாதுகாப்பு மசோதா
மோட்டார் வாகன மசோதா
கடத்தல் தடுப்பு மசோதா.
நிதிநிலை அறிக்கை
16-வது மக்களவை நிதிநிலை அறிக்கையில் 83 சதவிகிதத்தை விவாதிக்காமலேயே நிறைவேற்றியிருக்கின்றது.
16-வது மக்களவையில் நிதிநிலை அறிக்கையின் 17 சதவிகிதம் மட்டுமே விவாதிக்கப்பட்டது. இது இதற்கு முன்பிருந்த இரண்டு மக்களவையை விட அதிகமாகும்.
2018-19-ஆம் ஆண்டின் பட்ஜெட் கூட்டத் தொடரில் நிதி தொடர்பான கோரிக்கைகள் 100 சதவிகிதமும் விவாதிக்கப்படாமலேயே நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
இதே போன்று 2004-05-ஆம் ஆண்டுகளில் இருந்த 14-வது மக்களவையிலும் 2013-14-ஆம் ஆண்டுகளில் இருந்த 15-வது மக்களவையிலும் ஏற்பட்டிருக்கின்றன.
உறுப்பினர்கள் – பின்னணி
10 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேல் கொண்டுள்ள கட்சிகளிடையே சிவ சேனா உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையிலான கேள்விகளை எழுப்பியும் அதிக எண்ணிக்கையிலான விவாதங்களிலும் கலந்து கொண்டனர்.
இந்த மக்களவையை 15-வது மக்களவையுடன் ஒப்பிடும்போது, இந்த மக்களவையில் குற்ற வழக்குகளுடைய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2009-ஆம் ஆண்டில், ஆய்வு நடத்தப்பட்ட 521 உறுப்பினர்களிடையே 158 (30%) உறுப்பினர்கள் குற்ற வழக்குகளைக் கொண்டுள்ளனர். இதில் 77 (15%) உறுப்பினர்கள் கடுமையான குற்ற வழக்குகளைக் கொண்டவர்களாக உள்ளனர்.
தற்போது ஆய்வு நடத்தப்பட்ட 542 உறுப்பினர்களில், 443 (82%) உறுப்பினர்கள் ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பைக் கொண்டவர்களாக உள்ளனர்.
15-வது மக்களவையில் ஆய்வு செய்யப்பட்ட 521 உறுப்பினர்களில், 300 (58%) உறுப்பினர்கள் மட்டுமே ரூ.1 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்து மதிப்பைக் கொண்டுருந்தனர்.
வயது விவரம் – உறுப்பினர்கள்
16-வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில், 253 உறுப்பினர்கள் 55 வயதைக் கடந்தவர்களாக உள்ளனர்.
15-வது மக்களவையில் 55 வயதைக் கடந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 சதவிகிதம் இருந்தனர்.
மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், அதிக எண்ணிக்கையில் 55 வயதைக் கடந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது நாட்டின் வரலாற்றில் இதுவே முதல்முறையாகும்.
கடந்த தேர்தலில் (2014) 71 (13%) உறுப்பினர்கள் மட்டுமே 40 வயதுக்கு கீழே உள்ளவர்களாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
பாலினம்
16-வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 543 உறுப்பினர்களில், 62 உறுப்பினர்கள் பெண்கள் ஆவர்.
நாட்டின் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த மக்களவையில் தான்.
16-வது மக்களவையில் 12.45 சதவிகிதம் மட்டுமே பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆவர்.
15-வது மக்களவைக்காக 2009-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 58 பெண் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெண் உறுப்பினர்கள் சராசரியாக 292 கேள்விகளை எழுப்பியுள்ளனர். இது ஆண்களின் சராசரியான 302-ஐ விட சற்று குறைவானதாகும்.
கல்வி விவரம் – உறுப்பினர்கள்
2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 75 சதவிகித உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஒரு இளங்கலைப் பட்டத்தைக் கொண்டுள்ளனர்.
இது 15-வது மக்களவையை விட சற்று குறைவானதாகும். 15-வது மக்களவையில் 79 சதவிகித உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஒரு இளங்கலைப் பட்டத்தைக் கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் 16-வது மக்களவையில் உயர்நிலைக் கல்வித் தகுதி பெற்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை சரிவடைந்து 10 சதவிகிதமாக உள்ளது. ஆனால் 15-வது மக்களவையில் இது 17 சதவிகிதமாக இருந்தது.
16-வது மக்களவையில் முனைவர் பட்டம் பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 சதவிகிதமாக அதிகரித்து உள்ளது. ஆனால் 15-வது மக்களவையில் அது 3 சதவிகிதமாக மட்டுமே இருந்தது.
தொழில்சார் விவரம்
16-வது மக்களவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில், 27 சதவிகிதத்தினர் விவசாயத்தை முதன்மைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். இதற்கு அடுத்து அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் 24 சதவிகித உறுப்பினர்களும் வணிகத்தில் 20 சதவிகித உறுப்பினர்களும் உள்ளனர்.
இந்த விவரத்தை 15-வது மக்களவையுடன் நாம் ஒப்பிடும் போது, 28 சதவிகித உறுப்பினர்கள் அரசியல் மற்றும் சமூகப் பணிகளிலும், 27 சதவிகிதத்தினர் விவசாயத்திலும் 15 சதவிகிதத்தினர் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
1952–ல் உருவாக்கப்பட்ட முதலாவது மக்களவையின் தகவல்களைப் பார்க்கும்போது அதில் ஏராளமான உறுப்பினர்கள் வழக்குரைஞர்களாக (36%) இருந்தனர். இதற்கு அடுத்து 22 சதவிகித உறுப்பினர்கள் விவசாயத்திலும் 12 சதவிகித உறுப்பினர்கள் வணிகத்திலும் ஈடுபட்டிருந்தனர்.