TNPSC Thervupettagam

500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கிய ஸ்விக்கி

November 19 , 2024 5 days 35 0

500 ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கிய ஸ்விக்கி

  • உணவுப்பொருட்கள் மற்றும் மளிகை பொருட்களை வீட்டுக்கே சென்று விநியோகம் செய்துவரும் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஸ்விக்கி, கடந்த வாரம் பொதுப் பங்குகளை வெளியிட்டு (ஐபிஓ) பங்குச் சந்தையில் கால்பதித்தது. பெங்களூருவைச் சேர்ந்த இந்நிறுவனம், இந்த பங்கு வெளியீட்டின் மூலம் ரூ.11,327 கோடி திரட்டியது. பேடிஎம் நிறுவனத்துக்குப் பிறகு அதிக தொகையை திரட்டிய தொழில்நுட்ப நிறுவனம் என்ற பெருமை இதற்கு கிடைத்தது.
  • இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து சரிந்து கொண்டிருந்த போதிலும், ஒட்டு மொத்தமாக வெளியிடப்பட்ட பங்குகளைப் போல 3.6 மடங்கு பங்குகளைக் கேட்டு விண்ணப்பங்கள் குவிந்தன. இதில் சில்லறை முதலீட்டாளர்கள் பிரிவில் 1.14 மடங்கும் ஊழியர்களுக்கான பிரிவில் 1.65 மடங்கும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த பங்குகள் கடந்த 13-ம் தேதி பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டன.
  • ஒரு பங்கின் விலை ரூ.390 ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் முதல்நாளில், தேசிய பங்குச் சந்தையில் 7.69% சதவீதம் உயர்ந்து ரூ.420-க்கு பட்டியலிடப்பட்டது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்கு மதிப்பு ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது. இது ஒரு வழக்கமான பங்கு வெளியீடுதானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இதில் ஒரு சிறப்பு இருக்கிறது. இந்த பங்கு வெளியீடு மூலம் தனது ஊழியர்களில் கணிசமானவர்களை கோடீஸ்வரர்களாக்கி உள்ளது ஸ்விக்கி.
  • கடந்த 2015, 2021 மற்றும் 2024 ஆகிய ஆண்டு களில் பங்குகளை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு (இஎஸ்ஓபி) ஊழியர்களுக்கு வழங்கப்பட்டது. இதன்படி, ஊழியர்கள் தங்கள் சம்பளத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ பங்குகளாக பெற்றுக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் முன்னாள் மற்றும் இன்னாள் ஊழியர்களுக்கு 23 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • இதன் மதிப்பு சுமார் ரூ.9 ஆயிரம் கோடி ஆகும். பங்குகள் ஒதுக்கீடு பெற்ற முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களில் 500 பேர் கோடீஸ்வரர்களாகவும் (ரூ.1 கோடிக்கு மேல்) உள்ளனர். 70 பேர் டாலர் மில்லினியர்களாகவும் (1மில்லியன் டாலருக்கு மேல் - ரூ.8.5 கோடி) ஆகி உள்ளனர்.
  • இதில் ஸ்விக்கி நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீஹர்ஷா மஜேடி, இணை நிறுவனர்கள் நந்தன் ரெட்டி மற்றும் பானி கிஷான் அட்டபல்லி மற்றும் தலைமை நிதி அதிகாரி ராகுல் போத்ரா உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு மட்டும் ரூ.2,600 கோடி மதிப்பிலான பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • பொதுவாக பங்கு வெளியிடும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு ஒதுக்கப்படும் பங்குகளை அவர்கள் ஓராண்டுக்கு பின்னரே விற்க முடியும். ஆனால், ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் ஒரு மாதத்துக்கு பிறகு தங்களுடைய பங்குகளை விற்று பணமாக்கிக் கொள்ள முடியும். இதற்காக ஸ்விக்கி நிறுவனம் செபியின் அனுமதியை பெற்றுள்ளது.
  • இதற்கு முன்பு இணைய வணிக நிறுவனமான பிளிப்கார்ட், 17 ஆயிரம் ஊழியர்களுக்கு ரூ.5,800 கோடி மதிப்பிலான பங்குகளை இஎஸ்ஓபி முறையில் ஒதுக்கியது. இதனால் ஏராளமான ஊழியர்கள் கோடீஸ்வரர்களானார்கள். பின்னர் அந்நிறுவனம் பல்வேறு காலகட்டங்களில் சுமார் ரூ.12,600 கோடி மதிப்பிலான பங்குகளை ஊழியர்களிடமிருந்து திரும்ப பெற்றது.
  • ஸ்விக்கியின் போட்டி நிறுவனமான ஸொமாட்டோ கடந்த 2021-ல் ஐபிஓ வெளியிட்டது. அப்போது அதன் ஊழியர்களுக்கு இஎஸ்ஓபி திட்டத்தின் கீழ் பங்குகள் ஒதுக்கப்பட்டன. இதனால் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட 18 ஊழியர்கள் டாலர் மில்லியனர்களாக (1 மில்லியன் டாலர்) உருவெடுத்தனர். பின்னர் ரூ.7 ஆயிரம் கோடி மதிப்பிலான பங்குகளை அந்நிறுவனம் திரும்ப பெற்றது. இதுபோல 2021-ல் ஐபிஓ வெளியிட்ட பேடிஎம் நிறுவனம், இஎஸ்ஓபி திட்டத்தின் மூலம் சுமார் 350 முன்னாள் மற்றும் இந்நாள் ஊழியர்களை கோடீஸ்வரர்களாக்கியது.

நன்றி: இந்து தமிழ் திசை (18 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்