TNPSC Thervupettagam

அச்சமூட்டும் கள்ளச்சாராய மரணங்கள்

May 18 , 2023 415 days 593 0
  • மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தியதில் 20-க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தியவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களை ஒழிக்க இன்னும் தீவிர நடவடிக்கைகள் தேவை என்பதை இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.
  • மதுவின் கொடுமையால் அடித்தட்டு மக்கள் சொல்லொணா துயரத்திற்கு ஆட்பட்டிருக்கிறார்கள். திடகாத்திரமாக இருக்கும் ஒருவரின் உடலைக் கொஞ்சம் கொஞ்சமாக கொன்று தின்கிறது மது.
  • அறுவடை காலங்களில் நெல் மூட்டைகளை லாகவமாக தன்னுடைய தோளில் தூக்கிக் கொண்டு எளிதாக கடந்து செல்லும் ஒருவரைப் பார்த்து அந்த ஊரே வியக்கும். அப்படி ஆரோக்கியத்துடனும், திடகாத்திரத்துடனும் இருந்த ஒருவர் குடிக்கு அடிமையாகி உடலே கெட்டுப்போய், மதுவின் கொடுமையால் துயருற்றால், அவரின் வாழ்க்கையை எண்ணுகிற போது வேதனைதான் மிகும்.
  • ஏனென்றால், அக்காலகட்டங்களில் கிராமத்தில் மது குடிப்பவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் இருப்பார்கள். அவர்களோடு நாம் பேசினால், "குடிகாரப் பயலோடு உனக்கென்ன பேச்சு' என்று பெரியவர்கள் திட்டுவார்கள். அவர்களோடு சேருவதற்கு மற்றவர்கள் அஞ்சுவார்கள். ஆனால், இப்போது மது குடிப்பதென்பது சர்வசாதாரணமாகி விட்டது. மது என்பது குளிர்பானம் போல, குடிதண்ணீர் போல பெருக்கெடுத்து ஓடுகிறது.
  • மதுவிலக்கு இருந்த சில ஆண்டுகளில் கள்ளச்சாராய சாவுகள் பெருகின. அதனால், கண்பார்வை பறிபோனவர்கள் பற்றிய துயரச் செய்திகளை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். இப்போது கள்ளச்சாராய கொடுமையினால் பல உயிர்கள் பறிபோய்க் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்து அரசு இரும்புக்கரம் கொண்டு அதை ஒடுக்க வேண்டும்.
  • ஒரு காலகட்டத்தில் கள்ளச்சாராய சாவுகள் அதிகரிக்கத் தொடங்கிய காரணத்தினால்தான் மதுவிலக்கு தளர்த்தப்பட்டதாக சொல்லப்பட்டது. தற்போது சீமைச்சரக்கு என்ற பெயரில் வெளிநாட்டு விலை உயர்ந்த மதுபானங்களெல்லாம் ஒயின் ஷாப்புகளில் கிடைக்கின்றன. ஒயின் ஷாப்புகளில் வரத்து அதிகரிக்கத் தொடங்கிய பிறகு, மது விற்பனையும், குடிப்பழக்கமும் சமூகத்தில் பல மாறுதல்களை ஏற்படுத்தியிருக்கிறன.
  • "மதுவிலக்குக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல, மதுவிலக்கு கொண்டு வந்தால் கள்ளச்சாராயம் பெருகும் என்பதாலேயே மதுக்கடைகளை மூடாமல் வைத்திருக்கிறோம்' என்று அரசு சொன்னாலும் எல்லா இடங்களிலும் மதுக்கடைகள் இருக்கின்ற இந்த நேரத்தில் கூட கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுவது மிகுந்த வேதனையளிக்கும் நிகழ்வாகும்.
  • இன்னொரு பக்கம் மனமகிழ் மன்றம், ரிக்ரியேஷன் கிளப் என்றெல்லாம் புதுப்புது வழிகளில் மது வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகத்தில் மது விற்பனை செய்ய நான்கு வகைகளில் உரிமம் வழங்கப்படுகிறது. ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கு எப்.எல்.1, டாஸ்மாக் நிறுவன கடைகளுக்கு எப்.எல்2, மனமகிழ் மன்றம் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு எப்.எல்3, வெளிநாட்டு வகை மது விற்பனைக்கு எப்எல்5.
