TNPSC Thervupettagam

4 முக்கியமான இந்திய, பாகிஸ்தானியப் போர்களும் சில சில்லறைச் சண்டைகளும்!

February 26 , 2019 2145 days 1647 0
  • இந்தியா, பாகிஸ்தானிடையே இதுவரை 4 முறை அறிவிக்கப்பட்ட போர்களும் ஒருமுறை அறிவிக்கப்படாத போரும், பலமுறை எல்லைச் சண்டைகளும், சிலமுறை ராணுவ விலக்கங்களும் நிகழ்ந்துள்ளன.
  • இந்தியா, பாகிஸ்தானுக்கிடையிலான போர்களுக்கும், சச்சரவுகளுக்கும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ காஷ்மீர் பிரச்னையே பிரதான காரணமாக இருந்து வந்திருக்கிறது.
  • ஆனால் மேற்கண்ட போர்களில் 1971 ஆம் ஆண்டு போருக்கு மட்டும் காஷ்மீர் பிரச்னை ஒரு காரணமாகக் கருதப்படவில்லை என்பது இரு நாட்டு அரசியல் வல்லுனர்களின் கருத்து.
இந்தியா பாகிஸ்தான் போர் 1947
  • பிரிட்டிஷ் இந்தியாவில் இருந்து விடுதலை பெற்று பிரிந்த அன்றே இந்துஸ்தானம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டாகப் பகுக்கப்பட்டு விட்டது.
  • நாடு இரண்டாகப் பகுக்கப்பட்ட போது  இந்துஸ்தானத்தில் சின்னதும், பெரிதுமாக நூற்றுக்கணக்கான ராஜ்ஜியங்கள் இருந்தன.
  • அவற்றை சாம, பேத, தானம் தண்ட முறைகளில் ஒருங்கிணைத்து ஒன்றிணைந்த இந்தியாவை உருவாக்கிய பெருமை அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலையே சேரும்.
  • அப்படி அவரது சொல்லுக்கும் கட்டுப்படாமல் சில ராஜ்ஜியங்கள் சுதந்திர ராஜ்ஜியங்களாக அறிவித்துக் கொண்ட வினோதங்களும் கூட இங்கு உண்டு.
  • அப்படிப்பட்ட ராஜ்ஜியங்களில் ஒன்றே அன்றைய காஷ்மீர். அப்போது காஷ்மீரை ஆண்டு வந்தவர் இந்து மன்னரான ஹரிசிங்.
  • ஹரிசிங்கின் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீர் பகுதிகளை ஆக்ரமிக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்றது.
  • ஏனெனில் மன்னர் தான் இந்துவே தவிர அங்கு வசித்த மக்களின் முக்கால்வாசிப்பேர் முஸ்லிம்கள் .
  • எனவே ஜம்மு - காஷ்மீரை தன்னுடன் இணைத்துக் கொள்ள பாகிஸ்தான் விரும்பியது.
  • விரும்பியதோடு நில்லாமல் காஷ்மீரின் எல்லைப்புறத்தில் சில பகுதிகளை ஆக்ரமித்து ஆஸாத் காஷ்மீர் என்று பெயரிட்டு தன்னுடைய கட்டுப்பாட்டிலும் வைத்துக் கொண்டது.
  • இதற்காக நடந்த இந்தியா, பாகிஸ்தான் யுத்தம் 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் நாள் தொடங்கி 1948 டிசம்பர் 31 வரை நடைபெற்றது..
  • இதுவே பிரிவினைக்குப்பின் நிகழ்ந்த முதல் இந்திய, பாகிஸ்தான் போர். இப்போரில் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை ஆக்ரமித்து தன்னுடன் இணைத்துக் கொண்டது பாகிஸ்தான்.
போருக்கான காரணம்...
  • இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது இசுலாமியர் பெரும்பான்மை கொண்ட ஜம்மு மற்றும் காஷ்மீர் நாட்டின் இந்து மன்னரான ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் நாட்டை இந்தியா அல்லது பாகிஸ்தானுடன் இணைக்க விரும்பாது தனித்து நாடாண்டார்.
