TNPSC Thervupettagam

அச்சுறுத்தும் ஐஏஎஸ் பணித் திருத்தங்கள்: மாநிலங்கள் எதிர்ப்பது ஏன்?

January 30 , 2022 918 days 443 0
  • மக்களுக்கான நலத் திட்டங்களை ஆட்சியாளர்களாகும் அரசியல் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - வகுத்தாலும், அவற்றுக்கான கொள்கையை  வடிவமைப்பது, செயல்படுத்துவது என முக்கிய பணிகளைச்  செயற்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பது இந்திய ஆட்சிப் பணியிலுள்ள அலுவலர்களே என்றால் மிகையில்லை.
  • இந்திரன் மாறினாலும் இந்திராணி மாறுவதில்லை என்பதைப் போல எந்தவோர் அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அரசதிகாரத்தை இந்த அலுவலர்களே செயல்படுத்துகின்றனர். சில பல அரசுகளின் வெற்றி தோல்விகளுக்கும்கூட காரணங்களாகின்றனர்.
  • ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அலுவலர் ஒருவர் முறையாகப் பணியாற்றாத பட்சத்தில், ஆட்சியாளர்கள் மட்டுமின்றி மக்களும் பெரிதும் பாதிக்கப்படுவர். எந்த நாளிலும், எந்த நேரத்திலும் மக்களுக்கான பணியில் தயங்காமல் ஈடுபடுபவர்களாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இருக்க வேண்டும்  என எதிர்பார்க்கப்படுகின்றனர்; இருக்கின்றனர்.
  • இந்த நிலையில், கடந்த ஜனவரி 12 ஆம் தேதி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை சார்பில் நினைவூட்டல் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டது. அந்தக் கடிதத்தில், இந்திய ஆட்சிப் பணி 1954-ன் விதி 6-இல் திருத்தம் செய்யும் மசோதா குறித்து மாநில அரசுகளின் கருத்துகள் ஜனவரி 25ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

என்ன திருத்தம்?

  • தற்போதுள்ளபடி - இந்திய ஆட்சிப் பணி 1954, விதி எண் 6-ன்படி, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறையால் பிரித்து அனுப்பப்படுவர். தொடர்ந்து, அவர்கள் அந்த மாநில அதிகாரிகளாகிவிடுவார்கள். தமிழ்நாடு கேடர், ஆந்திர கேடர் என்பார்கள். அதன் பின், மத்திய அரசின் பணிகளுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் தேவைப்படும்பட்சத்தில், மாநில அரசுகள் மற்றும் குறிப்பிட்ட ஐஏஎஸ் அதிகாரி விருப்பப்பட்டால் மட்டுமே அவர்களை, அவர்களில் ஒருவரை மத்திய அரசின் பணிகளுக்காகத் திரும்ப எடுத்துக்கொள்ள முடியும்.
  • இந்த நிலையில், புதிதாகக் கொண்டுவரப்படும் சட்டத் திருத்தத்தில், மாநில அரசோ அல்லது குறிப்பிட்ட அதிகாரியின் விருப்பமோ இல்லாமலும்கூட ஐஏஎஸ் அதிகாரிகளை மத்தியப் பணிகளுக்குத் திரும்ப அழைத்துக் கொள்வதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விளக்கம்

  • புதிய சட்டத் திருத்தம் குறித்து மத்திய அரசுத் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், 'மத்திய அரசுப் பணிகளுக்கு தேவையான அதிகாரிகளை மாநில அரசுகள் அனுப்பி ஒத்துழைப்பு தருவதில்லை. இந்திய ஆட்சிப் பணியாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 40 சதவீதம் பேர் மத்திய பணிக்கும், 60 சதவீதம் பேர் மாநில பணிக்கும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2014ஆம் ஆண்டில் 25 சதவீதம் அதிகாரிகள் மத்திய பணியில் இருந்த நிலையில், தற்போது வெறும் 18 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். இதனால், மத்திய அரசுகளின் பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.
  • த்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தரவுகளின்படி, பிகாரில் உள்ள 248 ஐஏஎஸ் அதிகாரிகளில் 32 பேர் மட்டுமே மத்திய பணியில் உள்ளனர். ஒடிசாவில் 180-இல் 25 பேர், கேரளத்தில் 124-இல் 20 பேர், தமிழகத்தில் 322 இல் 20 பேர், உத்தர ப் பிரதேசத்தில் 536-இல் 32 பேர் மத்திய பணியில் உள்ளனர்.