  • இவற்றில் எப்.எல் 3 உரிமம் பெற்ற மனமகிழ் மன்றங்களில் (கிளப்) அதன் உறுப்பினர்கள், அவர்களது நண்பர்கள் மட்டுமே மது அருந்த முடியும். மேலும் மனமகிழ் மன்றம் அல்லது கிளப்புக்கு 180மி.லி கொண்ட குவார்ட்டர் பாட்டில்கள் அதிகபட்சமாக 450 மட்டுமே டாஸ்மாக் நிறுவனங்கள் விநியோகிக்க வேண்டும் என்பது சட்டம். ஆனால், இப்போது விதிகளெல்லாம் தளர்த்தப்பட்டு விட்டன.
  • தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் மதுக்கடைகளை அகற்றச் சொல்கிறதுநீதிமன்றம். கோயில் அருகே, பள்ளிகள் இருக்கும் இடங்களில் உள்ள மதுக்கடைகளை மூடச்சொல்லி மக்கள் போராடுகிறார்கள். ஆனால் அங்கு புதிய மனமகிழ் மன்றம் எப்எல்3 உரிமச் சட்டத்தோடு ஒன்று முளைத்து விடுகிறது.
  • கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு நல்ல சாராயம் விற்பது என்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. கள்ளச்சாராயம் காய்ச்சுவது என்பது சட்டப்படி குற்றம். குற்றங்களை ஒடுக்கி மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் அரசு என்கிற ஒன்றை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், குற்றம் பெருக்கெடுத்து ஓடுவதன் மூலம் அரசு அதைக் கட்டுப்படுத்த தவறி விட்டது என்கிற குற்றச்சாட்டு எழுகிறதல்லவா?
  • கொலை, கொள்ளை, வன்முறை, ஊழல், கையூட்டு போன்ற மற்ற குற்றங்களை ஒடுக்க அரசு எப்படி சட்டத்தின் மூலம் மட்டுமே முயலுகிறதோ, அதைப்போல கள்ளச்சாராயத் தொழிலையும் சட்டத்தின் அடிப்படையில் அணுக வேண்டும். அளவுக்கு மீறிய குடிப்பழக்கத்தினால் கல்லீரல் இழைநார் வளர்ச்சி மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டில் பாதிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். ஆகவே, சாராயம் என்பதை அறவே ஒழிப்பதுதான், சாராய உயிரிழப்பிற்கும், குடிப்பழக்கத்தினால் ஏற்படும் இன்னபிற சமுதாய தீமைகளுக்கும் நிரந்தரமான தீர்வாக இருக்குமே தவிர, அரசே மதுவிற்பதன் மூலம் அது நடக்காது.
  • வேளாண்துறை, தொழில்துறை, சேவைத்துறை ஆகிய மூன்று பிரிவுகளுமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ மின்சாரத்தை நம்பியே இயங்கும் இன்றைய உலகில் மின்சார உற்பத்தியில் ஒப்புயர்வில்லாத அளவிற்கு பின்தங்கி உள்ள தமிழ்நாடு வருமானத்துக்கு முதல் பெரும் வழியாக மதுவிற்பனையையே நம்பி இருக்கிறது. அதை இழுத்து மூடிவிட்டால், ஏற்கெனவே கடனில் தள்ளாடும் அரசு படுகுப்புற கீழே விழுந்து விடும்.
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து சிகிச்சை பலனின்றி உயிரிழப்புகள் நடந்து விட்டது. விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தியதில், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கள்ளச்சாராயம், மெத்தனால், எத்தனால், வார்னிஷ் உள்ளிட்ட பல்வேறு போதையூட்டும் பொருள்களை அருந்தி ஏற்படும் உயிரிழப்புகளே அதிகம்.
  • எக்கியார்குப்பமும், சித்தாமூரும் வேறு வேறு மாவட்டங்கள். இரண்டுக்கும் இடையிலான தொலைவு சுமார் 60 கிலோ மீட்டராகும். ஆக, இரு இடங்களுக்கும் ஒரே தரப்பினர் மது விற்பனை செய்கிறார்கள் என்றால், கள்ளச்சாராய விற்பனை மாவட்டம் விட்டு மாவட்டம் வேரூன்றி இருபதுதான் காரணம்.