  • இசுலாமிய பெரும்பான்மை கொண்ட காஷ்மீர் பகுதிகளை கைப்பற்ற பஷ்தூன் பழங்குடி மக்களைக் கொண்ட இராணுவத்தை 22 அக்டோபர் 1947 அன்று பாகிஸ்தான் அனுப்பியவுடன், மன்னர் ஹரி சிங் இந்தியாவின் இராணுவ உதவியைக் கேட்டார்.
  • இந்தியா விதித்த நிபந்தனையின்படி, இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீரை இணைக்க மன்னர் ஹரிசிங் ஒப்புக்கொண்ட பின்னரே இந்தியா தன் இராணுவத்தை ஜம்மு காஷ்மீருக்கு அனுப்பியது.
  • இந்திய இராணுவம் ஜம்மு-காஷ்மீரில் நுழைவதற்குள், பாகிஸ்தான் இராணுவம் வடக்கு காஷ்மீர் (ஆசாத் காஷ்மீர்) முழுவதையும் மேலும் மேற்குப் பகுதிகளில் சிலவற்றையும் கைப்பற்றியது.
  • எஞ்சிய ஜம்மு, காஷ்மீர் பள்ளத்தாக்கு மற்றும் லடாக் பகுதிகளை பாகிஸ்தானுடன் போரிட்டு இந்தியா தன்னுடன் இணைத்துக் கொண்டது.
  • இந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு இந்திய-பாகிஸ்தான் போரை1948 ஜனவரி 1 ஆம் தேதி முடிவுக்குக் கொண்டு வந்தது.
போரின் முடிவுகள்...
  • மன்னர் ஹரி சிங் தலைமையிலான ஜம்மு & காஷ்மீர் முடியாட்சி நாடு கலைக்கப்பட்டது.
  • 1949ஆம் ஆண்டு ஐ.நா.சபை, இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே எல்லையாக போர் நிறுத்தக் கோடு வரையறை செய்தது.
  • 1972ஆம் ஆண்டில் சிம்லா ஒப்பந்தப்படி போர்நிறுத்தக் கோடே எல்லை கட்டுப்பாட்டு கோடாக மாறியது.
இந்தியா பாகிஸ்தான் போர், 1965
  • இந்திய-பாகிஸ்தான் போர், 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் 1965 வரை பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் இடம்பெற்ற போரைக் குறிக்கும்.
  • இது இருநாடுகளுக்கும் இடையில் சர்ச்சைக்குரிய பகுதியான காஷ்மீர் குறித்து உருவான இரண்டாவது காஷ்மீர் போர் என அழைக்கப்படுகிறது.
  • அவ்வகையில்  1947 இல் நடைபெற்ற இந்தோ பாகிஸ்தான் போர் முதலாம் காஷ்மீர் போர் என்று அழைக்கப்படுகிறது.
  • ஜம்மு காஷ்மீர் பகுதிக்குள் ‘ஜிப்ரால்ட்டர் நடவடிக்கை’ என்ற பெயரில் கிட்டத்தட்ட 600 பாகிஸ்தானியப் படைகள் இந்திய எல்லைப் பகுதிக்குள் ஊடுருவினர்.
  • இந்நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது.
  • இரு நாடுகளுக்கும் இடையில் இரண்டாவது போர் தொடங்கியது. மொத்தம் ஐந்து வாரங்கள் நடந்த போரில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் நிகழ்ந்தன.
  • ஐக்கிய நாடுகளின் அமைதி முயற்சிகளை அடுத்து போர் நிறுத்தம் ஏற்பட்டு அதன் பின்னர் சோவியத் ஒன்றியத்தில் தாஷ்கண்ட் நகரில் இரு நாடுகளுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • போரின் பெரும் பகுதி தரைப்படையினரால் பிரச்சினைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் இரு நாடுகளுக்கும் இடையேயான பன்னாட்டு எல்லைப் பகுதியிலும் மேற்கொள்ளப்பட்டது.
  • 1947 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இப்போரின் போதே காஷ்மீர் எல்லைப் பகுதியில் இரு தரப்பிலும் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
  • பெரும்பாலான பகுதிகளில் விமானப் படையினர் தரைப் படைக்கு உதவியாகத் தாக்குதலில் ஈடுபட்டனர்.
