TNPSC Thervupettagam

2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?

December 29 , 2024 15 days 43 0

2024-ல் உருவான தலைவர்! இந்திரா காந்தியை ஈடுசெய்வாரா?

  • 1999 ஆம் ஆண்டு அமேதி தொகுதியில் தன் தாய் சோனியா காந்திக்கான பிரசாரத்தின் மூலமாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய பிரியங்கா காந்தி, மிகவும் தாமதமாகவே 2024 ஆம் ஆண்டில் இந்திய அரசியலில் ஒரு முக்கிய தலைவராக உருவெடுத்துள்ளார்.
  • தன் சிறுவயதில் தந்தை ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அவரது பேச்சைக் கேட்கச் சென்ற பிரியங்கா, தனது 54 வயதில் வயநாடு மக்களவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றதன் மூலமாக நாடாளுமன்றத்தில் காலடி எடுத்துவைத்திருக்கிறார்.
  • பிரியங்கா காந்தி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என பல ஆண்டு யூகங்களுக்கும் அவர் அரசியலுக்கு வரப் பயப்படுகிறாரா, ராபர்ட் வதேரா அனுமதிக்கவில்லையா போன்ற பலவிதமான விமர்சனங்களுக்கும் இந்தாண்டு விடை கிடைத்திருக்கிறது.
  • 2024 மக்களவைத் தோ்தலில், உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி, வயநாடு ஆகிய இரு மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இரண்டிலும் வெற்றி பெற்றார். காங்கிரஸ் குடும்பத்தின் கோட்டையான ரேபரேலி தொகுதியைத் தக்கவைத்த அவர், வயநாடு தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ததால், அத்தொகுதிக்கு இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டது.
  • அதிக வாக்குகள் வித்தியாசத்தில்(3.64 லட்சம்) வெற்றிபெற்ற ராகுல் காந்திக்கு இணையாக ஒருவர் போட்டியிட்டு வெற்றியும் பெற வேண்டும் என்ற கட்டாயத்தில், வயநாடு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் யார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்தான் பிரியங்கா காந்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
  • வயநாடு இடைத்தேர்தலுக்கு தனது பெயர் அறிவிக்கப்பட்டவுடன், பிரியங்கா காந்தி கூறியது: "நான் சிறிதும் பதட்டமடையவில்லை… வயநாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த முடிந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். வயநாட்டில் ராகுல் காந்தி இல்லாததை மக்களிடம் நான் உணரவிடமாட்டேன். கடினமாக உழைத்து நல்ல பிரதிநிதியாக இருக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். நான் ரேபரேலியில் 20 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறேன். அந்த உறவு ஒருபோதும் முறியாது. ரேபரேலி, வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் நானும் எனது சகோதரரும் ஒன்றாக வேலை செய்வோம்" என்றார்.
  • பிரசாரங்களில் பங்கேற்பது, பேசுவது ஒன்றும் பிரியங்கா காந்திக்கு புதிதல்ல. தனது தாய் சோனியா காந்தி, சகோதரர் ராகுல் காந்திக்காக அவர் பலமுறை பிரசாரக் களத்தைச் சந்தித்துள்ளார்.
  • 1999-ல் தாய் சோனியா காந்திக்காக அமேதி தொகுதியில் ஆரம்பித்த பிரசாரம், 2004 மக்களவைத் தேர்தல், 2007 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் எனத் தொடர்ந்தது.
  • கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியைச் சந்தித்தபிறகு, கட்சியை வலுப்படுத்தும்விதமாகவும் அந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நிலையிலும் பிரியங்கா காந்தியை களமிறக்கியது காங்கிரஸ்.
  • அதன்படி, முதல்முறையாக காங்கிரஸ் கட்சியில் அவருக்கு பதவி வழங்கப்பட்டது. 2020 ஜனவரியில் உ.பி. (கிழக்கு)காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட பிரியங்கா காந்தி, பின்னர் உத்தரப் பிரதேச தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மாநிலம் முழுமைக்கும் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். உ.பி. தேர்தல் பொறுப்பாளராகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது அங்கு பெரிதாக கைகொடுக்கவில்லை என்றாலும் 2023 ஹிமாசலப் பிரதேசத்தில் கட்சியின் பிரசாரத்திற்கு தலைமை தாங்கியதன் எதிரொலியாக அந்த மாநிலம் காங்கிரஸ் வசம் ஆனது.
