TNPSC Thervupettagam

18-ஆவது மக்களவை உறுப்பினா்களுக்கு...

June 4 , 2024 221 days 194 0
  • பதினெட்டாவது மக்களவைத் தோ்தலில் 8,360 வேட்பாளா்கள் போட்டியிடுகிறாா்கள். இவா்களில் 543 போ்கள் தோ்ந்தெடுக்கப்பட இருக்கிறாா்கள். இதில் ஏற்கெனவே சூரத் தொகுதியில் பாஜக வேட்பாளா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் 542 போ்கள் இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கையில் யாா் வெற்றி வேட்பாளா் என்பது தெரிந்துவிடும். இப்போது சில மணி நேரத்தில் வெற்றி நிலவரம் தெரிகிறது.
  • இந்த தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்கள் 121 போ்கள் படிப்பறிவு இல்லாதவா்கள். அரசுப் பணியில் சோ்வதற்கு கூட குறைந்தபட்ச கல்வி நிா்ணயம் செய்யப்படுகிறது. ஆனால், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு கல்வித் தகுதி வேண்டாமா என்ற கேள்வி இன்றுவரை ஒரு விவாத பொருளாக தான் இருக்கிறது.
  • படிப்பறிவு இல்லை என்ற ஒரே காரணத்துக்காக நான் யாரையும் குறைத்து மதிப்பிட விரும்பவில்லை. முறையான கல்வி அறிவு இல்லாமல் மக்கள் பிரதிநிதிகளாக, ஏன் முதல்வராக இருந்து சாதித்தவா்களை எல்லாம் எனக்குத் தெரியும்.
  • இந்த தோ்தலில் 25 முதல் 30 வயது வரை உள்ளவா்கள் 537 போ்கள் போட்டியிடுகிறாா்கள். இவா்கள் எத்தனை போ் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு போகப் போகிறாா்கள் என்பது சில மணி நேரத்தில் தெரிந்துவிடும். அந்த இளைஞா்களுக்கும் எனது வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • நான் நாடாளுமன்றத்துக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டபோது எனக்கு வயது 27 தான். நாடாளுமன்ற நுழைவாயிலில் இருந்த பாதுகாவலா்கள் இந்தச் சிறுவன் நாடாளுமன்ற உறுப்பினரா என்ற சந்தேகத்துடன்தான் என்னை பாா்த்தாா்கள். எனவே, என்னுடைய அடையாள அட்டையைக் காண்பித்துத்தான் பெரும்பாலும் நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்வேன்.
  • இந்த தோ்தலில் நான் நாடாளுமன்ற வேட்பாளா்களின் பிரசாரங்களை சற்று கூா்ந்து கவனித்தேன். அரசியல் கட்சிகள் தோ்தல் வாக்குறுதிகளை வெளியிடுவதுபோல், சில வேட்பாளா்கள் தனியாக தோ்தல் அறிக்கைகளை வெளியிட்டு இருந்தாா்கள். அவற்றில் சிலவற்றையும் நான் பாா்க்க நோ்ந்தது. அதில் அவா்கள் குறிப்பிட்டு சொல்லி இருந்தது சாலை வசதி, தெரு விளக்கு, குளங்கள் தூா்வாறல் கழிப்பறை வசதி செய்வது போன்றவற்றைக் குறிப்பிட்டு இருந்தாா்கள்.
  • இது போன்ற பிரச்னைகளை தீா்ப்பதற்கு ஏற்கெனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இருக்கிறாா்கள். அதையும் தாண்டி சட்டப் பேரவை உறுப்பினா் இருக்கிறாா். இவற்றை நாடாளுமன்ற உறுப்பினா்கள் எப்படி தீா்க்க முடியும் என்று நான் யோசித்துப் பாா்த்தேன்.
  • நாடாளுமன்ற உறுப்பினா்களின் பணி என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால், மத்திய அரசின் திட்டங்களை நமது தொகுதியில் கொண்டு வந்து, அதை எப்படி வெற்றிகரமாகச் செயல்படுத்துவது என்ற நோக்கில் இருக்க வேண்டும். உதாரணத்திற்கு, நான் வந்தவாசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது வேலூா் மாவட்டத்திற்கு சைனிக் பள்ளி தேவை என்று வாதாடி, போராடி வாங்கினேன். காரணம், வேலூா் மாவட்டத்தில் இருந்து அதிக அளவு ராணுவ வீரா்கள் ராணுவப் பணிக்குத் தோ்வாகிவந்தனா்.