  • ஏனைய இந்திய-பாகிஸ்தான் போர்களைப் போலவே இப்போர் நிலவரங்கள், மற்றும் விவரங்கள் பெருமளவு வெளியில் தெரிய வரவில்லை.
  • போரின் தொடக்கத்தில் இரு நாடுகளும் சம நிலையிலேயே இருந்தன. இந்தியாவின் டித்வால், ஊரி, பூஞ்ச் ஆகிய பகுதிகளை பாகிஸ்தான் கைப்பற்றியது.
  • பாகிஸ்தானின் மூன்று முக்கிய இராணுவத் தளங்களை இந்தியா கைப்பற்றியது.
  • செப்டம்பர் 1 இல் ஜம்மு பகுதிக்குள் அக்நூர் பகுதியில் பாகிஸ்தானின் ஊடுருவலை இந்தியா விமானப் படையின் உதவியுடன் தடுத்து நிறுத்தியது.
  • செப்டம்பர் 6, 1965 இல் பன்னாட்டு எல்லையைக் கடந்து லாகூர் நகரை இந்தியப் படை நெருங்கியது.
  • ஒரு மணி நேரத்தில் லாகூரைக் கைப்பற்றுவோம் என இந்தியா அறிவித்தது. அதே நாளில் பாகிஸ்தான வான் படையினரின் தாக்குதலில் பத்து இந்திய விமானங்கள் தகர்க்கப்பட்டன.
  • செப்டம்பர் 10 ஆம் நாளில் இந்தியாவில் அமிர்தசரஸ் நகரை பாகிஸ்தான பீரங்கிப் படையினர் கைப்பற்ற எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
போர் நிறுத்தம்...
  • செப்டம்பர் 22 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது.
  • அதனை அடுத்து சோவியத்தின் தாஷ்கண்ட் நகரில் இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியும் பாகிஸ்தான் தலைவர் அயூப் கானும் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
  • இதன்படி இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்குத் திரும்ப
  • அழைக்க முடிவு செய்தனர்.
1971 இந்தியா-பாகிஸ்தான் போர்
  • 1971 இந்தியா - பாகிஸ்தான் போர் என்பது 1971 இல் வங்கதேச விடுதலைப் போர் காலத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற நேரடிச் சண்டையைக் குறிக்கின்றது.
  • 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதியன்று 11 இந்திய வான்படை முகாம்களின் மீது பாகிஸ்தான் வலிந்த தாக்குதலை மேற்கொண்டதும் இந்தியா கிழக்கு பாக்கிஸ்தான் விடுதலைப் போருக்குள் நுழைந்தது.
  • இப்போர் 13 நாட்கள் நீடித்து, வரலாற்றில் மிகவும் குறுகிய காலம் நடைபெற்ற போராக இடம்பிடித்துள்ளது.
போரின் விளைவுகள்...
  • இந்திய வெற்றி பெற்றது.
  • கிழக்குப் பகுதியில் பாகிஸ்தான் படைகள் சரணடைந்தன.
  • கிழக்கு பாகிஸ்தானிலிருந்து வங்காளதேசம் விடுதலை அடைந்தது.
  • இந்தியப்படைகள் கிட்டத்தட்ட 5,795 சதுர மைல்கள் (15,010 km2) நிலத்தை மேற்கு பாகிஸ்தானில் கைப்பற்றி பின்னர் சிம்லா ஒப்பந்தத்தின் பேரில் நல்லெண்ண அடிப்படையில் திருப்பிக் கொடுத்தனர்.
1999 இந்திய பாகிஸ்தான் போர் (அ) கார்கில் போர்...
  • கார்கில் போரின் பின்புலம்...
  • 1971 ஆம் ஆண்டு நடந்த இந்திய - பாகிஸ்தான் போருக்குப் பின் இரு நாடுகளுக்கிடையே பெரும்பாலும் அமைதியே நிலவியது.
