TNPSC Thervupettagam

2024 - மீண்டும் அறிமுகமான தென்னிந்திய ஜான்சிராணி! யார் இந்த அஞ்சலை அம்மாள்?

December 25 , 2024 6 days 64 0

2024 - மீண்டும் அறிமுகமான தென்னிந்திய ஜான்சிராணி! யார் இந்த அஞ்சலை அம்மாள்?

  • தமிழகத்தில் அனைவரும் எதிர்பார்த்த தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் அரங்கைக் கட் அவுட்களாக அலங்கரித்த ஐந்து பெருந் தலைவர்களில் ஒருவர் இந்த அஞ்சலை அம்மாள்.
  • பலரும் பெரிதாக அறிந்திராத இந்த அஞ்சலையம்மாள் யார்? இவரது பின்னணி என்ன?
  • கடலூரைச் சேர்ந்த அஞ்சலை அம்மாள், சுதந்திரப் போராட்ட வீராங்கனை. அதிலும் குறிப்பாகப் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை என்றால் பலருக்கும் ஜான்சி ராணி, வேலு நாச்சியார், சரோஜினி நாயுடு, லட்சுமி ஷெகல் உள்ளிட்டோர்தான் நினைவுக்கு வரும். ஆனால் வயிற்றில் குழந்தையைச் சுமந்தபோதும் சற்றும் அசராமல் ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடிச் சிறையில் அடைக்கப்பட்ட வீர மங்கை அஞ்சலை அம்மாள்.
  • 1890-ம் ஆண்டு அம்மாக்கண்ணு - முத்துமணி தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர் அஞ்சலை அம்மாள், திண்ணைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். 1908-ம் ஆண்டு தனது 18-வது வயதில், நெசவுத்தொழிலில் ஈடுபட்டு வந்த முருகப்பா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இயல்பிலேயே விடுதலை வேட்கை அவரது மனதில் குடிகொண்டிருந்தது. இதன் பின்னர் சென்னைக்கு இடம்மாறினார்கள் முருகப்பா - அஞ்சலை தம்பதி.
  • இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த 1900-ம் ஆண்டுகளில் இருந்து சுதந்திர தாகம் மக்களிடையே ஊற்றெடுத்தது. அப்போது மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அஞ்சலை அம்மாள் 1921-ல் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்தார்.
  • 1857 சிப்பாய் கிளர்ச்சியின்போது சுதந்திரத்துக்கு எதிராகக் குரல் கொடுத்த சிப்பாய்களையும் பொதுமக்களையும் ஈவு இரக்கமின்றி கொன்று மரங்களில் தொங்கவிட்ட கொடூர அரக்கனாக இருந்த ஆங்கிலேயப் படைத்தளபதி கர்னல் ஜேம்ஸ் நீல் என்பவருக்குச் சென்னையில் சிலை வைக்கப்பட்டது. அப்போது வீராவேசம் அடைந்த அஞ்சலை அம்மாள், நீல்ஸ் சிலையைக் கோடரியால் சேதப்படுத்தினர். இதனால் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • அப்போது அஞ்சலை அம்மாளின் 9 வயது மகளான அம்மாக்கண்ணுவும் சிறையில் அடைக்கப்பட்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலை அம்மாள் வேலூர் மத்தியச் சிறையில் ஆறு மாதம் சிறைத் தண்டனை பெற்றார். சிறையில் கடும் வேதனையுற்ற அவர் ஒரு மாத விடுப்பில் வெளியே வந்து தனது இளைய மகனைப் பெற்றெடுத்தார். பின்னர் 15 நாள் கைக்குழந்தையுடன் மீண்டும் சிறைக்குச் சென்றார். பல போராட்டங்களில் பங்கேற்ற அஞ்சலை அம்மாள், பலமுறை கடுங்காவல் தண்டனையும் பெற்றுள்ளார். அஞ்சலை அம்மாளுடன் சேர்ந்து அவருடைய குடும்பமும் சுதந்திரத்திற்காகப் போராடியது. சிறைத் தண்டனையிலிருந்தபோது குழந்தையைப் பெற்றெடுத்ததனால் தன் மகனுக்கு ஜெயில்வீரன் என்று பொருள்படும் வகையில் ஜெய வீரன் எனப் பெயர் சூட்டினார்.
  • 1931-ல் சென்னையில் அனைத்திந்திய மகளிர் காங்கிரஸ் கூட்டத்துக்கு அஞ்சலை அம்மாள் தலைமை தாங்கினார். உப்பு சத்யாக்கிரகத்தின்போது ஆங்கிலேயர்களால் தாக்குதலுக்கு உள்ளானார். 1932-ல் மது ஒழிப்பு கொள்கைக்கு ஆதரவாகக் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது ஒன்பது மாதம் கடுங்காவல் தண்டனையை அனுபவித்தார். சிறை முடிந்து வெளியே வந்ததும் சட்ட மறுப்பு போராட்டத்தில் பங்கேற்று மீண்டும் மூன்று மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். அஞ்சலை அம்மாள் மீது ஆங்கிலேயர்கள் கடுமையான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தனர்.
  • சிறையிலிருந்து வெளியே வந்தாலும் அவர் யாரையும் சந்திக்கமுடியாத சூழல் நிலவியது. அப்போதுதான் 1934-ல் காந்தியடிகள் சென்னைக்கு வந்தார். அஞ்சலை அம்மாளை சந்திக்க வேண்டும் என எண்ணினார். ஆனால் ஆங்கிலேய அரசால் தடை விதிக்கப்பட்ட நிலையில், காந்தியால் தீவிர போராளியான அஞ்சலையம்மாளை சந்திக்க முடியாமல் போனது அதற்காக அவர் மன வருத்தமும் அடைந்தார்.
