- “இந்தியாவில் மிகவும் தவறான ஒரு முன்னுதாரணம் உருவாக்கப்பட்டது, 1973இல். கேசவானந்த பாரதி வழக்கில், உச்ச நீதிமன்றம் அரசமைப்புச் சட்டத்தில் அடிக் கட்டுமானம் என்ற கருத்தாக்கத்தை முன்வைத்தது. நாடாளுமன்றம் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தலாம்; ஆனால், அதன் அடித்தளத்தை மாற்ற முடியாது. நீதித் துறைக்கு உரிய மரியாதையுடன் சொல்கிறேன், என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது விவாதிக்கப்பட வேண்டும்” எனக் குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது குறிப்பிட்டார்.
- கேசவானந்த பாரதி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பைக் குடியரசுத் துணைத் தலைவர் எதற்காக விமர்சிக்க வேண்டும் என்ற கேள்விக்கு விடை தெரிய வேண்டுமென்றால், முதலில் அந்தத் தீர்ப்பைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.
- ‘கோலக்நாத் எதிர் பஞ்சாப் மாநிலம்’ என்ற வழக்கில், முதல் முறையாக 11 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, ‘நாடாளுமன்றமானது சட்டத் திருத்தத்தின் மூலம் அடிப்படை உரிமைகளை ரத்து செய்யவோ அல்லது குறைக்கவோ முடியாது’ என்று 1967இல் தீர்ப்பளித்தது. கோலக்நாத் தீர்ப்பை ரத்து செய்வதற்காக, அரசமைப்பின் 24ஆவது திருத்தத்தை நாடாளுமன்றம் 1971இல் நிறைவேற்றியது.
- இந்நிலையில், கேரளத்தில் உள்ள ஒரு மடத்தின் பீடாதிபதியான கேசவானந்த பாரதி, கேரள மாநில நிலச் சீர்திருத்தச் சட்டம் 1963இன் கீழ், மடத்துக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்தும் மாநில அரசின் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 1970 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
- அவரது மனு நிலுவையில் இருந்தபோதே, அரசமைப்பின் 24ஆவது திருத்தம் (பிரிவு 13 மற்றும் 368ஐ திருத்துதல்) ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து 25, 26 மற்றும் 29ஆவது சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 29ஆவது திருத்தத்தின் மூலம் கேரள மாநில நிலச் சீர்திருத்தம் தொடர்பான இரண்டு சட்டங்கள் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்கப்பட்டன.
- கேசவானந்த பாரதி இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்தார். வேறு சிலரும்கூட அதேபோல வழக்கு தொடுத்தனர். உச்ச நீதிமன்றத்தால் அவை ஒன்றாக விசாரிக்கப்பட்டன. இந்த வழக்கில் முதலில் மனுதாக்கல் செய்ததால் கேசவானந்த பாரதி தலைமை மனுதாரர் ஆனார்.
- இந்தச் சட்டத் திருத்தங்கள் செல்லுமா என்பதைப் பற்றிய வழக்கு, முதலில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசமைப்புச் சட்ட அமர்வின் முன் தாக்கல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 1972இல், ஐந்து நீதிபதிகள் கொண்ட அந்த அமர்வு, அந்த வழக்கை 13 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு அனுப்பியது. அந்த வழக்கில் முதன்மையான வாதங்களை முன்வைத்த மூத்த வழக்கறிஞர் பல்கிவாலா, “இந்தியாவில் உள்ள நாடாளுமன்றம் உள்ளார்ந்த மற்றும் மறைமுகமான வரம்புகளின் கீழ் இயங்குகிறது, ‘திருத்தம்’ என்பதன் ‘நன்கு முடிவுசெய்யப்பட்ட’ அர்த்தம், அது அரசமைப்பு அடிப்படைகளை மாற்றுவதையோ அல்லது அழிப்பதையோ உள்ளடக்கவில்லை.
- குறிப்பாக, மக்கள் தங்களுக்குத் தாங்களே அளித்துக்கொண்ட அரசமைப்புச் சட்டத்தில் வரையறுக்கப் பட்ட அடிப்படை மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரங்களை நாடாளுமன்றத்தால் குறைக்கவோ அழிக்கவோ முடியாது” என வாதிட்டார். மூத்த வழக்கறிஞர் எச்.எம்.சீர்வை, அட்டர்னி ஜெனரல் நிரேன் டே உள்ளிட்டோர் அரசுத் தரப்பில் ஆஜராகி வாதிட்டனர்.
- அந்த வழக்கைச் சுமார் 6 மாதங்களுக்கு, அந்த அமர்வு தொடர்ச்சியாக விசாரித்தது. தலைமை நீதிபதி எஸ்.எம்.சிக்ரி உள்ளிட்ட 13 நீதிபதிகளில் 7 நீதிபதிகளின் ஆதரவுபெற்ற பெரும்பான்மைத் தீர்ப்பு, அரசமைப்புச் சட்டத்தின் அடிக் கட்டுமானம் என்ற கருத்தாக்கத்தை உறுதிப்படுத்தியது. அந்தத் தீர்ப்பில், “அரசமைப்பின் ஒவ்வொரு விதியும் இன்றியமையாதது” என்று கற்றறிந்த அட்டர்னி ஜெனரல் கூறினார்.