  • ஆனால் சியாசென் பனிமலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு இரு நாடுகளும் செய்த முயற்சிகளும் அதன் காரணமாக அமைக்கப்பட்ட இராணுவ கண்காணிப்பு நிலைகளும், சிறிய அளவில் மோதல்கள் ஏற்பட காரணமாக அமைந்தது.
  • காஷ்மீரில் 1990 களில் பாகிஸ்தான் ஆதரவுடன் நடந்த பிரிவினைவாத மோதல்களும், இரு நாடுகளும் 1998 இல் மேற்கொண்ட அணு ஆயுத சோதனைகளும், பதற்றம் அதிகரிக்கக் காரணமாயின.
  • பதற்றத்தைத் தணிக்கவும், காஷ்மீர் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்துக் கொள்ளவும் இரு நாடுகளும் பிப்ரவரி 1999 இல், லாகூர் உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
  • பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த பாகிஸ்தான் இராணுவத்தின் சில பிரிவுகளும் பாகிஸ்தான் துணை இராணுவப் படையினரும் முஜாஹிதீன் போராளிகளைப்போல இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதிக்குள் 1998-1999 களில் ஊடுருவத் தொடங்கினர்.
  • இந்த ஊடுருவல் பத்ர் நடவடிக்கை என்ற குறியீட்டுப் பெயரால் அறியப்பட்டது.
  • காஷ்மீருக்கும் லடாக்குக்கும் உள்ள இணைப்பைத் துண்டிப்பதும்; சியாசென் பனிமலையில் இருக்கும் இந்தியப் படையினரைப் பின் வாங்க வைத்து காஷ்மீர் எல்லைப் பிரச்சனைக்குத் தீர்வு காண இந்தியாவை நிர்பந்திப்பதும் இதன் முக்கிய நோக்கங்களாகக் கருதப்படுகின்றன.
  • காஷ்மீர் பகுதியில் பதற்றம் அதிகரித்தால் சர்வதேச நாடுகள் தலையிடும் என்றும் அதன் மூலம் காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் முடிவு காண முடியும் என்றும் பாகிஸ்தான் நம்பியது.
  • இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் நடந்து வரும் கிளர்ச்சியையும் இதன்மூலம் பெரிதாக்க முடியும் என்பதும் இதன் ஒரு முக்கிய இலக்காக இருந்திருக்கலாம்.
  • பாகிஸ்தான் இராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் சாகித் அஸிஸ் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் கூற்றுகளால் ஊடுருவலில் முஜாகிதீன் ஈடுபடவில்லை என்பதும், ஊடுருவியதும் கார்கில் போரில் ஈடுபட்டதும் பாகிஸ்தான் படையினர்தான் என்பதும் புலனாகிறது.
  • இந்த நடவடிக்கை, இந்தியாவின் மேக்தூத் நடவடிக்கைக்குப் பாகிஸ்தானின் பதிலடி என்றும் நம்பப்படுகிறது.
  • இந்தியாவின் அப்போதைய தரைப்படைத் தளபதியான வேத் பிரகாஷ் மாலிக் மற்றும் பலர், இந்த ஊடுருவல் பாகிஸ்தான் இராணுவத்தால் பல காலமாகத் திட்டமிடப்பட்டது என்று கருதுகின்றனர்.
  • பல முறை பாகிஸ்தான் இராணுவம் இத்திடத்தை செயல்படுத்தப் பாகிஸ்தான் தலைவர்களிடம் (சியா உல் ஹக் மற்றும் பெனசீர் பூட்டோ) அனுமதி கேட்டும், இது பெரும் போருக்கு வித்திடக்கூடும் என்ற அச்சத்தால் தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
  • பர்வேஸ் முஷாரஃப் பாகிஸ்தான் இராணுவத்தின் தளபதியாக நியமிக்கப்பட்டதும் தாக்குதலுக்கானத் திட்டங்கள் மீண்டும் வகுக்கப்பட்டன.
  • போருக்குப் பின் அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், தனக்குத் தாக்குதல் திட்டங்கள் குறித்து எவ்விதத் தகவல்களும் தெரியாது என்றும் இந்தியப் பிரதமராக விளங்கிய அடல் பிகாரி வாஜ்பாய் தொலைப்பேசியில் அழைத்து எல்லை நிலவரம் குறித்துப் பேசிய பின்னர்தான் தனக்குத் தாக்குதல் பற்றித் தெரியும் என்றும் கூறியுள்ளார்.