  • இதனிடையே, 2021-ல் லக்கிம்பூர் கேரி பகுதியில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்றபோதும் ஆக்ராவில் நீதிமன்றக் காவலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரைச் சந்திக்க சென்றபோதும் இருமுறை உ.பி. காவல்துறையால் கைது செய்யப்பட்டார். உ.பி.. சட்டப்பேரவைத் தேர்தலில் பெண் வாக்காளர்களின் வாக்குகளை பெறும்நோக்கில் பலவிதங்களில் பிரச்சாரங்களை மேற்கொண்டார். ஆனால் அங்கு காங்கிரஸ் தோல்வியினால் 2023-ல் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
  • அடுத்து பிரியங்காவின் பிரசாரம், குறிப்பாக 2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்தது என்று கூறலாம். (2019ல் 52 இடங்கள் காங்கிரஸ் வெற்றி, 2024ல் 99 இடங்கள்). இந்த தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மை என்ற அந்தஸ்தை இழந்து கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு இது சற்று சரிவுதான். இதற்கு பிரியங்காவும் ஒரு முக்கியக் காரணம் என்றுதான் கூற வேண்டும். இந்த தேர்தலுக்காக பிரியங்கா காந்தி 16 மாநிலங்கள்/ யூனியன் பிரதேங்களில் 108 பொதுக்கூட்டங்கள், பேரணிகளில் பங்கேற்றார்.
  • எனவே, ராகுல் காந்திக்காக முன்னதாகவே வயநாட்டில் பிரசாரம் மேற்கொண்ட பிரியங்கா, வயநாடு இடைத்தேர்தலிலும் ராகுல் காந்தியுடன் சேர்ந்து தீவிர பிரசாரம் செய்தார். அறிவித்தபடியே, சகோதரர் ராகுல் காந்திக்கு சற்றும் சளைத்தவர் அல்ல என தேர்தல் முடிவுகளில் நிரூபித்துவிட்டார்.
  • நவ. 13 ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் நவ. 23ல் வெளியானது. பிரியங்கா காந்தி 6,22,338 வாக்குகள்(மொத்தம் 9.52 லட்சம் வாக்குகள்) பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் மொகேரியைவிட 4.10 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். வயநாடு தேர்தலில் ராகுல் காந்தி(3.64 லட்சம் வாக்கு வித்தியாசம்) பெற்ற வாக்கு வித்தியாசத்தைவிட பிரியங்கா பெற்றது அதிகம்.
  • தனது முதல் தேர்தல் களத்திலேயே அமோக வெற்றி என்பது பல ஆண்டு கால வரலாற்றில் சிலருக்கு மட்டுமே கிடைத்திருக்கும் நிலையில் பிரியங்காவும் அதில் இடம்பிடித்துவிட்டார்.
  • 'உங்கள் நம்பிக்கைகளையும் கனவுகளையும் புரிந்துகொண்ட ஒருவரைத் தேர்வு செய்ததன் மூலமாக இந்த வெற்றி உங்கள் வெற்றி என்பதை விரைவில் உணர்வீர்கள்' - வெற்றி பெற்ற பிறகு பிரியங்கா காந்தி வயநாடு மக்களுக்கு கூறியது. தனக்கு அன்பும் தைரியமும் அளித்த தாய் சோனியா, சகோதர ராகுல், கணவர் ராபர்ட் வதேரா, குழந்தைகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார் பிரியங்கா.
  • வயநாடு தொகுதி மக்களவை உறுப்பினராக நவ. 28ல் பதவியேற்றார் பிரியங்கா காந்தி. வயநாடு மக்களின் பிரதிநிதியாக தன்னை காட்டிக்கொள்ளும் பொருட்டு கேரளத்தின் கசவு சேலையை அணிந்து அரசமைப்புப் புத்தகத்தைக் கையில் ஏந்தி பதவியேற்றுக்கொண்டார்.
  • முன்னதாக, நாடாளுமன்றத்தில் நுழைந்த பிரியங்கா காந்திக்கு காங்கிரஸ் தலைவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தன் சகோதரியை நிறுத்தி தன்னுடைய போனில் ராகுல் காந்தி புகைப்படம் எடுத்த நிகழ்வுகள் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
  • இப்போது நாடாளுமன்றத்தில் காந்தி குடும்பத்தைச் சேர்ந்த மூவர்(சோனியா, ராகுல், பிரியங்கா) இடம்பெற்றுள்ளது வரலாற்று சாதனைதான்.
  • சமீபத்தில் ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் தோல்வியடைந்தாலும் வயநாடு தேர்தலில் பிரியங்காவின் வெற்றி ஆறுதலாக இருந்தது.
  • 1999ல் செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரியங்கா, 'நான் அரசியலுக்கு வர நீண்ட காலம் ஆகலாம்' என்று கூறினார். உண்மையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு 2019ல் தான் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். முழு அரசியல்வாதியாக(எம்.பி.யாக) 2024ல் தான் மாறியிருக்கிறார்.

