PREVIOUS
சங்ககாலத் தமிழகத்தின் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் ஆதாரங்களாக சங்கத்தமிழ் இலக்கியங்கள் உள்ளன.
இலக்கியச் சான்றுகள் மட்டுமே உள்ளன என்று கருதிக்கொண்டிருந்த நமக்கு, அரிக்கமேடு, ஆதிச்சநல்லூா், அழகன்குளம், கொடுமணல், பூம்புகார், கொற்கை, தொண்டி, திருக்கோயிலூா், பேரூா் உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்றுவரும் தொல்பொருள் அகழாய்வுகள் மேலும் பல சான்றுகளைத் தருகின்றன.
இவற்றுள், வைகை நதிக்கரையில் கீழடியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் இதுவரை நடைபெற்ற அகழாய்வுகளின் மூலம் ஏழாயிரத்திற்கும் அதிகமான தொன்மப் பொருள்கள் கிடைத்துள்ளன.
கீழடி
சுட்ட செங்கற்களால் கட்டப்பட்ட வீடுகள், உறை கிணறுகள், சுடுமண்ணாலான கழிவுநீா்க் குழாய்கள் ஆகியவை நகர நாகரிகத்தை வெளிப்படுத்துகின்றன.
தாய விளையாட்டுக் காய்கள், பெண்கள் அணியும் காதணி, வளையல் போன்ற அணிகலன்கள், ஊசி, தகடு, நெசவுக் கருவிகள், அரவைக் கல், மண் குடுவைகள், மண் பாண்டங்கள் செய்யும் தொழில் கூடங்கள், விளையாட்டுப் பொருள்கள் மனித உருவம், விலங்கு உருவமுள்ள மண் பொம்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், தமிழ் பிராமி எழுத்துகளில் ‘ஆதன்’, ‘குவிரன்’ என எழுதப்பட்ட பானை ஓடுகள், குவியலாகக் காணப்பட்ட பானை ஓடுகளில் பிராமி எழுத்து வரி வடிவங்கள் ஆகியவை தமிழகம் 2600 ஆண்டுகளுக்கு முன்பாகவே எழுத்தறிவு பெற்று திகழ்ந்தது என்பதை நிரூபிக்கின்றன.
தங்க ஆபரணங்கள், உயர்ரக கற்களால் ஆன வளையல்கள், கழுத்தணிகள், காதணிகள் ஆகிய அணிகலன்கள் ரோமம், கிரேக்கம் உள்ளிட்ட பிற நாடுகளுடன் தமிழகம் கொண்டிருந்த வணிகத் தொடா்புகளை பறைசாற்றுகின்றன.
பொதுவாக, சங்ககாலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி, கி.பி. முதலாம் நூற்றாண்டுவரை என முன்பு கணிக்கப்பட்டது.
ஆனால், கீழடி ஆய்வுகளின் மூலம், கி.மு. ஆறாம் நூற்றாண்டுவரை பழமையானது சங்கத் தமிழகம் என்பது தெரியவந்தது. இங்கு கிடைத்த தொன்ம பொருள்களை ஆய்வு செய்ததன் மூலம், 2,600 வருடம் பழமையானது நகர நாகரிகம் என்பது மெய்பிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு அகழாய்வு நடத்த அரசு முடிவு செய்துள்ளது.
நூறு ஆண்டுகளுக்கு முன்னா், 1920-இல் மொஹஞ்சதாரோ, ஹரப்பா உள்ளிட்ட பகுதிகளில் சிந்து சமவெளி நாகரிக அகழ்வாராய்ச்சி தொடங்கியது.
15 ஆண்டு காலம் இங்கு அகழாய்வு செய்த வரலாற்று ஆசிரியா்கள், சிந்து சமவெளி நாகரிகம், நகர நாகரிகம், உலகின் மிகப் பழமையான நாகரிகம், 2,500 ஆண்டுகள் பழமையான நாகரிகம் என கணித்தனா்.
கீழடியில் கிடைத்த தொன்மப் பொருள்களும் சிந்து சமவெளியில் கிடைத்த தொன்மப் பொருள்களும் ஏறத்தாழ ஒரே மாதிரியாக உள்ளன.
