(For English version to this please click here)
2024 ஆம் ஆண்டு 18வது லோக்சபா தேர்தலின் முக்கிய அம்சங்கள்
- இந்தியாவின் அரசியல் களத்தில் குறிப்பிடத்தக்க மைல்கற்களையும், மாற்றங்களையும் நன்கு குறிக்கும் வகையில், 18வது மக்களவைக்கான தேர்தல் முடிவுகள் ஜூன் 4, 2024 அன்று அறிவிக்கப் பட்டன.
வரலாற்றில் வாக்காளர் பங்கேற்பு
- 2024 மக்களவைத் தேர்தலில் 31.2 கோடி பெண்கள் உட்பட 64.2 கோடி வாக்காளர்களுடன் இந்தியா உலக சாதனையினைப் படைத்துள்ளது.
- இந்த வாக்களிப்பு விகிதம் அனைத்து G7 நாடுகளிலும் (அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் மற்றும் கனடா) உள்ள மொத்த வாக்காளர்களை விட 1.5 மடங்கு அதிகமாகும்.
- 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 540 என்ற எண்ணிக்கையில் இருந்து கணிசமான அளவு குறைந்துள்ளதாகவும், இந்தத் தேர்தலில் 39 முறை மட்டுமே மறுவாக்குப் பதிவு நடந்ததாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் குறிப்பிட்டுள்ளார்.
- தேர்தல் செயல்முறையை 68,000 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 1.5 கோடி வாக்குச் சாவடி மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள் சீராக நடத்துவதை உறுதி செய்தனர்.
- குறிப்பிடத் தக்க வகையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 51.05% உட்பட, ஒட்டு மொத்தமாக 58.58% வாக்களிப்புடன், கடந்த நான்கு தசாப்தங்களில் அவர்களின் அதிகபட்ச வாக்குப் பதிவை அம்மாநிலம் பதிவு செய்தது.
கட்சி பிரதிநிதித்துவம் மற்றும் இடங்கள்
- பாரதிய ஜனதா கட்சி 240 இடங்களைப் பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது.
- இந்தியத் தேசிய காங்கிரஸ் (INC) 99 இடங்களைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
- சமாஜ்வாடி கட்சி 37 இடங்களைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
- 2019 மக்களவையில் 36 கட்சிகளில் இருந்து வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர் என்ற நிலையில், இம்முறை அதை விட அதிகமாக 41 கட்சிகளில் இருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
- தேசியக் கட்சிகள் 346 இடங்களையும் (64%), மாநிலக் கட்சிகள் 179 இடங்களையும் (33%), அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் முறையே 11 மற்றும் 7 இடங்களைப் பெற்றன.
அனுபவம் மற்றும் தொடர்ச்சி
- 18வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட 262 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவை உறுப்பினர்களாக முன் அனுபவம் பெற்றவர்கள் என்பதோடு, அவர்களில் 16 பேர் ராஜ்யசபாவில் முன்பே பணியாற்றியுள்ளனர்.
- இவற்றில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் ஏழு முறை பதவி வகித்து உள்ளனர்.
- தற்போதைய 216 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற நிலையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மட்டும் இரண்டு தொகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
- மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 17வது லோக்சபாவில் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தினர் என்ற நிலையில் எட்டு பேர் தங்கள் அசல் கட்சிகளில் இருந்து பிரிந்த கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி உள்ளனர்.
அமைச்சர் பதவிகள்
- போட்டியிட்ட 53 அமைச்சர்களில் 35 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் புள்ளிவிவரங்கள்
- 18வது லோக்சபாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 56 ஆக உள்ளது, இது 17வது மக்களவையில் 59 வயதாக இருந்தது.
- 11% நாடாளுமன்ற உறுப்பினர்கள் 40 வயது அல்லது அதற்குக் குறைவானவர்கள், 38% பேர் 41 முதல் 55 வயதுக்கு இடைப்பட்டவர்கள், 52% பேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.
- மூத்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு 82 வயது என்ற நிலையில் இளைய நாடாளுமன்ற உறுப்பினருக்கு வயது 25 ஆகும்.
- 74 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (14%) பெண்கள் என்ற நிலையில், இது 2019 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 78 பெண்கள் என்ற எண்ணிக்கையினை விட சற்று குறைவாகும்.
