- இந்தக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும்போது நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவி ஏற்றிருப்பார். தனிக் கட்சியின் பெரும்பான்மை வலிமையுடன் இதுவரை ஆண்ட ‘யதேச்சதிகாரர் மோடி’ விடைபெற்றுக்கொள்வார்; பெரும்பான்மைக்குக் கூடுதலாக வெறும் 20 எம்.பி.க்களை மட்டுமே பெற்ற ‘பல கட்சி கூட்டணி அரசின் பிரதமர் (அடங்கி நடக்க வேண்டிய) மோடி’ ஆகப் பதவியேற்பார். இது அவருக்குப் புதிய அனுபவமாக இருக்கும்.
- சென்ற 15 ஆண்டு காலப் பொது வாழ்க்கையில் இப்படியொரு பாத்திரத்தை ஏற்க மோடி தயார்படுத்திக்கொண்டிருக்க மாட்டார்; ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராக, பாஜகவின் பொதுச் செயலராக, குஜராத் மாநில முதல்வராக, இந்தியாவின் பிரதமராக என்று பல பாத்திரங்களை இதுவரை அவர் வகித்திருக்கிறார்; இப்போது பழக்கமில்லாத புதிய பாத்திரத்தை ஏற்கவிருக்கிறார்.
என்னென்ன மாற்றங்கள் நடக்கும்?
- சில வாரங்களுக்கு முன்பு வரை, ‘சாத்தியமே இல்லை’ என்று கருதப்பட்ட மிகப் பெரிய அரசியல் மாற்றத்தை, நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இந்திய மக்கள் சாதித்துவிட்டார்கள்:
- இனி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் (மக்களவை - மாநிலங்களவை) இனி ‘விதிகளின்படி’, அவை உறுப்பினர்களின் ‘கருத்தொற்றுமைப்படி’ நிகழ்ச்சிகளை நடத்தும்; அவைத் தலைவர், அவை முன்னவர் ஆகியோரின் ‘விருப்ப அதிகாரங்களின்படி’ நடைபெறாது.
- நாடாளுமன்றத்தின் அனைத்துக் குழுக்களும் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில், சம பலத்துடன் அமைக்கப்படும்; குழுக்களின் ‘தலைமைப் பதவி’ எல்லா அரசியல் கட்சிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.
- முறையாக அங்கீகரிக்கப்பட்ட, ‘எதிர்க்கட்சித் தலைவர்’ அவையில் இருப்பார், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க வலிமையான எதிர்க்கட்சிகள் அவையில் இருக்கும்.
- ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்படாமல், அரசமைப்புச் சட்டம் இனி திருத்தப்பட மாட்டாது.
- மத்திய அமைச்சரவைக் கூட்டங்களோ, சில அமைச்சர்களை மட்டும் கொண்ட குழு கூட்டங்களோ – பிரதமர் எடுக்கும் முடிவை அப்படியே ஏற்று ஒப்புதல் அளிக்கும் சம்பிரதாய சடங்காக இருக்காது, அல்லது ஏற்கெனவே அமல்படுத்தத் தொடங்கிவிட்ட முடிவுகளை ஏற்கும் இடமாக இருக்கவே முடியாது – உதாரணம்: பணமதிப்பு நீக்க நடவடிக்கை.
- மாநில அரசுகளின் உரிமைகளுக்கு உரிய அங்கீகாரம் இருக்கும்; அவை பாதுகாக்கப்படும்.
- மாநிலங்களுக்கும் அமைச்சகங்களுக்கும் துறைகளுக்கும் திட்டங்களுக்கும் ஒதுக்கப்படும் நிதி, கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் திருப்திக்கேற்ப இருக்கும், ஒரு சிலரின் விருப்ப அதிகாரத்தின்படி இருக்காது.
- முக்கியமான விவாதங்களின்போது அவையில் இனி பிரதமர் இருந்தாக வேண்டும், கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும், விவாதங்களிலும் பங்கேற்றாக வேண்டும்!
தேர்தல் முடிவு தரும் பாடங்கள்
- மக்கள் தங்களுடைய ‘மனதின் குரல்’ என்னவென்று இந்தத் தேர்தலில் வெளிப்படுத்திவிட்டார்கள். அவர்கள் சுதந்திரத்துக்கு மரியாதை தருகின்றனர், பேச்சுரிமை – கருத்துரிமையை ஆதரிக்கின்றனர், அந்தரங்கம் காக்கப்பட வேண்டும் என்ற தனியுரிமையை விரும்புகின்றனர்; போராட்டம் நடத்தும் உரிமை அவசியம் என்கின்றனர்.
- தேச விரோதச் செயலில் ஈடுபட்டதாகவும் – அவதூறு செய்துவிட்டதாகவும் போலியான குற்றச்சாட்டுகளின் பேரில், வழக்கு தொடுக்கும் ஆர்வத்தை அரசு இனி கைவிட்டுவிட வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டவர்களைக் காவல் துறையினர் போலி மோதல் வழி துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதும், புல்டோடர்களைக் கொண்டு வீடுகளையும் கட்டிடங்களையும் சட்டத்துக்குப் புறம்பாக இடித்துத் தள்ளுவதும் இனி கைவிடப்பட வேண்டும் (உத்தர பிரதேச முதல்வர் ஆதித்யநாத்துக்கு இந்தத் தேர்தல் முடிவு புகட்டும் பாடம் இதுவே).
