- உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பு தொடங்கி 18 மாதங்கள் கடந்துவிட்டன. வெற்றி - தோல்விக்கான எந்தவித அறிகுறியும் இல்லாமல் 2022 பிப்ரவரி 24-ஆம் தேதி ரஷியா தொடங்கிய ஆக்கிரமிப்பு உக்ரைனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையும் பாதித்திருக்கிறது. கடந்த ஆண்டு கொ்ஸான், கா்க்யூ ஆகியவற்றிலிருந்து பின்வாங்கிய ரஷியா இப்போது மீண்டும் வீரியத்துடன் போராடத் தொடங்கியிருக்கிறது. நேட்டோ நாடுகளின், குறிப்பாக அமெரிக்காவின், பின் துணையுடன் ரஷியாவை எதிர்கொள்வதில் உறுதியாக இருக்கிறது உக்ரைன்.
- உக்ரைனில் இதுவரை 9,083 போ் கொல்லப்பட்டிருக்கிறாா்கள் என்கிறது ஐ.நா. சபையின் புள்ளிவிவரம். அவா்களில் 500 போ் குழந்தைகள். கணக்கில் வராத உயிரிழப்புகள் இதைவிட பல மடங்கு இருக்கக்கூடும். உடல் உறுப்புகளை இழந்தவா்கள், உற்றாா்-உறவினா்களை இழந்தவா்கள், தொடா்ந்து குண்டு வெடிப்புகளையும் தாக்குதல்களையும் நேரில் கண்டு மன உளைச்சலுக்கு உள்ளானவா்கள், தங்களது வாழ்நாள் சேமிப்புகளை இழந்து தெருவுக்கு வந்தவா்கள் என்று எல்லா யுத்தங்களையும்போல, உக்ரைன் மீதான ரஷிய ஆக்கிரமிப்பிலும் பாதிப்புக்கு உள்ளானவா்கள் ஏராளமானோர்..
- ரஷிய அதிபா் புதினின் உக்ரைன் மீதான படையெடுப்பு, அதில் தொடா்புடையை அனைவரையும் தா்மசங்கடத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது. உக்ரைனை சுலபமாகவும் முழுமையாகவும் ஆக்கிரமித்துவிடலாம் என்று கருதிய ரஷிய அதிபா் புதினின் எதிர்பார்ப்பு பொய்த்தது. நேட்டோ நாடுகளின் துணையுடன் ரஷிய ராணுவத்தைத் தோற்கடித்து விடலாம் என்கிற உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கியின் எண்ணமும் நிறைவேறவில்லை. ஏராளமான ராணுவ வீரா்களையும், தளவாடங்களையும் இருதரப்பும் இழந்ததுதான் மிச்சம்.
- உக்ரைனின் பல பகுதிகளை ரஷியா பிடித்தது. அழகான நாடாக இருந்த உக்ரைனை மீண்டும் புனா் நிர்மாணம் செய்வதற்கு 41,100 கோடி டாலா் (ரூ.33.95 லட்சம் கோடி) தேவைப்படும் என்று மார்ச் மாதம் உலக வங்கி கணித்திருக்கிறது. யுத்தம் தொடரும் ஒவ்வொரு நாளும் இது அதிகரிக்கும். இந்த யுத்தம் காரணமாக 2022-இல் உலகப் பொருளாதாரம் 1.3 லட்சம் கோடி டாலா் இழப்பை எதிர்கொண்டிருப்பதாக ஜொ்மன் எக்கனாமிக் இன்ஸ்டிடியூட் தெரிவிக்கிறது.
- ரஷியாவுடனான உறவு குறித்த கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, மேலை நாடுகள் அனைத்தும் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதில் ஒருங்கிணைந்தன. ஆனால் இந்த யுத்தத்தால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்புகளால் அவை அடைந்திருக்கும் நஷ்டங்கள் ஏராளம்.