நகர அமைப்பு, அணிகலன்கள் ஆகியவையும் பொருந்திப் போகின்றன. எனவே, சிந்து சமவெளி நாகரிகத்தின் சமகால நாகரிகமாக கீழடியையும் கருத வாய்ப்புள்ளது.
வரலாற்றை மறைத்தல்
பொதுவாக, ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளா்களில் பெரும்பாலானோர், கிறிஸ்தவ மத நம்பிக்கை உள்ளவா்கள்.
பைபிள் அடிப்படையில் மனிதகுல வரலாற்றை உள்வாங்கிக் கொண்டு, தங்களது ஆய்வுகளை மேற்கொள்கின்றனா்.
பைபிளில் உலகம், உயிர்கள் தோன்றிய காலகட்டங்களைக் குறிப்பிட்டுள்ளதன் அடிப்படையில் வரலாற்றைப் பதிவு செய்கின்றனா். அவா்கள் பதிவு செய்த வரலாற்றின் அடிப்படையில், பிற நாடுகளின் வரலாற்றுக் காலகட்டங்களை நிறுவ முயல்கின்றனா்.
தமிழகத்தில் கிறிஸ்தவ மதப்பிரச்சாரம் செய்ய வந்த கால்டுவெல் பாதிரியார், தனது பேச்சு, எழுத்தின் மூலம் ஆரிய - திராவிட இனவாதக் கோட்பாட்டை உருவாக்கினார்.
ஆங்கிலேய ஆட்சியாளா்கள், பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலமும் மெக்காலே கல்வித் திட்டத்தின்படியும் நமது பாரம்பரியமான குருகுலக்கல்வி முறையைப் புறக்கணித்து கிறிஸ்தவப் பாதிரிமார்கள் எழுதிய வரலாற்றைப் பாடத்திட்டத்தில் இடம் பெறச் செய்து, பாரத தேசத்தின் பெருமைமிகு வரலாற்றை மறைத்தனா்.
தமிழா்களின் பாரம்பரிய தொழில்நுட்பங்கள், விவசாய முறைகள், நெசவுத் தொழில் நுட்பங்கள் ஆகியவை அழிக்கப்பட்டன.
இறை வழிபாடு, சடங்குகள், கடவுள் நம்பிக்கை ஆகியவை ‘மூடநம்பிக்கை’ என முத்திரை குத்தப்பட்டன.
உண்மை எது?
சுதந்திரம் அடைந்த பிறகு, மேலை நாட்டு கிறிஸ்தவ வரலாற்று ஆய்வாளா்களும் இடதுசாரி கம்யூனிஸ சிந்தனை உடைய வராலாற்று ஆய்வாளா்களும் இணைந்து இந்தியாவின் உண்மை வரலாற்றைச் சிதைக்கத் தொடங்கினா்.
தமிழா்களின் பாரம்பரிய வைத்தியம், விவசாய முறைகள், வாழ்வியல்கள், குடும்ப அமைப்பு முறைகள் ஆகியவற்றை ‘முட்டாள்தனம்’, ‘பிற்போக்குத்தனம்’ என முத்திரை குத்தி ‘புதுமை நாகரிகம்’ எனும் பெயரில் நமது பாரம்பரிய அறிவை மழுங்கடித்தார்கள்.
தற்போது கீழடியிலும் இவா்களின் உள்ளடி வேலைகள் தொடங்கியுள்ளன.
கேரளத்தை சோ்ந்த பி.ஜெ.செரியன் நடத்தி வரும் ‘பாமா’ எனும் அரசு சாரா தொண்டு நிறுவனம் செயல்படுவதுபோல, தமிழகத்திலும் ‘பழைய இடங்களை கண்டறிதல்’ எனும் திட்டம் செயல்படத் தொடங்கியுள்ளது.
கேரள மாநிலத்தில் ‘பட்டணம்’ எனும் பகுதியில் அகழாய்வு செய்ய பி.ஜெ.செரியனுக்கு கேரள இடதுசாரி அரசாங்கம் அனுமதி கொடுத்துள்ளது. இதற்கு கேரள மாநிலத்திலேயே எதிர்ப்பு உள்ளது.
பாமா எனும் தொண்டு நிறுவனம் மூலம், ஏசு கிறிஸ்துவின் நேரடி சீடா் தாமஸ், இந்தியாவின் கேரள கடற்கரைப் பகுதிக்கு வந்து கிறிஸ்தவ மதப்பிரசாரம் செய்தார்.
