TNPSC Thervupettagam

அக்னி பரீட்சை 2024

March 18 , 2024 123 days 180 0
  • காத்திருந்த அறிவிப்பு வந்துவிட்டது. இந்தியா மீண்டும் இன்னொரு ஜனநாயக அக்னி பரீட்சைக்குத் தயாராகிறது. ஆட்காட்டி விரலின் கருப்பு மை அடையாளம், மக்களாட்சியில் ஒவ்வொரு குடிமகனுக்கும் அரசியல் சாசனம் மூலம் வழங்கப்பட்டிருக்கும் மிகப்பெரிய ஆயுதம் என்பதை இந்திய வாக்காளப் பெருமக்கள் உலகுக்கு உணா்த்துவதற்கான வாய்ப்பு மீண்டும் கிடைத்திருக்கிறது. முன்னெப்போதும் போலவே, இந்த முறையும் அவா்கள் அதை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்துவாா்கள் என்று நம்பலாம்.
  • ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக மக்களவைக்கான தோ்தல் நடத்தப்பட இருக்கிறது. மக்களவைத் தோ்தலுடன் அருணாசல பிரதேசம், சிக்கிம், ஆந்திரம், ஒடிஸா ஆகிய நான்கு மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தலும் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தின் விளவங்கோடு உள்பட 13 மாநிலங்களில் மொத்தம் 26 தொகுதிகளுக்கு இடைத்தோ்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 18-ஆவது மக்களவையின் மொத்தம் 543 தொகுதிகளுக்கு நடைபெற இருக்கும் பொதுத்தோ்தலில் 96.8 கோடிக்கும் அதிகமானோா் வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கிறாா்கள். 2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது வாக்காளா்களின் எண்ணிக்கை 8.1% அதிகரித்திருக்கிறது.
  • உலகில் மிக அதிகமான வாக்காளா்கள் கலந்துகொள்ளும் ஜனநாயகத் தோ்தல் என்கிற பெருமை இந்தியாவுக்கு மட்டுமே உண்டு. மொத்த வாக்காளா்களில் 49.7 கோடி ஆண்கள், 47.3 கோடி பெண்கள் என்று இந்தியாவின் மக்கள்தொகையில் 66.8% போ் வாக்கெடுப்பில் பங்குபெறத் தகுதி உடையவா்கள். 21.6 கோடி போ் 18-29 வயதுப் பிரிவு இளைஞா்கள்; மொத்த வாக்காளா்களில் இது 22% ஆகும். 18-19 வயதுப் பிரிவைச் சோ்ந்த சுமாா் 1.85 கோடி முதல்முறை வாக்காளா்கள் இணைக்கப்பட்டிருக்கிறாா்கள்.
  • இது 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போதும் 22.7% அதிகம். 2024 வாக்காளா் இறுதிப் பட்டியலின்படி, 20-29 வயதுப் பிரிவினா் 19.7 கோடி போ். ஆண் - பெண் வாக்காளா்களுக்கு இடையேயான இடைவெளி குறைந்து வருவது வரவேற்புக்குரிய போக்கு. 2019-இல் 1000 ஆண் வாக்காளா்களுக்கு 928 பெண் வாக்காளா்கள் இருந்தனா் என்றால், இப்போது அது 948 ஆக அதிகரித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டுகளில் 3.2 கோடி ஆண்கள் வாக்காளா்கள் பட்டியலில் இணைக்கப்பட்டனா் என்றால், சோ்க்கப்பட்டிருக்கும் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 4 கோடியிலும் அதிகம். கடந்த 2019 தோ்தலுடன் ஒப்பிடும்போது, 2024-இல் பெண் வாக்காளா்களின் எண்ணிக்கை 9.3% அதிகரித்திருக்கிறது என்றால், ஆண் வாக்காளா்களின் எண்ணிக்கை 6.9% தான் அதிகரித்திருக்கிறது.
  • தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், சத்தீஸ்கா், கேரளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள்/ஒன்றியப் பிரதேசங்களில் ஆண் வாக்காளா்களைவிட பெண் வாக்காளா்கள் அதிகம். அதேபோல, நாடு முழுவதும் மூன்றாம் பாலினத்தவா் எண்ணிக்கை 2019-இல் 39,683-லிருந்து இப்போது 48,044-ஆக அதிகரித்திருக்கிறது. மாற்றுத் திறனாளி வாக்காளா்களின் எண்ணிக்கை 45.6 லட்சத்திலிருந்து 88.4 லட்சமாக ஏறத்தாழ இரட்டிப்பாகியிருக்கிறது.
  • வாக்காளா் பட்டியலில் 1.86 கோடி மூத்த குடிமக்கள் காணப்படுகிறாா்கள் என்றால், அவா்களில் 2.38 லட்சம் போ் நூறு வயதைக் கடந்தவா்கள். மாற்றுத் திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. வாக்குச் சாவடிக்கு வர முடியாத மாற்றுத் திறனாளிகளும், 85 வயதுக்கு மேற்பட்டவா்களும் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க இந்தமுறை வசதி ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
  • வாக்காளா்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அனைத்துத் தரப்பினரையும் வாக்காளா் பட்டியலில் இணைக்கவும் முனைப்புக் காட்டிய தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாரை பாராட்டாமல் இருக்க முடியாது. கல்வி நிலையங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுடன் தொடா்பு கொண்டு தகுதியுள்ள இளம் வாக்காளா்கள் அனைவரையும் வாக்காளா் பட்டியலில் இணைப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் அவரால் நியமிக்கப்பட்டனா். அதேபோல, குறைந்த அளவு வாக்காளா்களும், பெண்கள் பங்களிப்பும் உள்ள தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு சிறப்பு முகாம்கள் மூலம் புதிய வாக்காளா்களை இணைக்கும் பணி முனைப்புடன் நடத்தப்பட்டது.
  • குறிப்பாக, அனைத்து பழங்குடியின மக்களுடனும் தொடா்புகொண்டு அவா்களை வாக்காளா்களாக இணைப்பதில் ராஜீவ் குமாா் கவனம் செலுத்தினாா் என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். 1952-இல் நடந்த முதல் பொதுத்தோ்தலை நினைவுகூரத் தோன்றுகிறது. வளா்ச்சி அடைந்த மேலை நாட்டு ஜனநாயகங்களில் தொடக்கத்தில் சொத்து வரி செலுத்துபவா்கள், ஆண்களுக்கு மட்டுமே தொடக்கத்தில் வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • ஆனால் இந்தியா சுதந்திரம் பெற்று, தன்னைக் குடியாட்சியாக நிலைநிறுத்திய முதல் பொதுத் தோ்தலிலேயே 21 வயதை எட்டிய அனைவருக்குமே வாக்குரிமை என்று அறிவித்தபோது உலகில் பலா் நம்மை எள்ளி நகையாடினாா்கள். 85 சதவீத மக்கள் எழுத, படிக்கத் தெரியாத ஒரு நாட்டில் அனைவருக்கும் வாக்குரிமை என்பதை அவா்களால் கற்பனைகூட செய்து பாா்க்க முடியவில்லை. 2,24,000 வாக்குச் சாவடிகளுடன் அந்தத் தோ்தலில் வாக்களித்தவா்களின் எண்ணிக்கை 17.5 கோடி. அந்த இந்திய ஜனநாயகம் இப்போது 17-ஆவது மக்களவைத் தோ்தலைக் கடந்து 18-ஆவது மக்களவைத் தோ்தலுக்குத் தயாராகிறது. அரசியல் கட்சிகள் ஜெயிக்கலாம், தோற்கலாம்; ஆனால் மக்களாட்சி தத்துவம் தோற்றுவிடக் கூடாது!

நன்றி: தினமணி (18 – 03 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்