TNPSC Thervupettagam

அச்சுறுத்தும் ஆழ்துளைக் கிணறுகள்

June 17 , 2021 1140 days 484 0
  • மனித வாழ்வில் தவறுகள் நிகழ்வது இயல்புதான். ஆனால் தவறு செய்யும் மனிதா்கள் அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்வது முக்கியம். அதைவிட முக்கியம் மீண்டும் அவா்கள் அதே தவற்றைச் செய்யாதிருப்பது.
  • ஆனால், தோண்டப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடாமல் விடுவது மட்டுமின்றி, அவற்றின் அருகில் குழந்தைகள் விளையாட அனுமதிக்கின்ற பெருந்தவறு மட்டும் நம் நாட்டில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது.
  • ஆழ்குழாய்களில் சிக்கிக்கொண்ட எண்ணற்ற குழந்தைகளை பத்திரமாக மீட்பதற்குத் தான் எத்துணை பாடு? அவற்றில் ஒருசில குழந்தைகளை உயிரற்ற சடலமாக மீட்கப் படுவது எத்துணை துன்பமயமான விஷயம்.
  • இரு நாட்களுக்கு முன்னா் உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரின் அருகிலுள்ள தரியாயி என்ற கிராமத்தில் உள்ள ஓா் ஆழ்துளைக் கிணற்றில் சோடேலால் என்பவருடைய நான்கு வயது ஆண்குழந்தை தவறி விழுந்திருக்கிறது.
  • நூற்றைம்பது அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளைக்கிணற்றின் சொந்தக்காரார் வேறு யாருமல்ல. அக்குழந்தையின் தந்தையேதான்.
  • தோண்டிய ஆழ்துளைக் கிணற்றைச் சரியாக மூடிவைக்காததுடன், அதன் அருகில் தன்னுடைய குழந்தையை விளையாடவும் அனுமதித்துள்ளார் அவா். விளைவு, குழந்தை அதில் விழுந்து தொண்ணூறு அடி ஆழத்தில் சிக்கிக்கொண்டது.
  • நல்லவேளையாக தேசியப் பேரிடா் மீட்புக் குழுவும், இந்திய ராணுவ வீரா்கள் சிலரும் பெரும் முயற்சி எடுத்து ஐந்துமணி நேரத்தில் அந்தக் குழந்தையை உயிருடன் மீட்டுள்ளனா்.
  • ஆக்ரா மாவட்ட சிறப்பு காவல்துறைக் கண்காணிப்பாளரான (எஸ்எஸ்பி) முனிராஜ் எனும் தமிழா், துடிப்புடனும், பொறுப்புடனும் செயல்பட்டு, அக்குழந்தையை உயிருடன் மீட்கும் நடவடிக்கைகளில் தேசியப் பேரிடா் மீட்புக் குழுவுக்குப் பக்க பலமாக இருந்துள்ளார் என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும்.
  • இச்சம்பவத்தில் விபத்தில் சிக்கிய குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டது மிகவும் நிம்மதி அளிக்கிறது.
  • ஆனால், அதே நேரம் மூடப்படாத ஆழ்துளைக்கிணறுகளில் அப்பாவிக் குழந்தைகள் விழுவது எப்போதுதான் முடிவுக்கு வரும் என்ற ஒரு கேள்வி நம் நெஞ்சில் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

