TNPSC Thervupettagam

300க்கும் மேற்பட்ட தாவர நூல்களைத் தந்தவர்!

November 2 , 2024 66 days 87 0

300க்கும் மேற்பட்ட தாவர நூல்களைத் தந்தவர்!

  • மரங்கள் குறித்த கலைக் களஞ்சியமாகத் திகழ்ந்த இரா. பஞ்சவர்ணம் (75), 17.10.24 அன்று காலமானார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியைச் சேர்ந்த பஞ்சவர்ணம், மரங்கள் வளர்ப்பதை மக்களிடையே ஒரு பண்பாடாக நிலைநிறுத்த உழைத்தவர்.
  • இவர் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 1968இல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பஞ்சவர்ணம், 1996இல் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பண்ருட்டியின் நகராட்சித் தலைவர் ஆனார். பிறப்பு -இறப்பு சான்றிதழ், குடிநீர் இணைப்பு, வீடு கட்ட அனுமதி உள்ளிட்ட தேவைகள் முறைகேடுகள் இன்றியும் காலம் தாழ்த்தாமலும் மக்களுக்கு நிறைவேற்றப்பட அவர் வழிவகுத்தார். அக்காலக்கட்டத்திலேயே அப்பணிகளைக் கணினி மயமாக்கும் நடவடிக்கைகளைப் பஞ்சவர்ணம் முன்னெடுத்தார். அவர் பொறுப்பு வகித்தபோது வெளிப்படையான உள்ளாட்சி நிர்வாகத்தை வழங்க முயற்சி செய்தது இன்றுவரை நினைவு கூரப்படுகிறது.
  • நகராட்சித் தலைவராக பஞ்சவர்ணம் இருந்தபோது, ஆயிரக்கணக்கிலான மரக் கன்றுகள் பண்ருட்டி வட்டாரத்தில் நடப்பட்டன. இன்றைக்கு அப்பகுதியின் முக்கியச் சாலைகளின் ஓரம் வளர்ந்து நிற்கும் மரங்கள், அவர் முயற்சியில் நடப்பட்டவைதான். மரம் நடுவதை மக்களின் மனத்துக்கு நெருக்கமான முறையில் கொண்டுசெல்ல அவரவர் ஜென்ம நட்சத்திரத்துக்குப் பொருத்தமான மரங்களை நடும் பணியைத் தொடங்கினார். அதன்படி, வீடுகளில் மரம் நடுவது அதிகளவில் சாத்தியமானது; மக்கள் அக்கறையுடன் மரக்கன்றுகளைப் பராமரித்தனர்.
  • தமிழகக் கோயில் மரபில் தலமரங்களுக்குத் தனி இடம் உண்டு. கோயில்களையும் மரம் நடுவதற்கான செயற்களங்களாக பஞ்சவர்ணம் ஆக்கினார். பண்ருட்டி சித்தர் கோயில் எனப்படும் தன்வந்திரி கோயில், திருவதிகையில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோயில் போன்றவற்றில் பல மரங்களை நட்டார். சீர்காழியில் உள்ள சிவன் கோயிலில் பஞ்சவர்ணத்தின் வழிகாட்டுதல்படி மரங்கள் நடப்பட்டன. திருமண நிகழ்வுக்கு வருவோருக்குத் தாம்பூலப்பைக்கு மாற்றாக மரக்கன்று அளிக்கும் வழக்கத்தைத் தொடங்கிவைத்த முன்னோடிகளில் பஞ்சவர்ணமும் ஒருவர்.

மரங்களும் நமக்கு உறவுகள்தான்

  • ‘சக மனிதரைப் போல மரங்களும் நமக்கு உறவுகள்தான்’ என்கிற கருத்தைப் பரப்பிய பஞ்சவர்ணம், பழமையான நூல்களில் https://panchavarnampathipagam.com/பொதிந்துள்ள மரங்கள் குறித்த தகவல்களைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார். சங்க இலக்கிய நூலான ‘குறிஞ்சிப்பாட்’டில் குறிப்பிடப்பட்டுள்ள மரங்களைப் பற்றிய தகவல்களைத் திரட்டி ‘குறிஞ்சிப்பாட்டுத் தாவரங்கள்’ என்னும் நூலாக வெளியிட்டார். அதேபோல ‘தொல்காப்பியரின் தொல்காப்பியத் தாவரங்கள்’, ‘சிலப்பதிகாரத் தாவரங்கள்’, திருமூலரின் திருமந்திரத் தாவரங்கள் போன்ற நூல்களும் அடுத்தடுத்து வெளியாகின. இலக்கண நூலான கல்லாடம், பக்தி இலக்கியங்களான தேவாரம், திருவாசகம், நாலாயிரத் திவ்ய பிரபந்தம், திருவருட்பா போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள தாவரங்களும் தனித்தனி நூல்களில் பஞ்சவர்ணத்தால் பதிவு செய்யப்பட்டுள்ளன. அண்மைக்காலமாக தினை, சோளம், வரகு உள்ளிட்ட தாவரங்கள் மீது ஏற்பட்டிருக்கும் மதிப்புக் காரணமாக மக்கள் ஏமாற்றப்படுவதைத் தடுக்கும்பொருட்டு இவர் எழுதிய ‘சிறுதானியத் தாவரங்கள்’ என்கிற நூல், இத்தானியங்களைப் பயன்படுத்துவதற்கான வழிகாட்டல்களையும் வழங்குகிறது.
  • கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பஞ்சவர்ணம், அறுவை சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த சூழலிலும், குணபாடம் என்கிற நூலை வெளியிட வேண்டும் என்பதே அவரது பேச்சாக இருந்தது. அகத்தியரின் சித்த மருத்துவத் தாவரங்கள் குறித்த செய்திகளின் தொகுப்பு இந்நூல். பஞ்சவர்ணத்தின் விருப்பம் நிறைவேறியது; அவர் சிகிச்சை முடிந்து, அந்த நூலை வெளியிட்டார். எனினும் அவர் முழுமையாக உடல்நலம் பெற முடியவில்லை. ‘பஞ்சவர்ணம் பதிப்பகம்’ மூலம் 2012லிருந்து 349 நூல்களை வெளியிட்டுள்ளார் (https://panchavarnampathipagam.com/). பஞ்சவர்ணத்துக்கு மனைவியும் இரண்டு மகன்களும் இரண்டு மகள்களும் உள்ளனர். வெவ்வேறு பணிகளில் உள்ள அவரது பிள்ளைகள், தந்தையின் பணிகளைத் தொடரும் விருப்பத்திலேயே உள்ளனர் என்பது ஆறுதலைத் தருகிறது.

நன்றி: இந்து தமிழ் திசை (02 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்