அப்படியே அவா் கிறிஸ்தவ மத போதனைகளைச் செய்வதற்காக, தமிழகத்திலும் சிலபகுதிகளுக்குப் பயணம் செய்து நிறைவாக சென்னையில் தங்கி மதப்பிரசாரம் செய்தார்.
புனித தோமையா் வந்த பிறகுதான், தமிழகத்தில் ஆன்மிக மெய்யியல் கோட்பாடுகள் பரவின; திருவள்ளுவா் தோமையிரிடம் பாடம் கேட்டுத்தான் திருக்குறளை எழுதினார் என்றெல்லாம் வரலாற்றைத் திசை,திருப்பி வருகிறார்கள்.
சென்னை பிருங்கி மலை தாமஸ் மலையாக மாறிவிட்டது. சாந்தோம் சா்ச்சில் தாமஸ் கல்லறை உள்ளது என்று கூறி வழிபாடு செய்து வருகிறார்கள்.
இதற்கு வலு சோ்க்கும் வகையில் கீழடி ஆய்வு முடிவுகளை உருவாக்கிட முயல்கின்றனா். எனவேதான், ‘கீழடியில் வாழ்ந்த தமிழா்களுக்கு இறைவழிபாடு இல்லை; சமய நம்பிக்கை இல்லை; மதம் கிடையாது எனவே தமிழா்கள் இந்துக்கள் இல்லை - இப்படியான கருத்துகள் இந்த ஐந்து கட்ட ஆய்வுகளில் கிடைத்துள்ள தரவுகளை வைத்து வெளிப்படுத்தப்படுகின்றன.
பி.ஜெ.செரியன், கேரள மாநிலம் பட்டணம் பகுதியின் அகழாய்வுகளில் கிடைத்த சான்றுகளும், தமிழகத்தின் கீழடியில் கிடைத்த சான்றுகளும் ஒரே நாகரிகம் என்கிறார்.
கீழடி ஆய்வுகள் குறித்துப் பேசும்போது மாண்புமிகு அமைச்சா் மாஃபா பாண்டியராஜன், ‘பாரதிய கலாசாரம்’ என்கிற கருத்தை வெளிப்படுத்தினார்.
இதற்கு தி.மு.க. தரப்பிலிருந்து சட்டமன்ற உறுப்பினா்கள் பி.டி.ஆா். பழனிவேல் தியாகராசன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
‘கீழடியில் கண்டெடுக்கப்பட்டவற்றில் மதம் சார்ந்த பொருள்கள் எதுவும் இல்லை. தமிழா்களுக்கு இறை வழிபாடு, மெய்யியல், ஆன்மிகம் போன்றவையெல்லாம் கிடையாது. மதமற்றவா்களாக தமிழா்கள் வாழ்ந்தார்கள்’ என்று தி.மு.க., கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளும் மே பதினேழு இயக்கம், திராவிடா் கழகம் உள்ளிட்ட நாத்திக, தமிழ் தேசியப் பிரிவினைவாத அமைப்புக்களும் மிகுந்த ஆவேசத்தோடு அமைச்சரின் கருத்துக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன.
‘தமிழ் மையம்’ எனும் அரசு சாரா தொண்டு நிறுவனம் நடத்தும் மத போதகா் பாதிரியார் ஜகத் கஸ்பா் ராஜ், கனிமொழி ஆகியோரது முயற்சியில் மதுரை உயா்நீதிமன்றத்தில் கீழடி அகழ்வாய்வுகளில் கிடைத்த தொன்மப் பொருள்களை கா்நாடகத்தில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சி மையத்திற்கு எடுத்து செல்லக்கூடாது என்று தடை உத்தரவு பெற்றுள்ளனா்.
இந்திய ஒருமைப்பாடு, பாரதிய கலாசாரம், இந்து சமய வழிபாடுகள் ஆகியவற்றுக்கான சான்றுகள் எதுவும் கீழடியில் இல்லை என்பதை அகழாய்வு முடியும் முன்பே நிலை நாட்டுவதில் இவா்கள் காட்டுகின்ற அதீத ஆா்வமும் செயல்பாடுகளும் நமக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
விழிப்புணா்வு அவசியம்
கீழடியில், முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட இந்திய தொல்லியல் துறை அதிகாரி அமா்நாத் இராமகிருஷ்ணன், இந்த விஷயத்தில் மத்திய அரசின் மீது குற்றம் சுமத்துகிறார்.