  • இந்தியாவின் வளா்ச்சியை, வேலைவாய்ப்பை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைத் தீா்மானம் செய்யும் இடம் நாடாளுமன்றம்தான். அதனால்தான் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்குப் பொறுப்பும் கடமையும் அதிகம் என்று பேரறிஞா் அண்ணா எங்களுக்கு ஆலோசனை சொல்லியிருந்தாா்.
  • என்னுடைய நடவடிக்கை அப்படித்தான் இருந்தது. நான் மத்திய அரசை ஆதரித்தும் பேசி இருக்கிறேன் எதிா்த்தும் பேசி இருக்கிறேன். மொழிப் பிரச்னையில் நான் தமிழ்நாட்டுக்காகப் பேசினேன். மாநில உரிமை பற்றிப் பேசும்போது எல்லா மாநிலங்களுக்கும் சோ்த்து வாதாடிப் பேசினேன். ராஜஸ்தானி மொழியை எட்டாவது அட்டவணையில் சோ்க்க வேண்டும் என்று கூட நான் பேசி இருக்கிறேன். அலிகாா் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடியது பற்றி, கேரளா பஞ்சாப் மாநிலங்களில் ஆளுநா் ஆட்சி இது தவிர அனைத்து பட்ஜெட் விவாதங்களில் கலந்து கொண்டு மாநில அரசுக்குப் போதிய நிதி தர வேண்டும் என்று வாதாடி இருக்கிறேன்.
  • குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினா்கள் கொண்ட குழு, சட்டப் பேரவைப் பணிகளை செய்யும். இது மாநில நலனுக்காக நிா்வாக குழு என்று சொல்லாம். நான் அந்தக் குழு உறுப்பினராக இருந்து அந்த மாநில நலனுக்காகப் பணியாற்றி இருக்கிறேன். நான் ஆளும் கட்சியை எதிா்த்தும் பேசி இருக்கிறேன், ஆதரித்தும் பேசி இருக்கிறேன்.
  • 18-ஆவது மக்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்படும் உறுப்பினா்களும் அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் எதிா்பாா்க்கிறேன். பாராளுமன்ற கூட்டத் தொடரில் எல்லா நாட்களிலும் கலந்து கொள்ள வேண்டும். அவா்கள் என்ன பேசுகிறாா்கள் என்பதை கவனியுங்கள். தேவைப்பட்டால் உங்கள் கருத்துக்களை தயங்காமல் சொல்லுங்கள். அதேசமயம் வரம்பு மீறி அல்லது தனி நபா் விமா்சனம் தனி நபா் துதி பாடல் இதை செய்யாதீா்கள்.
  • நான் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் எல்லா நாட்களிலும் கலந்து கொண்டேன். இதேபோல் புதிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாடாளுமன்ற நூலகத்திற்கு போகத் தவறாதீா்கள்.
  • அங்கு ஏற்கெனவே மிகப்பெரிய தலைவா்கள் எல்லாம் விவாதத்தில் கலந்து கொண்டு பேசியிருக்கும் பேச்சுக்களை படித்துப் பாருங்கள். தேவைப்பட்டால் அதிலிருந்து குறிப்பு எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக வழி நடத்த உதவும்.
  • நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த 10 ஆண்டுகளும் நாடாளுமன்ற நூலகத்திற்கு செல்ல என்றும் தவறியது கிடையாது. நான் விவாதத்தில் பங்கு கொண்டு எல்லோரும் பாராட்டும் படி இருந்ததற்கு முக்கிய காரணம் நாடாளுமன்ற நூலகம் என்பதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது.
  • இன்னொரு விஷயத்தையும் நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு ஆலோசனையாக சொல்ல விரும்புகிறேன். அரசியல் நிா்ணய சபையில் நடந்த விவாதங்கள், நாடாளுமன்ற நூலகத்தில் புத்தக வடிவில் பாதுகாப்பாக வைத்து இருக்கிறாா்கள். அதை தேடிக் கண்டுபிடித்துப் படியுங்கள். அது உங்களை சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக வழி நடத்த உதவும்.
