- ‘எதை உற்பத்தி செய்வது? எப்படி உற்பத்தி செய்வது? யாருக்காக உற்பத்தி செய்வது?’ பொருளாதாரத்துக்கு ஆணிவேராக விளங்கும் இந்த மூன்று கேள்விகளில் இருந்து பிறப்பவையே கோட்பாடுகள். இந்தக் கோட்பாடுகளை முற்றிலுமாக அலசி ஆராய்ந்து, ‘யாருக்கு எது சொந்தம்? யார் என்ன செய்கிறார்கள்? யாருக்கு என்ன கிடைக்கிறது?’ என்று அதற்கு மாற்றான மூன்று கேள்விகளை உருவாக்கி, சமூகத்தைச் சிந்திக்கத் தூண்டியவர்; இக்கேள்விகளுக்கு விடை தேடும்படி தன் மாணவர்களை ஊக்குவித்தவர் கிறிஸ்டோபர் தாமஸ் குரியன் என்கிற சி.டி.குரியன்.
- அப்படி விடைகளைத் தேடிய அவரது மாணவர்கள் பலர் இன்றைக்கு அரசியல் தலைவர்களாகவும் பொருளாதார நிபுணர்களாகவும் வளர்ந்து நாட்டுக்குப் பங்களிப்பு செய்துவருகின்றனர். அவர்களது பொருளியல் ஆசானாகிய சி.டி.குரியன் கடந்த 23.7.2024 அன்று தனது 93ஆம் வயதில் மறைந்தார்.
பொருளாதாரச் சுதந்திரம்:
- நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தபோது பள்ளிப் பருவத்தைக் கடக்கும் நிலையை குரியன் எட்டியிருந்தார். நம் நாட்டுக்குக் கிடைத்திருப்பது அரசியல் சுதந்திரமே என்கிற புரிதல் அந்த இளம் வயதிலேயே குரியனுக்கு இருந்திருக்கிறது. சுதந்திரப் போராட்ட வீரர்களின் அடுத்த கனவு, பொருளாதார சுதந்திரம் என்பதை நேருவின் சுதந்திர தின உரையின் வழியாக குரியன் உணர்ந்தார்.
- இதனால், பொருளாதாரம் படிக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்திருக்கிறார். பொருளாதாரச் சுதந்திரம் என்பதில், வறுமையில் இருந்து விடுதலை அல்லது வறுமையைப் போக்குவது என்பதைத் தனது லட்சியமாகக் கொள்கிறார். சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் சேர்ந்து, முதுகலைப் பொருளாதாரம் கற்றுத் தேறினார் குரியன்.
- 1958ஆம் ஆண்டு அமெரிக்க நாட்டின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வுக்காகச் சேர்ந்தார். அந்தப் பல்கலைக்கழகம், நோபல் பரிசு பெற்ற கென்னத் ஏரோ போன்ற நவசெவ்வியல் பொருளியல் அறிஞர்கள் நிரம்பிய, பொருளாதாரப் பள்ளியைக் கொண்டதாகத் திகழ்ந்தது. கோட்பாடுகளின் போதாமை
- உபரி அளிப்பை (surplus supply) நவசெவ்வியல் கோட்பாடுகள் பூஜ்ஜியமாகக் கருதின. எந்த ஒரு பொருளும் தேவைக்கு மேல் உபரியாக இருந்தால், அதன் மதிப்பு பூஜ்ஜியம் என நவசெவ்வியல் கோட்பாடுகள் வரையறுத்தன. இதனை குரியனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதேபோல் உழைப்பின் பாத்திரத்தைக் கணக்கிடுவதில் நவசெவ்வியல், செவ்வியல் கோட்பாடுகள் பற்றாக்குறையாக இருப்பதாக முடிவுக்கு வந்தார்.
