TNPSC Thervupettagam

தீர்வு போர் அல்ல!

March 1 , 2019 2128 days 1196 0
  • இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமானனை விடுதலை செய்வது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எடுத்திருக்கும் முடிவுக்குப் பாராட்டுகள்.
  • இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் சூழலை அகற்றி அமைதிக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியிருக்கிறது பாகிஸ்தானின் முடிவு.
  • இதை இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் நல்லிணக்க முயற்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றி என்றும் எடுத்துக் கொள்வதில் தவறில்லை.
  • விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தான் அரசால் விடுவிக்கப்பட்டு இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவதன் பின்னால், சர்வதேச அழுத்தம் நிச்சயமாக இருந்திருக்கக் கூடும்.
  • இந்திய விமானப் படையைச் சேர்ந்த விங் கமாண்டர் அபிநந்தன் பிடிபட்டபோது, 1949 ஜெனீவா ஒப்பந்தத்தின் மூன்றாவது பிரிவின்படி அவரைப் போர்க் கைதியாக பாகிஸ்தான் அறிவித்திருக்க வேண்டும்.
  • போர் நடக்கும்போது பிடிபடும் எதிரி ராணுவத்தினர் கெளரவமாக நடத்தப்பட வேண்டும், அவர்களுக்குப் போதிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட வேண்டும்,
  • அவர்கள் எந்தவிதமான துன்புறுத்தலுக்கும் ஆளாக்கப்படக் கூடாது என்கிறது ஜெனீவா ஒப்பந்தம். இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் கையொப்பமிட்டிருக்கும் நிலையில், பிடிபட்ட அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய விதம் சர்வதேசக் கண்டனத்துக்கு உள்ளானதில் வியப்பில்லை.
  • அதனால் ஏற்படும் தர்மசங்கடத்தில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காகத்தான் பிரதமர் இம்ரான் கான் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் விங் கமாண்டர் அபிநந்தனை விடுதலை செய்வதாக அறிவித்திருக்கிறார் என்றுகூடக் கருத இடமிருக்கிறது.
  • பிரதமர் இம்ரான் கானையும் பாகிஸ்தான் அரசையும் மீறி, பாகிஸ்தான் ராணுவமும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யும் விங் கமாண்டர் அபிநந்தன் குறித்த விடியோ காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்து பரப்ப முற்பட்டது. துணிந்து அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், பாகிஸ்தான் ராணுவத்துக்கு அடிபணியாமல் அரசியல் ரீதியாக முடிவெடுத்து பிரதமர் இம்ரான் கான் பொறுப்புடன் செயல்பட்டிருக்கிறார் என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
  • இரு நாடுகளுக்கிடையே இதுபோன்று எல்லைப் பிரச்னைகள் ஏற்படுவதும், போர் மூளும் சூழல் உருவாவதும் புதிதொன்றுமல்ல.
  • இந்தியாவைப் பொருத்தவரை, அனேகமாக எல்லா அரசியல் கட்சிகளும் தலைவர்களும் அதீத பொறுப்புணர்வுடனும் எந்தவிதத்திலும் வரம்பு மீறி விடாமலும் செயல்பட்டனர்.
  • அதே நேரத்தில், இந்திய ஊடகங்கள் இரு நாடுகளுக்கிடையேயும் போர் மூண்டுவிட்டது போன்ற சூழலை ஏற்படுத்தும் வண்ணம் பரபரப்புச் சூழலை உருவாக்க முற்பட்டது வன்மையான கண்டனத்துக்குரியது.
  • காட்சி ஊடகங்கள் மட்டுமல்ல, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் விடியோ காட்சிகளும், உணர்வுகளைத் தூண்டும்  விதமான பதிவுகளும் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.
  • பாகிஸ்தான் உளவுத்துறையின் முகவர்களாக இந்தியாவில் பலர் செயல்படுவது, அபிநந்தன் துன்புறுத்தல் குறித்த விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டதன் மூலம் தெரியவருகிறது.
  • பாகிஸ்தானுக்கு எதிரான கருத்துகளையும் கோஷங்களையும் தேசபக்தி என்கிற போர்வையில் பதிவு செய்து உணர்வுகளைத் தூண்டிவிடும் முயற்சியும் ஆபத்தானது என்பதை நாம் உணர வேண்டும்.
  • இதற்கு முன்னால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்ட போர்ச் சூழலுக்கும், இப்போதைய நிலைமைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு.
  • இந்தியாவுக்கு எப்போதுமே பாகிஸ்தான் ராணுவத்தின் பின்துணையுடன் நடத்தப்படும் பயங்கரவாதக் குழுக்களின் தாக்குதல்களை எதிர்கொள்ளவும், திருப்பித் தாக்குவதற்கான பலமும் உண்டு.
  • ஆனால், அதைத்  தொடர்ந்து ஏற்படும் பின்விளைவுகளைக் கட்டுப்படுத்துவது குறித்துத்தான் இந்தியா தயக்கம் காட்டி வந்தது.
  • இந்தியா திருப்பித் தாக்குவதன் மூலம், அதுவே இரண்டு நாடுகளுக்கிடையேயான அணுஆயுதப் போராக மாறிவிடக் கூடாது என்பதுதான் இந்தியாவின் கைகளைக் கட்டிப் போடுகிறது.
  • அதனால்தான் இதுவரை பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரில் இந்தியா நுழைந்து அங்கே உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழிப்பதுடன் தன்னைக் கட்டுப்படுத்தி வந்தது.
  • இப்போதுதான் முதன்முறையாக பாகிஸ்தானின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியிருக்கிறது.
  • அதன் மூலம் தேவைப்பட்டால் முழுமையான போருக்கும் தயாராக இருக்கிறோம் என்கிற எச்சரிக்கையை விடுத்திருக்கிறது.
  • தேர்தல் வர இருக்கும் நேரத்தில், புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்தாக வேண்டிய கட்டாயம் நரேந்திர மோடி அரசுக்கும், பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடி கொடுத்தாக வேண்டிய அரசியல் கட்டாயம் இஸ்லாமாபாத்துக்கும் ஏற்பட்டன.
  • ஆனால், இரண்டு தரப்புமே பொதுமக்களுக்கு உயிர்ச்சேதம் இல்லாமல் நடந்துகொண்டன என்பதை நாம் பாராட்ட வேண்டும்.
  • அணுஆயுத யுத்தத்தில் இரு நாடுகளுக்கும் வெற்றி-தோல்வி கிடையாது என்பதையும், அழிவுதான் மிஞ்சும் என்பதையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும்  நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள் என்று நம்பலாம்.
  • விங் கமாண்டர் அபிநந்தனின் விடுதலையுடன் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான எல்லைப்புறப் பதற்றத்துக்கும், காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்களில் பரபரப்புக்காக உருவாக்கப்படும் உணர்வுகளைத் தூண்டும் எதிர்மறைச் செய்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.
  • பயங்கரவாதப் பிரச்னைக்கு தீர்வு போர் அல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்!

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்