TNPSC Thervupettagam

ஃப்ரான்ஸுவா குரோ

May 2 , 2021 1186 days 505 0
  • பிரான்ஸின் தென்கிழக்கில் உள்ள லியோன் நகரத்தில் 1933-ல் பிறந்த ஃப்ரான்ஸுவா குரோ (1933-2021) தன் இளம் வயதிலேயே இந்தியவியல் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
  • லுய் துய்மோன், லெ ருவா குரோன், ழான் ஃபிலியோஸா முதலான அறிஞர்களிடம் பெற்ற பயிற்சி அதைச் செம்மைப்படுத்தியது.
  • சிலகாலம் அல்ஜீரியாவுக்குக் கட்டாய ராணுவ சேவைக்காக அனுப்பப்பட்டார். அதன் பின்னர் மீண்டும் கல்வி கற்பதை நோக்கித் திரும்பிய குரோ இந்தி, சம்ஸ்கிருதம், தமிழ் ஆகிய மொழிகளைக் கற்றுத் தேர்ந்தார்.
  • புதுச்சேரியில் பிரெஞ்சு இன்ஸ்டிட்யூட்டில் அப்போதைய இயக்குனராக இருந்த ழான் ஃபிலியோஸாவால் 1963-ல் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.
  • அப்போது ஆரம்பித்த புதுச்சேரியுடனான அவரது உறவு அவரது வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. புதுச்சேரி மட்டுமன்றி வியட்நாம், கம்போடியா, மலேசியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று அந்த நாடுகளின் பண்பாட்டு ஆய்வுகளுக்கும் பங்களித்தவர்.
  • குரோ தனது 35-வது வயதில் பரிபாடலை பிரெஞ்சுக்கு மொழிபெயர்த்தார். அதன் பின்னர் திருக்குறள் காமத்துப்பால் அவரால் மொழியாக்கப்பட்டது.
  • காரைக்கால் அம்மையார், அருணகிரிநாதர், உத்திரமேரூர் கல்வெட்டுகள், தேவாரம் முதலானவற்றைப் பற்றி அவர் செய்த ஆய்வுகளும் மொழியாக்கங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
  • செவ்வியல் தமிழ் இலக்கியத்தில் மட்டுமின்றி தற்காலத் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடும் புலமையும் கொண்டவர் குரோ.
  • ‘நாளை மற்றுமொரு நாளே’, ‘வாடிவாசல்’ ஆகிய நாவல்கள் அவரால் பிரெஞ்சுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டன. ஜி.நாகராஜன், புதுமைப்பித்தன், மௌனி, லா.ச.ரா அகியோரைத் தமிழின் முழுமையான எழுத்தாளர்கள் என வர்ணித்த குரோவின் மேற்பார்வையில் உருவான தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு உலக அரங்கில் தமிழ் இலக்கியத்தின் இடத்தை உறுதிப்படுத்த உதவியது.
  • ஃப்ரான்ஸுவா குரோ தமிழ் அறிஞராக மட்டுமின்றி நல்ல நிர்வாகியாகவும் விளங்கியவர். அவரால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களால் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் புதிய பரிமாணங்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.

மரணத்தைப் போல நிலைத்திருப்பார்

  • 1990-களின் பிற்பகுதியில் தினமும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருந்தேன். தான் வாசிக்கும் நூல்களைக் கொடுத்து வாசிக்க ஊக்குவிப்பார்.
  • அதிர்ந்து பேசாதவர், அனைவரிடமும் கனிவோடு நடந்துகொள்வார். செல்வச் செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் எனினும் எளிமையையே விரும்புவார்.
  • உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திய ‘உலகத் தமிழ் ஆராய்ச்சிக் கழகத்தின் (IATR) துணைத் தலைவராக நீண்ட காலம் பொறுப்பு வகித்தவர் அவர்.
  • ‘‘உலகத் தமிழ் மாநாடுகள் நடத்துவதால் பயனேதும் உண்டா?” என அவரிடம் நான் கேட்டபோது, ‘‘தமிழர்கள் தங்கள் மொழியைக் கொண்டாட விரும்புகிறார்கள். கொண்டாடிவிட்டுப் போகட்டும். அதில் ஆபத்து எதுவுமில்லை. அது இயல்பானதொரு விஷயம்தான். அதைத் தாண்டி இன்னும் சில தளங்கள் உள்ளன. உலகெங்கும் தமிழில் செயல்படும் அறிஞர்கள் இந்த மாநாடுகளால் பெறுகிற தாக்கம் முக்கியமானது. தமிழ்க் கலாச்சாரத்தை அதற்கு முன் விரிவாக அறிந்திராத அறிஞர்கள் பலர் அப்போது அதற்கான ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். அங்கு வரும் அறிஞர்கள் தமக்குள் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிகிறது. அதுவொரு முக்கியமான விஷயம்” என்று அவர் பதிலளித்தார்.
  • ‘தனது இலக்கிய அம்சங்களாக, பரிமாணங்களாகக் கலாச்சார மீட்புவாதத்தைக் கொண்டுள்ள, இந்து கலாச்சாரத்தின் சுயமான பண்புகளுக்குத் திரும்ப வேண்டும் என்கிற ஒரு புதிய பிரக்ஞை உருவாகிவருவதையும், பேச்சுமொழியை, வட்டார வழக்கை இலக்கிய அந்தஸ்துக்குக் கொண்டுசெல்லும் முயற்சிகளையும்’ கால் நூற்றாண்டுக்கு முன்பே சுட்டிகாட்டிய குரோ, “மரபான மதிப்பீடுகள், பழைமை குறித்த ஏக்கங்கள் என்பவற்றை நான் ஐயத்தோடு பார்க்கிறேன்” எனத் தனது கவலையைப் பகிர்ந்துகொண்டார்.
  • தமிழ் மொழியின் மீதும் இலக்கியத்தின் மீதும் அளவற்ற காதல் கொண்டிருந்த குரோ, “உலக அரங்கில் தமிழுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மற்ற மொழிகளுக்கு இருப்பது போன்று தமிழுக்கு வாதிடுபவர்கள் ஆதரவு தேடுபவர்கள் (Lobby) இல்லை” என்பதே அதற்கு முதன்மையான காரணம் என்றார்.
  • அந்த நிலையை மாற்ற தனது ஆய்வுகளாலும் மொழிபெயர்ப்புகளாலும் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்த குரோவின் மறைவு தமிழுக்கு மிகப் பெரிய இழப்பு. அவரது புகழ் மரணத்தைப் போலவே அழியாதிருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (02 - 05 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்