- குறைந்தபட்ச வாழ்வாதாரக் கூலி, இருத்தலுக்கான கூலி, உழைப்பின் சந்தை விலை போன்ற உழைப்பு சார்ந்த பல்வேறு கோட்பாடுகளை அவர் ஏற்கவில்லை. உபரி உழைப்பு என்பதை இந்தியப் பாணியில் எப்படி அணுகுவது என்பதே அவரது முனைவர் பட்ட ஆய்வின் உள்ளடக்கமாக இருந்தது.
- 1963ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து, தான் படித்த சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில் ஆசிரியர் பணியைத் தொடங்கினார். அப்போது ‘வளர்ச்சி குன்றிய பொருளாதாரங்களில் உற்பத்திக் காரணிகளின் ஒதுக்கீட்டில் சில சிக்கல்கள்’ என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் குரியன் சமர்ப்பித்தார்.
- அதன் வழியாக, நவசெவ்வியல் கோட்பாடுகளில், வளங்களின் ஒதுக்கீட்டுக்கான போதாமையைச் சுட்டிக்காட்டினார். இதனையே தனக்கு ஆசிரியராக இருந்த நோபல் பரிசுபெற்ற கென்னத் ஏரோவுக்கு ஒரு கடிதமாக எழுதினார். இந்தக் கடித உரையாடல்களின் முடிவில், கென்னத் ஏரோ ‘கூலி பற்றிக் கறாராகப் பேசினால், சமநிலைக் கூலி என்ற ஒன்று இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று ஒப்புக்கொண்டார்.
- முதன்மைப் பொருளாதாரக் கோட்பாடுகளை நன்கு கற்றுத் தேறிய குரியன், அது இந்தியப் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு ஏற்ற தீர்வைத் தர இயலாது என்ற முடிவுக்கு வருகிறார். அது மட்டுமல்ல, பொருளியலின் முதன்மைக் கோட்பாடுகள், வறுமைக்கான தீர்வுகளை முன்வைக்கப் போதுமானதாக இல்லை என்பதையும் கற்றுத் தெளிகிறார். நுண்ணியல், பேரியல் உள்ளிட்ட பல கோட்பாடுகளில், ஓர் இணக்கமின்மை இருப்பதையும் அவர் கண்டுணர்கிறார்.
புதிய இணைப்பு:
- தான் கற்றுத் தேறியதையும், தனது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்ததையும், தனது மாணவர்களிடம் கொண்டுசேர்த்தார். அதற்குப் பாடத்திட்டத்தில் ஒரு புதிய இணைப்பை உருவாக்கினார். இந்தியப் பொருளாதாரச் சிக்கல்கள் என்ற தலைப்பில் ஒரு புதிய பாடத்தை உருவாக்கினார்.
- அதன் வழியாக, இந்தியப் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க, பொருளாதாரக் கோட்பாடுகள் திறனற்று இருப்பதை மாணவர்கள் உணரும்படி செய்தார். இதே காலக்கட்டத்தில், இந்தியப் பொருளாதாரத்தின் திட்டமிட்ட வளர்ச்சியும் வளர்ச்சிப் பணிகளும் தொடங்கியிருந்தன. அப்போது இந்தியப் பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்க, இந்திய உழைப்பின் உபரியைப் புரிந்துகொள்ள, கூடுதல் பயிற்சியும் பார்வையும் வேண்டும் என்பதை குரியன் சுட்டிக்காட்டினார்.
- அப்படியான அவரது பார்வையின் அடிப்படையில், இந்தியக் கிராமப்புற உழைப்பாளி மக்களுக்கு வேலை உத்தரவாதச் சட்டம் ஒன்றின் தேவையை 1974ஆம் ஆண்டிலேயே பரிந்துரை செய்தவர் குரியன். இன்றைய நூறு நாள் வேலைத் திட்டத்தின் முதல் குரல் அல்லது முதல் சிந்தனை குரியனுடையது என்று கூறலாம்.