  • ஒரு நாளிலோ, ஓரிரு மாதங்களிலோ இந்த மாவட்டம் விட்டு மாவட்டம் கள்ளச்சாராய விற்பனை உருவாகி இருக்காது. பல ஆண்டுகளாக பல்கிப் பெருகி இருக்கிறது என்பதே உண்மையாகும்.
  • தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டு சுமார் இருநூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் இருந்து பல்லாயிரக்கணக்கான லிட்டர் அளவுக்கு சாராயம் கைப்பற்றப்பட்டிருக்கிறது.
  • உயிரிழப்பு நிகழ்ந்த விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டுமன்றி தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்கிற குற்றச்சாட்டு எழுகிறது. தமிழ்நாட்டில் மது அருந்துபவர்களில் ஆண்டுக்கு ஏறக்குறைய இரண்டு லட்சம் பேர் உயிரிழக்கின்றனர்.
  • இதில் குடிப்பகங்களில் கணக்கில் காட்டாமல் விற்பனை செய்யப்படும் மது, சட்டத்துக்கு எதிராக விற்கப்படும் கள்ளச்சாராயம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், மதுவால் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இதற்கு காரணமான அனைத்து மது விற்பனைக்கும் தடை விதிக்க வேண்டும் என்பதே எல்லோருடைய கருத்தாகவும் இருக்கிறது.
  • கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய மதுவிலக்கு நடைமுறைப்பிரிவு, கள்ளச்சாராயத்தை விற்பவர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் நிலையில், எப்படி இவற்றை ஒழிக்க முடியும்? மதுவிலக்கு நடைமுறை பிரிவுக்கு, காவல்துறையில் மாறுதல் பெறுவதற்கு கடும் போட்டியே நடக்கிறது என்றால், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கான போட்டியிலா இது போய் முடியும்?
  • மதுவிலக்கு நடைமுறைப் பிரிவுககு கடமை உணர்வும், மதுவிலக்கை அமல்படுத்துவதில் தீராத அக்கறையும் கொண்டு செயல்படும் அதிகாரிகளை நியமிக்க வேண்டும். அதுபோன்று செயல்படுகிற போது உள்ளபடியே ஒரு மாற்றத்தை நாம் ஏற்படுத்தலாம்.
  • 1991-ஆம் ஆண்டில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, தமிழகத்தில் ஏதேனும் ஒரு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடிக்கும் பட்சத்தில், அதற்கு அந்தப் பகுதியின் காவல்நிலைய அதிகாரியும், கிராம நிர்வாக அதிகாரியும் பொறுப்பேற்க வேண்டும் என்று அதிரடியாக அறிவித்தார். கள்ளச்சாராயம் பெருமளவில் கட்டுப்படுத்தப் பட்டது.
  • கரோனா காலகட்டத்தில் கூட கள்ளச்சாராய கும்பல் கட்டுப்பாட்டில் இருந்தது என்பதை நாம் மறந்து விட முடியாது. ஆனால், தற்போது விற்பனை அதிகரித்திருக்கிறது என்பது சமீபத்தில் நடந்த ஆய்வின் மூலமாக தெரிய வருகிறது. ஏற்கெனவே, பணம் இல்லாமல் திண்டாடி வரும் குடிமகன்களுக்கு குறைந்தவிலையில் கள்ளச்சாராயம் கிடைப்பது ஆபத்தை உணராமல் அவர்களின் ஆவலைத் தூண்டி விடுகிறது.
  • குடும்பத்தலைவனை குடிப்பழகத்திற்கு அடிமையாக்கி விட்டு, பின்னர் அவர்களின் இறப்பிற்குப் பிறகு மனைவிக்கு விதவை உதவித்தொகை வழங்குவது, கண்களை விற்ற பிறகு சித்திரம் வாங்குவது போன்றது. அதனால் என்ன பயன்? மது விற்பனையின் மூலமாக அரசுக்கு வரும் வருவாய் கறை படிந்தது என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும்.

நன்றி: தினமணி (18 – 05 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்