  • ஷெரீஃப், இத்தாக்குதலுக்கு முழு காரணம், பாகிஸ்தான் இராணுவத் தளபதியாக விளங்கிய பர்வேஸ்
  • முஷாரஃபும் அவரது கூட்டாளிகளான சில தளபதிகளும்தான் என்று கூறியுள்ளார்.
  • ஆனால் தாக்குதல் திட்டம் குறித்து நவாஸ் ஷெரீஃபுக்கு, வாஜ்பாய் பிப்ரவரி 20 அன்று லாகூர் வருவதற்குப் பதினைந்து நாட்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டது என்று பர்வேஸ் முஷாரஃப் கூறியுள்ளார்.
கார்கில் போர் மோதல் சம்பவங்கள்,  தேதி வாரியாக...
  • மே 3: கார்கிலில் பாகிஸ்தான் ஊடுருவியிருப்பது அங்குள்ள மேய்ப்பர்கள் மூலம் அறியப்பட்டது.
  • மே 5: இந்திய இராணுவம் கார்கில் பகுதிக்கு ரோந்துக் குழுவை அனுப்பியது; பாகிஸ்தான் வீரர்கள், ஐந்து இந்திய வீரர்களைச் சிறைபிடித்து சித்திரவதை செய்து கொன்றனர்.
  • மே 9: பாகிஸ்தான் குண்டு வீச்சில் கார்கிலில் இருந்த ஆயுதக் கிடங்கு சேதம் அடைந்தது.
  • மே 10 : திரஸ், கக்சர் மற்றும் முஷ்கோ பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவம் ஊடுருவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • மே மாத மத்தி இந்திய இராணுவம் காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து படைகளை கார்கில் பகுதிக்கு அனுப்பியது.
  • மே 26 ஊடுருவியவர்களுக்கெதிரான வான்வழித் தாக்குதலை இந்திய வான்படைத் தொடங்கியது.
  • மே 27 இந்திய வான்படை மிக்-21 மற்றும் மிக்-27 ஆகிய இரண்டு போர் விமானங்களை இழந்தது; வான்படைலெப்டினன்ட் நசிகேதாவை பாகிஸ்தான் வீரர்கள் போர் கைதியாகப் பிடித்துச் சென்றனர்.
  • மே 28 இந்திய வான்படையின் எம்.ஐ-17 என்ற போர் விமானம் பாகிஸ்தான் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது; அதனுள் இருந்த நான்கு வீரர்களும் உயிரிழந்தனர்.
  • ஜூன் 1 பாகிஸ்தான் தனது தாக்குதலை பலப்படுத்தியது; இந்தியாவின் NH 1A தேசிய நெடுஞ்சாலை குண்டுவீசித் தாக்கப்பட்டது.
  • ஜூன் 5 ஊடுருவலில் பாகிஸ்தான் சம்பந்தப்பட்டிருப்பது, இறந்துபோன பாகிஸ்தான் விரர்களிடமிருந்து இந்திய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியானது.
