TNPSC Thervupettagam

8-வது சம்பள கமிஷன்: கோடிக்கணக்கான ஊழியர்களை குளிர்விக்கும் அறிவிப்பு!

January 17 , 2025 3 days 31 0

8-வது சம்பள கமிஷன்: கோடிக்கணக்கான ஊழியர்களை குளிர்விக்கும் அறிவிப்பு!

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை உயர்த்துவதற்கான 8-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான முடிவை மத்திய அமைச்சரவை எடுத்து, அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். அவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியைத் தரும் அறிவிப்பாக இது அமைந்துள்ளது.
  • 7-வது சம்பள கமிஷன் 2014-ம் ஆண்டு மன்மோகன் சிங் ஆட்சியில் அமைக்கப்பட்டு, 2016-ல் புதிய சம்பள விகிதங்கள் அமல்படுத்தப்பட்டன. 10 ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இன்னும் சம்பள கமிஷன் அமைக்கப்படவில்லையே என்று ஏக்கத்தில் இருந்த மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர்.
  • புதிய சம்பள விகிதங்கள் 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலாகும் என்று கூறப்படுவதால் ஊழியர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் மாற்றியமைக்கப்பட்டால், அதையொட்டி தங்களுக்கும் சம்பள விகிதங்கள் மாறும் என்று மாநில அரசு ஊழியர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். மத்திய அரசின் இந்த அறிவிப்பு நாடு முழுவதும் அரசு ஊழியர்கள் மத்தியில் உற்சாகத்தை வரவழைத்துள்ளது.
  • ஒவ்வொரு பத்து ஆண்டு காலகட்டத்திலும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயரும்போது, வீடு, மனை, கார் விற்பனையில் தொடங்கி பல்வேறு வர்த்தக நடவடிக்கைகள் அதிகரிக்கும் என்பதால், வர்த்தர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர். தனியார் துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் இந்த ஆண்டு 9.4 சதவீதம் அளவுக்கு சம்பள உயர்வு இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டு நிறுவனம் ஒன்று மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
  • தகவல் தொழில்நுட்பம், உயிர் அறிவியல், நுகர்பொருள், நிதித்துறை, உற்பத்தி,வாகனம், பொறியியல் துறைகளைச் சேர்ந்த 1550-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் எடுத்த ஆய்வில் இது தெரியவந்துள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டு வரை 8 முதல் 9.4 சதவீதம் வரை தனியார் நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ள விவரமும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் இந்த ஆண்டு 6.6 சதவீதம் அளவில் இருக்கும் என்று கணித்துள்ள நிலையில், தொழிலாளர்களின் சம்பள உயர்வும் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதேநேரம், இந்த மாற்றம் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் மத்திய, மாநில அரசுகளுக்கு உண்டு.
  • இந்தியாவில் அமலில் உள்ள குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி, நாள் ஒன்றுக்கு ரூ.178 (அதாவது மாதம் ரூ.5,340) கட்டாயம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள தொழிலாளர்களின் சராசரி ஊதியம் ரூ.29,400 என்று புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் திறன்சாரா தொழிலாளர்களின் மாத ஊதியம் ரூ.10,483, திறன்சார்ந்த தொழிலாளர்களின் ஊதியம் ரூ.11,047 என்ற அளவில் உள்ளது.
  • இதுபோன்ற குறைந்தபட்ச ஊதிய விகிதங்களையும் காலத்திற்கேற்ப திருத்தியமைத்து, நாட்டின் வளர்ச்சியில் அனைவரையும் உள்ளடக்கி சமூக ஏற்றத் தாழ்வுகளில் உள்ள இடைவெளியைக் குறைப்பதும் காலத்தின் கட்டாயம்.

நன்றி: இந்து தமிழ் திசை (17 – 01 – 2025)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்