TNPSC Thervupettagam

அக்கறை காட்டாத நிகழ்காலமும் எதிர்காலத்தை நோக்கிய துயில்நடையும்

September 9 , 2023 490 days 262 0
  • காலநிலைக் கடிகாரம் வேகமாகச் சுழலத் தொடங்கியிருக்கிறது. இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ள மனித குல வரலாற்றில், 2023 ஜூலை மாதம், மிக அதிக சராசரி வெப்பம் நிலவிய மாதமாகப் பதிவாகியிருப்பதாகக் காலநிலை அறிவியலாளர்கள் அறிவித்துள்ளனர்.
  • இந்தப் பின்னணியில், புவி வெப்பமாதலின் யுகம் முடிந்து, ‘புவி கொதிக்கும்’ (global boiling) கால கட்டம் தொடங்கியிருப்பதாக, .நா. அவையின் பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டர்ஸ் எச்சரித்துள்ளார். புவியின் வடக்கு அரைக்கோளத்தில் வெப்பநிலை தகித்துக் கொண்டிருந்த வேளையில், மறுபுறத்தில் முன்கணித்திராத வெள்ளம் நகரங்களை மூழ்கடித்துக் கொண்டிருந்தது.

காலநிலையும் கவலையின்மையும்

  • கட்டுக்குள் அடங்காத காட்டுத் தீ, தாளமுடியாத வெப்ப அலைகள், தப்பிக்க முடியாத பெரு வெள்ளம் என மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றத்தின் விளைவுகள், உலக வரைபடத்தில் எந்தப் புள்ளியைத் தொட்டாலும், அங்கு புதிய இயல்பாக மாறிவருகின்றன.
  • அதே வேளை, அமெரிக்காவில் ஒரு நாளில் விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டது (ஜூன் 30: 2,883,595 பேர்); ஐஏஜி, ஏர் பிரான்ஸ்-கேஎல்எம் போன்ற ஐரோப்பிய விமான சேவை நிறுவனங்கள் உச்சபட்ச லாபத்தை ஈட்டின; (கச்சா) எண்ணெய், நிலக்கரி ஆகியவற்றின் உற்பத்தியில் புதிய உச்சம் எனக் காலநிலை மாற்றத்துக்குப் பங்களித்துவரும் மனிதச் செயல்பாடுகளில் முன்பைவிட தீவிரம் கூடியிருப்பது உண்மையில் வெட்கக்கேடானது.
  • புவியின் தன்மையில் இயற்கையாக ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில், புவியியல் அடிப்படையில் ஒவ்வொரு காலகட்டத்துக்கும் புவியியலாளர்கள் பெயரிட்டுவந்தனர்; கடந்த 12,000 ஆண்டுகளாக நிலவிவந்த காலகட்டத்துக்கு ஹோலோசீன்எனப் பெயரிடப் பட்டிருந்தது. ஆனால், புதைபடிவ எரிபொருள்களின் கட்டுமீறியப் பயன்பாடு உள்ளிட்ட மனிதச் செயல்பாடுகள், புவியில் காலநிலை அமைப்புகளில் தாக்கம் செலுத்தித் திரும்பிச் செல்லமுடியாத அளவுக்கு அதன் தன்மையை மாற்றியமைத்துக் கொண்டிருக்கின்றன.
  • இந்தப் பின்னணியில்தான், தற்போதைய காலகட்டத்துக்கு ஆந்த்ரோபோசீன்என்கிற பெயரைப் புவியியலாளர்கள் முன்மொழிந்துள்ளனர். இப்பெயர் அதிகாரபூர்வ பயன்பாட்டுக்கு இன்னும் வரவில்லை என்றாலும், ஆந்த்ரோபோசீன் காலகட்டத்துக்குள் நாம் ஏற்கெனவே நுழைந்து விட்டதைக் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் உணர்த்துகின்றன.

