தனித்து வென்ற பெண்
- தொழிலாளர் சந்தையில் பெண்களின் பங்கு பற்றிய புரிதலை மேம்படுத்தியதற்காக 2023ஆம் ஆண்டின் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளாடியா கோல்டினுக்கு வழங்கப்பட்டது. பொருளாதாரத்துக்கான நோபல் பரிசைத் தனித்துப் பெற்ற முதல் பெண் என்னும் பெருமைக்குரியவர் கிளாடியா. இதற்கு முன்பு எலினோர் ஓஸ்ட்ராம் (2009), எஸ்தர் டுஃப்லோ (2019) இருவரும் ஆண்களுடன் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டனர்.
முன்னுதாரணத் தலைவர்
- நியூசிலாந்து பிரதமர் பதவியிலிருந்து விலகினார் ஜெசிந்தா ஆர்டர்ன். 2017இல் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஜெசிந்தாவுக்கு 37 வயது. குழந்தை வளர்ப்புக்கான விடுமுறைக் காலத்தை அதிகரித்தது உட்படப் பல முற்போக்கான மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தார். கரோனா பெருந்தொற்றைத் திறம்படக் கையாண்டு, தொற்றுப் பரவலையும் உயிரிழப்புகளையும் கட்டுப்படுத்தியதற்காக உலகச் சுகாதார நிறுவனத்தின் பாராட்டைப் பெற்றார்.
முதலாளிகளை அடிபணியவைத்தவர்
- செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டில் பெரும் பாய்ச்சலுக்கு வித்திட்ட சாட்ஜிபிடியை உருவாக்கிய அமெரிக்கத் தொழிலதிபர் சாம் ஆல்ட்மேன், ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஓபன்ஏஐ ஊழியர்கள் இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்க, மீண்டும் அப்பதவியைப் பெற்றார். முதலாளித்துவச் சந்தையிலும் திறமைவாய்ந்த தனிநபர்கள் விதிகளைத் தீர்மானிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.
காற்றில் கலந்த கலகக்காரர்
- ரஷ்யாவின் சார்பில் உக்ரைன் போரில் ஈடுபட்டிருந்த வாக்னர் குழு என்னும் தனியார் ராணுவப் படை, திடீரென்று ரஷ்ய அரசுக்கு எதிராகத் திரும்பியது. ரஷ்யப் பாதுகாப்பு அமைச்சரும் ராணுவத் தலைவரும் நீக்கப்பட வேண்டும் என்று வாக்னர் குழுவின் தலைவர் வாக்னர் ப்ரிகோஷின் நிபந்தனை விதித்தார். பெலாரஸ் அதிபரின் தலையீட்டுக்குப் பிறகு வாக்னர் தொடங்கிய கலகம் கைவிடப்பட்டது. அடுத்த சில மாதங்களில் விமான விபத்தில் வாக்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
கொல்லப்படும் குழந்தைகள்
- அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நிகழ்த்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, காசாவின் மீது இஸ்ரேல் அரசு இப்போதுவரை நடத்திக்கொண்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதலில், இருபதாயிரத்துக்கு மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர்; பலியானவர்களில் குழந்தைகளின் எண்ணிக்கை 5,000-ஐக் கடந்துவிட்டதாக யுனிசெஃப் அமைப்பு தெரிவித்திருந்தது. இது தவிர, ஆயிரக்கணக்கான குழந்தைகளும் பெண்களும் காணாமல் போயுள்ளனர்.
சளைக்காத சர்ச்சைக்காரர்
- அமெரிக்காவின் முன்னாள் அதிபரான சர்ச்சைக்குரிய டொனால்ட் டிரம்ப், போலியான வணிகப் பதிவுகளைத் தாக்கல் செய்தது தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு விசாரணை 2024 மார்ச்சில் தொடங்கவுள்ளது. 2020 தேர்தல் முடிவுகளை நடைமுறைப்படுத்தவிடாமல் தடுக்க முயன்றது உள்பட வேறு சில வழக்குகளையும் எதிர்கொண்டுள்ள டிரம்ப், 2024 அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
முதுமையில் அரியணை ஏறியவர்
- 70 ஆண்டுகள் பிரிட்டன் அரசியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 2022 செப்டம்பர் 8 அன்று மறைவுற்றதை அடுத்து, 76 வயதான அவரது மகன் மூன்றாம் சார்லஸ் பிரிட்டன் மன்னராக 2023 மே 6 அன்று மகுடம் சூட்டப்பட்டார்; மிக அதிக வயதில் பிரிட்டன் அரியணை ஏறியவர் ஆகியிருக்கிறார் சார்லஸ்.
உறவைக் கெடுத்த கொலை
- இந்திய அரசால் தேடப்பட்டுவரும் சீக்கியப் பிரிவினைவாதியும் காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையில் இந்திய அரசுக்குப் பங்கிருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். பதிலுக்குக் காலிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகக் கனடா அரசு மீது இந்தியா குற்றம் சாட்டியது. தூதர்களைத் திரும்பப் பெறுதல், விசா சேவை தற்காலிகமாக நிறுத்தம் என இரு நாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது.
அதிபரான தமிழர்
- தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவரான தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் போட்டிக்குப் பின் சிங்கப்பூர் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் சீன வம்சாவளியைச் சேராத முதல் நபர் என்னும் பெருமையைப் பெற்றார். இலங்கையைப் பூர்விகமாகக் கொண்ட தர்மன், பிரதமரின் ஆலோசகர், நிதியமைச்சர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளை வகித்திருக்கிறார்.
அமைதியில் ஆழ்த்திய ஆஸ்திரேலியர்
- எதிர்பாராத விதமாக 2021 இறுதியில் ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆனார் பேட் கம்மின்ஸ். இவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி தொடர் வெற்றிகளைக் குவிக்கவில்லை. 2023 இல் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையில் அந்த அணி முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. எனினும், சுதாரித்துக்கொண்டு வெற்றிகளைக் குவித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி அரங்கில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனது அணியை வெற்றிபெறச் செய்ததன் மூலம் அரங்கை நிறைத்திருந்த இந்திய ரசிகர்களை அமைதியில் அழ்த்தினார் கம்மின்ஸ்.
நன்றி: இந்து தமிழ் திசை (29 – 12 – 2023)