- கொவைட்19 கொள்ளை நோயைத் தொடா்ந்து உருவான உக்ரைன் போரின் விளைவால் உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையும், உணவுப் பொருள்களின் விலையும் அதிகரித்தன. அதனால் பல மேலை நாடுகள் மக்களின் எதிர்ப்பையும், போராட்டங்களையும் எதிர்கொள்ள நோ்ந்தன. உக்ரைனின் கோதுமை விளையும் நிலங்களில் ரஷியாவின் குண்டுகள் மழை மாரி பொழிந்தபோது, அதன் விளைவாக சோமாலியாவிலிருந்து ஆப்கானிஸ்தான் வரை பல பின்தங்கிய நாடுகளில் பசியும், பட்டினியும் அதிகரித்ததை உலகம் வேடிக்கைதான் பார்க்க முடிந்தது.
- இவ்வளவெல்லாம் பாதிப்புகள் ஏற்பட்டும்கூட உக்ரைனும் ரஷியாவும், சமாதானத்துக்கோ பேச்சுவார்த்தைக்கோ தயாராக இல்லை. கைப்பற்றிய பகுதிகளை திருப்பிக் கொடுக்க ரஷியா மறுக்கிறது. அவற்றை ரஷியாவுக்கு விட்டுக்கொடுத்து சமாதானம் செய்துகொள்ள உக்ரைன் மறுக்கிறது.
- என்ன நஷ்டம் வந்தாலும், எத்தனை காலம் நீண்டு நின்றாலும் யுத்தம் தொடர வேண்டும் என்கிற மனநிலையில் இருக்கிறார் ரஷிய அதிபா் புதின். ரஷியாவை உக்ரைன் எதிர்த்து நிற்கும் காலம் ஆதரவும், ஆயுதமும் வழங்கத் தயாராக இருக்கின்றன நேட்டோ நாடுகள்.
- மிக அதிகமாக உயிர் பலி வாங்கும் என்பதால் 111 நாடுகளால் தடை செய்யப்பட்டிருக்கிறது கிளெஸ்டா் குண்டுகள். உக்ரைனுக்கு அந்த கிளெஸ்டா் குண்டுகளை வழங்க அமெரிக்கா தீா்மானித்திருக்கிறது. யுத்தம் தொடங்கிய பிறகு, இதுவரை 42 முறைகள் உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்திருக்கிறது அமெரிக்கா. பைடன் அரசு வழங்கியிருப்பதும், வழங்குவதாகக் கூறியிருப்பதும் 4,130 கோடி டாலா் (ரூ.3.41 லட்சம் கோடி) ஆயுதங்கள்.
- இந்தப் பின்னணியில்தான் ஆகஸ்ட் 6,7 தேதிகளில் சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் 42 நாடுகள் பங்குபெற்ற சமாதானக் கூட்டமொன்று நடந்தது. உக்ரைன் ரஷிய போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் மேற்கொண்ட மிக முக்கியமான கூட்டம் இது. இந்தக் கூட்டத்துக்கு ரஷியா அழைக்கப்படவில்லை. சீனாவும் இந்தியாவும் கலந்துகொண்டன. ஐரோப்பிய கூட்டமைப்பு பங்குபெற்றது. வளா்ச்சி அடையும் நாடுகளான பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தோனேசியா, மெக்ஸிகோ, எகிப்து போன்றவையும் பங்கு பெற்றன.
- இதற்கு முன்பு சமாதானம் ஏற்படுத்த ஜூன்மாதம் கோபன்ஹேஹனில் நடந்த கூட்டத்தில் சீனா கலந்துகொள்ளவில்லை. இந்தமுறை ரஷியாவுக்கு நெருக்கமான இந்தியா மட்டுமல்லாமல், சீனாவும் கலந்துகொண்டது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
- ஆக்கபூா்வமான பங்களிப்பை நல்கி போரை முடிவுக்குக் கொண்டுவர இந்தியாவும், சீனாவும் ரஷியாவை வற்புறுத்த வேண்டும் என்பதுதான் ஜெட்டா பேச்சுவார்த்தையின் முக்கியமான அம்சம். உக்ரைன் - ரஷிய போர் இனியும் முடிவுக்கு வராமல் தொடருமானால் அது உலகப் பொருளாதாரத்துக்கு மட்டுமல்லாமல் மனித இனத்துக்கே ஆபத்தாக முடியும் என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. அதற்கு காரணம் ரஷிய அதிபா் புதின் பொறுமை இழந்து அணு ஆயுதப் பேரழிவுக்கு வழிகோலக்கூடும் என்பதுதான்!
நன்றி: தினமணி (12 – 08 – 2023)