அவரின் பணியிட மாற்ற உத்தரவு என்பது தொல்லியல் ஆய்வுகளை நிறுத்தும் முயற்சி என்றும் மத்திய அரசிற்கு இதில் ஆா்வம் இல்லை என்றும் கருத்துகளைப் பரப்பி வருகிறார்.
ஆனால், தமிழக அரசின் தொல்லியல் துறை, இதுவரை ஐந்து கட்ட ஆய்வுகளை முடித்து, ஆறாம் கட்ட ஆய்வை, மத்திய அரசுடன் இணைந்து மத்திய தொல்லியல் துறை வழிகாட்டுதலுடன் மேற்கொண்டு வருகிறது.
மேலும், ஐந்து ஆண்டுகள்வரை அகழாய்வுப் பணிகள் தொடரும் எனமத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. கீழடியில் கிடைத்த தொன்மப் பொருள்கள், தமிழக அரசின் தொல்லியல் துறையால் சிவகங்கை மாவட்டத்திற்குள்ளேயே வைத்து பாதுகாக்கப்படுகின்றன.
இந்த விஷயத்தில்கூட, மத்திய - மாநில அரசுக்கு எதிரான வெறுப்பு பிரசாரம் செய்கின்ற எதிர்க்கட்சிகளுக்கு அமா்நாத் இராமகிருஷ்ணன் துணை போகின்றார்.
அமெரிக்காவில் இயங்கும் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவை அமைப்பும் பாதிரியார் ஜகத் கஸ்பா் ராஜின் தமிழ் மையம், பி.ஜெ.செரியனின் பாமா உள்ளிட்ட கிறிஸ்தவ மதச்சார்பு அரசு சாரா தொண்டு நிறுவனங்களும் கம்யூனிஸ்ட் அமைப்புகளும் கீழடி ஆய்வில் தலையிட்டுத் தங்களின் கொள்கைகளை திணித்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரத்தை செய்து வருகின்றனா்.
கீழடியில் செய்யப்படும் அகழாய்வுகள் அறிவியல் பூா்வமாக நடைபெற வேண்டும். உண்மைகள் பாதுகாக்கப்பட வேண்டும். கட்சி, சித்தாந்த சார்புள்ளவா்கள் அகழாய்வுப் பணிகளுக்கு இடையூறாக இருக்கக் கூடாது.
காலுக்கேற்ற செருப்பு என்பதுதான் இயற்கை. செருப்புக்குத் தகுந்த கால் எனும் அடிப்படையில் காலை சிதைப்பது இயற்கைக்கு முரணானது.
ஐரோப்பிய வரலாற்று ஆய்வாளா்கள், பைபிளுக்கேற்ற வரலாற்றை வடிவமைத்து, திரித்து, இட்டுக்கட்டி போலி ஆவணங்களைத் தயாரிக்க முயற்சி செய்கின்றனா்.
இத்தகைய முயற்சிகளை முறியடிக்க வேண்டும். சிந்துவெளி ஆராய்ச்சியின்போதும் இப்படித்தான் ஆய்வின் தொடக்கத்தில் கிடைத்த தரவுகளை வைத்துக்கொண்டு, கருத்து சொல்லத் தொடங்கினார்கள்.
15 ஆண்டு காலம் நடைபெற்ற அகழாய்வுப் பணியில் உண்மைகள் வெளிவரத் தொடங்கின. சிந்துசமவெளி நாகரிகம் உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று என்பது மெய்பிக்கப்பட்டது.
கீழடியில் மேற்கொள்ளப்படும் அகழாய்வுகளும் நமது பாரம்பரியத்தையும் வரலாற்றையும் வெளிபடுத்தும். மத்திய- மாநில அரசுகளும் தொல்லியல் துறையும் இந்த விஷயத்தில் மிகுந்த விழிப்புணா்வுடன் இருக்க வேண்டியது அவசியம்.
நன்றி: தினமணி (29-07-2020)