நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஒரு இந்தியத் தேசியவாதியாவார். இவரின் உன்னதமான நாட்டுப் பற்றானது இவரை இந்தியாவின் மிகச் சிறந்தத் தலைவராக மாற்றியது.
இவர் 1943ஆம் ஆண்டில் ஆசாத் ஹிந்த் பவுஜ் எனப் பிரபலமாக அறியப்பட்ட இந்திய தேசிய இராணுவத்தைப் புதுப்பித்தார்.
சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்திலேயே தொழிலாளர் கட்சி உறுப்பினர்களுடன் இந்தியாவின் எதிர்காலம் குறித்து விவாதிக்க நேதாஜி லண்டனுக்குப் பயணம் செய்தார்.
இளமைக்கால வாழ்க்கை
சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் ஒரிசாவின் கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
கட்டாக்கில் வெற்றிகரமான வழக்கறிஞர்களில் ஒருவரான ஜானகிநாத் போஸ் “ராய் பகதூர்” பட்டம் பெற்றவராவார். இவர் பின்னாளில் வங்காளத்தின் சட்டமன்ற உறுப்பினரானார்.
1946 ஆம் ஆண்டில் இடைக்கால அரசில் பொதுப் பணித் துறை, சுரங்கங்கள் மற்றும் மின்சக்தித் துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்ட சரத் சந்திர போஸ் இவரின் சகோதரராவார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் சேர்ந்த போஸ் 1918 ஆம் ஆண்டு தத்துவத்தில் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்தார்.
இந்திய குடிமைப்பணித் தேர்வு எழுதுவதற்காக 1919 ஆம் ஆண்டில் அவர் இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்குச் சென்றார்.
1920 ஆம் ஆண்டு ஜூலை மாதம் குடிமைப் பணித் தேர்வில் அவர் 4-வது இடத்தைப் பிடித்தார்.
1921 ஆம் ஆண்டில், அவர் தனது குடிமைப் பணிப் பதவியைத் துறந்து இந்தியாவிற்குத் திரும்பினார்.
ஆரம்பக் காலஅரசியல்
ஆரம்பத்தில் கல்கத்தாவில் காங்கிரஸின் தீவிர உறுப்பினராக இருந்த சித்தரஞ்சன் தாஸின் தலைமையில் சுபாஷ் சந்திர போஸ் பணியாற்றினார்.
தேசப் பந்து என்றும் அறியப் பட்ட சித்தரஞ்சன் தாஸை தனது அரசியல் குருவாக போஸ் கருதினார்.
இவர் “ஸ்வராஜ்” எனும் செய்தித்தாளைத் தொடங்கியதோடு வங்காள மாகாண காங்கிரஸ் குழுவின் விளம்பரப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார்.
மேலும் இவர் சித்தரஞ்சன் தாஸ் நிறுவிய “பார்வர்டு” எனும் செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்தார்.
1923ஆம் ஆண்டில் அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் தலைவராகவும் வங்காள மாநில காங்கிரஸின் செயலாளராகவும் போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1924 ஆம் ஆண்டில் கல்கத்தாவின் மேயராக தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட போது கல்கத்தா மாநாகராட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக போஸ் பணியாற்றினார்.
காங்கிரஸ் உடன்
1927 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான போஸ், ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து சுதந்திரத்திற்காகப் பணியாற்றினார்.
1928 ஆம் ஆண்டு டிசம்பரின் இறுதியில் இந்திய தேசியக் காங்கிரஸின் வருடாந்திர மாநாட்டை கல்கத்தாவில் போஸ் ஏற்பாடு செய்தார்.
1928 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஜவஹர்லால் நேரு மற்றும் போஸ் ஆகியோரைச் செயலாளராகவும் S.சீனிவாச ஐயங்காரைத் தலைவராகவும் கொண்டு “இந்திய சுதந்திரக் குழு” என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.
சட்ட மறுப்பு இயக்கத்தில் கலந்துக் கொண்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார். இம்முறைச் சிறையிலிருந்து வெளி வந்த போஸ் 1930 ஆம் ஆண்டில் கல்கத்தாவின் மேயராகும் அளவிற்கு உயர்ந்தார்.
1930 ஆம் ஆண்டுகளின் இடைப் பகுதியில ஐரோப்பாவிற்குப் பயணம் செய்த போஸ் அங்கு இந்திய மாணவர்களையும் பெனிட்டோ முசோலினி உள்ளிட்ட ஐரோப்பிய அரசியல்வாதிகளையும் சந்தித்தார்.
இந்தக் காலகட்டத்தில் அவர் “இந்தியப் போராட்டம்” எனும் தனது புத்தகத்தின் முதல் பகுதியை ஆய்வு செய்து எழுதினார்.
இது 1920 -1934 காலகட்டங்களில் நடந்த சுதந்திரப் போராட்டங்களை உள்ளடக்கியது.
இப்புத்தகமானது 1935 ஆம் ஆண்டில் லண்டனில் வெளியிடப்பட்டாலும் அது அமைதியின்மையை ஊக்குவிக்கும் என்ற அச்சத்தில் ஆங்கிலேய அரசாங்கம் இப்புத்தகத்தை காலனிய நாடுகளில் தடை செய்தது.
1934 ஆம் ஆண்டில் ஆஸ்திரிய கால்நடை மருத்துவர் ஒருவரின் மகளான எமிலி ஷென்கலைச் போஸ் சந்தித்தார். பின்னர் 1937 ஆம் ஆண்டில் அவரையே போஸ் மணம் புரிந்தார்.
1938 ஆம் ஆண்டில் தேசிய அளவிலான தலைவராகப் பொறுப்பேற்று காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்படுவதையும் போஸ் ஏற்றுக் கொண்டார்.
