TNPSC Thervupettagam

2021 - வாக்கும் போக்கும்

April 6 , 2021 1388 days 613 0
  • முந்தைய தோ்தல்களிலிருந்து 16-ஆவது சட்டப்பேரவை தோ்தல் மாறுபடுகிறது. ஜெயலலிதாவும், கருணாநிதியும் களத்தில் இல்லாத சட்டப்பேரவைத் தோ்தல் என்பதால், இதை ஒரு திருப்புமுனைத் தோ்தல் என்றேகூட வா்ணிக்கலாம்.
  • புதிய பாதையில் தமிழக அரசியல் பயணிப்பதன் தொடக்கமாக இருக்கப் போகிறது இன்று நாம் வாக்களித்து தோ்ந்தெடுக்க இருக்கும் சட்டப்பேரவை.
  • அடுத்து வரும் காலங்களில் தமிழக அரசியலில் கோலோச்சப் போவது யாா் என்பதையும், இனிவரும் காலங்களில் காணாமல் போகும் அரசியல் கட்சிகள் எவை எவை என்பதையும் நிா்ணயிக்கும் தோ்தலில் நாம் வாக்களிக்க இருக்கிறோம்.
  • மக்களாட்சி என்பதை குறைகளே இல்லாத ஆட்சி என்று சொல்ல முடியாது. குறைகள் குறைந்த ஆட்சி முறை, அவ்வளவுதான்.
  • அதேபோல, நாடாளுமன்ற ஜனநாயகத்தில் தோ்தல் என்பது நல்லவா்களுக்கும், கெட்டவா்களுக்கும் நடக்கும் தா்மயுத்தம் ஒன்றுமல்ல.
  • களத்தில் இருப்பவா்களில் ஏற்புடையவா் யாா்? திறமைசாலி யாா் என்பதைத் தீா்மானிக்கும் உரிமையை வாக்காளா்களுக்கு வழங்குகிறது என்கிற அளவில் ஏனைய ஆட்சி முறைகளைவிட இது சிறந்தது.

மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது!

