TNPSC Thervupettagam

அச்சம் தரும் காலநிலை மாற்றம்: அழியப்போகிறதா உலகம்?

August 2 , 2021 1095 days 579 0
  • உலகம் அழிந்தால் எப்படி இருக்கும் எனும் கதைக்களத்தை அடிப்படையாக வைத்து '2012' எனும் பெயர் கொண்ட திரைப்படம் கடந்த 2009ஆம் ஆண்டு வெளிவந்தது. அன்றைக்கு உலக அழிவு குறித்த பல கருத்துகளுக்கு தெளிவான விளக்கங்கள் வெளிவந்தாலும் அதனைத் தொடர்ந்து உலக அழிவு குறித்த பார்வைகள் ஒரு விவாதத்தை தொடங்கி வைத்தன. 
  • இத்தகைய உலக அழிவு குறித்த பேசுபொருள்கள் ஒருபக்கம் அச்சம் தருவதாக இருந்தாலும் உலகம் முழுவதும் நடந்து வரும் இயற்கை பேரிடர்கள் மீதான பார்வைக்கு முக்கியத்துவம் தருகின்றன.
  • அளவுக்கு அதிகமாக நுகரப்பட்டு வரும் இயற்கை வளங்கள் காலநிலை மாற்றம் எனும் பெரும் சிக்கலுக்கு வழியமைக்கும் பாதைகளாக மாறிப்போயுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அதிகம் உச்சரிக்கப்பட்டு வரும் காலநிலை மாற்றம் எனும் சொற்றொடர் மிக...மிக...மிக...மிக அவசரமாக கவனிக்கப்பட வேண்டியதாக கண்முன் நிற்கிறது.

ஏன்?

