80 மணி நேரம் கூட இளைஞர்கள் உழைக்க ரெடி!
- நாடு முன்னேற இளைஞர்கள் வாரம் 70 மணி நேரம் உழைக்க வேண்டும் என்ற கருத்தை இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த இந்திய வர்த்தக சபை நூற்றாண்டு விழா நிகழ்ச்சியிலும் அவர் இதே கருத்தை தெரிவித்துள்ளார். இந்தியர்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. அவர்கள் எண்ணங்களை உயர்வாக வைக்க வேண்டும். நாம் கடினமாக உழைக்கவில்லை என்றால் யார் உழைப்பார்கள் என்றெல்லாம் கேட்டுள்ளார். சீன தொழிலாளர்களால் நம்மைவிட மூன்றரை மடங்கு அதிகமாக பொருட்களை உற்பத்தி செய்ய முடிகிறது என்றும் சுட்டிக் காட்டியுள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்துகள் அனைத்தும் விவாதத்துக்குரியவை. ஒரு நிறுவனத்தின் முதலாளியாக இருந்து சிந்திப்பது வேறு. அந்த நிறுவனத்தின் தொழிலாளியாக இருந்து சிந்திப்பது வேறு.
- கணினி யுகத்தின் வளர்ச்சிக்குப் பின் இளைஞர்கள் ஒரே இடத்தில் கணினி முன்பாக நீண்ட நேரம் அமர்ந்து வேலைபார்ப்பதால், முதுகுவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பல உடல் உபாதைகளை சந்தித்து வருகின்றனர். முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே இதய நோய் பாதிப்பு ஏற்படும். ஆனால், சமீபகாலமாக 20, 25 வயது இளைஞர்கள்கூட இதய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களை பார்க்க முடிகிறது. இதனால், இளைஞர்கள் உடல்நலத்தைப் பேணுவதன் அவசியத்தை உணர்ந்து வருவதால், ‘பிட்னஸ் சென்டர்’களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப் பட்ட நியாயமான நடைமுறை. அதைத் தாண்டி உழைக்க வலியுறுத்துவது ஒரு வகையான உழைப்பு சுரண்டலுக்கு வழிவகுக்கும்.
- இன்போசிஸ் நிறுவனத்தில் 3 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களது உடல்நலத்தை புறந்தள்ளி, உழைப்பை மட்டும் அதிகப்படியாக பெற நினைக்கும்போது அதற்குரிய பலனையும் தர நினைப்பதே நியாயமானது. இன்போசிஸ் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.27 ஆயிரம் கோடி அளவுக்கு லாபம் ஈட்டி வருகிறது. எந்த ஒரு தொழிலுக்கும் முதலீட்டுக்கு 20 சதவீதம் லாபம் என்பது நியாயமான லாபம் என்பது உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறை.
- அப்படி பார்க்கும்போது இன்போசிஸ் நிறுவனத்துக்கு கிடைக்கும் லாபத்தில் 20 சதவீத லாபத்தை எடுத்துக் கொண்டு, மீதி தொகையை தனது நிறுவன ஊழியர்கள் அனைவருக்கும் சரிசமமாக பிரித்துக் கொடுக்க நாராயணமூர்த்தி தயாராக இருப்பாரா? அவர் அதற்கு முன்வந்தால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் சம்பளத்துடன் ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக கிடைக்கும். நமது இளைஞர்கள் சீன இளைஞர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் இல்லை. புரட்சிகரமான தொழிலதிபராக திகழும் இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி, இத்தகைய புரட்சிகரமான முடிவை எடுத்து உலகுக்கே வழிகாட்டலாமே? அப்படி செய்தால், நமது இளைஞர்கள் 70 மணி நேரமென்ன.. 80 மணி நேரம்கூட வேலை செய்யத் தயார்!
நன்றி: இந்து தமிழ் திசை (17 – 12 – 2024)