நடேசன் என்றழைக்கப்படும் C. நடேச முதலியார் ஒரு அரசியல்வாதியும் இந்திய மாநிலமான தமிழ்நாட்டுத் திராவிட இயக்கத்தின் ஆர்வலருமாவார்.
தியாகராய செட்டியார் மற்றும் டாக்டர் T.M. நாயர் ஆகியோருடன் இணைந்து நீதிக்கட்சியை நிறுவியவர்களுள் இவரும் ஒருவராவார்.
இவர் நீதிக்கட்சியின் இதயம் எனக் கருதப்பட்டார்.
இளமைக்கால வாழ்க்கை
1875 ஆம் ஆண்டு மதராஸின் திருவல்லிக்கேணியில் ஒரு தமிழ்க் குடும்பத்தில் நடேச முதலியார் பிறந்தார்.
மதராஸில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்த இவர் மதராஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராகப் பணிபுரிவதற்கு முன்னதாக சென்னை மாநிலக் கல்லூரியில் தனது பட்டப் படிப்பை முடித்தார்.
மீள் இணைப்பு
1912 ஆம் ஆண்டில் மதராஸ் மாநகராட்சி ஆணையத்தில் இரண்டு விதமான குழுக்கள் இருந்தன.
பிராமணரல்லாதோர் குழுவிற்கு சர் பிட்டி தியாகராயச் செட்டியார் தலைமை தாங்கினார்.
மற்றொரு குழுவிற்கு டி.எம். நாயர் தலைமை தாங்கினார்.
இந்த இரு குழுவினரும் பிராமணரல்லாதோராக இருந்த போதிலும் அவைக் கூட்டங்களில் இதன் இரு தலைவர்களும் அடிக்கடி மோதிக் கொண்டனர்.
இந்த இரண்டு தலைவர்களும் ஒன்றாக இணைந்திருந்தால் பிராமணரல்லாதோர் இயக்கத்தினை வேகமாக முன்னேற்றலாம் என்பதனை நடேச முதலியார் உணர்ந்தார்.
இதனால் தான் நடேச முதலியாரால் இவர்களுக்கிடையே இருந்த வேறுபாடுகளைச் சரி செய்ய முடிந்தது.
திராவிட இயக்கம்
1909 ஆம் ஆண்டில் P. சுப்பிரமணியம் மற்றும் M. புருஷோத்தம் எனும் இரு மதராஸ் நகர வழக்கறிஞர்களால் பிராமணரல்லாதோர் சங்கமானது தோற்றுவிக்கப்பட்டது.
1912 ஆம் ஆண்டு மதராஸ் ஒருங்கிணைந்த லீக் உருவாக்கப்படும் வரை தியாகராயச் செட்டியார் தன்னை அதில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை.
அதிருப்தி அடைந்த பிராமணரல்லாத அதிகார வர்க்கத்தின் உறுப்பினர்களான சரவணப் பிள்ளை, G. வீராச்சாமி நாயுடு, துரைசாமி நாயுடு மற்றும் நாராயண சாமி நாயுடு ஆகியோரால் மதராஸ் ஒருங்கிணைந்த லீக் உருவாக்கப்பட்டது C. நடேச முதலியார் அதன் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1912 ஆம் ஆண்டிலேயே (அக்டோபர்) மதராஸ் ஒருங்கிணைந்த லீக் ஆனது மதராஸ் திராவிடச் சங்கம் என மறுபெயரிடப்பட்டது.
திராவிடம் எனும் சொல் ஒரு அரசியல் அமைப்பிற்குப் பயன்படுத்தப்பட்டது இதுவே முதன்முறையாகும்.
பின்னாளில் பனகல் ராஜா என்றழைக்கப்பட்ட பனகந்தி ராமராயநிங்கார் அதன் தலைவராகப் பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அந்த அமைப்பின் ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக மதராஸ் திராவிடச் சங்கமானது “திராவிட இல்லம்” எனும் விடுதியை நடத்தியது.
சாதி அடிப்படையிலான பாகுபாடு காரணமாக விடுதிச் சலுகைகள் கிடைக்கப் பெறாத பிராமணரல்லாத மாணவர்களின் நலனுக்காக இது அமைக்கப்பட்டது.
1914 ஆம் ஆண்டில் மதராஸின் திருவல்லிக்கேணிப் பகுதியில் நடேசன் அத்தகைய விடுதிகளை நடத்தினார்.
1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தியாகராயச் செட்டியார் மற்றும் நாயர் உட்பட முப்பது பேர் கொண்ட குழுவின் கூடுகை ஒன்று நடத்தப் பட்டது.
பிராமணரல்லாதவர்களின் குறைகளை அறியப்படுத்த ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழி செய்தித்தாள்களை வெளியிட தென்னிந்திய மக்கள் சங்கத்தை இவர்கள் நிறுவினர்.
தியாகராயச் செட்டியார் இந்த அமைப்பின் செயலாளரானார்.
“நீதி” எனும் பெயரிடப்பட்ட ஒரு செய்தித் தாளானது, 1917 ஆம் ஆண்டு பிப்ரவரி 26 முதல் வெளிவரத் தொடங்கியது.
நாயர் இதன் முதல் ஆசிரியராக இருந்தார்.
இந்தக் கூடுகையானது மேலும் தென்னிந்திய தாராளவாதிகள் கூட்டமைப்பு எனும் ஒரு அரசியல் சங்கத்தினையும் உருவாக்கியது.