  • ஜூன் 6 இந்திய இராணுவம் கார்கிலில் பெரும் தாக்குதலைத் தொடங்கியது
  • ஜூன் 9 படாலிக் பகுதியில் இரு முக்கிய நிலைகளை இந்திய இராணுவம் கைப்பற்றியது
  • ஜூன் 11 சீனா சென்றிருந்த பாகிஸ்தான் இராணுவ தளபதி பர்வேஸ் முஷாரஃபுக்கும் ராவல்பிண்டியில் இருந்த பாகிஸ்தானின் தலைமை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் அஸிஸ் கானுக்கும் நடந்த
  • உரையாடலை இந்தியா இடைமறித்து, ஊடுருவலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருப்பதை உறுதி செய்தது
  • ஜூன் 13 இந்திய இராணுவம், திரஸிலுள்ள தோலோலிங் பகுதியைக் கைப்பற்றியது
  • ஜூன் 15 அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃபைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கார்கிலில் இருந்து படைகளைத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்தினார்
  • ஜூன் 29 இந்திய இராணுவம், இரண்டு முக்கிய நிலைகளான புள்ளி 5060 மற்றும் புள்ளி 5100 ஆகியவற்றைக் கைப்பற்றியது
  • ஜூலை 2 இந்திய இராணுவம் கார்கிலில் மும்முனைத் தாக்குதலைத் தொடங்கியது
  • ஜூலை 4 இந்திய இராணுவம் பதினோரு மணிநேரப் போராட்டத்திற்குப்பின் டைகர் ஹில் பகுதியை மீட்டது
  • ஜூலை 5 இந்திய இராணுவம் திரஸ் பகுதியை முழுமையாக மீட்டது. கிளின்டனுடனான சந்திப்பைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெற•        ஒப்புக்கொண்டார்
  • ஜூலை 7 இந்திய இராணுவம் படாலிக் பகுதியிலுள்ள ஜுபார் என்ற இடத்தைக் கைப்பற்றியது
  • ஜூலை 11 பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் இருந்துத் திரும்பத் தொடங்கியது; இந்திய இராணுவம் படாலிக் பகுதியில் முக்கிய முகடுகளைக் கைப்பற்றியது
  • ஜூலை 14 இந்திய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், விஜய் நடவடிக்கை வெற்றி அடைந்ததாக அறிவித்தார்; பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடர இந்திய அரசு பல நிபந்தனைகளை முன்வைத்தது
  • ஜூலை 26 கார்கில் பிரச்சனை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்தது. பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியவர்கள் கார்கிலில் இருந்து முற்றிலும் அகற்றப்பட்டதாக இந்திய இராணுவம் அறிவித்தது
போரின் மூன்று கட்டங்கள்...
  • கார்கில் போரை மூன்று முக்கிய கட்டங்களாகப் பகுக்கலாம். முதல் கட்டம், பாகிஸ்தான் தனது படை வீரர்களை இந்திய கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீர் எல்லைக்குள் அனுப்பி முக்கிய நிலைகளை ஆக்கிரமித்தது.
  • இதனால் தேசிய நெடுஞ்சாலை NH1, பாகிஸ்தான் இராணுவத்தால் தாக்கக்கூடிய எல்லைக்குள் வந்தது. இரண்டாம் கட்டம், பாகிஸ்தான் இராணுவம் கார்கிலில் ஊடுருவியிருப்பதை இந்திய இராணுவம் கண்டுபிடித்து அவர்களுக்கெதிராக எல்லையில் படைகளைக் குவித்தது.
  • இறுதிக் கட்டம், இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தான் படைகளுடன் போரிட்டு அவர்கள் கட்டுப்பாட்டுக்குள் இருந்த பல முக்கிய நிலைகளைத் தங்கள் வசமாக்கினர்.
  • போரின் இறுதிக்கட்டமாக சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் தனது படைகளைக் கார்கிலில் இருந்துத் திரும்பப்பெற்றது.
  • கார்கில் போரை அடுத்து உலகத்தின் பார்வையில் பாகிஸ்தானின் நிலை...
  • எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை பாகிஸ்தானியப் படைகள் தாண்டி இந்தியப் பகுதிகளை ஆக்கிரமித்ததால் சர்வதேச நாடுகள் பாகிஸ்தானை கடுமையாக விமர்சித்தன. பாகிஸ்தான் அரசு, பழியை காஷ்மீர் போராளிகள் மீது சுமத்த முயன்றாலும் அது பலனளிக்கவில்லை.
  • போர் ஆய்வாளர்கள், மிகவும் உயரமான மலைப்பகுதிகளை ஆக்கிரமிப்பது என்பது தேர்ந்த பயிற்சியுடைய இராணுவத்தினரால் மட்டுமே முடியக்கூடிய ஒன்று; அதை, மிகக் குறைவான பயிற்சியுடைய போராளிகளால் செய்ய இயலாதது என்று கூறினர்.