மாநில அரசுகள் எதிர்ப்பது ஏன்?

  • புதிய திட்டப்படி, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் மத்திய அரசால் தன் பணிக்கு அழைத்துக் கொள்ள முடியும் (வேண்டியவர்களை அழைத்து அலங்கரிக்கலாம், வேண்டாதவர்களை அழைத்து இம்சிக்கலாம்!).
  • மத்திய அரசு என்பது திட்டங்களை மட்டுமே அறிமுகப்படுத்தும். ஆனால், மாநில அரசுகள்தான் மத்திய அரசின் திட்டங்களையும், மாநில அரசின் திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டங்களை செயல்படுத்துவதில், தலைமைச் செயலாளர்கள் முதல் மாவட்ட ஆட்சியர்கள் வரை ஒவ்வொருவரையும் மாநில அரசுகள் சார்ந்துள்ளன.
  • இந்த திட்டங்களை மக்கள் மத்தியில் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் அதிகாரிகளையோ அல்லது கரோனா போன்ற பெருந்தொற்று காலங்களில் அரசுடன் இணைந்து மக்களைப் பாதுகாக்கக் களப்பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளையோ திடீரென மாநில அரசு பணியிலிருந்து விடுவித்து மத்திய அரசு பணிகளுக்கு மாற்றி உத்தரவிட்டால், மொத்த பணிகளும் தேங்கும் சூழல் நிலவும். இதனால், மக்கள்தான் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
  • மேலும், சில நேரங்களில் மத்திய அரசிற்கு ஒத்துழைப்பு அளிக்காமல் மாநில அரசுகளுடன் இணக்கமாக இருக்கும் அதிகாரிகளை பழிவாங்கும் நோக்கில் மத்திய அரசு மாற்றுவதற்கு இந்த சட்டத் திருத்தம் உதவும் வகையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பி வருகின்றனர்.
  • உதாரணமாக, மேற்கு வங்கத்தில் யாஸ் புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி வந்தபோது, ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்காத அப்போதைய தலைமைச் செயலாளர் அலபன் பந்தோபாத்யாய உடனடியாக மத்திய அரசு பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த முதல்வர் மம்தா பானர்ஜி, அலபனைத் தனது முதன்மை ஆலோசகராக நியமனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
  • மேலும், புதிய சட்டத் திருத்தமானது மாநில அரசுகளின் உரிமைகள் பறிக்கும் செயல் எனவும், கூட்டாட்சி முறை நசுக்கப்படும் செயலாக இருப்பதாகவும் தெரிவித்து தமிழகம், மேற்கு வங்கம், கேரளம், தெலங்கானா, ராஜஸ்தான், பஞ்சாப், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மாநில முதல்வர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
  • பாஜக ஆளும் மாநிலங்கள் மற்றும் கூட்டணி வைத்துள்ள மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் யாரும் இந்த சட்டத் திருத்தத்திற்கு இதுவரை எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.
  • இது தவிர, மத்திய அரசுகளுக்கு எதிரான மாநிலங்களில் உள்ள அரசுகள் வகுக்கும் திட்டங்களைச் செயல்படுத்தினாலோ, ஆட்சியாளர்களுடன் நெருக்கமாக பழகினாலோ இடமாற்றத்திற்கு உண்டாகக் கூடும் என்ற அச்சம், நிச்சயமின்மை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மத்தியில் நிலவ நேரிடும். இதனால், அதிகாரிகள் கடும் மன அழுத்தத்திற்குள்ளாக நேரிடும்.
  • மாநில அரசுகளின் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்படுமா அல்லது தாக்கல் செய்யப்படாமலேயே கைவிடப்படுமா என்பது ஓரிரு நாள்களில் தெரியவரும்.

நன்றி: தினமணி (30 – 01 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்