TNPSC Thervupettagam

2022-23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்த தலையங்கம்

March 19 , 2022 871 days 654 0
  • அடுத்த நிதியாண்டுக்கான (2022 - 23) தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டிருக்கிறது.
  • மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்திருக்கும் முழுமையான பட்ஜெட் இது என்பதும், புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள சட்டப்பேரவையில் அவரது அரசு தாக்கல் செய்யும் முதலாவது பட்ஜெட் என்பதும் இதன் தனிச்சிறப்புகள்.
  • தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வரவு - செலவுத் திட்டத்தின்படி வணிக வரிகள், மாநில ஆயத் தீர்வைகள், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப் பதிவுக் கட்டணங்கள், மோட்டார் வாகனங்கள் மீதான வரி உள்ளிட்ட சொந்த வரி வருவாய் ரூ.1,42,799.93 கோடி. சொந்த வரியில்லாத வருவாய் ரூ.15,537.24 கோடி.
  • மத்திய அரசின் வரி வசூல் உயர்ந்துள்ளதாலும், மாநில அரசுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கியதாலும் மத்திய வரிகளின் பங்கீடு அதிகரித்துள்ளது.

பட்ஜெட்: நிறையும் குறையும்

  • 2014-ஆம் ஆண்டு முதல் வருவாய்ப் பற்றாக்குறை அதிகரித்து வந்திருக்கிறது என்பது உண்மை. ஆட்சிக்கு வந்தவுடன் தாக்கல் செய்த திருத்த பட்ஜெட்டின் வருவாய்ப் பற்றாக்குறை ரூ.41,417.30 கோடியிலிருந்து ரூ.58,693.68 கோடியாக திருத்தி மதிப்பிடப்பட்டது.
  • இப்போது, அதுவே ரூ.52,781.17 கோடி என்று மறு மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது. வருவாய்ப் பற்றாக்குறை சற்று குறைந்து வருகிறது என்பது பாராட்டுக்குரிய மாற்றம்.
  • அதே நேரத்தில், தமிழக அரசின் நிலுவைக் கடன் அதிகரித்திருப்பதை சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.
  • முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் மொத்த கடன் அளவு ரூ.4.67 லட்சம் கோடி என்றால், முந்தைய நிதிநிலை அறிக்கையில் அதுவே ரூ.5.63 லட்சம் கோடியாக அதிகரித்தது. இப்போது ரூ.90,000 கோடி கடன் பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
  • அடுத்த நிதியாண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த கடன் அளவு ரூ.6.53 லட்சம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது, கவலையளிப்பதாக உள்ளது.
  • கொள்ளை நோய்த்தொற்றால் தடம் புரண்டு போயிருக்கும் பொருளாதாரச் சூழலில், எந்தவொரு ஆட்சியும் நிதி நிர்வாகத்தை செவ்வனே நிர்வகிப்பது என்பது மிகப் பெரிய சவால்.
  • நிதிப்பற்றாக்குறையைக் குறைக்கவும், நிலுவைக் கடனின் அளவைக் குறைக்கவும் முன்னுரிமை அளித்தால், பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலைமைக்கு அரசு தள்ளப்படும் என்பதன் பின்னணியில்தான் இந்த பட்ஜெட்டை நாம் பார்க்க வேண்டும்.
  • தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் இருக்கின்றன.
  • குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலச் செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்குவது என்கிற திட்டம், அடித்தட்டு குடும்ப மாணவிகள் உயர்கல்விச் சேர்க்கையை அதிகரிக்கும்.
  • மாநிலம் முழுவதும் பரவலான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில் கோவை, பெரம்பலூர், மதுரை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் புதிய தொழில் பூங்காக்களை அமைக்க அரசு முடிவெடுத்திருப்பது வரவேற்புக்குரிய அறிவிப்பு.
  • இதன் மூலம் முதலீடுகள் ஈர்க்கப்படவும், படித்த, வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படவும், பல குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் உருவாகவும் வாய்ப்பு ஏற்படக் கூடும்.
  • தொழில் துறைக்கு ரூ.3,267.91 கோடி என்பது அதிகமில்லாவிட்டாலும், கணிசமானது.
  • ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது, ஏற்றுமதிக் கிடங்குகள், உள்நாட்டுக் கொள்கலன் கிடங்குகள் அமைப்பது போன்ற அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.
  • மத்திய அரசு உதவியுடன் மின்னணுப் பொருள்கள் தயாரிப்புக்காக இரண்டு சிறப்பு தொகுப்புகள், செய்யாறு, கும்மிடிப்பூண்டியில் சரக்கு வாகன முனையங்கள் உள்ளிட்ட அறிவிப்புகளும் வளர்ச்சிக்கு வழிகோலும் திட்டங்கள்.
  • புதிய அருங்காட்சியகங்கள், அகழ்வாராய்ச்சிகள், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களில் புதிய நூலகங்கள், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி வீரர்களுக்கு சிறப்புப் பயிற்சி உள்ளிட்ட பல வரவேற்புக்குரிய அறிவிப்புகள் பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்.
  • சென்னையைப் போலவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள், உயர்தர வசதிகளுடன் கூடிய மத்திய - மாவட்ட நூலகங்கள், இலக்கியத் திருவிழாக்கள் என்று புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்லும் அரசின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
  • நிதிநிலை அறிக்கையில் காணப்படும் முக்கியமான அறிவிப்புகளில் ஒன்று, சென்னையையொட்டிய கிழக்குக் கடற்கரைச் சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்டம்.
  • 2022 - 23 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அதற்காக ரூ.135 கோடி ஒதுக்கப் பட்டிருக்கிறது.
  • திருவான்மியூரிலிருந்து அக்கரை வரை ஆறுவழிச் சாலை என்பது, சென்னையிலிருந்து தூத்துக்குடி வரையிலான ஆறு வழிச்சாலையாக அறிவிக்கப்பட்டிருக்கலாகாதா என்கிற ஆதங்கம் எழுகிறது.
  • அப்படியொரு தொலைநோக்குப் பார்வை ஏற்படுமானால், தமிழகம் அதிவிரைவாக தொழில் வளர்ச்சியை அடைவது மட்டுமல்லாமல், தூத்துக்குடி துறைமுகத்தின் முக்கியத்துவமும் அதிகரிக்கக்கூடும்.
  • குறைகளே இல்லாத பட்ஜெட் என்பது இல்லை. இழப்பில் இயங்கும் மின்வாரியத்தையும், போக்குவரத்துக் கழகங்களையும் மீட்பதற்கான முயற்சி எதுவும் முன்னெடுக்கப்படாதது இந்த பட்ஜெட்டின் மிகப் பெரிய குறை.
  • அவை இரண்டையும் சரி செய்யாத வரை, அரசின் கடன் அளவு அதிகரித்த வண்ணம்தான் இருக்கும் என்பது நிதியமைச்சருக்குத் தெரியாதா என்ன? பூனைக்கு யார் மணி கட்டப் போவது என்பதுதான் தெரியவில்லை!

நன்றி: தினமணி (19 – 03 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்