நிற்காத முதலாளித்துவச் சக்கரம்

  • 18, 19ஆம் நூற்றாண்டுகளில் ஏற்பட்ட தொழிற்புரட்சியின் விளைவால், புதைபடிவ எரிபொருள்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற் துறை முதலாளித்துவம் (Industrial capitalism) உலகின் பொருளாதார நடைமுறையாகப் பரிணமித்தது. 20ஆம் நூற்றாண்டின் மத்தியில், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடு தீவிரமடையத் தொடங்கியது.
  • முதலாளித்துவப் பொருளாதார முறையின் இயங்குவிசையான சந்தையும் நுகர்வும் (market & consumption) நவீன வாழ்க்கை முறையை வடிவமைத்தது இந்தப் பின்னணியில்தான். போக்குவரத்து, தொலைதொடர்பு ஆகிய துறைகளில் ஏற்பட்ட மேம்பாடுகள், சர்வதேச வணிகத்துக்கு மிகப் பெரிய உந்துசக்தியாக அமைந்தன. 1945 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், மக்கள்தொகை மும்மடங்கு உயர்ந்தது.
  • உலகமயமாக்கலின் விளைவால் பொருளாதார வளர்ச்சி முன்கணித்திராத அளவை எட்டியது. ஆனால், அதனால் கிடைத்த பலன்கள் சீராகப் பகிர்ந்துகொள்ளப்படவில்லை. புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டின் விளைவால், வளிமண்டலத்தில் இதுவரை சேர்ந்துள்ள கரியமில வாயுவின் அளவில் 75%, 1945க்குப் பிறகு வெளியேற்றப்பட்டவையே.
  • இதற்கு முதன்மைக் காரணமான மேற்குலகின் பெரும்பான்மை நாடுகளும் கார்ப்பரேட் பெருநிறுவனங்களும் நம்பமுடியாத அளவுக்குப் பெரும் செல்வம் ஈட்டின; அதனால் உருவான சமூகரீதியிலான ஏற்றத்தாழ்வும் சுற்றுச்சூழல் மாசுபாடும் உலகின் பெரும்பான்மை மக்களைப் பாதித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு பெருந்தொற்றுக்குப் பிந்தைய காலகட்டத்தை நாம் இன்றைக்குக் கடந்துகொண்டிருக்கிறோம். பல்வேறு நெருக்கடிகள் இன்றைக்கு உலகின் இயக்கத்தைத் தீர்மானிப்பவையாக இருந்தாலும், காலநிலை மாற்றம் அவற்றுள் முதன்மையான நெருக்கடியாகப் பரிணமித்திருக்கிறது.

சூழும் பன்நெருக்கடிகள்

  • உலகமயமாக்கல் உலகத்தை ஒரே கூரைக்குள் கொண்டுவந்தது; விநியோகச் சங்கிலியின் இடைநில்லாச் சுழற்சியில் உலகம் இயங்கிவந்தது. ஆனால், இன்றைய உலகின் அடித்தளம் எந்த அளவுக்கு எளிதில் தகர்ந்துபோகக் கூடியதாக இருக்கிறது என்பதைக் கோவிட்-19 பெருந் தொற்று உணர்த்தியது. இந்நிலையில், ஏற்கெனவே நிலவிவந்த நெருக்கடிகள், பெருந் தொற்றின் விளைவுகளுக்கு உள்ளாகி புது வடிவம் பெற்றிருக்கின்றன; புதிய நெருக்கடிகள் தோன்றியிருக்கின்றன.
  • காலநிலை மாற்றம், உயிர்ப்பன்மை இழப்பு, பெருந்தொற்றுகள், பெருகிவரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், ஸ்திரமற்ற பொருளாதார அமைப்பு, தீவிரவாதம், டிஜிட்டல்மயமாக்கலின் சமூக பாதிப்புகள், அதிகரிக்கும் சமூக-அரசியல் கொதிநிலை, மிகப் பெரிய அளவிலான கட்டாய இடப்பெயர்வுகள், போர், குடியேற்றச் சிக்கல், அணுஆயுதப் போர் பற்றிய அச்சம் என சம காலத்தை ஆக்கிரமித்திருக்கும் நெருக்கடிகளின் பட்டியல் பெரிது. இத்தகைய பன்நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் இன்றைய உலகை வரையறுத்து, அதைப் புரிந்துகொள்ளும் முயற்சியாக, ‘பாலிகிரைசிஸ்’ (Polycrisis) என்கிற கருத்தாக்கத்தை மேற்கத்திய அறிவுஜீவிகள் முன்மொழிகின்றனர்.
  • புவியின் இயற்கை-சமூக அமைப்புகளில் திரும்பிச் செல்லமுடியாத பாதிப்புகளை ஏற்படுத்தி, மனித குலத்தின் எதிர்காலத்தைப் பேரழிவுக்கு இட்டுச்செல்லும் ஒன்றிணைந்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாதிப்புகள்என பாலிகிரைசிஸ்’- கேஸ்கேட் இன்ஸ்டிடியூட் வரையறுக்கிறது.
  • பொருளாதாரம் சார்ந்ததும், பொருளாதாரத்தைத் தாண்டியதுமான பல்வேறு நெருக்கடிகளின் இந்த ஒன்றிணைவு குறித்து, எட்கர் மோரின் என்கிற பிரஞ்சுக் கோட்பாட்டியலாளர் 1990களில் முதலில் கவனப்படுத்தினார். ஐரோப்பிய ஆணையத்தின் முன்னாள் தலைவர் ழான்-கிளோடு ஜன்கே, அரசியல் சொல்லாடல்களில் பாலிகிரைசிஸ்’-ஐக் கொண்டுவர, வரலாற்றாய்வாளரான ஆடம் டூஸ் பொதுச் சமூகத்தில் இச்சொல்லைப் பரவலாக்கினார்.