  • ஒருநாள் திடீரென மகாத்மா காந்தி தங்கியிருந்த இடத்துக்குப் பர்தா அணிந்த பெண் ஒருவர் குதிரையில் வந்திறங்கினார். யாரோ தன்னைச் சந்திக்க வந்திருப்பதாக எண்ணிய காந்தியடிகளுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி. பர்தாவை விலக்கி அஞ்சலை அம்மாள் குதிரையை விட்டுக் கீழே இறங்கினார். இதைக் கண்ட காந்தியடிகள் ஆச்சரியத்துடன் அஞ்சலையம்மாளின் வீரத்தையும், தீரத்தையும் கண்டு வியந்தார். அஞ்சலை அம்மாளை தென்னாட்டு ஜான்சி ராணி எனப் பாராட்டினார்.
  • பலமுறை சிறைக்குச் சென்றும் அமைதியாக இருந்துவிடவில்லை, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களும், அதனால் சிறைத்தண்டனையும், கடுங்காவல், அடக்குமுறை என இந்தியா விடுதலையடையும் நாள் வரை தொடர்ந்து போராட்டமே தன் வாழ்க்கையாகத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் அஞ்சலையம்மாள்.
  • அதேநேரம் 1937, 1946 மற்றும் சுதந்திரத்துக்குப் பிறகு 1952 என மூன்று முறை சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினராக, கடலூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அஞ்சலை அம்மாள், தன்னுடைய பதவிக்காலத்தில் கடலூரின் குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார். கட்சிக்காக அரும்பணியாற்றிய அஞ்சலையம்மாள், தான் குடியிருந்த வீட்டையும் அடகுவைத்து கட்சிப் பணிக்காகச் செலவு செய்தார். அஞ்சலையின் வீடு ஒருகட்டத்தில் ஏலத்துக்குச் சென்றது. ஆனால் கட்சியினரும், அவரது நலம்விரும்பிகளும் வீட்டை மீட்டுக் கொடுத்தனர். அஞ்சலை அம்மாளின் பெயரில் இருந்தால் மீண்டும் நாட்டுக்காக விற்றுவிடுவார் என்று அவரது பிள்ளைகளின் பெயரில் வீட்டை எழுதிவைத்தனர்.
  • தனது கடைசிக் காலத்தை அஞ்சலை அம்மாள் முட்லூர் கிராமத்தில் தனது மகனுடன் கழித்து வந்தார். அங்கும் அவர் ஓய்வெடுக்கவில்லை, வேளாண்மைப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். பின்னர் அதே ஊரில் 1961 பிப்ரவரி 20ம் தேதி தனது 71வது வயதில் அஞ்சலையம்மாள் காலமானார்.
  • அஞ்சலை அம்மாளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டுமென்று 2014-ஆம் ஆண்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருந்த தற்போதைய மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை விடுத்தார். 2021-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன், செங்கல்பட்டு தொகுதி திமுக பெண் உறுப்பினர் வரலட்சுமி ஆகியோரும் மணிமண்டபம் அமைக்கக் கோரிக்கையை முன்வைத்தனர்.
  • இதையடுத்து 2021-22 ஆம் ஆண்டில் அஞ்சலை அம்மாளுக்கு கடலூரில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என்று, மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடலூர் சி. முதுநகர் காந்தி பூங்காவில் அரசு சார்பில் ரூ. 25 லட்சத்தில் அஞ்சலை அம்மாளுக்கு முழு உருவச் சிலை நிறுவி தமிழக அரசு கௌரவித்தது.
  • இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய தியாக செம்மலான வீரமங்கை அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை வரலாறு தமிழக பாடப் புத்தகத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. அஞ்சலை அம்மாளின் பிறந்த நாளான ஜூன் 1-ம் தேதி அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
  • அஞ்சலையம்மாள் வன்னிய இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் வன்னிய இன மக்கள் அடர்த்தியாக வாழும் விக்கிரவாண்டியில் விஜய்யின் முதல் மாநாடு நடத்தப்பட்டதாகவும், வன்னிய இன மக்களின் ஆதரவைப் பெறவே அஞ்சலை அம்மாள் கட் அவுட் வைக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரங்கள் கூறிவருகின்றனர்.
  • எப்படி இருந்தாலும், விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் முன்னிறுத்தும் தலைவர்களில் ஒருவராக அஞ்சலை அம்மாளை வெளிப்படுத்தியிருப்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் மாநிலம் முழுவதும் யார் அவர்? எனக் கேட்க வைத்திருக்கிறது; அவரைப் பற்றித் தேடிப் படிக்க வைத்திருக்கிறது.
  • இனி வருங்காலத்தில் வன்னிய மக்கள் மிகுந்துள்ள மாவட்டங்களில் எல்லா கட்சிகளின் மாநாடுகளிலும்கூட அஞ்சலை அம்மாள் கட் அவுட்கள் இடம் பெற்றால் வியப்பதற்கில்லை!

நன்றி: தினமணி (25 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்