“நீதி” என்ற பத்திரிக்கையை இது வெளியிட்டதால் பின்னாளில் இந்தச் சங்கமானது “நீதிக்கட்சி” என பிரபலமாக அழைக்கப்பட்டது.
தியாகராயச் செட்டியார் 1917 ஆம் ஆண்டிலிருந்து 1925 ஆம் ஆண்டு தனது மறைவு வரை இந்தக் கூட்டமைப்பின் முதல் தலைவராகப் பணியாற்றினார்.
இடஒதுக்கீடு மற்றும் மதச்சார்பின்மை ஆகியவற்றை வெகு சீக்கிரம் ஏற்றுக் கொள்வதன் மூலம் நீதிக் கட்சி அப்பிரச்சினைகளுக்கானத் தீர்வினைக் கோரியது.
திராவிடர் கழகத்தினை உருவாக்க நீதிக்கட்சியுடன் 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஈவெரா பெரியாரின் சுய மரியாதை இயக்கமும் கை கோர்த்தது. இது பிராமண எதிர்ப்பு, வட இந்திய எதிர்ப்பு மற்றும் காங்கிரஸ் எதிர்ப்பு அமைப்புகளுக்கு உதவியது.
அரசியல் வாழ்க்கை
நடேச முதலியார் பிராமண எதிர்ப்பு இயக்கம் குறித்த நீண்ட தந்திகளை பெரும் செலவில் லண்டனின் செய்தித்தாள்களுக்கு அனுப்பினார்.
லண்டனில் டைம்ஸ் பத்திரிக்கையானது அவற்றை வார்த்தை மாறாமல் அப்படியே “ஆசிரியருக்கான கடிதங்கள்” பகுதியில் வெளியிட்டது பிரிட்டனிலும் இந்தியாவிலும் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
1920 ஆம் ஆண்டில் மதராஸ் மாநகராட்சிக் குழுவில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுவாக பஞ்சமார்கள் என்றழைக்கப்படுவோர் ஆதி திராவிடர்கள் என அழைக்கப்பட வேண்டுமென்ற ஒரு தீர்மானத்தை இவர் முன்வைத்தார்.
1921 ஆம் ஆண்டில் திருவிக என பிரபலமாக அறியப்பட்ட V. கல்யாண சுந்தரத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பக்கிங்ஹாம் மற்றும் கர்நாடக மில் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையில் தியாகராயச் செட்டியாருடன் இணைந்து இவர் முக்கியப் பங்கு வகித்தார்.
இந்தியாவின் முதல் தொழிலாளர் சங்கமான மதராஸ் தொழிலாளர் சங்கமானது பக்கிங்ஹாம் மற்றும் கர்நாடக மில்களில் B.P. வாடியா மற்றும் கல்யாண சுந்தர முதலியார் ஆகியோரால் 1918 ஆம் ஆண்டு ஏப்ரல் 27 அன்று உருவாக்கப்பட்டது.
1920 ஆம் ஆண்டு நடைபெற்ற மதராஸ் தொகுதியில் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் நடேச முதலியார் பங்கேற்கவில்லை.
இருப்பினும் 1923 ஆண்டின் சட்டமன்றத் தேர்தலில் மதராஸ் சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1923-26 மற்றும் 1933-37 ஆகிய காலகட்டங்களில் மதராஸ் சட்டமன்றத்திற்கு இரண்டு முறை இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1927 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் நடைபெற்ற பிராமணரல்லாதோர் கூட்டமைப்பில் நீதிக் கட்சியினர் அமைச்சரவையைச் சார்ந்தோர் மற்றும் அரசியலமைப்புவாதிகள் என இரண்டாகப் பிரிவதற்கு அவர் முன்னிலை வகித்தார்.
இந்த இரண்டு குழுக்களும் ஒன்றாக இணையும் வரை அரசியலமைப்புவாதிகளின் குழுவிற்கு இவர் தலைமை தாங்கினார்.
1929 ஆம் ஆண்டில் பிராமணர்களை கட்சியில் அனுமதிக்க வசதியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நீதிக் கட்சியின் மாநாட்டிற்கு இவர் தலைமை வகித்தார்.
இறுதிக் காலம்
1937 ஆம் ஆண்டில் நடைபெறும் மதராஸ் சட்டமன்றத் தேர்தலில் நடேசன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 1937 ஆம் ஆண்டு பிப்ரவரியில் திடீரென இவர் தனது 62 ஆம் வயதில் காலமானார்.
நினைவுச் சின்னங்கள்
இலட்சியங்களுக்காகவும் சமூக சீர்திருத்தங்களுக்காகவும் வாழ்ந்த நடேச முதலியாருக்கு மரியாதையளிக்கும் வகையில் திருவல்லிக்கேணியில் ஒரு சாலைக்கு அவரின் பெயரிடப்பட்டது.
தியாகராய நகரில் உள்ள ஒரு பூங்காவிற்கு நடேச முதலியாரின் பெயர் சூட்டப்பட்டது.
திராவிட இயக்கத்தின் ஆதரவாளரும் எழுத்தாளருமான K.M.பாலசுப்பிரமணியன் இவரை காந்தியுடன் ஒப்பிட்டார்.
நடேச முதலியார் அடிக்கடி கூறும் சொற்றொடர், “நீதிக்கட்சியானது நியாயமான கட்சி. அந்தக் கட்சிக்கு உங்கள் ஆதரவை மனதாரக் கொடுங்கள்” என்பதாகும்.