  • மேலும் பாகிஸ்தான் அரசு கார்கில் பிரச்சனையில் தனது ஈடுபாட்டை மறுத்து வந்தாலும், இரு பாகிஸ்தான் போர் வீரர்களுக்கு, கார்கில் போரில் தீரத்துடன் போரிட்டதற்காக, பாகிஸ்தானின் மிக உயரிய வீர விருதான நிஷான்-இ-ஹைதர் விருது வழங்கப்பட்டது.
  • அதுமட்டுமின்றி 90 பாகிஸ்தான் படை வீரர்களுக்கு (பெரும்பான்மையானவர்கள், இறந்தவர்கள்) பல்வேறு வீர விருதுகள், கார்கில் போரில் அவர்களது சிறந்த செயல்பாட்டிற்காக வழங்கப்பட்டது பாகிஸ்தான் கார்கில் போரில் ஈடுபட்டதை உறுதி செய்வதாக அமைந்தது.
  • பாகிஸ்தான் இராணுவ தலைமை தளபதிக்கும் பாகிஸ்தான் இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கும் நடந்த தொலைபேசி உரையாடலை இந்தியா இடைமறித்து பதிவு செய்தது.
  • அதில் அவர்கள் பேசியதிலிருந்து கார்கிலை ஆக்கிரமித்திருப்பது பாகிஸ்தான் படையினரே என்பது உறுதியானது.
  • ஆனால் அதையும் பாகிஸ்தான் மறுத்தது. கார்கில் பிரச்சனை குறித்து விமர்சிக்கப்பட்ட போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடே சர்ச்சைக்குரியது என்று கூறியபோதும், கார்கில் பிரச்சனையை காஷ்மீர் பிரச்சனையோடு இணைத்து சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியபோதும் பாகிஸ்தான் படைகள்தான் கார்கிலில் ஊடுருவியது என்பது வெட்டவெளிச்சமானது.
  • பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தாக்குதல்கள் தீவிரமடைந்தபோது, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அமெரிக்காவின் ஆதரவைக் கோருவதற்காக அமெரிக்க அதிபர் பில் கிளின்டனை சந்தித்தார்.
  • ஆனால் கிளின்டன், நவாஸ் ஷெரீஃபை கண்டித்ததோடு, பாகிஸ்தான் படைகளைத் திரும்பப்பெருமாறு வலியுறுத்தினார். பில் கிளின்டன் தனது சுய சரிதையில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:
  • பாகிஸ்தான் பிரதமரின் செயல்பாடுகள் அதிருப்தியளிப்பதாக இருந்தன.
  • இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், காஷ்மீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக லாகூர் வந்து பேச்சுவார்த்தை நடத்திவிட்டு திரும்பிய சில மாதங்களில் பாகிஸ்தான் இந்தியா மீது படையெடுத்தது அந்த அமைதிப் பேச்சுவார்தைகளை அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது.
  • இருந்தும் கார்கில் பிரச்சனையைக் காரணமாகக் கொண்டு பெரும் போர் தொடங்காமல் விட்டது இந்தியாவின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
  • கொலோன் மாநாட்டில் ஜி8 நாடுகள், பாகிஸ்தானின் செயலை வன்மையாகக் கண்டித்ததோடு மட்டுமின்றி இந்தியாவுக்கு தங்கள் ஆதரவையும் தெரிவித்தன.
  • ஐரோப்பிய ஒன்றியமும் பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி வந்து இந்திய பகுதிகளை ஆக்கிரமித்ததைக் கண்டித்தது.
  • பாகிஸ்தானின் நீண்டகால நட்பு நாடான சீனாவும், படைகளைத் திரும்பப் பெறுமாரு பாகிஸ்தானை வலியுறுத்தியது. ஆசியான் போன்ற பல கூட்டமைப்புகள் கார்கில் பிரச்சனையில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்தன.
  • சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், பாகிஸ்தான் படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொண்டார்.
  • பில் கிளின்டனும் நவாஸ் ஷெரீஃபும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் அமைதியான முறையில் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டுமென்று நவாஸ் ஷெரீஃப் கூறினார்.
கார்கில் ஆய்வுக்குழு...
