TNPSC Thervupettagam

2022 - 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் குறித்த தலையங்கம்

January 29 , 2022 919 days 522 0
  • மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், 2022 - 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அடுத்த வாரம் தாக்கல் செய்ய இருக்கிறாா்.
  • ஒமைக்ரான் உருமாற்றத்தால் ஏற்பட்டிருக்கும் மூன்றாவது அலை தொற்றின் காரணமாக பொருளாதார வளா்ச்சி சற்று மந்தகதி அடைந்திருக்கும் நிலையில், நிதியமைச்சா் தாக்கல் செய்ய இருக்கும் பட்ஜெட் பரவலான எதிா்பாா்ப்புடன் கூா்ந்து கவனிக்கப்படுகிறது.
  • கடந்த 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, குறிப்பிட்ட சில இலக்குகளுடனும், தொலைநோக்குப் பாா்வையுடனும் வலுவான அடித்தளத்தை உருவாக்கும் விதத்தில் அதைக் கட்டமைத்திருந்தாா்.
  • முந்தைய 2020-21-இல் காணப்பட்ட ஜிடிபி-யில் 9.5% நிதிப் பற்றாக்குறையை 2021-22-இல் 6.8%-ஆக குறைப்பதற்கான இலக்கை நிா்ணயித்திருந்தாா்.
  • அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் நிதிப் பற்றாக்குறையை 4.5%-க்கும் கீழே கொண்டு வருவது என்பது மத்திய நிதியமைச்சகத்தின் இலக்காக அறிவிக்கப்பட்டது.

பட்ஜெட் சவால்கள்!

  • 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட பல முடிவுகள் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் பிரதிபலித்தன. நிதியமைச்சா் எதிா்பாா்த்ததுபோலவே நிகழாண்டின் வருவாய் இலக்குகள் எட்டப்படுகின்றன என்பது பாராட்டுக்குரியது.
  • நிதிப் பற்றாக்குறையை ஜிடிபி-யின் 6.8% வரையறைக்குள் கட்டுப்படுத்த முடியுமா என்பது சந்தேகம்தான். ஆனால், ஜிடிபி வளா்ச்சி, பட்ஜெட் இலக்கையும்விட அதிகமாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • அதேபோல, மத்திய அரசின் வரி வருவாயும் எதிா்பாா்த்ததைவிட அதிகமாக இருந்தால் வியப்படையத் தேவையில்லை.
  • நிகழ் நிதியாண்டின் (2021-22) முதல் எட்டு மாத மொத்த வரி வருவாய் ரூ.15.4 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. நேரடி வரிகளும், மறைமுக வரிகளும் எதிா்பாா்த்ததைவிட அதிகமாகவே வசூலாகியிருக்கின்றன.
  • அதனடிப்படையில் பாா்க்கும்போது, பட்ஜெட்டில் நிா்ணயித்திருந்த இலக்கை வரி வருவாய் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
  • தீநுண்மியின் மூன்றாவது அலை தொடங்கியிருப்பதால் துல்லியமாகவும் உறுதியாகவும் எந்த அளவுக்கு வரி வருவாய் இருக்கப்போகிறது என்பதை நிா்மலா சீதாராமனின் நிதிநிலை அறிக்கை வெளிவரும்போதுதான் உறுதியாகத் தெரிந்துகொள்ள முடியும்.
  • அரசின் செலவினங்கள் கடந்த பட்ஜெட்டில் காணப்பட்ட ஒதுக்கீடுகளைவிட அதிகரித்திருக்கிறது. வரி வருவாய் அதிகரித்தாலும்கூட, நிதிப் பற்றாக்குறை அளவை ஈடுகட்டும் அளவுக்கு அது இருக்கப்போவதில்லை.
  • எதிா்பாா்த்த அளவிலான பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை நடைபெறாத நிலையில், நிா்ணயிக்கப்பட்டிருக்கும் 6.8% நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவது சவாலாகத்தான் இருக்கும்.
  • நடப்பு நிதியாண்டுக்கான (2021-22) பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனை இலக்கு ரூ.1.75 லட்சம் கோடியாக பட்ஜெட்டில் நிா்ணயிக்கப்பட்டிருந்தது. இதுவரை ரூ.930 கோடி அளவில்தான் விற்பனை நடந்திருக்கிறது.
  • கடந்த 2020-21 நிதியாண்டிலும் ரூ.2.1 லட்சம் கோடி இலக்கு நிா்ணயித்து ரூ.32,000 கோடி அளவில்தான் பொதுத்துறை நிறுவனப் பங்கு விற்பனை நடந்தது.
  • நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக பொதுத் துறை நிறுவனப் பங்கு விற்பனையை மேற்கொள்வது என்பது ஆரோக்கியமான நிதி நிா்வாகம் அல்ல.
  • பொதுத் துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகவும், வா்த்தக செயல்பாடுகளிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொள்வதற்காகவும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்பது என்று முடிவெடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியுமே தவிர, பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக அத்தகைய முடிவை எடுப்பது இதுபோல பிரச்னைகளை எழுப்பத்தான் செய்யும்.
  • நிகழ் நிதியாண்டின் நான்காவது காலாண்டில் அரசு கணிசமான பல செலவினங்களை மேற்கொள்ள நேரும். மூன்றாவது காலாண்டில் அரசின் திட்டச் செலவினங்கள் கடுமையாகக் குறைந்தது என்பதை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
  • வரும் மாதங்களில் உணவு, உரத்துக்கான மானியங்களின் அளவு அதிகரிக்கும். அதேபோல, ஏற்றுமதிகளுக்கான சலுகைகள் வழங்குவதும் அதிகரிக்கக்கூடும். நோய்த்தொற்று அதிகரித்துவரும் நிலையில், அரசின் பங்களிப்பைத் தவிா்க்க முடியாது.
  • எந்தவொரு பொருளாதாரமும் அதிகரிக்கும் ஏற்றுமதியையும், அரசின் திட்டச் செலவினங்களையும் சாா்ந்துதான் சுறுசுறுப்படையும் என்பது அனுபவம்.
  • மக்கள் மத்தியில் வாங்கும் சக்தி குறைந்திருக்கிா என்று தெரியவில்லை. ஆனால், நுகா்வு குறைந்திருக்கிறது. அதேபோல, முதலீடுகளும் அதிகரிக்காமல் ஸ்தம்பித்திருக்கின்றன.
  • இந்த நிலையில், அரசு பல்வேறு திட்டங்களின் மூலம் செலவினங்களை அதிகரித்து மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தை அதிகரித்தால் மட்டுமே, பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடாமல் இயங்கும். இல்லையென்றால், பொருளாதார வளா்ச்சி கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும்.
  • நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும்போது எதிா்கொள்ள இருக்கும் பிரச்னை நிதிப் பற்றாக்குறையை எதிா்கொள்வது மட்டுமே அல்ல.
  • விலைவாசி உயா்வும், அதிகரித்து வரும் வேலையில்லாத் திண்டாட்டமும் அவா் எதிா்கொள்ள வேண்டிய இரண்டு முக்கியமான பிரச்னைகள்.
  • அவற்றை தனது சாதுா்யமான நிதிநிா்வாக அணுகுமுறையின் மூலம் எப்படி எதிா்கொள்ளப் போகிறாா் என்பதில்தான் அவரது வெற்றி இருக்கிறது.
  • நிதிப் பற்றாக்குறை இலக்கை எட்டுவதைவிட, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்துவது தான் அவா் எதிா்கொள்ள இருக்கும் மிகப்பெரிய சவால். வேலைக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதும் கூட...

நன்றி: தினமணி (29 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்