TNPSC Thervupettagam

அகன்றுவிடவில்லை ஆபத்து!

November 10 , 2020 1532 days 710 0
  • தமிழகத்தில் கொவைட்-19 நோய்த் தொற்றுப் பரவல் 3%-க்கும் கீழாகக் குறைந்துள்ளது என்று தலைமைச் செயலர் க.சண்முகம் தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
  • சென்னை, கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்று 5%-க்கும் அதிக மாகக் காணப் படுவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
  • தற்போதைய நிலையில் நோய்த்தொற்றுப் பகுதிகளைக் கண்டறிந்து தனிமைப் படுத்தி அப்பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தைக் குறைப்பதன் மூலம் நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தலாம் என்பது அவரது கருத்து.
  • பொதுமுடக்கத்துக்குப் பதில், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தினால் போதும் என்றும், தீபாவளி பண்டிகைக்குப்பின் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரிக்கவில்லை எனில் அடுத்த கட்டத் தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
  • தேசிய அளவில் கடந்த செப்டம்பர் 11-ஆம் தேதி ஒரே நாளில் 97,650 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டது தான் உச்சகட்டத் தாக்கம். அதன்பிறகு, தொடர்ந்து பாதிப்புகள் குறைந்து வருகின்றன.
  • அக்டோபர் 25-ஆம் தேதிக்குப் பிறகு ஒன்றிரண்டு நாள்களைத் தவிர ஏனைய நாள்களில் புதிய பாதிப்புகள் 50,000-க்கும் குறைவாகவே இருந்து வருகின்றன.
  • நோய்த்தொற்று குறைந்து வருவதுபோலத் தெரிந்தாலும், திடீரென்று இரண்டாவது அலை தோன்றும் அபாயம் இருக்கிறது.  பண்டிகைக் காலங்களுக்கும் நோய்த் தொற்றுப் பரவலுக்குமான தொடர்பு 1861-லேயே பிரிட்டிஷ் ராயல் கமிஷனால் உறுதிப் படுத்தப்பட்ட ஒன்று.
  • விநாயகர் சதுர்த்தியைத் தொடர்ந்து மும்பையிலும், ஜகந்நாதர் ரத யாத்திரையைத் தொடர்ந்து ஒடிஸாவிலும், ஓணம் பண்டிகைக்குப் பிறகு கேரளத்திலும், நவராத்திரிக்குப் பிறகு தில்லியிலும் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் நாம் மெத்தனமாக இருப்பது தவறு.
  • தில்லி அரசின் சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், தலைநகரில் கொவைட்-19 நோய்த்தொற்றின் கடுமையான மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
  • ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 7,745 நோய்த்தொற்றுப் பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அவசர சிகிச்சைப் பிரிவில் படுக்கைகளின் தேவை அதிகரித்திருக்கிறது.
  • இரண்டாவது, மூன்றாவது அலை நோய்த்தொற்று முதலாவது அலையின் பரவலை விடக் கடுமையாக இருக்கும் என்பதை மேலை நாடுகள் உணர்த்துகின்றன.
  • அதிபர் தேர்தல் கவனத்தை திசை திருப்பியதால், கடந்த 10 நாள்களில் அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புதிதாகப் பாதிக்கப்பட்டிருப்பது வெளியில் தெரியவில்லை.
  • ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் மீண்டும் நிலைமை மோசமாகி வருகிறது. அதிகரித்த நோய்த்தொற்றின் காரணமாக மிகப் பெரிய பொருளாதார நாடுகளான பிரிட்டனும் ஜெர்மனியும் பிரான்ஸூம் மீண்டும் பல பகுதிகளில் பொது முடக்கத்தை அறிவித்திருக்கின்றன.
  • செக் குடியரசில், இரவு நேரத்தில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இத்தாலியில் மீண்டும் திரையரங்கங்களும், உடற்பயிற்சி நிலையங்களும் மூடப்பட்டிருக்கின்றன. உணவு விடுதிகள் இரவில் இயங்கத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது.
  • ஆகவே, நோய்த்தொற்றுப் பரவல் குறைந்திருக்கிறது என்பதால் அபாயம் அகன்று விட்டது என்று கருதிவிட முடியாது.
  • பொது முடக்கம், மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை முன்னெடுப்பதற்கும், மக்கள் மத்தியில் நோய்த்தொற்று அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் உதவுகிறது என்பதை மறுக்க முடியாது. பொதுமுடக்கத்தின் மூலம் ஓரளவுக்கு நோய்த் தொற்றுப் பரவல் தவிர்க்கப்படும் என்பதும் உண்மை.
  • அதேநேரத்தில், பொது முடக்கம் என்று சொன்னால் அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பைத் தவிர்க்க முடியாது. வளர்ச்சியடைந்த ஐரோப்பிய நாடுகளைப்போல நீண்ட நாள்களுக்குப் பொருளாதாரத்தை முடக்கி வைக்கும் வசதி வளர்ச்சியடையும் இந்தியா போன்ற நாடுகளுக்கு கிடையாது.
  • முகக் கவசம் அணிவதை ராஜஸ்தான் அரசு கட்டாயமாக்கியிருக்கிறது. ராஜஸ்தானில் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் மட்டுமல்லாமல் சிறை தண்டனையும் அறிவிக்கப்பட்டிருப்பது விழிப்புணர்வை அதிகரிக்கக்கூடும் என்று வேண்டுமானால் சொல்லலாம். 
  • தமிழக அரசு பொது விநியோக அமைப்புகள் மூலம் இலவசமாக முகக் கவசம் வழங்கியும்கூட பலர் அதை பயன்படுத்தாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. சட்டம் போட்டு எந்த அளவுக்கு முகக் கவசம் அணிவதை உறுதிப்படுத்த முடியும் என்று தெரியவில்லை.
  • கிழக்காசிய நாடுகளில் முகக் கவசம் அணிவதை அனைவரும் வழக்கமாகக் கொண்டிருப்பதால் கொவைட்-19 நோய்த்தொற்றை வெற்றிகரமாக எதிர் கொண்டிருக்கிறார்கள்.
  • பொது முடக்கத்துக்கு முன்னுரிமை அளித்த மேலை நாடுகளைவிட முகக் கவசத்தை வழக்கமாக்கிக் கொண்டிருக்கும் கிழக்காசிய நாடுகளில் நோய்த்தொற்றுப் பரவலும் தடுக்கப்பட்டது, உயிரிழப்பும் குறைவு.
  • அதனால் தமிழகத்தில் முகக் கவசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் நாம் முனைப்புக் காட்டியாக வேண்டும்.
  • தலைமைச் செயலர் கூறுவதுபோல, தொடர்ந்த பொது முடக்கம் தேவையில்லை என்றாலும்கூட நோய்த்தொற்றுப் பரவலுக்கு வழிகோலும் திரையரங்குகள், உடற் பயிற்சிக் கூடங்கள், பொழுதுபோக்குத் தலங்கள் போன்றவை திறக்கப்படாமல் இருப்பது அவசியம்.
  • அதேபோல, சமூக இடைவெளியை உறுதிப்படுத்த முடியாத மொத்த விற்பனைச் சந்தைகள், சென்னை ரங்கநாதன் தெரு போன்று கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாத கடைத் தெருக்கள், வணிக வளாகங்கள் போன்றவை இயல்பு நிலையில் இயங்க அனுமதிப்பது ஆபத்தை வரவேற்பதாக அமையும்.

நன்றி : தினமணி (10-11-2020)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்