  • போரின் முடிவில் அடல் பிகாரி வாஜ்பாயின் அரசாங்கம், போருக்கான காரணங்களையும் இந்திய உளவுத்துறையின் தோல்விக்கான காரணங்களையும் விசாரிக்க உத்தரவிட்டது.
  • உயர் அதிகாரம் கொண்ட குழு ஒன்று, கே. சுப்பிரமண்யம் தலைமையில் உருவாக்கப்பட்டு, முன்னாள் பிரதமர்கள் மற்றும் பாதுகாப்புத்துறையுடன் சம்பந்தப்பட்ட எவரையும் விசாரிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது.
  • சுப்பிரமண்யம் அறிக்கை என்று அறியப்படும் அக்குழுவின் அறிக்கையில் செய்யப்பட்டிருந்த பரிந்துரைகள் காரணமாக இந்திய உளவுத்துறையில் பெரிய அளவில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • ஆனால் கார்கில் பிரச்சனையை முன்கூட்டியே கண்டறியத் தவறியதற்குக் காரணமானவர்கள் யார் என்பதை அந்த அறிக்கை தெளிவாக சுட்டிக்காட்டவில்லை என்று விமர்சிக்கப்பட்டது.
  • மேலும் அந்த அறிக்கை, பிரிகேடியர் சுரிந்தர் சிங் மீது, கார்கில் ஊடுருவல் குறித்து சரியான நேரத்தில் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டியது.
  • ஆனால் ஊடகங்கள், சுரிந்தர் சிங் தனது உயர் அதிகாரிகளிடம் கார்கில் ஊடுருவல் குறித்த தகவல்களை முன்கூட்டியே தெரிவித்திருந்தார் எனவும், ஆனால் அவர் அளித்த தகவல்கள் இராணுவ மற்றும் அரசாங்க உயர் அதிகாரிகளால் அலட்சியம் செய்யப்பட்டது என்றும் கூறின.
  • அரசாங்க வழக்கத்திற்கு மாறாக, சுப்பிரமண்யம் அறிக்கை பொதுமக்கள் பார்வைக்காக வெளியிடப்பட்டது.
  • ஆனால், அந்த அறிக்கையின் சில பாகங்கள் மட்டும் அரசாங்க இரகசியங்களைப் பற்றியது என்ற காரணத்திற்காக இரகசியமாகப் பாதுகாக்கப்பட்டது.
  • குழுவின் தலைவர் சுப்பிரமண்யம், "அந்த பாகங்கள் இந்தியாவின் அணு ஆயுதத் திட்டம் மற்றும் அத்திட்டத்தில் முன்னாள் இந்தியப் பிரதமர்களின் பங்குகள் பற்றிய தகவல்கள் அடங்கியவை" என்று பின்னாளில் கூறினார்.
  • மேற்கண்ட முதன்மையான இந்த 4 போர்களைத் தவிர்த்து இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்புறத்தில் அடிக்கடி சிறு சிறு சச்சரவுகளும், இரு நாட்டு ராணுவத் துருப்புகளுக்குமிடையே சில்லறைச் சண்டைகளும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டு தான் இருந்தன.
  • இதை இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் பக்குவமாகக் கையாண்டபோதிலும் இம்முறை பாகிஸ்தான் ராணுவ ஆதரவு பெற்றதாகக் கருதப்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்திக் காட்டிய கொடூரத் தாக்குதலை அவற்றில் ஒன்றாகக் கருத இந்தியா தயாராக இருப்பதாகத் தெரியவில்லை.
  • இந்தியா இம்முறை பாகிஸ்தானின் அடாவடிகளுக்கு சரியான பதிலடி கொடுக்கத் தயாராகவே இருப்பதாகத் தெரிகிறது.
  • அதற்கான எச்சரிக்கை அறைகூவல் தான் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எல்லைப்புறத்து பயங்கரவாத அமைப்புகளின் மீது தொடுக்கப்பட்ட போர் விமானத் தாக்குதல்கள்.
  • இதைக் கண்டு பாகிஸ்தான் தனது ஊடுருவல் முயற்சிகளையும், பயங்கரவாத ஆதரவு மனப்பான்மையையும் மாற்றிக் கொள்ளுமா எனத் தெரியவில்லை.

நன்றி: தினமணி

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்