- குன்றின் மீதேறி சௌகரியமாக நின்று கொண்டு 2 யானைகள் போரிடுவதைப் பார்த்தால் எப்படி இருக்கும்?
- திருவள்ளுவர் இந்த உவமையை வேறொரு விவகாரத்தில், வேறொரு பொருளில் பயன்படுத்தியிருப்பார். நாம் இதனை இங்கு பயன்படுத்த ஒரு காரணம் உண்டு. என்னதான் பாலஸ்தீன முஸ்லிம்களின் துயரத்தையும் இஸ்ரேலின் அத்துமீறல்களையும் குறித்து பேசினாலும் ஓரெல்லைக்கு மேல் நம்மால் அந்தச் சிடுக்கின் இண்டு இடுக்குகளைத் தேடித் தொட இயலாது. ஒரே காரணம்தான். நாம் குன்றின் மீது நிற்கிறோம். துயரங்களுக்கே இதுதான் நிலைமை என்னும் போது அவர்களது மகிழ்ச்சியைப் புரிந்து கொள்வது இன்னும் சிரமம்.
- பாலஸ்தீனருக்கும் மகிழ்ச்சி இருந்ததா என்றால், இருந்தது. மிக எளிய விஷயம்தான். ஆனால் அவர்களுக்கு அது மாபெரும் திருப்புமுனை. சரித்திரம் முன்னெப்போதும் தந்திராத அங்கீகாரம். ஐ.நா.வின் உறுப்பினரல்லாத, பார்வையாளர் அந்தஸ்து. மிகச் சிறிய முன்னகர்வே என்றாலும் இந்த வாய்ப்பையும் வீணாக்கிவிட கூடாது என்று மம்மூத் அப்பாஸ் நினைத்தார். அதன் முதற்படியாக, பாலஸ்தீன அத்தாரிடி என்று அதுநாள் வரை அழைக்கப்பட்டு வந்ததை State of Palastine என்று மாற்றி அமைக்க ஜனவரி 3, 2013 அன்று உத்தரவிட்டார்.
- ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அரசாங்க முத்திரைகளை மாற்றினார்கள். லெட்டர் ஹெட்கள் புதிதாக அச்சிடப்பட்டன. அரசு அலுவலகங்கள் அனைத்திலும் ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் என்று கிடைத்த ஆணிகளில் எல்லாம் போர்ட் மாட்டினார்கள்.
- இதில் ஒரு பிரச்சினை, முத்திரை அச்சடிக்க வேண்டுமென்றால் அதற்கு இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும். அது எப்படி அனுமதி தரும்? எனவே, வெளிநாடுகளில் முத்திரைகளைத் தயாரித்து தூதரகங்களுக்கு அனுப்பி வைத்தார்கள். இனி பாலஸ்தீனம் சார்பில் வெளியாகும் அனைத்து அறிவிப்புகளுக்கும் இந்த ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் முத்திரையையே பயன்படுத்துங்கள் என்ற குறிப்புடன்.
- இது போதாது என்று அப்பாஸுக்குத் தோன்றியது. அமைச்சரவையை அழைத்து ஆலோசனை செய்தார். ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் முத்திரையுடன் பாஸ்போர்ட் வெளியிடப்பட வேண்டும். பாலஸ்தீனத்துக் குடிமக்கள் அனைவரும் அதைப் பயன்படுத்த வேண்டும். அதேபோல ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் முத்திரை பதித்த அஞ்சல் தலைகள் வெளியிட வேண்டும் என்றும் முடிவானது. பாலஸ்தீனம் என்கிற ‘நாடு’ உள்ளதைக் கொள்கையளவில் அங்கீகரித்த தேசங்கள் அனைத்துக்கும் இனி அனுப்பும் அனைத்துக் கடிதங்களிலும் புதிய முத்திரை பதித்தே அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்தார்கள். இதன் உச்சம், ஒருபுதிய அரசியல் சாசனவரைவை ஆகக் கூடிய விரைவில் தயாரித்துவிட வேண்டும் என்று அவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு வேலையை தொடங்கினார்.
- கவனியுங்கள். இதெல்லாம் எப்போது நடக்கிறது? உள்ளூரில் எந்ததிடுக்கிடும் அரசியல் - சமூக - நடைமுறை மாறுதலுக்கும் வாய்ப்பே இல்லாத சூழ்நிலையில் நடக்கிறது. ஐ.நா. ஓர் அங்கீகாரம் அளித்திருந்தது. அவ்வளவுதான். அதுவும் கௌரவஅங்கீகாரம். ஆனால் அவர்கள் கொண்டாடி கொள்ள அதுவே போதுமானதாக இருந்தது. அதே இஸ்ரேல் கெடுபிடிகள்தான், அதே 3 விதமானஆட்சி முறைகள்தான், அதே காஸா -ஹமாஸ் தனியாவர்த்தனம்தான். எல்லாம் அதேதான். ஆனாலும் கொண்டாட ஒரு தருணம். எப்படி விடுவது?
- இந்த அறிவிப்பெல்லாம் வெளியான மறுநாளே இஸ்ரேல் முறைத்தது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்? யார் உன்னை தனி நாடாக ஏற்றுக்கொண்டார்கள்? நான் ஏற்காத வரை நீ எனக்கு அடங்கி இருக்கத்தான் வேண்டும். உன் ஸ்டேட் ஆஃப் பாலஸ்தீன் பாஸ்போர்ட்டை வைத்துக் கொண்டு என் மக்கள் எல்லை கடக்க வேண்டும்என்று நினைக்கிறாயா? தொலைத்துவிடுவேன்.
- ஜனவரி 6, 2013 அன்று மம்மூத் அப்பாஸ் மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார். எண்ணி 2 நாட்கள். மேற்சொன்ன புதிய பாஸ்போர்ட் எல்லாம்பாலஸ்தீனத்து முஸ்லிம்களுக்கு மட்டும்தானே தவிர, பாலஸ்தீனத்து நிலப்பரப்பில் வசிக்கும் அனைவருக்குமானதல்ல என்று சொல்லிவிட்டார். அதாவது, மேற்குக் கரையில் உள்ள இஸ்ரேலிய சோதனை சாவடிகளைக் கடப்பதற்கு இந்தப் புதிய ஆவணங்கள் உதவாது என்று அதற்குப் பொருள்.
- இருபதாம் நூற்றாண்டின் மாபெரும்துயரம், பாலஸ்தீனத்து முஸ்லிம்கள் படுகிற பாடு என்று சென்ற நூற்றாண்டு முழுவதும் சொல்லிக் கொண்டிருந்தோம். இருபத்தோறாம் நூற்றாண்டின் துயரமாகவும் அவர்களே இருப்பதுதான் தீராப் பெருவலி.
நன்றி: இந்து தமிழ் திசை (03 – 12 – 2023)