- 41% பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்பு மக்களவையில் பணியாற்றியவர்கள் என்பதோடு, ஒருவர் ராஜ்யசபா உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
- இந்தியாவில் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் படிப்படியான அதிகரிப்பு இருந்த போதிலும், தென்னாப்பிரிக்கா (46%), இங்கிலாந்து (35%) மற்றும் அமெரிக்கா (29%) போன்ற நாடுகளை விட இந்தியா இன்னும் பின்தங்கியுள்ளது.
கல்வி மற்றும் தொழில்முறை பின்னணிகள்
- 78% நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தபட்சம் இளங்கலை பட்டப்படிப்பைக் கொண்டு உள்ளனர் என்ற நிலையில் இது புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்தியிலும் பிரதிபலிக்கிறது.
- மூன்று பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, 5% நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.
- பாராளுமன்ற உறுப்பினர்களிடையே பொதுவான தொழில்களில், விவசாயம் மற்றும் சமூகப் பணி ஆகியவை அடங்கும் என்ற வகையில், சத்தீஸ்கரில் இருந்து 91% நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்தியப் பிரதேசத்திலிருந்து 72% நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் குஜராத்தில் இருந்து 65% பேர் விவசாயத்தைத் தங்கள் தொழிலாகக் குறிப்பிடுகின்றனர்.
- கூடுதலாக, 7% எம்.பி.க்கள் வழக்கறிஞர்கள் மற்றும் 4% எம்.பி.க்கள் மருத்துவப் பணியாளர்கள் ஆவர்.
பிரதிநிதித்துவ இடைவெளிகள்
- முதன்முறையாக, எந்தவொரு முஸ்லீமும் நாடாளுமன்ற உறுப்பினர் அமைச்சராக பதவியேற்கவில்லை.
- மேலும் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து எந்த முஸ்லீம் வேட்பாளரும் 18வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப் படவில்லை என்ற நிலையில் இது மிகவும் குறிப்பிடத்தக்கப் பிரதிநிதித்துவ இடைவெளியை எடுத்துக்காட்டுகிறது.
- இந்த சிறப்பம்சங்கள் இந்திய அரசியலின் வளர்ச்சியடைந்து வரும் மாற்றங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பல்வேறு பின்னணிகளை பிரதிபலிக்கின்றன என்பதோடு இவை 18வது மக்களவையின் அமைப்பு மற்றும் செயல்பாடு பற்றிய பல்வேறு நுண்ணறிவுகளையும் வழங்குகின்றன.
18வது லோக்சபா தேர்தல், 2024 - சிறப்பம்சங்கள்
- 2024 மக்களவைத் தேர்தல் புதிய சாதனைகளைப் படைத்துள்ளது மற்றும் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
- இதன் முக்கிய சிறப்பம்சங்கள் பின்வருமாறு:
வாக்காளர் பங்கேற்பில் சாதனை
- மிகப் பெரிய தேர்தல்: 2024 மக்களவைத் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரியது, இது 44 நாட்கள் நீடித்தது, மேலும் இது 1951-52 இந்தியப் பொதுத் தேர்தலுக்குப் பிறகு நடைபெற்ற இரண்டாவது பெரிய தேர்தல் முறையாகும்.
- பெண்கள் வாக்காளர் பங்கேற்பு: இதில் புதியதொருச் சாதனையாக 31.2 கோடி (312 மில்லியன்) பெண்கள் கலந்து கொண்டனர், இது உலகளவில் பெண் வாக்காளர்களின் அதிகபட்ச பங்கேற்பு ஆகும்.
பாஜகவின் செயல்பாடு
- பாஜக இடங்கள்: பாரதிய ஜனதா கட்சி (BJP) 240 இடங்களுடன் மிகப்பெரிய கட்சியாக உள்ளது. இருப்பினும், அதற்குப் பெரும்பான்மை இல்லாததால், ஆட்சியமைக்க கூட்டணி அதற்குத் தேவையாக உள்ளது.
- கேரளாவில் பா.ஜ.க: முதல் முறையாக கேரளாவில் பா.ஜ.க வெற்றி பெற்றுள்ளது.
- தமிழகம் மற்றும் பஞ்சாபில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை: கணிசமான முயற்சிகள் இருந்தும், தமிழகம் மற்றும் பஞ்சாபில் பாஜகவுக்கு எந்த இடமும் கிடைக்கவில்லை.