இந்திரா காந்தியை ஈடு செய்வாரா பிரியங்கா?

  • ஒற்றுமை நடைப்பயணத்திற்கு கிடைத்த வரவேற்பினால் ராகுல் தொடர்ந்து மக்களைச் சந்தித்து வரும் நிலையில், பிரியங்காவும் அதனைக் கடைபிடிக்கிறார். இந்திரா காந்தியைவிட பிரியங்கா மக்களிடம் அதிகம் நெருங்கிப் பழகுகிறார், மக்களுடனான எளிதான அணுகுமுறை இந்திராவின் தோற்றம், அவரது தைரியமான பேச்சு உள்ளிட்டவை அவருக்கு சாதகமாகப் பார்க்கப்படுகிறது. கட்சி கூட்டங்களிலும் சரி வெளியிலும் சரி பல பிரச்னைகளில் தனது கருத்தை தைரியமாகவும் தெளிவாகவும் எடுத்துரைக்கிறார், பல சர்ச்சையான பிரச்னைகளைக் கூட எளிதாகக் கையாள்கிறார் என கட்சி நிர்வாகிகளே கூறுகின்றனர்.
  • நாடாளுமன்றத்திற்கோ, செய்தியாளர் சந்திப்பிற்கோ ஒரு புதிய நபர் என்ற அடையாளம் இல்லாத அளவுக்கே அவரது பேச்சு இருப்பதாகவே தெரிகிறது. நாடாளுமன்ற மக்களவையிலும் தனது முதல் உரையிலேயே, நேரு பற்றிய பாஜகவின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவும் அரசமைப்பு, இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு என பாஜக அரசுக்கு எதிராகவும் பேசி காங்கிரஸ் தலைவர்களின் கைதட்டலைப் பெற்றார்.
  • அதானி விவகாரத்திலும் சரி, அமித் ஷா விவகாரத்திலும் சரி காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றப் போராட்டங்களில் ராகுல் காந்திக்கு இணையாக பங்கேற்றது, சம்பல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க ராகுலுடன் சேர்ந்து சென்று காவல்துறையினருடன் தைரியமாக வாக்குவாதம் செய்தது, பத்திரிகையாளர்களை சந்திப்பது என துணிச்சலாகவே செயல்படுகிறார்.
  • காந்தி குடும்பம் என்பதாலும் இந்திரா காந்தியைப் போன்று இருப்பதாலும் பிரியங்கா காந்தி முன்பே அரசியல்வாதியாகிருக்க வேண்டும், அவர் முன்னரே முழு அரசியலில் இருந்திருந்தால் இந்நேரம் ராகுலைவிட மிகப்பெரும் தலைவராக, தற்போதைய மோடிக்கும் பாஜக அரசுக்கும் ஒரு சவாலாகவே இருந்திருப்பார். பெரும்பாலான காங்கிரஸ் கட்சியினரின் கூற்றும் இதுதான்.
  • அரசியலைவிட காங்கிரஸ் எனும் பேரியக்கத்தைவிட தன் குடும்பத்திற்கு குறிப்பாக தன் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததால் இந்த வாய்ப்பை இழந்துவிட்டதாகவும் பேசப்படுகிறது. இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. இதுவே தொடர்ந்தால் வெகு விரைவில் இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவராகி விடுவார் பிரியங்கா.
  • தற்போது நாடாளுமன்றத்தில் பிரியங்கா நுழைந்திருப்பதன் மூலமாக காங்கிரஸ் கட்சி மேலும் வலுப்படும், பிரியங்காவின் அரசியல்(நாடாளுமன்ற) நுழைவு அடுத்த தேர்தலில் பிரதிபலிக்கும் என்றே அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
  • (1972, ஜனவரி 12-ல் பிறந்த பிரியங்கா, 1984 வரை டேராடூனில் படித்தார். இந்திரா காந்தி சுடப்பட்ட பின்னர் பாதுகாப்பு கருதி வீட்டிலேயே கல்வி பயின்ற அவர் பின்னர் தில்லியின் இயேசு மற்றும் மேரி கான்வென்ட்டில் படித்தார். இயேசு மற்றும் மேரி கல்லூரியில் உளவியலில் இளங்கலைப் பட்டமும் புத்த மதப் படிப்பில் முதுகலைப் பட்டமும் பெற்றார். 1997ல் தொழிலதிபர் ராபர்ட் வதேராவை மணந்தார். இவர்களுக்கு ரைஹான்(மகன்), மிராயா(மகள்) என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.)

நன்றி: தினமணி (29 – 12 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்