TNPSC Thervupettagam

அக்டோபர் 10 உலக மனநல நாள் கவனச்சிதறல் பிரச்சினைகளும் உளவியல் படிப்புகளும்

October 10 , 2023 460 days 279 0
  • வகுப்பு, படிப்பு, தேர்வு எனப் பள்ளிப்பருவ மாணவர்களின் தினசரி வேலை ஒரு வழக்கத்துக்குப் பழக்கப்படுத்தப்படுகிறது. இதனால் தேர்வு பயம், தாழ்வு மனப்பான்மை, படிப்பில் ஈடுகொடுக்க இயலாமை போன்ற பிரச்சினைகளோடு மிக முக்கியமாக கவனச்சிதறல் பிரச்சினையும் அவர்களுக்கு ஏற்படுகிறது. இதுபோன்ற சூழலில் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் உடல்நலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை மனநலத்துக்கும் தர வேண்டியது அவசியம்.

கவனச்சிதறல் அறிகுறிகள்

  • இந்தக் காலத்தில் வளரிளம் பருவத்தில் கவனச் சிதறல்கள் ஏற்பட அதிகக் காரணங்கள் இருக்கின்றன. குழந்தைகள், மாணவர்களுக்கு ஏற்படும் கவனச்சிதறல் பிரச்சினைக்கு உளவியலுடன் மிக நெருக்கமான தொடர்பு இருக்கிறது. கவனச்சிதறல், மிகைச் செயல்பாடு பிரச்சினை ADHD (Attention Deficit Hyperactivity Disorder) என்று அழைக்கப்படுகிறது.
  • ஒரு குழந்தைக்குக் கவனச் சிதறல் உள்ளதைக் கண்டுபிடித்துவிடலாம். குழந்தைப் பருவத்திலேயே கண்டறிய சில அறிகுறிகளைக் கவனிக்க வேண்டும். குழந்தை ஓர் இடத்தில் உட்கார முடியாமல் ‘துறுதுறு’வென இருக்கும். பொதுவாக இந்தத் துறுதுறு நிலை மூன்று வயது வரை இயல்பானதுதான். என்றாலும், ஒரு சில குழந்தைகள் வளரும்போது அவர்களது ‘துறுதுறு’ தன்மை நாளடைவில் குறைந்துவிடும்.
  • ஆனால், சில குழந்தைகளுக்கு இந்தப் பிரச்சினை தொடரும். அதற்கும் சில அறிகுறிகள் இருக்கின்றன. கடையில் எந்தவொரு பொம்மையைப் பார்த்தாலும் அதில் ஆர்வம் காட்டமாட்டார்கள். வேறுவேறு பொம்மையைத் தேடிக்கொண்டே இருப்பார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பொருள்களை அல்லது விஷயங்களைத் தேடுவது இதன் அறிகுறிகள் ஆகும்.
  • ஒருவேளை இந்த அறிகுறி களையும் பெற்றோர் கவனிக்காமல் விட்டுவிட்டால், அடுத்த நிலையில் கண்டுபிடிக்கலாம். அதாவது, பள்ளியில் அடியெடுத்து வைத்ததும் அந்தப் பருவ மாணவர்களிடத்தில் கவனச்சிதறல் பிரச்சினைகளுக்கான அறிகுறிகளைத் தெளிவாகக் கண்டறியலாம். வகுப்பில் உட்கார்ந்து பாடத்தைக் கவனிக்காமல் சக மாணவர்களைத் தொந்தரவு செய்வார்கள், கற்றலில் பின்தங்கி இருப்பார்கள், வகுப்புக்கு தேவை யான புத்தகங்கள், பென்சில், ரப்பர் போன்ற பொருள்களை எடுத்து வர மறந்துவிடுவார்கள்.
  • எடுத்து வந்தாலும் வகுப்பறையிலேயே விட்டுவிட்டு வந்துவிடுவார்கள். இவையெல்லாம் கவனச்சிதறலின் அறிகுறிகள்தான். இந்தப் பிரச்சினைகளை பெற்றோர்களைவிட ஆசிரியர்களால் எளிதில் கண்டறிந்து சொல்ல முடியும். எனவே, இந்தப் பிரச்சினையுள்ள குழந்தைகளைக் கண்டறிவதில் ஆசிரியர்களின் பங்களிப்பும் தேவை.