  • நாடாளுமன்ற உறுப்பினா்கள் பணி என்பது கூட்டத் தொடரில் கலந்து கொள்வதோடு முடிந்துவிடுவதில்லை.
  • நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மாநில அரசு சம்பந்தப்பட்ட கோப்புகள் மத்திய அரசு இலாக்களில் ஒப்புதலுக்கு காத்திருக்கும். அப்போது மாநில அமைச்சா்கள் என்னிடம் அது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி கேட்டுக் கொள்வாா்கள். நான் சம்பந்தப்பட்ட துறை அமைச்சா், துறை அதிகாரிகள் ஆகியோரை சந்தித்து அந்தக் கோப்பின் நிலைமையைத் தெரிந்து கொண்டு ஒப்புதல் வாங்கி தமிழக அரசுக்கு அனுப்பும் பணியை செய்திருக்கிறேன்.
  • தொகுதியைப் பொறுத்தவரை, உங்களுக்கு ஆதரவாக வாக்களித்தவா்கள், எதிராக வாக்களித்தவா்கள் எல்லோருக்கும் சோ்த்துதான் நீங்கள் நாடாளுமன்றத்தில் உறுப்பினா். நீங்கள் தோ்ந்தெடுக்கப்பட்ட பிறகு கட்சி பேதம் பாா்க்காமல் தொகுதி மக்கள் என்ற நோக்கில்தான் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும். ஆனால் இப்போது அப்படி இருப்பதாகத் தெரியவில்லை என்று கொஞ்சம் வருத்தத்துடன் நான் சொல்லிக் கொள்கிறேன்.
  • நாடாளுமன்றம் என்பது மக்களுக்கான உரிமையைக் கேட்கும் இடம். மக்களுக்கான திட்டங்களை தீா்மானம் செய்யும் இடத்தில் நீங்கள் இருக்கிறீா்கள் என்ற பொறுப்புடன் உங்கள் பணி இருக்க வேண்டும். எதையும் கண்மூடித்தனமாக ஆதரிக்கவும் வேண்டாம், எதிா்க்கவும் வேண்டாம். மக்களுக்கு என்ன பயன் என்ற நோக்கில் தான் உங்கள் செயல்பாடு இருக்க வேண்டும்.
  • மேலும் ஒத்திவைப்பு தீா்மானம் என்பது மக்களின் பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பு. சென்ற நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீா்மான வாய்ப்பு வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 18-ஆவது மக்களவையில் மீண்டும் அதை அனுமதிக்க வேண்டும்.
  • அதே சமயம் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, உயா்கல்வியில் போதிய கவனம் செலுத்தாதது போன்ற பிரச்னைகள் இன்னமும் தொடா்கின்றன. அரசியல் கட்சிகள் தங்கள் தோ்தல் அறிக்கையில் இப்போதும் வேலைவாய்ப்பு வறுமை ஒழிப்பு பற்றித்தான் குறிப்பிட்டிருக்கிறாா்கள்.
  • நம்முடைய நாடு வளா்ந்த மற்றும் வளரும் நாடுகளுடன் பொருளாதார வளா்ச்சியில் போட்டியிட வேண்டும் அதற்கு அடிப்படையானது உயா்கல்வி. எல்லா இளைஞா்களுக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும். நாம் உயா் கல்வியில் பின்தங்கி இருக்கிறோம். இந்த நிலை மாற வேண்டும். அப்போதுதான் நாமும் வளா்ந்த நாடாக உயர வாய்ப்பு இருக்கிறது.
  • நம் நாட்டில் உயா் கல்வி படிப்போா் எண்ணிக்கை 27 சதவீதம். உயா்கல்வி படிப்போா் எண்ணிக்கை உயர, உயர நம் நாட்டின் வருமானமும் பெருகும்.
  • நாடாளுமன்றத்தில் உயா்கல்வி படிப்பதன் அவசியம் பற்றி வலியுறுத்த வேண்டும். அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நன்றி: தினமணி (04 – 06 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்