செர்பியத் தேர்தலின் முக்கியத்துவம் என்ன?
- செர்பியாவின் பிரதமராக ஆனா பெர்னபீச் (45) தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் உலகத்துக்கான ஒரு முன்னுதாரணம் இருக்கிறது. அவர் செர்பியாவின் முதல் பெண் பிரதமர் மட்டுமல்ல, உலகிலேயே முதன்முறையாகப் பிரதமர் பதவியேற்றிருக்கும் தன்பாலின உறவாளரும்கூட என்பதுதான் அது!
- 2007-ல் அப்போதைய செர்பியப் பிரதமராக இருந்த அலெக்ஸாண்டர் ஊச்சிச் அந்த நாட்டின் அதிபராவதற்காகப் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்தார். பிரதமருக்கான அவருடைய முதல் தெரிவு ஆனா பெர்னபீச்.
- தன்னைத் தன்பாலின உறவாளர் என்று அறிவித்துக்கொண்ட ஆனாவைப் பிரதமராக ஆக்குவதற்கு அந்த நாட்டின் பழமைவாதிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தாலும் ஊச்சிச் அதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
- தற்போது நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஊச்சிச் சார்ந்த செர்பிய முற்போக்குக் கட்சி பெரும்பான்மையைப் பெற்று ஆட்சி அமைத்தது.
- அதைத் தொடர்ந்து, செர்பியாவின் பிரதமராக ஆனாவை இரண்டாவது முறையாக ஊச்சிச் தேர்ந்தெடுத்தார். அமைச்சரவையில் கிட்டத்தட்ட சரிபாதி அளவுக்குப் பெண்கள் அமர்வார்கள் என்பதும் இன்னொரு விசேஷம்தானே!
முகக்கவசத்துக்கான நூற்றாண்டு வேண்டுகோள்
- கரோனா பெருந்தொற்று வந்ததிலிருந்து முகக்கவசம் என்பது நம் வாழ்வின் ஒரு பங்காக மட்டுமல்ல, நம் முகத்தின் ஒரு பங்காகவும் ஆகிவிட்டது. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்காத நிலையில், நமது உயிரையும் பிறரின் உயிரையும் காப்பதற்கான எளிய வழிமுறைகளுள் ஒன்றாக முகக்கவசம் ஆகியிருக்கிறது.
- இந்தத் தருணத்தில் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் தனது 1918-ம் ஆண்டு வேண்டுகோள் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்திருக்கிறது. ஸ்பானிஷ் ஃப்ளூ உலக மக்கள்தொகையில் 10 கோடிப் பேரைப் பலி கொண்ட கொடுமையான தொற்றுநோய். ‘முகக்கவசம் அணியுங்கள், உங்களைக் காத்துக்கொள்ள மட்டுமல்ல, உங்கள் குழந்தைகள், உங்கள் அண்டை அயலார் போன்றோரையும் இன்ஃப்ளூயன்சா, நிமோனியா, மரணம் ஆகியவற்றிலிருந்து காப்பதற்காகவும்தான்!’ என்பதுதான் நூறு ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கம் வெளியிட்ட வேண்டுகோள்!
ஒரு நாள் பிரதமர்
- மர்த்தோ, வயது 16! ஃபின்லாந்தின் ஒரு நாள் பிரதமராக 16 வயது ஆவா மர்த்தோவை அந்நாட்டின் பிரதமர் சானா மாரின் நியமித்தது அவருடைய புகழை மேலும் ஒரு படி உயர்த்தியிருக்கிறது.
- பருவநிலை மாற்றம், மனித உரிமைகள் போன்ற விஷயங்களில் செயல்பட்டுக்கொண்டிருப்பவர் ஆவா மர்த்தோ.
- உலகிலேயே மிக இளம் வயதுப் பிரதமரான சானா மாரின் (35) குழந்தைகள் உரிமைகளுக்கான ‘பிளான் இன்டர்நேஷனல்’ என்ற அமைப்பின் ‘கேர்ள்ஸ் டேக்ஓவர்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இதைச் செய்தார். தொழில்நுட்பத் திறன்களிலிருந்து ஏனைய திறன்கள் வரை ஆண்களுக்கு இணையாக இளம் பெண்கள் திறமை கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகுக்கு நிரூபிப்பதற்கான முன்னெடுப்பு இது. இதன் ஒரு பகுதியாக பிலிப்பைன்ஸ், நெதர்லாந்து, குவாதமாலா, எல்சல்வதோர் போன்ற நாடுகளில் உள்ள ஃபேஸ்புக், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், சாம்சங் போன்ற நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளையும் பதின்பருவப் பெண்கள் ஒரே ஒரு நாள் வகிக்கப்போகிறார்கள் என்று தெரிகிறது. அவசியமான விழிப்புணர்வுப் பிரச்சாரம்தான் இது!
நன்றி: தி இந்து (12-10-2020)