கவனிக்க வேண்டியவை

  • இதுபோன்ற பிரச்சினைகள், அறிகுறிகள் மட்டுமல்ல, இவற்றைத் தாண்டி வேறு சில அறிகுறிகளையும் பெற்றோர் கவனிக்க வேண்டும். சக மாணவர்களின் புத்தகங்கள். நோட்டுகள் அல்லது பொருள்களை தன்னுடைய பொருளென நினைத்து எடுத்து வைத்துக்கொண்டு வீட்டுக்கு வருவது, வகுப்பு பாடங்களைக் குறித்த நேரத்துக்குள் எழுத முடியாமல் போவது போன்ற துணை அறிகுறிகளையும் கவனச்சிதறல் உள்ள மாணவர்கள் எதிர்கொள்வார்கள்.
  • முக்கியமாக இடது, வலது போன்ற திசைகளைச் சுட்டுவதில் அவர்களுக்குச் சிரமம் இருக்கும். நாள்கள், எண்களின் முன், பின் வருபன எவை என்பதில் குழப்பம் ஏற்படலாம். மாணவர்களிடத்தில் இது போன்ற அறிகுறிகள் சில மாதங்களுக்குத் தொடர்ந்தால் மனநல மருத்துவர் அல்லது ஆலோசகர்களை அணுக வேண்டியது அவசியம்.
  • இதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே மருத்துவ உதவியை நாடினால் கவனச்சிதறல் பிரச்சினையை சரி செய்துவிடலாம். அதைக் கவனிக்காமல் விட்டு விட்டால், அவர்கள் வளர்ந்தப் பிறகு கவனச் சிதறலால் ஏற்படும் மனச்சோர்வு, தாழ்வு மனப்பான்மை போன்ற வேறு சில பிரச்சினைகளையும் எதிர்கொள்ள நேரிடும்.

என்ன படிக்கலாம்

  • முன்பு மனநலம், உளவியல் தொடர்பாக பெரிய விழிப்புணர்வு கிடையாது. இதுதொடர்பாகப் படிக்கவும்கூட ஆள்கள் குறைவாகவே வருவார்கள். ஆனால், இந்தக் காலகட்டத்தில் மன நலம், உளவியல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
  • எனவே, இளங்கலை, முதுகலையில் இது தொடர்பான பாடங்களை எடுத்துப் படிக்க அதிகம் ஆர்வம் காட்டுகிறார்கள். உளவியல் துறை என்பது பரந்து விரிந்தது. எனவே, இதில் நிறைய வேலைவாய்ப்புகளும் இருக்கின்றன. உளவியல் சார்ந்த படிப்புகளை முடித்த பின்பு, பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகளில், பெரு நிறுவனங்களில் ‘மனநல ஆலோசக’ராகப் பணியாற்றலாம்.
  • விளையாட்டுத் துறை, குற்றவியல் துறை, தடயவியல் துறை, மார்க்கெட்டிங் துறையைப் போன்று வெவ்வேறு துறை சார்ந்தும் உளவியல் படிப்புகளில் நிபுணத்துவம் பெறலாம். இன்றைய காலகட்டத்தில் விளம்பரத்துறையில்கூட உளவியல் தொடர்பான வேலைவாய்ப்புகள் வந்துவிட்டன. வாடிக்கையாளர், விற்பனை சார்ந்த உளவியல் விஷயங்களைப் பற்றிய தகவல்களை நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. எனவே, இத்துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகளை ஆர்வமுள்ள மாணவர்கள் நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நன்றி: இந்து தமிழ் திசை (10 - 10 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்