TNPSC Thervupettagam

S.R. பொம்மை வழக்கு

February 4 , 2019 2149 days 8299 0
S.R. பொம்மை என்பவர் யார்?
  • R. பொம்மை என்பவர் 1988 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 முதல் 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 வரை கர்நாடகாவில் ஜனதா தள அரசின் முதல்வராக பதவி வகித்தவர் ஆவார்.
  • 1989 ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ல் இந்திய அரசியலமைப்பின் ஷரத்து 356-ன்படி இவருடைய அரசாங்கம் அகற்றப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

  • பெரும்பான்மையை நிரூபிக்கும் நாளில் மிகப்பெரிய அளவில் கட்சித் தாவல் நடைபெற்றதைத் தொடர்ந்து பொம்மை அரசாங்கம் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறியதன் அடிப்படையில் அவருடைய அரசாங்கம் அகற்றப்பட்டது.
  • ஜனதா தள சட்டமன்றக் கட்சியால் உறுதி செய்யப்பட்ட தனது பெரும்பான்மைக்கான தீர்மானத்தின் பிரதியை அப்போதைய ஆளுநரான P. வெங்கடசுப்பையாவிடம் பொம்மை அளித்த போதிலும், ஆளுநர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாய்ப்பை அக்கட்சிக்கு வழங்கவில்லை.
அதன் பின்னர்
  • குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை செய்ததை எதிர்த்து முதல்வர் நீதிமன்றத்தை நாடினார். முதலில் கர்நாடக உயர் நீதிமன்றம் இவரது நீதிப் பேராணையை தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் அவர் உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்
  • 1994 ஆம் ஆண்டு மார்ச் 11 அன்று உச்சநீதிமன்ற அரசியலமைப்பு அமர்வானது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கியது. இதன் மூலம் ஷரத்து 356-ஐப் பயன்படுத்தி மாநில அரசாங்கங்களை தன்னிச்சையாக அகற்றுவதற்கு கட்டுப்பாடுகளை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தீர்ப்பு விவரம்
  • மாநில அரசாங்கத்தை அகற்றும் குடியரசுத் தலைவரின் அதிகாரம் முழுமையானதல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
  • குடியரசுத் தலைவரின் பிரகடனம் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் ஒப்புதல் பெற்ற பின்னரே குடியரசுத் தலைவர் தனது அதிகாரத்தை செயல்படுத்த முடியும் என்று தீர்ப்பு கூறுகிறது.

  • பாராளுமன்ற ஒப்புதல் பெறும் வரை குடியரசுத் தலைவர் மாநில சட்டமன்றத்திற்கான அரசியலமைப்பு விதிகளை தற்காலிகமாக முடக்கி வைப்பதன் மூலம் மாநில சட்டமன்றத்தை தற்காலிகமாக முடக்கி வைக்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

 

குடியரசுத் தலைவரின் பிரகடனத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கவில்லை என்றால் என்ன நிகழும்?
  • குடியரசுத் தலைவரின் பிரகடனத்திற்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் வழங்கவில்லை என்றாலோ அல்லது பிரகடனத்தை நிராகரித்தாலோ இரண்டு மாத காலகட்டத்தில் இந்தப் பிரகடனம் முடிவுக்கு வரும். பின்னர் அகற்றப்பட்ட அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்கும்.
  • இந்த காலகட்டத்தில் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்ட சட்டமன்றம் மீண்டும் செயல்படத் துவங்கும் என்று இந்திய உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. மேலும் ஷரத்து 356-ன் கீழ் இந்தியக் குடியரசுத் தலைவரால் அமல்படுத்தப்படும் இந்தப் பிரகடனமானது நீதிமன்ற மீள் ஆய்வுக்கு அல்லது சீராய்விற்கு உட்பட்டது என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.

 

S.R. பொம்மை எதிர் இந்திய அரசு வழக்கு
  • இந்திய உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பானது மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கங்களை தன்னிச்சையாக அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
  • மேலும் அரசின் பெரும்பான்மை முடிவு செய்யப்பட வேண்டிய ஒரே இடம் மாநில சட்டமன்றத்தில் மட்டுமே என்றும் கூறியுள்ளது. மத்திய அரசின் முகவராக செயல்படும் ஆளுநர் முடிவு எடுத்தலுக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

 

இத்தீர்ப்பின் தாக்கம்
  • இத்தீர்ப்பின் தாக்கம் பின்வரும் நிகழ்வு ஒன்றில் முதன்முறையாக வெளிப்பட்டது. 1999 ஆம் ஆண்டில் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசால் கவிழ்க்கப்பட்ட மாநில அரசு மீண்டும் ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி மத்திய அரசால் கவிழ்க்கப்பட்ட ராப்ரி தேவி தலைமையிலான அரசு 1999 ஆம் ஆண்டு மார்ச் 08 அன்று மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது.

  • பின்னர் தொங்கு சட்டமன்றம் அமையும் போதும் மற்றும் அதனைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்கும் போதும் பொம்மை வழக்கு மேற்கோள் காட்டப்பட்டு நாட்டின் அரசியல் வரலாற்றில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட முக்கிய தீர்ப்பாக அது அமைகின்றது.

-------------

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்