- தமிழகத்தில் பா.ஜ.க.,வின் ஓட்டு சதவீதம்: திராவிடக் கட்சிகளின் ஆதரவின்றி, தமிழகத்தில், இரட்டை இலக்க ஓட்டு சதவீதத்தைப் பா.ஜ.க, பெற்றது.
- மத்தியப் பிரதேசத்தில் பாஜக: 40 ஆண்டுகளில் எந்தக் கட்சியும் வரலாறு காணாத வகையில், மத்தியப் பிரதேசத்தில் பாஜக 29 இடங்களிலும் வெற்றி பெற்றது.
- இந்தூர்: இந்தூரில் பாஜகவின் ஷங்கர் லால்வானி 11,75,092 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனையைப் படைத்தார். இங்கும் 2.18 லட்சம் வாக்காளர்கள் 'மேற்கண்ட யாவரும் இல்லை' என்பதைத் தேர்ந்தெடுத்த வகையில் நோட்டா சாதனை படைத்துள்ளது.
காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள்
- காங்கிரஸ் இடங்கள்: இந்தியத் தேசிய காங்கிரஸ் (INC) 99 இடங்களைப் பெற்று இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.
- எதிர்க்கட்சித் தலைவர்: மிகவும் மேம்பட்ட செயல்திறனுடன், 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக காங்கிரஸ் கட்சி இப்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு தகுதி பெற்று உள்ளது.
- குஜராத்தில் காங்கிரஸ்: பத்தாண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் காங்கிரஸ் தனது வெற்றியைப் பெற்றுள்ளது.
- தமிழகத்தில் என்.டி.கே கட்சியின் செயல்பாடு: என்.டி.கே கட்சி (நாம் தமிழர் கட்சி) புதிய சின்னத்தில் போட்டியிட்ட போதிலும், 2021 சட்டமன்றத் தேர்தலை விட என்.டி.கே இத்தேர்தலில் ஓரளவு சிறப்பாக செயல்பட்டது.
- சிவசேனா மற்றும் வி.சி.கே கட்சி: மும்பை நார்த் தொகுதியில் சிவசேனாவின் ரவீந்திர வைகர் வெறும் 48 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தமிழகத்தில் வி.சி.க (விடுதலை சிறுத்தைகள் கட்சி) மாநில கட்சி அங்கீகாரம் பெற்றது, அதே நேரத்தில் பாமக (பாட்டாளி மக்கள் கட்சி) அதன் மாநில கட்சி அந்தஸ்தை இழந்தது.
முக்கிய வெற்றியாளர்கள்
- ஓம் பிர்லா (ராஜஸ்தானின் கோட்டா தொகுதி): 20 ஆண்டுகளில் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் லோக்சபா சபாநாயகர் ஆனார்.
- சஷிகாந்த் செந்தில் (திருவள்ளூர்) : தமிழகத்தில் அதிக வாக்கு வித்தியாசத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளார்.
- ரகிபுல் உசேன்: அசாமின் துப்ரியில் காங்கிரஸ் வேட்பாளரான இவர், 10.12 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- டி.ஆர்.பாலு: தி.மு.க., வேட்பாளரான இவர் 82 வயதில், தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றார், இந்தத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூத்த வேட்பாளர் இவராவார்.
- பிரியங்கா ஜார்கிஹோலி (கர்நாடாகாவின் சிக்கொடி தொகுதி) : இவர் இடஒதுக்கீடு (தனித் தொகுதி) இல்லாத இடத்தில் இருந்து வெற்றி பெற்ற பழங்குடியினப் பெண்களில் மிகவும் இளம் வயது பெண் வெற்றியாளர் ஆனார்.
வாக்காளர் எண்ணிக்கை மற்றும் மக்கள்தொகை
- ஜம்மு மற்றும் காஷ்மீர்: கடந்த நான்கு தசாப்தங்களில் ஒப்பிடும் போது அதிகபட்சமாக 58.58% மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் 51.05% வாக்குகள் பதிவாகியுள்ளன.
- எழுபத்து மூன்று பெண்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர், இது 2019 ஆம் ஆண்டில் இருந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினரின் எண்ணிகையான 78 என்ற எண்ணிக்கையில் இருந்து குறைந்துள்ளது, மேலும் இது பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவால் நிர்ணயிக்கப்பட்ட 33% இலக்கை விட குறைவாக உள்ளது.
- இது இந்திய அரசியலில் பாலினச் சமத்துவத்தை அடைவதில் உள்ள மிகப்பெரும் சவாலை எடுத்துக் காட்டுகிறது.