  • உலகம் முழுவதும் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் இயற்கை பேரிடர்கள் சூழலியல் ஆர்வலர்களை கதிகலங்கச் செய்துள்ளன. காலநிலை மாற்ற அவசரத்தின் எச்சரிக்கை மணியின் கடைசி ஒலியை கண்டுகொள்ளாத அரசுகளால் மனித சமூகம் சந்திக்க உள்ள பேராபத்துகள் அரங்கேறி வருகின்றன.
  • கடந்த ஜூலை 17ஆம் தேதி மேற்கு ஜெர்மனி வரலாறு காணாத மழைப்பொழிவை சந்தித்தது. இந்த மழைப்பொழிவால் இதுவரை 200 பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 750க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 150க்கும் மேற்பட்டவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • அதீத மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மேற்கு ஜெர்மனியில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயரச் செய்யப்பட்டுள்ளனர். 
  • இரண்டு மாதங்களில் பெய்ய வேண்டிய மழை அளவானது இரண்டே நாள்களில் கொட்டித் தீர்த்தது யாரும் எதிர்ப்பார்த்திடாத பேரிடர் தான் என்றாலும் இது மீள முடியாத சிக்கலை ஜெர்மனிக்கு தந்துள்ளது.
  • ஜெர்மனி எனும் ஒரு நாட்டிற்கு மட்டுமான பிரச்னை எப்படி உலகளாவிய எச்சரிக்கையாக மாறும் என நாம் கேள்வி எழுப்பலாம். ஆனால் அந்தக் கேள்விக்கான பதில் நீளமானது. ஜெர்மனி தவிர்த்து பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளும் வெள்ள பாதிப்பை சந்தித்துள்ளன. அதேபோல் சீனாவில் பெய்த மழைப்பொழிவால் ஏற்பட்ட வெள்ளம் அந்நாட்டை காலநிலை மாற்ற பாதிப்பின் பக்கம் திருப்பியுள்ளது. 
  • பெல்ஜிய நகரமான பெபின்ஸ்டரில் நேற்று வரை இருந்த வீடுகள் இன்று இடிபாடுகளாக காட்சி தருகின்றன. மோசமான வானிலை காரணமாக பெல்ஜியத்தின் தெற்குப் பகுதியில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.  பிரஸ்ஸல்ஸ் மற்றும் ஆண்ட்வெர்பிற்குப் பிறகு பெல்ஜியத்தின் மூன்றாவது பெரிய நகரமாக அறியப்படும் லீஜினில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அந்நகர மேயர் வலியுறுத்தியுள்ளார்.
  • வீடுகளை விட்டு வெளியேற முடியாதவர்கள் தங்கள் குடியிருப்பு கட்டிடங்களின் மேல் தளங்களுக்குச் செல்ல வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். வாசன்பெர்க் அணை உடைந்ததால் அப்பகுதியில் வசிக்கும் சுமார் 700 பேர் வெளியேற்றப்படட்டுள்ளனர். இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 168 ஆகஉயர்ந்துள்ளது. ஜெர்மனியில் 141 பேரும், பெல்ஜியத்தில் 27 பேரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • நெதர்லாந்தும் இதே போன்ற பாதிப்புகளை சந்தித்துள்ளது.
  • ஐரோப்பாவில் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 100க்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். ஐரோப்பாவில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வரும் காலநிலை மாற்றத்தால்இதுபோன்ற அதீத கனமழை, அதன் காரணமாக  ஏற்படும் பெருவெள்ளம் போன்றவை குறித்த எச்சரிக்கைகளை  காலநிலை ஆராய்ச்சியாளர்கள் எழுப்பி வருகின்றனர். இந்தநிலையில் பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என ஜெர்மனியின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வெஞ்சா சுல்சே தெரிவித்துள்ளது மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டியது.
  • இவற்றுக்கு மத்தியில் அமெரிக்க அதிபருடனான சந்திப்பு பயணத்தில் இருந்த ஜெர்மனி  அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்த கருத்து இனி உலகம் முழுவதும் உள்ள தலைவர்கள் பேச உள்ள கருத்து என்பதை நீங்கள் குறித்து வைத்துக் கொள்ளலாம்.
  • "இந்தப் பேரழிவு மிகுந்த அதிர்ச்சியைத் தந்துள்ளது. காலநிலை மாற்றத்தைத் தடுக்க நாம் செய்தவை போதுமானவை அல்ல. புவி வெப்பநிலை 2 டிகிரிக்கும் கீழ் இருக்க நாம் உடனடியாகப் பணியாற்ற வேண்டும். குறைந்தபட்சம் 1.5 டிகிரி அளவை நாம் இலக்காக வைத்து செயல்படுவது தீவிரமாக்கப்பட வேண்டும். தற்போதைய நமது நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 
  • மெர்கலின் இந்தக் கருத்து சாதாரணமாகக் கடக்கக்கூடியது அல்ல. செப்டம்பரில் நடக்க உள்ள ஜெர்மனி அதிபர் தேர்தலில் இந்தக் கருத்து எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக காலநிலை மாற்ற நடவடிக்கைகள் பேசப்படுவது நல்ல தொடக்கம் எனினும் அவை வழக்கமான கண்துடைப்பு நாடகங்களாக மாறாமல் இருக்க வேண்டும். 
  • எதிர்வரும் காலத்தில் ஒவ்வொரு நாடும் தங்களது காலநிலை மாற்ற இலக்கை தேர்தலின் முக்கிய வாக்குறுதியாக முன்வைக்கும் அளவிற்கு இதன் சிக்கல் தீவிரமடைந்துள்ளது. தற்போது உடனடி மீட்பு நடவடிக்கைக்காக ஜெர்மனி அரசு சுமார் 40 கோடி யூரோக்களை (470 மில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்துள்ளது.
  • காலநிலை மாற்ற சிக்கல்கள் வெள்ளங்களால் மட்டும் அளவிடப்படுகிறதா என நம்மால் கூற முடியாது. அவை நிலப்பகுதிகளின் வானிலை நிலைகளுக்கேற்ப செயலாற்றுகின்றன. வெள்ள பாதிப்புகளை வாசித்து தத்தளித்துக் கொண்டிருக்கும் நமக்கு சுட்டெரிக்கும் செய்திகளை அமெரிக்காவும், ரஷியாவும் தருகின்றன.
  • கடந்த வருடம் காட்டுத்தீயால் ஆஸ்திரேலியா சந்தித்த சிக்கலை நாம் மறந்திருக்க மாட்டோம். அதன் சுவடு மறைவதற்குள் அமெரிக்காவின் ஓரேகான் மாகாணம் அதனினும் அதிக பாதிப்பை சந்தித்துவிட்டது. அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் இதுவரை இல்லாத அளவில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஓரேகான் மாகாணத்தில் மட்டும் வெயில் பாதிப்புக்கு இதுவரை 95 பேர் உயிரிழந்திருப்பது தெரியவந்துள்ளது.
  • போா்ட்லாண்டில் 116 டிகிரி, சியாட்டிலில் 108 டிகிரி அளவிலும் ஐடஹோ மாகாணம் மற்றும் மான்டானா மாகாணத்தின் கிழக்குப் பகுதிகளில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் வெயில் பதிவானதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
  • ஓரேகான் மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ குடியிருப்புகளை எரித்து நாசம் செய்துள்ளது. வெயிலைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் பச்சை மரங்கள் பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன. அதீத கரும்புகையால் அப்பகுதியில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு சைபீரியாவில் ஏற்கெனவே 1.5 மீ ஹெக்டேர் நிலப்பரப்பு காட்டுத்தீயால் அழிந்துள்ள நிலையில் ரஷ்யாவின் யாகுடியா பகுதியில் கரும்புகை மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவு வறண்ட வானிலையை அப்பகுதியில் உண்டாக்கியுள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான காட்டுத்தீ ரஷ்யாவின் பல பகுதிகளில் ஏற்பட்டு வந்தாலும் தற்போதைய நிலையில் அவை முக்கிய கவனம் பெற்றுள்ளன.
  • சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கடந்த வாரம் பெய்த அதீத கனமழையால் தலைநகர் ஜெங்ஜோ கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது, கடந்த 1,000 ஆண்டுகளில் மிக அதிகபட்ச மழை அளவாகும். இப்பகுதியில் மூன்றே நாள்களில் மட்டும் 640 மி.மீ. மழை பெய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகரில் அதிகரித்துவரும் வெள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். 
  • கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நகரின் பிரதான போக்குவரத்து சேவைகளான மெட்ரோ ரயில்களில் வெள்ளநீர் புகுந்துள்ளது.
  • வழக்கமான மழை அளவைக் காட்டிலும் 5 செ.மீ. முதல் 25 செ.மீ. வரை மழை பெய்துள்ளதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
  • இந்த மழை-வெள்ளம் காரணமாக 1,000 கோடி டாலா் (சுமாா் ரூ.75,000 கோடி) பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • வெள்ளத்தால் நகரின் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்த பயணிகள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். ரயில் பெட்டிகளுக்குள் மார்பளவு தண்ணீரில் தத்தளித்த அவர்கள் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டனர். எனினும் இதில் 12 பேர் பலியானது சோகமானது.
  • சரி இவை உலகின் எதோ ஒரு மூலையில் நடக்கும் வழக்கமான வானிலை பேரிடர்கள் தான் என நாம் கருதினால் கடந்த காலங்களில் இந்தியா சந்தித்த பேரிடர் குறித்த புள்ளிவிவரங்கள் நமக்கு சற்றே அச்சம் தரலாம்.
  • தற்போதைய தென்மேற்கு பருவகாலத்தில் தெலங்கானா, உத்தரகண்ட், கர்நாடகம், கோவா மற்றும் மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளத்தை சந்தித்துள்ளன. 
  • மழை என்றால் வெள்ளம் கட்டாயம் எனும் காலத்தை நோக்கி செய்திகள் நகர்ந்து வருகிறது. மகாராஷ்டிரத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுவரை 207 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். ராய்காட் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 53 பேர் பலியாகியுள்ளனர் என்பது அம்மாநிலத்தின் தற்போதைய பேசுபொருள்.

