அச்சத்தைக் கடந்தால் அற்புதமாகும் வாழ்க்கை
- வரலாற்றில் மறைக்கப்பட்ட பெயர்கள் பெரும்பாலும் பெண்களின் பெயர்களாகவே இருக்கின்றன என எழுத்தாளர் வர்ஜினியா வுல்ஃப் குறிப்பிட்டு இருப்பார். இன்றும்கூட அறிவுசார் அடையாளங்களுக்காகவும் சம உரிமைகளுக்காகவும் பெண்கள் பெரும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.
- அந்த வகையில் சமூகத்துடனான அடையாளப் போராட்டத்தில் மட்டுமல்லாமல், மனம்சார்ந்த போராட்டத்திலும் வெற்றிபெற்று 21ஆம் நூற்றாண்டின் தவிர்க்க முடியாத கலைஞராகக் கொண்டாடப்படுகிறார் 95 வயதான யாயோய் குசாமா.
- சமகால நவீன ஓவியர்களில் முக்கிய ஆளுமையான யாயோய் குசாமாவின் ஓவியங்கள் தனித்துவமானவை; வழக்கமான விதிகளை உடைப்பவை. பிரபஞ்சத்தைப் பேசுபவை.
கற்பனைகளுக்கு உயிர் தந்தவர்:
- யாயோய் குசாமா மார்ச் 22, 1929இல் ஜப்பானின் நாகானோவில் பிறந்தவர். சிறுவயது முதலே ஓவியங்கள் வரைவதில் குசாமாவுக்கு ஆர்வம் இருந்தது. எனினும், பெற்றோர் அவரை ஓவியக் கலையில் முழுமையாக ஈடுபடுத்த விரும்பவில்லை. குசாமாவின் பதின்பருவத்தில் இரண்டம் உலகப் போரால் ஜப்பான் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அமெரிக்காவின் அணுகுண்டுத் தாக்குதல் ஜப்பான் மக்களை நிலைகுலையச் செய்தது. குசாமாவும் அதிலிருந்து தப்பவில்லை. இருப்பினும் பெரும் மன அழுத்தத்துக்கு இடையே ஓவியப் பயிற்சியைத் தொடர்ந்தார். குசாமாவின் ஓவிய ஈடுபாட்டைக் கண்டு பெற்றோரும் அவருக்குத் துணையாக நின்றனர். அதன்பின் நுண்கலைக் கல்லூரியில் இணைந்து ஓவியப் பயிற்சியை மேம்படுத்திக்கொண்டார்.
- 1950இல் குசாமாவின் முதல் ஓவியக் கண்காட்சி நடைபெற்றது. புள்ளிகளை முதன்மையாகக் கொண்ட போல்கா ஓவியங்களையே இவர் வரைவதால் பலருக்கு அந்த ஓவியங்கள் புரியாத புதிராக இருக்கின்றன. ஓவியக் கலை மட்டுமல்லாது, சிலை வடித்தல், ஃபேஷன் துறை, திரைத்துறை, கவிதை எனக் கால்பதித்த அனைத்துத் துறைகளிலும் குசாமா வெற்றி கண்டார். குறிப்பாக, இவரது தனித்துவமான சிற்பங்கள் உலக அளவில் பிரபலம் அடைந்தன. இவரது படைப்புகள் பெண்ணுரிமையையும் பேசியதால் கலை உலகில் அவர் கூர்ந்து கவனிக்கப்பட்டார்.
கலை மூலமான மீட்சி:
- குடும்பச் சூழல், போர் காரணமாகச் சிறுவயது முதலே யாயோய் குசாமாவின் மனநலம் மோசமடைந்தது. மனநலம் சார்ந்த பிரச்சினைகள், பதற்றம், மனப்பிரமைகளுக்கு எதிராக வாழ்நாள் முழுவதும் போராடினார். ஜப்பானில் நிலவிய பெண்கள் மீதான அடக்குமுறைகளும் பிற்போக்குத்தனங்களும் குசாமாவைத் தற்கொலை வரை தூண்டின. எனினும், தனது போரட்டக் குணத்தைக் கைவிடாத குசாமா ஒவ்வொரு நாளையும் உயிர்ப்புடனே கடந்தார்.
- வான்கா, சில்வியா பிளாத், பிகாசோ போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள், தாங்கள் எதிர்கொண்ட மனநலப் பாதிப்புகளிலிருந்து விடுபடக் கலையை இறுகப்பிடித்துக்கொண்டனர். மனதுக்குள் நடந்த போராட்டங்களைக் கலையாக வெளிப்படுத்தினர். யாயோய் குசாமாவின் வாழ்விலும் இதுவே நடந்தது.
- மன நலப் பிரச்சினைகளிலிருந்து விடுபட ஓவியத்தைக் கைக்கொண்டார் குசாமா. வாழ்வில் பல்வேறு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த இவர் தனது வாழ்நாளில் கிட்டதட்ட 41 வருடங்களை மனநலக் காப்பகத்தில் கழித்தார்.
குசாமாவின் புள்ளிகள்:
- குசாமாவின் ஓவியங்கள் / சிற்பங்களில் பொதுவாகக் காணப்படுபவை புள்ளிகள். சிறுவயதில் மனப் பிரமையால் பாதிக்கப்பட்டிருந்த குசாமா அதிகம் கண்ட காட்சிகளில் புள்ளிகளும் ஒன்று. தன் எண்ண ஓட்டத்துடன் நீண்ட காலமாகப் பயணித்துவரும் புள்ளிகளை ஒவ்வொரு ஓவியத்திலும் பதிவுசெய்திருக்கிறார் குசாமா.
- தனக்கும் புள்ளிகளுக்கும் இடையேயான உறவு பற்றி குசாமா, “பிரபஞ்சத்தின் கோடிக்கணக்கான நட்சத்திரங் களுக்கிடையே நாம் வாழும் பூமியும் ஒரு புள்ளிதான். இந்தப் புள்ளிகளே நமது பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையை நமக்கு அடையாளப்படுத்துகின்றன” என்கிறார்.
- தன்னை ஒவ்வொரு நாளும் அச்சுறுத்திய எண்ணங்களைக் கலையாக மாற்றிக்கொண்ட குசாமா சொல்லும் செய்தி ஒன்றுதான்: “பயத்தை உடையுங்கள்; இந்த வாழ்க்கை அற்புதங்கள் நிறைந்தது!”
நன்றி: இந்து தமிழ் திசை (19 – 01 – 2025)