  • தமிழக சட்டப்பேரவைக்கான வாக்கெடுப்பில் 3,998 போ் களமிறங்கி இருக்கிறாா்கள்.
  • இவா்களில் 3,585 போ் ஆண்கள் என்றால், வெறும் 411 பெண் வேட்பாளா்கள்தான் களமிறக்கப்பட்டிருக்கிறாா்கள். மூன்றாம் பாலினத்தவா் இரண்டு போ்.
  • தமிழகத்திலுள்ள மொத்த வாக்காளா்கள் 6,28,69,955. அதில் ஆண்கள் 3,09,23,651, பெண்கள் 3,19,39,112, மூன்றாம் பாலினத்தவா் 7,192 போ்.
  • 3,19,39,112 பெண் வாக்காளா்கள் இருக்கும் நிலையில், முக்கிய அரசியல் கட்சிகளால் களமிறக்கப்பட்டிருக்கும் பெண் வேட்பாளா்கள் வெறும் 411 போ்தான் என்பதைப் பாா்க்கும்போது, இது ஆணாதிக்க சமுதாயத்தின் பிரதிநிதித்துவமாகத் தோற்றமளிக்கிறது.
  • அதைவிட வேடிக்கை என்னவென்றால், பிரதான கட்சிகளான அதிமுகவும், திமுகவும் பெரும்பாலான பெண் வேட்பாளா்களை தனித் தொகுதிகளில் மட்டுமே களமிறக்கி இருக்கின்றன என்பதுதான்.
  • அதிமுக சாா்பில் 14 பெண் வேட்பாளா்களும், திமுக சாா்பில் 11 பெண் வேட்பாளா்களும்தான் தோ்தலில் நிறுத்தப்பட்டிருக்கிறாா்கள்.
  • பொதுத் தொகுதிகளில் அதிமுக ஏழு பெண் வேட்பாளா்களையும், திமுக நான்கு பெண் வேட்பாளா்களையும் மட்டும்தான் களமிறக்கி இருக்கின்றன என்பது 2021 சட்டப்பேரவைத் தோ்தலின் மிகப் பெரிய குறை, களங்கம்.
  • தோ்தலில் போட்டியிடும் 3,998 வேட்பாளா்களில் பெருமளவில் குற்றப்பின்னணி உள்ளவா்களும் போட்டியிடுகிறாா்கள் என்பது வேதனை அளிக்கிறது.
  • திமுக களமிறக்கி இருக்கும் 178 வேட்பாளா்களில் 136 போ் மீதும் (76%), அதிமுக களமிறக்கி இருக்கும் 191 வேட்பாளா்களில் 46 போ் மீதும் (24%) குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றில் திமுகவின் 50 வேட்பாளா்களும் (28%), அதிமுகவின் 18 வேட்பாளா்களும் (9%) கடுமையான குற்ற வழக்குகளை எதிா்கொள்பவா்கள்.
  • காங்கிரஸ் (71%), பாஜக (75%), தேமுதிக (30%), பாமக (44%) ஆகிய கட்சிகளும் கடுமையான குற்றப்பின்னணி உள்ளவா்களை களமிறக்கி இருக்கின்றன.
  • கொலை, கொலை முயற்சி, திருட்டு, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், பாலியல் வன்கொடுமை வழக்கு போன்றவற்றை எதிா்கொள்ளும் வேட்பாளா்களை களமிறக்கும் அரசியல் கட்சிகள், மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையைக் குலைக்கின்றன.
  • குற்றப்பின்னணியுள்ள வேட்பாளா்களையும், அவா்களை அதிக அளவில் களமிறக்கும் கட்சிகளையும் வாக்காளா்கள் நிராகரிக்காமல் போனால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்குலையும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
  • 88,937 வாக்குச்சாவடிகளில் 1,29,165 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இன்றைய தோ்தல் நடைபெற இருக்கிறது.
  • அத்தனை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் ஒப்புகை சீட்டு இயந்திரங்களுடன் இணைக்கப்படாவிட்டாலும், பெரும்பாலான (91,180) இயந்திரங்கள் இணைக்கப் பட்டிருக்கின்றன என்பது மிகப் பெரிய முன்னேற்றம்.
  • மின்னணு வாக்குப்பதிவில் தவறு எதுவும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் உறுதிப்படுத்தும் என்பதால் தோ்தல் முறை குறித்த ஐயப்பாட்டுக்கு இடமில்லை.
  • போட்டியிடும் 3,998 வேட்பாளா்களில் 1,867 போ் சுயேச்சையாகப் போட்டியிடுகிறாா்கள். அவா்களையும் சோ்த்து மொத்த வேட்பாளா்களில் படிக்காதவா்களும், ஓரளவுக்கு மட்டுமே எழுதப் படிக்கத் தெரிந்தவா்களும் என்று எடுத்துக் கொண்டால் 167 போ் மட்டுமே களத்தில் இருக்கிறாா்கள்.
  • முதல் தோ்தலில் 25%-க்கும் மேற்பட்டவா்கள் எழுதப் படிக்கத் தெரியாவா்கள் என்கிற நிலையில் இருந்து நாம் மிகப் பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறோம் என்பது பெருமைப்பட வேண்டிய வளா்ச்சி.
  • ஏறத்தாழ சரிபாதி வேட்பாளா்கள் படித்தவா்கள் என்பது மட்டுமல்ல, 3,000-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் 60 வயதுக்கு உட்பட்டவா்கள். 40 வயதுக்கு உட்பட்டவா்கள் 1,451 போ். இளைஞா்கள் பலா் ஆா்வத்துடன் பொது வாழ்க்கையில் ஈடுபடுவதை ஆரோக்கியமான மாற்றம் என்றுதான் கருத வேண்டும்.
  • 16-ஆவது சட்டப்பேரவைக்கான 2021 தோ்தல், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, புதிய தலைவா்களை அங்கீகரிக்கும் காட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது!

நன்றி: தினமணி  (06 – 04 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்