- 33% இலக்கை அடைவதற்கு சட்டமன்ற நடவடிக்கை மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு வலுவான ஆதரவு என்பது தேவையாக உள்ளது.
- நோட்டா மீதான தற்போதைய மதிப்பீடுகள்: நோட்டா பயன்பாட்டில் வீழ்ச்சியடைந்து வரும் போக்கை தமிழகம் எதிர்கொண்டது, ஆனால் இந்தூர் நோட்டா வாக்குகளில் புதிய சாதனையினைப் படைத்தது.
- வயது மற்றும் அனுபவம்: பாராளுமன்ற உறுப்பினர்களின் சராசரி வயது 56 ஆண்டுகளாகும். பதினொரு சதவீதம் பேர் 40 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுடையவர்கள், மேலும் 52 சதவீதம் பேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்களாவர்.
சட்ட மாற்றங்கள்
- தபால் வாக்கு எண்ணிக்கை: 2019 விதி மூலம் ஏற்பட்ட மாற்றத்தைத் தொடர்ந்து, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன, அதைத் தொடர்ந்து 30 நிமிடங்களுக்குப் பிறகு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) மூலம் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது.
புதிய அமைச்சரவை நியமனங்கள்
- பிரதமர் நரேந்திர மோடி: தொடர்ந்து மூன்றாவது முறையாக ஜூன் 10, 2024 அன்று 71 அமைச்சர்களுடன் பதவியேற்றார்.
- பியூஷ் கோயல்: பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்தக் கூடிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றார்.
- ஜிதின் பிரசாத்: வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் இணை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.
பெண் தலைவர்களைச் சேர்த்தல்:
- ஏழு பெண் தலைவர்கள் அமைச்சர்கள் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற நிலையில் இதில் இரண்டு பேர் காபினர் பதவியினைப் பெற்றுள்ளனர்.
NDA கூட்டணிக் கட்சிகளின் பிரதிநிதித்துவம்:
- NDA கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களுக்கு 11 அமைச்சரவை பதவிகள் ஒதுக்கப் பட்டுள்ளன, இது கூட்டாட்சி மற்றும் பிரதிநிதித்துவத்திற்கான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
முக்கிய அமைச்சகங்களில் நிலைத்தன்மை:
- முதல் நான்கு அமைச்சகங்கள் - உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளிவிவகாரம் அமைச்சகங்கள் - மாறாமல், நிர்வாகத்தின் முக்கியமான பகுதிகளில் கொள்கை தொடர்ச்சியை உறுதி செய்கிறது.
- மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக நிதின் கட்கரி தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார்.
- மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், விவசாயம், விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தற்போது கேபினட்/ராஜாங்க அமைச்சராக உள்ள பாஜக தலைவர் ஜேபி நட்டா சுகாதாரத் துறை அமைச்சகத்தை மேற்பார்வையிடுவார்.
- ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார், மின்சாரம் மற்றும் வீட்டுவசதித் துறையின் முக்கிய இலாகாக்களை நிர்வகிப்பார்.
- முதல் 10 அமைச்சர்களில் பாஜக அல்லாத ஒரே தலைவராக எச்.டி.குமாரசாமிக்கு கனரகத் தொழில்கள் மற்றும் எஃகு அமைச்சகத்தின் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது, இது பரந்த அளவிலான நிர்வாக அணுகுமுறையைக் குறிக்கிறது.
- அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே துறையின் அமைச்சராகவும், வி சோமன்னா மற்றும் ரவ்னீத் சிங் பிட்டு ஆகியோர் ரயில்வே துறையின் இணை அமைச்சர்களாகவும் நியமிக்கப் பட்டு உள்ளனர்.
- சமூக நலனில் கவனம் செலுத்தும் வகையில் அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.
- தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த மற்றும் தற்போதைய அரசாங்கத்தின் மிகவும் இளைய அமைச்சரான கே ராம்மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்தின் தலைவராக இருப்பார்.
- மன்சுக் மாண்டவியா விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற நிலையில் இளம் பெண் அமைச்சரான ரக்சா காட்சே, விளையாட்டுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றுகிறார்.
- எல்.முருகன் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சராகப் பணியாற்றுவார்.
- கேரளாவைச் சேர்ந்த சுரேஷ் கோபி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் மற்றும் சுற்றுலா அமைச்சகத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-------------------------------------