இவை ஏன் கவனிக்கப்பட வேண்டும்?

  • கடந்த சில வருடங்களாக வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருமாறுவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த 2016-ஆம் ஆண்டு மட்டும் 4 புயல்கள் ஏற்பட்டன. இது  2017-ல் மூன்றாக குறைந்திருந்தாலும் 2018-ஆம் ஆண்டு 7ஆக உயர்ந்தது. அது 2019-ஆம் ஆண்டு 8 ஆகப் பதிவானது.
  • இவற்றில் மூன்றில் ஒரு புயல் அதிக சேதாரத்தை ஏற்படுத்தியது. 2016ஆம் ஆண்டு ஒரு புயலும், 2017ஆம் ஆண்டு 2 புயல்களும் 2018 மற்றும் 2019அம ஆண்டுகளில் தலா 6 புயல்களும் மோசமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
  • அதீத கனமழையானது 2016-ஆம் ஆண்டு 1,864ஆகவும், 2018-ஆம் ஆண்டு 2,181 ஆகவும் உயர்ந்தது. 2019-ஆம் ஆண்டு இதன் எண்ணிக்கை 3,056 ஆக உயர்ந்துள்ளது. மிகமிக அதிக கனமழையானது 2016-ஆம் ஆண்டு 226 ஆகவும், 2017-ஆம் ஆண்டு 261 ஆகவும், 2018-ஆம் ஆண்டு 321 ஆக அதிகரித்து, 2019-ஆம் ஆண்டு 554 எனும் அச்சம் தரும் எண்ணிக்கையை அடைந்துள்ளது.
  • புவி வெப்பமயமாதல், காலநிலை மாறுபாடு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 20 ஆண்டுகளில் புயல் மற்றும் கனமழைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உலகம் சந்திக்கத் துவங்கிவிட்டது. சந்தைகளின் தேவைக்கான உற்பத்திக்கு இதுவரை கையாளப்பட்டு வந்த உற்பத்தி முறைகள் புவியின் மீதான சுரண்டலுக்கு காரணமாகியுள்ளது. 
  • எதிர்காலம் குறித்த ஓட்டத்துக்கு மத்தியில் நாம் நேசிக்கும் நமது குழந்தைகள், உறவுகள், சுற்றம் என அனைவருக்குமான ஆபத்துகள் வெளிவரத் துவங்கி விட்டன என்றுதான் கூற வேண்டும். அரசுகள் அக்கறையுடன் பார்க்க வேண்டிய தலையாய சிக்கல் காலநிலை மாற்றம். நாம் விரும்பாவிட்டாலும் நம்மைக் காத்துக் கொள்ள காலநிலை அவசரத்தை உணர்ந்து அதிகரித்துவரும் உலக வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் அளவிற்குக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம்.
  • அரசுகள் இதனை உணர்ந்து கொள்வது தான் சிக்கலுக்கான தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
  • வேடிக்கை எல்லா நேரங்களிலும் இன்பத்தைத் தருவதில்லை.

நன்றி: தினமணி (02 – 08 – 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்