- இல்லாவிட்டால், அரசமைப்புச் சட்டத்தில் அவை இடம்பெற்றிருக்காது என்றார். அது உண்மைதான். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு கூறும் ஒரே விதமான மதிப்பைப் பெற்றிருக்கவில்லை. அரசமைப்பின் எந்தவொரு அம்சத்தையும் திருத்தம் செய்யலாம்; ஆனால், அதன் அடித்தளம், அடிப்படைக் கட்டுமானத்தில் எந்தவொரு மாற்றமும் செய்யக் கூடாது” என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
- “(1) அரசமைப்பின் மேலாதிக்கம்; (2) குடியரசு மற்றும் ஜனநாயக ஆட்சி வடிவம்; (3) அரசமைப்பின் மதச்சார்பற்ற தன்மை; (4) சட்டமியற்றும் அவைகள், நிறைவேற்றுகிற நிர்வாகத் துறை மற்றும் நீதித் துறை ஆகியவற்றுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு; (5) அரசமைப்பின் கூட்டாட்சித் தன்மை” ஆகிய ஐந்து அம்சங்களை அரசமைப்புச் சட்டத்தின் அடிக் கட்டுமானத்தின் அங்கங்களாக அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டது (தீர்ப்பின் பத்தி 316).
- அத்துடன், “தனி நபர்களின் கண்ணியம், சுதந்திரம் ஆகிய அடித்தளத்தின்மீது இந்தக் கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது. இதுவே உச்சபட்ச முக்கியத்துவம் கொண்டது. இவற்றை எந்தவொரு சட்டத் திருத்தத்தாலும் அழிக்க முடியாது” (பத்தி 317) எனவும் உச்ச நீதிமன்றம் உறுதியாகத் தனது தீர்ப்பில் கூறியது.
- 1973 ஏப்ரல் 24 அன்று வழங்கப்பட்ட அந்தத் தீர்ப்புக்குப் பிறகான இந்த 50 ஆண்டுகளில், பல்வேறு தீர்ப்புகளின் வழியாக அடிக் கட்டுமானத்தின் அம்சங்களாக மேலும் சிலவற்றை உச்ச நீதிமன்றம் சேர்த்துள்ளது என்றபோதிலும், ‘அடிக் கட்டுமானம்’ என்ற கருத்தாக்கத்தை அது ஒருபோதும் நிராகரிக்க முனைந்ததில்லை. சுமார் 700 பக்கங்கள் கொண்ட அந்தத் தீர்ப்பை விமர்சிக்கிறவர்கள் எல்லாரும் அதை முழுமையாகப் படித்துவிட்டுத்தான் பேசுகிறார்கள் எனக் கருத முடியாது.
- இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், இந்தியக் குடிமக்களுக்கு அடிப்படை உரிமைகளை வகுத்தளித்து, அவற்றைக் காப்பதற்கான நிரந்தரப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தார். அரசமைப்புச் சட்டம் உத்தரவாதப்படுத்தும் உரிமைகளின் பாதுகாவலனாக நீதித் துறையையே அவர் பார்த்தார். அதற்காக உருவாக்கப்பட்டதுதான் ‘நீதிமன்றச் சீராய்வு’ (Judicial Review) என்னும் ஏற்பாடாகும்.
- ‘நாடாளுமன்றம் பெரிதா? நீதித் துறை பெரிதா?’என இன்று கேள்வி எழுப்பி, நீதித் துறைக்கு எதிராக மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டும் நமது ஆட்சியாளர்கள், உண்மையில் மக்களின் சார்பாக நின்று அப்படிப் பேசவில்லை. மாறாக, நமது அரசமைப்புச் சட்டத்தில் பாதுகாக்கப் பட்டிருக்கும் மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கே அவர்கள் ‘நாடாளுமன்றத்தின் மேன்மை’ என்னும் முகமூடியை அணிகிறார்கள்.
- இந்தியாவில் நெருக்கடிநிலையை முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அறிவிப்பதற்கு முன்னர், அவர் நீதித் துறையின்மீது தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்டது இங்கே நினைவு கூரத் தக்கது. கேசவானந்த பாரதி தீர்ப்பு வழங்கப்பட்டதற்குப் பிறகு, அதுவரை இருந்துவந்த நடைமுறைக்கு மாறாக, மூத்த நீதிபதிகள் மூன்று பேரைப் புறக்கணித்துவிட்டு, நீதிபதி ஏ.என்.ராயைத் தலைமை நீதிபதியாக அவர் நியமித்தார். அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியின் ஆட்சேபத்தைக்கூட அவர் மதிக்கவில்லை. அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்த மூன்று நீதிபதிகளும் பதவி விலகினர்.
- ஆட்சியாளர்களால் நீதித் துறை தாக்குதலுக்கு உள்ளாகிறது என்றால், ஆட்சிமுறையில் நெருக்கடி முற்றுகிறது என்று பொருள். நீதித் துறைமீது நமது குடியரசுத் துணைத் தலைவரும், மத்திய சட்ட அமைச்சரும் முன்வைத்துவரும் விமர்சனங்கள் நெருக்கடிநிலை காலத்துக்கு முந்தைய சூழலை நமக்கு நினைவுபடுத்துகின்றன.
- கேசவானந்த பாரதி தீர்ப்பு வழங்கப்பட்டு 50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசியல் அதே இடத்துக்கு வந்து சேர்ந்திருப்பது போல் தெரிகிறது. அப்போதுபோலவே இப்போதும் அந்தத் தீர்ப்பு இந்திய ஜனநாயக அமைப்பைப் பாதுகாக்கத் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
- ஏப்ரல் 24: கேசவானந்த பாரதி வழக்குத் தீர்ப்பின் பொன்விழா நாள்
நன்றி: தி இந்து (24 – 04 – 2023)