வளர்ச்சியும் வறுமையும்:
- ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டமிடுதல், வறுமை ஒழிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்தது. பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து, வறுமையை ஒழிக்க முடியும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. எது வளர்ச்சி என்பதைப் பற்றிய குரியனின் மதிப்பீடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
- பொருளாதார வளர்ச்சி என்பது, சொத்துடைமைக்கு ஏற்றாற்போலவே அதிகரிக்கும். வளர்ச்சியின் பயன்கள் சமமாகச் சென்று சேராது. இதன் காரணமாகச் சிலரது வளர்ச்சி பன்மடங்கு அதிகரிக்கும். பலரது வாழ்க்கையில் வறுமை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும் என்று கணித்தார்.
- குரியனின் மிகப்பெரிய கண்டறிதல் என அவரே கருதுவது, ‘பெரிய பெரிய பொருளாதாரக் கோட்பாடுகள் இன்றி, உற்பத்தியின் பகிர்வையும், வளங்களின் பங்கீட்டையும் திறம்படக் கட்டுப்படுத்தி, சமனற்ற வளர்ச்சியைக் குறைக்க முடியும்’ என்கிற முடிவுக்கு வந்தது.
- நாட்டில் நிலவும் சந்தையில்லாப் பரிவர்த்தனை, பொருளியல் கோட்பாடுகளைப் பயனற்றுப் போகச் செய்கிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். இதன் காரணமாக, ‘உண்மையான வாழ்க்கை சார்ந்த பொருளாதாரம்’ (Real life Economics) என்கிற மாற்று அணுகுமுறையைக் கையாள நேரிட்டதாக குரியன் கூறுகிறார்.
- இவ்வாறு, மாற்று அணுகுமுறைகளைக் கையாண்டு, தனது ஆயுள்காலம் முழுவதும், வறுமை, திட்டமிடல், சமூக மாற்றம், தமிழ்நாட்டின் கிராமப்புற மாறுதல்கள், வளர்ச்சி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வந்தார். மால்கம் ஆதிசேஷய்யா சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைத் தொடங்கியபோது, 1978ஆம் ஆண்டு முதல் அதன் இயக்குநராகப் பொறுப்பேற்றார் குரியன்.
- அதன் பின்னர், பல்கலைக்கழக மானியக் குழு, இந்திய சமூக அறிவியல் கழகம் ஆகியவற்றில் மதிப்புறு பேராசிரியராக விளங்கினார். தனது 72ஆவது வயதில் கல்விசார் பணிகளில் இருந்து விடைபெற்றார். அதன் பின்னர், நூல் மதிப்புரைகள் எழுதுவதையும், புத்தகங்கள் எழுதுவதையும் தனது கடமையாகச் செய்துவந்தார்.
- பொருளியல் மாணவராகத் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, மாற்றுப் பொருளியல் சிந்தனையுடன், பொருளியல் பிரச்சினைகளைத் தீர்க்க மாற்று அணுகுமுறைகளை ஆராய்ந்து கண்டறிந்த சி.டி.குரியனின் வாழ்க்கை, மகத்தான ஒன்று. அவர் படைத்தளித்த ஒவ்வொரு நூலும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அவர் இறுதியாக 2018ஆம் ஆண்டில் கொண்டுவந்த Economics of Real life: A New Exposition என்ற நூல் சமகால இந்தியப் பொருளாதாரத்தை எப்படிக் கற்றுக்கொள்ள வேண்டும், கற்பிக்க வேண்டும் என்பதற்குச் சிறந்த ஒரு பங்களிப்பு.
- அதைக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பாடமாக வைப்பதன் மூலம் அவரது உழைப்பின் சாரத்தை வருங்காலத் தலைமுறை பயன்படுத்திக்கொள்ள முடியும். அவரது நினைவாக இந்தப் பணியை தமிழ்நாடு அரசின் உயர் கல்வித் துறை, தனது உயர் கல்வி நிறுவனங்களுக்குப் பரிந்துரை செய்யலாம். மாணவர்கள், ஆசிரியர்கள், கோட்பாட்டாளர்கள், குடிமைச் சமூகம், கொள்கை வகுப்பாளர்கள் என அனைவரும் அவரைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
நன்றி: இந்து தமிழ் திசை (30 – 07 – 2024)