புதிய நிகழ்வா?

  • பாலிகிரைசிஸ்என்கிற சொல்லை முன்வைத்து தீவிரமடைந்துவரும் உரையாடல்களின் பின்னணியில், வரலாற்றில் இதுபோன்ற பன்நெருக்கடிகள்இதற்கு முன் ஏற்பட்டதில்லையா என்கிற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. வரலாறு முழுவதுமே பன்நெருக்கடிகளால் நிறைந்திருந்த ஒன்றுதான்.
  • ஆனால், இரண்டு தசாப்தங்களுக்கு முந்தைய மனித குலத்தின் நிலைமையுடன் ஒப்பிடுகையில், இந்த நெருக்கடிகளில் பெரும்பாலானவற்றின் தீவிரத்தன்மை கூடியிருக்கிறது. அவற்றின் விளைவுகள் முன்பைவிட மேலதிகத் தாக்கம் கொண்டவையாக வெளிப்படுகின்றன என்கிற வாதம் பாலிகிரைசிஸ்’-க்கு ஆதரவாக முன்வைக்கப்படுகிறது.
  • முதலாளித்துவத்தின் உபவிளைவாக, பல்பரிமாணங்களாகவும் பின்னிப் பிணைந்துள்ள வகையிலும் உருவான இந்த நெருக்கடிகளை, முதலாளித்துவத்துடன் தொடர்பு படுத்தாமல் பூசிமெழுகும் ஒரு செயல்பாடாக பாலிகிரைசிஸ்கருத்தாக்கத்தின் முன்னெடுப்பு குறித்துக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
  • ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து ஒன்றன் மேல் ஒன்று தாக்கம்செலுத்தும் இந்த நெருக்கடிகளின் தோற்றுவாய் குறித்துப் பட்டவர்த்தனமாகப் பேசாமல், அவற்றுக்குப் புதிய பெயர்களைச் சூட்டுவதன் மூலம் தீர்வை எட்டிவிட முடியுமா, என்ன? அதற்கு முதல்படி, எதிர்காலத்தை நோக்கிய இந்தத் துயில்நடையிலிருந்து நாம் விழித்துக் கொள்வதுதான்.

தமிழ் அறிவுச் சமூகத்தின் பணி

  • காலநிலை மாற்றம் என்பது ஒரு தனித்த நிகழ்வல்ல; மனிதச் செயல்பாடுகளால் தூண்டப் பட்டு, மனிதர்கள் - மனிதர்கள் அல்லாத உயிர்கள் (non-human) ஆகியவற்றின் இருப்புக்கு ஆதாரமான அத்தனை அம்சங்களின் மீதும் இன்று தாக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் பல்வேறு நெருக்கடிகளின் கூட்டிணைவு.
  • இதுவரையிலான நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளையும் ஆழமான பரிசீலனைக்கு உள்படுத்த வேண்டுமென அது நம்மை நிர்ப்பந்திக்கிறது. அறிவியலாளர்கள் மட்டுமே பேசும் மொழியாக இருந்துவந்த காலநிலை மாற்றம் கலை, இலக்கியம், தத்துவம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளின் மொழியாகவும் இன்று பரிணமித்திருக்கிறது. தமிழ் அறிவுச் சமூகம் அந்த மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியிருக்கிறதா என்பது ஆய்வுக்குரியது.
  • காலநிலை மாற்றத்தின் மொழியைப் பேசுவதற்குத் தமிழ் மொழியைத் தயார் படுத்துவதிலிருந்து காலநிலை மாற்றம் கொண்டுவரும் தமிழ்நாட்டுக்கே உரித்தான நெருக்கடிகளுக்கான தீர்வுகளைக் கண்டடைவது வரையிலான பெரும்பணிக்குத் தமிழ் அறிவுச் சமூகம் தம்மை ஒப்புக்கொடுக்க வேண்டும். அந்தக் கட்டாயத்துக்குக் காலம் நம்மைக் கொண்டுவந்து நிறுத்தியுள்ளது.
  • புகழ்பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியல் கார்சியா மார்க்கேஸின் புகழ்பெற்ற நாவலான தனிமையின் நூறு ஆண்டுகள்இப்படி முடியும்: தனிமையின் நூறு ஆண்டுகளை அனுபவிக்க விதிக்கப் பட்ட வம்சங்களுக்குப் பூமியில் இரண்டாவது வாய்ப்பு கிடையாது.நமக்கும் அதுவே விதிக்கப் பட்டிருக்கிறது!

நன்றி: இந்து தமிழ் திசை (09 – 09 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்