- உலகில் வாழ்ந்து மறைந்த ஞானிகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கிய கௌதம புத்தர், தனது போதனைகள் மூலம் ஆன்மிக சாதகர்கள் மற்றும் பாமர மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து வந்துள்ளார். புத்த மதம் மட்டுமின்றி பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் இவரது போதனைகளை பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது.
- எந்தச் செயலைச் செய்தாலும் அதில் முழு மனதுடன் ஈடுபட வேண்டும், எதுவும் நிரந்தரம் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும், எப்போதும் இரக்க குணத்துடன் வாழ வேண்டும், அகந்தையை துறக்க வேண்டும், எதன் மீதும் பற்று இல்லாமல் இருக்க வேண்டும், தன்னுடைய பிறப்புக்கான காரணத்தை அறிய முற்பட வேண்டும் ஆகியவை புத்தரின் 6 முக்கியமான போதனைகள் ஆகும்.
- தற்போதைய இந்தியாவின் வடக்கே இமயமலை பகுதி அருகில் அமைந்துள்ள அன்றைய சாக்கிய குடியரசின் (இன்றைய நேபாளம்) மன்னர் சுத்தோதனரின் மனைவி மஹாராணி மஹாமாயா தேவி கி.மு.623-ம் ஆண்டு மே மாதம் முழுநிலவு தினத்தில் பிரசவத்துக்காக தன் பெற்றோர் இருப்பிடம் செல்லும் வழியில் லும்பினி தோட்டத்தில் சால மரத்தின் கிளையை பிடித்தவாறே அவருக்கு குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தையான ‘சித்தார்த்த கெளதமர்’ புனித பிறப்பு எடுத்தவுடன் 7 காலடிகள் எடுத்து வைத்தார்.
- பழமையான இந்திய சமண மரபில் பிறந்த இளவரசர் சித்தார்த்தர் சிறுவயது முதல் தியானத்தில் ஈடுபடுவது, உயிர்கள் மீது கருணை காட்டல், மனித குலத்தின் துன்பத்தைப் பற்றிய ஆழ்ந்த சிந்தனை, அவற்றிலிருந்து விடுபடுவதற்கான வழிகள் என்ற வகையிலான ஆன்மிகத் தேடல் போன்றவை இருந்து கொண்டே வளர்ந்தது.
- ஒருமுறை அரச ஏர் உழுதல் திருவிழாவில் பங்கேற்க மன்னர் சுத்தோதனர் சித்தார்த்தரை உடன் அழைத்துச் சென்றபோது, சிந்தனைமிக்க குழந்தை, வயதில் சிறியவராக இருந்தாலும் மெய்யறிவில் முதிர்ச்சியடைந்து, அமைதியான சூழலில் ரோஜா ஆப்பிள் மரத்தின் கீழ் பத்மாசனத்தில் அமர்ந்து, உள்மூச்சு, வெளி மூச்சை விழிப்புடன் கவனித்து ஆழ்ந்த தியானத்தின் முதல் நிலைக்கு சென்றார்.
- இளவரசர் சித்தார்த்தர் தனது 29-வது வயதில் மனித குலத்தின் துன்பத்துக்கான காரணங்களை தேடி சுகபோக வாழ்வைத் துறந்து, அரண்மனையிலிருந்து வெளியேறி ‘உயரிய துறவு’ பூண்டார். பல யோக, தியான முறைகளை அறிந்து குறுகிய காலத்தில் உயர்நிலை தேர்ச்சி அடைந்தார். பிறகு பீஹார் கயாவின் அருகில் பிரக்போதி என்ற மலையின் குகையில் உணவு உண்ணாமல் உடலை வருத்திக்கொண்டு கடுமையான தியான பயிற்சியில் ஈடுபட்டதால், உடல் எலும்பும் தோலுமாக மிகவும் நலிவடைந்தது.
- பின்னர்,மெய்ஞ்ஞானமடைவதற்கு உடல் ஆரோக்கியம் முக்கியம் என்றும், உடலை வருத்திக் கொள்வதும், அதிக இன்பத்தில் திளைப்பதும் தவறானது என்றும் சிந்தித்து, இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலையான வழியை உணர்ந்தார். பின்னர் நிரஞ்சனா நதியோரமாக கயாவிலுள்ள போதி (அரச) மரத்தை நோக்கிச் சென்று அதன் கீழ் அமர்கிறார்.