1938 ஆம் ஆண்டில் நேருவைத் தலைவராகக் கொண்ட தேசியத் திட்டக் குழுவை போஸ் உருவாக்கினார்.
இவர் 1938 (ஹரிபுரா) மற்றும் 1939 (திரிபுரி) என 2 முறை காங்கிரஸ் மாநாடுகளுக்குத் தலைமை தாங்கினார்.
1939 ஆம் ஆண்டில் காந்தியின் ஆதரவு பெற்ற வேட்பாளரான பட்டாபி சீத்தாராமையாவிற்கு எதிராகப் போட்டியிட்டு திரிபுரி காங்கிரஸ் மாநாட்டிற்குத் தலைவராக போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இச்சமயம் முத்துராமலிங்கத் தேவர் தென்னிந்தியாவின் அனைத்து வாக்குகளையும் போஸிற்கு ஆதரவாகத் திரட்டினார்.
1939 ஆம் ஆண்டில் காங்கிரஸில் இருந்து விலக முடிவு செய்த போஸ் அதே ஆண்டு ஜூன் 22 ஆம் நாள் “பார்வடு பிளாக்” கட்சியைத் தொடங்கினார்.
தொடக்கத்திலிருந்தே முத்துராமலிங்கத் தேவர் போஸின் தீவிர ஆதரவாளர் ஆவார். இவர் போஸின் பார்வர்டு பிளாக் கட்சியிலும் இணைந்தார்.
1939 ஆம் ஆண்டு அக்டோபர் 6 ஆம் தேதி போஸ் மதுரைக்குப் பயணம் செய்த போது அவரை வரவேற்பதற்காக ஒரு பிரம்மாண்ட ஊர்வலத்தைத் தேவர் ஏற்பாடு செய்திருந்தார்.
காங்கிரசுடனான கருத்து வேறுபாடு மற்றும் கைது
இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த போது, காங்கிரஸ் தலைமையுடன் கலந்தாலோசிக்காமல் இந்தியாவின் சார்பாக போரை அறிவிக்க வைசிராய் லின்லித்தோ பிரபு எடுத்த முடிவை எதிர்த்து ஒரு பிரம்மாண்ட சட்ட மறுப்பு இயக்கத்திற்கானப் பரப்புரையை போஸ் முன்மொழிந்தார்.
இரண்டாம் உலகப் போரின் போது ஆங்கிலேயருக்கு உதவும் காங்கிரசின் முடிவையும் போஸ் கடுமையாக எதிர்த்தார்.
கல்கத்தாவின் டல்ஹெளசி சதுக்கத்தின் மூலையில் அமைக்கப்பட்டிருந்த இருட்டறை துயரச் சம்பவத்தின் நினைவுச் சின்னமான ஹால்வெல் நினைவுச் சின்னத்தை அகற்றக் கோரி பிரம்மாண்ட ஆர்ப்பாட்டங்களுக்கு அவர் ஏற்பாடு செய்தார்.
“இரத்தத்தைக் கொடுங்கள், நான் உங்களுக்குச் சுதந்திரத்தைத் தருகிறேன்” என்ற அவரின் அழைப்பிற்கு மக்களிடம் மிகப்பெரிய அளவில் பிரதிபலிப்பு இருந்தது. எனவே ஆங்கிலேயர் அவரை உடனடியாக கைது செய்துச் சிறையிலடைத்தனர்.
சிறையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார்.
அவரின் உடல் நிலை மோசமடைந்த போது வன்முறையான எதிர்விளைவுகளுக்குப் பயந்து ஆங்கிலேயர் அவரை விடுதலை செய்து வீட்டுக் காவலில் வைத்தனர்.
ஐரோப்பாவிற்கு தப்பிச் செல்லுதல்
1941 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் நாள் சுபாஷ் திட்டமிட்டு வீட்டுச் சிறையிலிருந்துத் தப்பி பெஷாவர் வழியாக ஜெர்மனியின் பெர்லினுக்குச் சென்றார்.
1941 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் நாள் ஆப்கானிஸ்தான் உடனான ஆங்கிலேய இந்தியாவின் வடமேற்கு எல்லை வழியாகச் சென்று ரஷ்யாவை அடைவதற்கானப் பயணத்தை போஸ் தொடங்கினார்.
மாஸ்கோ சென்றடைந்த அவர் அங்கிருந்து ரோமை அடைந்துப் பின்னர் ஜெர்மனிக்குச் சென்றார்.
1941 முதல் 1943 ஆம் ஆண்டு வரை போஸ் ஜெர்மனியில் வசித்தார்.
1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், ஜெர்மன் வானொலியில் இருந்து ஒளிபரப்பப்பட்ட அவரின் பேச்சானது ஆங்கிலேயரிடையே அதிர்ச்சி அலைகளை எழுப்பியது.
அவர் பெர்லினில் சுதந்திர இந்திய மையத்தினைத் தொடங்கினார். மேலும் அச்சு நாட்டுப் படைகளால் கைப்பற்றப்படுவதற்கு முன்னதாக ஆங்கிலேயர்களுக்காகப் போரிட்ட இந்திய போர்க் கைதிகளில் இருந்து ஒரு இந்திய படையணிப் பிரிவை (சுமார் 4500 பேரைக் கொண்டது) போஸ் உருவாக்கினார்.
1942 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஹிட்லரைச் சந்தித்தார். அவரது முயற்சிகளுக்கான ஆதரவை ஜெர்மானியர்கள் உறுதிப்படுத்தினர். மேலும் போஸ் ஜப்பானின் முழு விசுவாசத்தையும் பெற்றார்.