- அரசியலுக்கு அப்பாற்பட்டது ராமர் கோயில்; அதை மீண்டும் அரசியல் களத்துக்கு இழுத்துவரக் கூடாது (அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 77 வயது அவதேஷ் பிரசாத் (சமாஜ்வாதி கட்சி), பிரதமரின் முன்னாள் முதன்மைச் செயலர், அயோத்தி கோயில் கட்டுமானத் திட்டமிடலுக்குப் பொறுப்பேற்றிருந்த நிருபேந்திர மிஸ்ராவின் மகனும், சிராவஸ்தி தொகுதியில் பாஜக சார்பில் நின்று தோல்வியைத் தழுவியவருமான சாகேத் மிஸ்ரா இருவரையும் இதுபற்றிக் கேளுங்கள்).
உண்மையிலேயே சுதந்திரமான ஊடகங்களைத்தான் மக்கள் விரும்புகின்றனர்:
- போலியாக தயாரிக்கப்பட்ட வாக்குக் கணிப்பு முடிவுகள் வேண்டாம்; பிரதமரின் ஒவ்வொரு புருவ நெளிப்புக்கும் விளக்கம் தரும் ‘நேரலை ஒளிபரப்புகள்’ வேண்டாம்;, ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட பதில்களுக்குப் பொருத்தமாக கேள்விக் கேட்கும் பேட்டிகளும் கூடாது; வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (இடி), மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) ஆகியவை தயாரிக்கும் அறிக்கைகளை அப்படியே கேமரா முன் வாசிக்கும் போக்கும் கூடாது.
- மாநிலக் கட்சிகள் தங்களுடைய கொள்கை - தன்மைக்கேற்ப எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக நடந்துகொள்ள வேண்டும்; சொந்த மாநிலத்தில் ஒரு முகத்தையும் - டெல்லி மாநகரில் வேறொரு முகத்தையும் காட்டுவது கூடாது. அப்படிப்பட்ட கட்சிகளுக்கு - ஏஜிபி, எஸ்ஏடி, ஜேஜேபி, பிஆர்எஸ், ஜேடிஎஸ் கட்சிகளுக்கு ஏற்பட்ட கதிதான் ஏற்படும். அல்லது பிஜேடி, ஒய்எஸ்ஆர்சிபி போல ஆட்சியிழந்து போக வேண்டியதுதான். பாஜகவை இப்போது ஆதரிக்கும் டிடிபி, ஜேடியு கட்சிகளுக்கும் இதில் பாடம் இருக்கிறது.
- எதிர்க்கட்சிகள் தங்களுடைய வேலையை செய்ய வேண்டும், நாடாளுமன்றத்தில் நல்ல எதிர்க்கட்சிகளாகச் செயல்பட பத்தாண்டுகளுக்குப் பிறகு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தங்களுடைய கோரிக்கைகளை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நன்கு வலியுறுத்த வேண்டும்.
மக்களின் கோரிக்கைகள்
- இந்தியா கூட்டணிக்கு கணிசமாக வாக்களித்து தேர்ந்தெடுத்ததன் மூலம், மக்கள் பின்வரும் கோரிக்கைகளை ஆதரித்துள்ளனர்.
- சமூக – பொருளாதார தரவுகளுடன், சாதி அடிப்படையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
- அரசமைப்புச் சட்டத்துக்குக் கொண்டுவரப்பட்ட 106வது திருத்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், 2025 முதல் சட்டமன்ற பொதுத் தேர்தல்களில் மகளிருக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை ஒதுக்குவதை உறுதிசெய்ய வேண்டும்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் முதல் அனைத்து வகை வேலைகளுக்கும் அன்றாடம் ரூ.400க்குக் குறையாமல் குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அமல்படுத்தப்பட வேண்டும்.
- விவசாயிகளின் கடன் சுமையை ஆராயவும், விவசாயக் கடன்களை அவ்வப்போது ரத்துசெய்யவும் நிரந்தர ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
- அரசிலும் அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசுத் துறை நிறுவனங்களிலும் நிரப்பப்படாமல் இருக்கும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
- ‘பணியாளர் பயிற்சி திட்டச் சட்ட’த்துக்கு உரிய திருத்தங்களைச் செய்து, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தொழில் – வணிக நிறுவனங்களும் பயிற்சி முடித்தவர்களுக்கு கட்டாயம் ஓராண்டு தொழில்பழகுநர் சட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பும் உரிய உதவித் தொகையும் வழங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- ராணுவத்தில் குறைந்த ஆண்டுகளே புணிபுரிவதற்கான ‘அக்னிவீர்’ ஒப்பந்த வேலைவாய்ப்பு திட்டம் கைவிடப்பட வேண்டும்.
- உச்ச நீதிமன்றம் பரிசீலித்து, அரசமைப்புச் சட்டப்படிச் செல்லத்தக்கதுதான் என்று அனுமதிக்கும் வரையில், குடிமக்கள் திருத்தச் சட்டத்தை அமல் செய்யாமல் நிறுத்திவைக்க வேண்டும்.
- சிபிஐ, இடி, என்ஐஏ, எஸ்எஃப் ஐஓ, என்சிபி ஆகிய புலனாய்வு விசாரணை அமைப்புகளை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்துவிட வேண்டும்.
புதிய ஆட்டம்
- ஜூன் 9 முதல் புதிய ஆட்டம் தொடங்குகிறது. புதிய ஆட்டக்காரர்கள் களத்தின் முன்னணியில் இருப்பார்கள். நுழைவு வாயிலையும் வெளியேறு வாயிலையும் பார்த்துக்கொண்டே இருங்கள்!
நன்றி: அருஞ்சொல் (09 – 06 – 2024)