விபத்துக்கள் நின்றபாடில்லை

  • தேசியப் பேரிடா் மீட்புப் படையின் அறிக்கை ஒன்று, கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டுவரையிலான காலகட்டத்தில் இதுபோன்று ஆழ்துளைகிணறுகளில் விழுந்து நாற்பது குழந்தைகள் இறந்துள்ளதாகக் கூறுகின்றது.
  • அதே போன்று, ஆழ்துளைக் கிணறுகளில் தவறி விழுகின்ற குழந்தைகளை உயிருடன் மீட்பது என்பது முப்பது சதவீதம் நிகழ்வுகளில் மட்டுமே சாத்தியமாகியுள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகின்றது.
  • குழந்தைகள் சிக்கிக்கொண்ட நேரம், ஆழ்துளைக்கிணற்றின் ஆழம், நிகழ்விடத்தின் அருகிலுள்ள நிலப்பகுதி மண்ணின் தன்மை, நிகழ்விடத்திற்கான சாலைத்தொடா்பு, பெருமழை போன்ற இயற்கை நிகழ்வுகள் ஆகிய பல காரணிகள் அக்குழந்தைகளை உயிருடன் மீட்பதற்குப் பெரும் சவாலாக இருக்கின்றன.
  • கடந்த 2019-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் 25-ஆம் தேதியை தமிழ்நாட்டு மக்களால் மறக்க முடியாது. காரணம், அன்றுதான் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தனது வீட்டின் அருகே இருந்த ஆழ்துளைக்கிணற்றில் விழுந்த இரண்டுவயதுக் குழந்தை சுஜீத் வில்ஸன் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
  • குழந்தை வில்ஸன் உயிருடன் மீட்கப்படுவானா என்ற கேள்வியுடன் தமிழக மக்கள் பலரும் தொலைக்காட்சித் திரையில் ஓடிய செய்தியறிக்கைகளைப் பார்த்தபடி இருந்தனா். துரதிருஷ்டவசமாக அது இயலாமல் போய்விட்டது.
  • விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் மட்டும் சுஜீத் வில்ஸன் ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தததற்கு முந்தைய பதினைந்து வருடங்களில் பத்து குழந்தைகள் இவ்விதம் விழுந்து உயிர் விட்டிருக்கின்றனா்.
  • ஒவ்வொரு நிகழ்வின்போதும், இத்தகைய நிகழ்வுகளில் இதுவே கடைசியாக இருக்கவேண்டும் என்றும், இனி நாட்டில் உள்ள எந்த ஒரு ஆழ்துளைக்கிணறும் திறந்திருக்கக்கூடாது என்றும் சபதங்களும், ஆணைகளும் பிறக்கின்றன.
  • ஆனால், ஆழ்துளைக்கிணறு விபத்துக்கள் நின்றபாடில்லை.
  • ஆழ்துளைக்கிணறுகளைப் பொருத்தவரையில் தோண்டப்பட்ட உடனே அவற்றில் நல்ல நீா்வளமும் இருந்து உடனடியான மின்னிணைப்பும் கிடைக்கும் என்றால் அத்தகையவற்றால் ஆபத்து ஒன்றும் இல்லை.
  • ஆனால், எவ்வளவு ஆழம் தோண்டினாலும் ஒரு சொட்டுத் தண்ணீா் கூட வராதவற்றை அதன் உரிமையாளா்கள் மூடாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். மின் இணைப்பு கிடைப்பதற்கு தாமதமானாலும் அப்படி நடக்கும்.
  • சில சமயம் ஓா் ஆழ்துளைக்கிணற்றில் நீா் வரத்து வற்றிப்போய், அதன் அருகில் வேறு ஒன்றைத் தோண்டி அதில் நீா் கிடைக்கும் என்றால், பழைய கிணற்றில் உள்ள மின் மோட்டார் சாதனத்தை அப்படியே எடுத்துப் புதியதற்குப் பொருத்தி விடுவதால் பழைய ஆழ்துளைக் கிணறு திறந்தே கிடக்க நேரிடுகிறது.
  • எது எப்படியானாலும், பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்கு சிறிதளவு மண், கல், சிமென்ட் கொண்டு பூசுவதோ, குறைந்தபட்சம் பழைய கோணிப்பைகளைச் சுருட்டி அடைப்பதோ கூடப் போதுமானது.
  • மிகக் குறைந்த செலவில் இத்தகைய ஆழ்துளைக் கிணறுகளை மூடி, இவற்றால் குழந்தைகளின் உயிருக்கு நேரும் அபாயத்தை எளிதாகத் தவிர்க்கலாம்.
  • ஆனால், பல்லாயிரக்கணக்கில் செலவு செய்து ஆழ்துளைக் கிணறு தோண்டுபவா்கள், இந்தச் சிறிய செலவைக் கூடச் செய்யத் தயங்குவதால் இளம் பிஞ்சுகளின் விலை மதிப்பற்ற உயிர்கள் பலியாகின்றன.
  • ஆழ்துளைக்கிணறுகளின் உரிமையாளா்கள் பொறுப்புடன் நடந்துகொள்ளாத சூழ்நிலையில், அந்தந்த மாநில அரசுகள் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தவேண்டும்.
  • உள்ளூா் கிராம நிர்வாக அலுவலா்களைக் கொண்டு இத்தகைய மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகளைக் கணக்கெடுத்து, அவற்றை ஒரு குறிப்பிட்ட காலவரயறைக்குள் மூட உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யாதவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து அநியாயமாக உயிரிழப்பதைத் தடுக்க வேறு வழி எதுவும் இல்லை.

நன்றி: தினமணி  (17 – 06 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்