- வெறும் தரையில் அமர்திருப்பதை கண்ட ‘சோட்டிய’ என்ற புல் அறுக்கும் தொழிலாளி, போதிசத்துவருக்கு எட்டுபிடி புல் கொடுத்தவுடன், போதி மரத்தின் கீழ் புல்லை பரவச் செய்து, முழுமையான மெய் ஞானத்தை அடையும்வரை, நான் இந்த புல் ஆசனத்தில் இருந்து எழமாட்டேன் என்ற மன உறுதியுடன் பத்மாசனத்தில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடுகிறார்.
- பல காலமாக வளர்த்துக் கொண்ட முழுமையான பத்து நற்குணங்களின் (தஸ பாரமித்தா) பலனாக சூரியன் மறையும் முன், மாரனால் (தீய சக்தி) ஏற்படுத்தப்பட்ட இடைஞ்சல்களை முறியடித்தார்.
- இவ்வாறு மாரனை வென்ற பிறகு, தியானத்தின் ஒவ்வொரு நிலைகளில் சென்று, ஞானக் கண்ணால் (திப்ப சக்கு) முந்தைய பிறப்புகளை பற்றிய ஞானத்தையும், சார்புநிலை தோற்றம் பற்றிய விதியையும் அறிகிறார். அதைத் தொடர்ந்து ஐந்து சேர்க்கையால் (பஞ்ச கந்த) எழும் பற்றுதலையும் அவற்றின் நிறுத்தம் பற்றிய நுண்ணறிவின் வளர்ச்சியால் 4 உன்னத வாய்மைகளையும், அதனை போக்கும் உன்னத எண்வழிப் பாதையும் உணரும் மெய்யறிவு அவருக்கு அடுத்தடுத்து ஏற்படுகிறது.
- அதன்பின் உடலாலும், மனதாலும் முழுதூய்மையடைந்து விருப்பு, வெறுப்பில்லாத உள்ளச் சமநிலையுடன் விழிப்புணர்வு நிலை அடைந்து கி.மு.588-ம் ஆண்டு 35-வது வயதில் புனித "சம்மா சம் புத்தரானார்" (யாருடைய உதவியுமின்றி முழுமையாக மெய் ஞானமடைதல்). உயர் மெய் ஞானத்தின் மூலம் 73 வகையான அற்புத ஆற்றல்களை (மஹா-அபிஞ்ஞா) கொண்டிருந்தார்.
- இறுதி நாளில் புத்த பகவான் தனது சீடர்களுடன் குசிநகர் மல்ல அரசரின் உபவத்தான சால மர தோப்பை அடைந்தவுடன், மக்கள் பேசிய பாலி மொழியில் இறுதி அருளுரை வழங்கினார். ‘புத்தங், தம்மங், சங்கங் என்கிற மூன்று ரத்தினங்களை சரணடைந்து, தம்மத்தை பயிற்சி செய்ய வேண்டும். தம்மம் உங்களுக்கு ஒளியாக இருக்கும், வேறு அடைக்கலம் இல்லை, நான் அருளிய தம்மம் உங்களுக்கு அடைக்கலமாக இருக்கும்’ என்று அறிவுறுத்தப்படுகிறது.
- அனைவரும் மேன்மை நிலைபெற இறுதிவரை உபதேசித்து, அறியாமை என்னும் இருளை நீக்கி விழிப்புணர்வு என்ற ஒளியை மக்களின் மனங்களில் பரவச் செய்தார். கி.மு.543-ம் ஆண்டு தனது 80-வது வயதில் உத்தர பிரதேசம், குசிநகரில் தனது சீடர்கள், மன்னர்கள், சகல தேவர்கள் சூழ்ந்து வணங்க, தியானத்தின் ஒவ்வொரு நிலையிலும் சென்று மஹாபரிநிப்பானம் (பிறப்பு, இறப்பு இல்லாத பேரின்ப நிலை) அடைந்தார்.
நன்றி: இந்து தமிழ் திசை (24 – 05 – 2024)