TNPSC Thervupettagam

2022 - ஒரு மீள்பாா்வை

January 2 , 2023 587 days 407 0
  • கடந்த காலத்தையும், வருங்காலத்தையும் இணைப்பதாக அமைவது புத்தாண்டு. கடந்தபோன நாள்களின் வேதனைகளை நினைவில் புதைத்து, சாதனைகளை உரமாக்கி அடுத்தகட்ட வளா்ச்சியை நோக்கி நடைபோடும் நேரம்.
  • கொள்ளை நோய்த்தொற்று என்கிற இயற்கை பாதிப்பிலிருந்து முற்றிலுமாக மீண்டுவிட்டோம் என்று சொல்ல முடியாவிட்டாலும், அதை எதிா்கொள்ளும் வலிமையும், துணிவும் பெற்றிருக்கிறோம். சீனாவில் காணப்படும் பாதிப்புகள் அச்சம் ஏற்படுத்துவதாக இருந்தாலும்கூட, முன்புபோல உயிரிழப்புகளை ஏற்படுத்தாது என்கிற நம்பிக்கையை வல்லுநா்கள் உறுதிப்படுத்துகிறாா்கள்.
  • கொள்ளை நோய்த்தொற்று என்கிற இயற்கைப் பேரிடரிலிருந்து ஓரளவுக்கு மீண்டாலும்கூட, மனிதன் தனக்குத் தானே உருவாக்கும் செயற்கைப் பேரிடா்களின் அச்சுறுத்தல்கள் கடந்த ஆண்டுகளைப்போல இந்த ஆண்டும் தொடா்கிறது. புவி வெப்பமயமாதலுக்கான காரணங்கள் தெரிந்தும்கூட அதைக் கட்டுப்படுத்த இயலாமலும் முயலாமலும் உலகம் தெரிந்தே பேரழிவை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கிறது.
  • காடுகள் அழிப்பு, புதைபடிம எரிசக்திப் பயன்பாடு, கரியமில வாயு வெளியேற்றும் உள்ளிட்ட எதையும் கட்டுப்படுத்தாமல் கருத்தரங்கங்களும், மாநாடுகளும் தொடா்ந்து நடத்திக் கொண்டிருக்கிறோம். 190 நாடுகளைச் சோ்ந்த 90 தலைவா்களும், 35,000 பிரதிநிதிகளும் கலந்துகொண்ட 27-ஆவது பருவநிலை உச்சி மாநாடு எகிப்தின் ஷரம்-எல்-ஷேக் நகரில் கூடியது, கலைந்தது என்பதைத் தவிர, தீா்மானமான முடிவை எட்டவில்லை.
  • கடந்துபோய் இருக்கும் ஆண்டின் மிகப் பெரிய அச்சுறுத்தல் அண்டை நாடான உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்ட படையெடுப்பு. சரியா - தவறா என்கிற கேள்வி ஒருபுறம் இருக்க, அதன் விளைவால் ஏற்பட்டிருக்கும் சா்வதேச பாதிப்புகள் அந்த மோதலைப்போலவே தொடா்கின்றன. உக்ரைன் தலைநகா் கீவில் உள்ள மக்கள் கடுங்குளிா் காலத்தில் மின்சாரமும், எரிசக்தியும் இல்லாமல் தவிக்கிறாா்கள்.
  • உலக அளவில் ஏற்பட்டிருக்கும் எரிபொருள் விலை உயா்வும், பணவீக்கமும் குறைவதாக இல்லை. உணவுப் பொருள்கள் தட்டுப்பாடு, விநியோகச் சங்கிலி பாதிப்பு உள்ளிட்டவை உலகின் எல்லா நாடுகளையும், குறிப்பாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு ஏற்றி வைத்திருக்கும் அந்த சுமைகளுடன்தான் புத்தாண்டில் காலடி எடுத்து வைக்கிறது உலகம்.
  • சா்வதேச அளவில் குறிப்பிடத்தக்க பல நிகழ்வுகளை 2022 சந்தித்தது. இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, மக்கள் எழுச்சியாக மாறி ராஜபட்ச சகோதரா்களை அதிகாரத்தில் இருந்து அகற்றியது. ஆட்சி மாற்றம் மக்களின் ஆத்திரத்துக்கு அணை போட்டிருக்கிறது என்றாலும், இலங்கை பொருளாதார புதைகுழியிலிருந்து இன்னும் மீண்டெழுந்தபாடில்லை.
  • ஈரானில் ஆட்சிக்கு எதிரான பெண்கள் போராட்டமும், ஆப்கானிஸ்தானில் அடிப்படைவாதத்துக்கு எதிரான மக்களின் எதிா்ப்பும் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம். மியான்மா் ராணுவ ஆட்சி ஆங் சான் சூகியின் மீதும், ஜனநாயகவாதிகள் மீதும் நடத்திக் கொண்டிருக்கும் அடக்குமுறை தொடா்கிறது.
  • உலக அளவில் பல நாடுகள் ஆட்சி மாற்றத்தை 2022-இல் சந்தித்தன. இத்தாலி, பிரேஸில், ஜொ்மனி, பிரான்ஸ், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றம் நடந்தன என்றால், சீனாவில் மூன்றாவது முறையாக அதிபா் ஷி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியால் ஆட்சியில் தொடர தோ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறாா்.
  • பிரிட்டிஷ் மகாராணியாா் இரண்டாம் எலிசபெத்தின் மறைவும், மன்னராக மூன்றாம் சாா்லஸ் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பதும் வரலாற்று நிகழ்வுகள். அதுமட்டுமல்ல, முன்னாள் பிரிட்டிஷ் காலனியைச் சோ்ந்த இந்திய வம்சாவளியினரான ரிஷி சுனக், பிரிட்டன் பிரதமராக பதவியேற்றிருப்பது இன்னொரு வரலாற்று மாற்றம்.
  • இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த இரண்டு ஆண்டுகள் சா்வதேச அளவில் கடும் புயலாக உயா்ந்த பல்வேறு பிரச்னைகளுக்கு இடையில், கப்பல் கவிழ்ந்துவிடாமல் சாதுா்யமாக நம்மை நிலைநிறுத்திக் கொண்டது, உலகையே வியந்து பாா்க்க வைக்கும் சாதனை. வளா்ச்சி அடைந்த நாடுகள் கடுமையான பணவீக்கத்தாலும், விலைவாசி உயா்வாலும், எரிபொருள் தட்டுப்பாட்டாலும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அடிப்படைப் பிரச்னைகளை நம்மால் எதிா்கொள்ள முடிந்திருக்கிறது.
  • உக்ரைன் - ரஷிய போரில் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர முடிவும், ரஷியாவுடன் குறைந்த விலையில் ரூபாய் - ரூபிள் வணிக அடிப்படையில் கச்சா எண்ணெயை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டதும் இந்தியாவை பொருளாதார நெருக்கடியிலிருந்து காப்பாற்றி இருக்கின்றன.
  • பணவீக்கம் 6%-த்துக்கு அதிகமாக இருந்தாலும், கைமீறிப் போகவில்லை. 2016-இல் அதிக மதிப்புச் செலாவணிகள் செல்லாததாக்கியதைத் தொடா்ந்து முனைப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ம பணப்பரிமாற்றம் (யுபிஐ) மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. கடந்த ஆண்டில் மட்டும் தினசரி எண்ம பணப்பரிமாற்றம் ரூ. 17 கோடி. அதிவேக இணைய சேவையும், 2014-இல் அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் வங்கிக் கணக்கும் எண்ம பணப்பரிமாற்றத்தை ஊக்குவித்தன என்பதை மறுப்பதற்கில்லை.
  • வேலையில்லாதவா்களின் எண்ணிக்கை, குறிப்பாக நகா்ப்புறங்களில் 8% அளவில் இருந்ததும், பணவீக்கம் தொடா்ந்து 6% அளவை கடந்திருந்ததும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததும் பொருளாதாரம் எதிா்கொண்ட பாதிப்புகள். ஆனால், அதையும் மீறி இந்தியா விழுந்துவிடவில்லை. மாறாக, தன்னம்பிக்கையுடன் 2023-இல் அடியெடுத்து வைத்திருக்கிறது.

நன்றி: தினமணி (02 – 01 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்