- பிரபல சமூக விஞ்ஞானியான ஜேம்ஸ் சி.ஸ்காட் 2024 ஜூலை 19 அன்று, தனது 87ஆவது வயதில் காலமாகிவிட்டார். நியூஜெர்சியில் பிறந்த இவர், ஒன்பது வயதில் தன்னுடைய தந்தையை இழந்து, பின் குவாக்கர்ஸ் என்னும் நண்பர்கள் சமய சபை நடத்தும் பள்ளியில் பயின்றார். யேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்து, பின் யேலுக்குத் திரும்பி 45 ஆண்டுகள் அரசியல், மானுடவியல் துறையில் பேராசிரியராக இருந்தார்.
- பல்கலைக்கழக வளாகத்தில் போர் எதிர்ப்பாளராக அறியப்பட்ட இவர், மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குச் சென்று இனவியல் சார் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக, ஒரு மலேசியக் கிராமத்தில் இரண்டு ஆண்டுகள் தங்கி விவசாயிகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டார். 1958-59 ஆண்டுகளில் ரோட்டரி நிதிநல்கை உதவியுடன் மயன்மார் சென்று, அங்கு ரங்கூன் தேசிய மாணவர் இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தன்னுடைய அரசியல் சித்தாந்தத்தை ‘Two Cheers for Anarchism’ (அதிகார மையங்களுக்கு எதிரான அரசியல் கோட்பாட்டை வாழ்த்துதல்) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். அதிகாரத்தில் இருப்பவர்களிடம் அடிபணியாமல் இருப்பதே பின்னாள்களில் எதிர்ப்பு இயக்கங்களில் ஈடுபட மக்களைத் தயார் படுத்தும் என நம்பினார்.
- இதுவரை தான் தொடாத ஒரு புது முயற்சியாக, 1988இல் ‘Seeing like a State: How certain schemes to improve the human conditions have failed’ (அரசின் பார்வை: எவ்வாறு சில மனித மேம்பாட்டுத் திட்டங்கள் தோற்கின்றன) என்கிற நூலை வெளியிட்டார். இந்நூலில், அரசு நல்லதே செய்ய முயல்வதாகவும் அதிகாரவர்க்கத்தின் செயல்பாடுகளால் அவை தோல்வியில் முடிவதாகவும் கருதுகிறார். மக்களின் அன்றாட வாழ்க்கை முறை சார்ந்த அறிவை அரசுகள் புரிந்துகொள்ளத் தவறுவதே சமூக நலன், மேம்பாடு சார்ந்த திட்டங்கள் தோல்வியடையக் காரணமாகிறது என விளக்குகிறார். சமூக நலத்திட்டங்கள் வழியாக சமூகப் பாதுகாப்பை உறுதிசெய்யாத அரசுகளை வன்மையாகவும் கண்டிக்கிறார்.
- மலேசியக் கிராமத்தில் தங்கி ஆய்வு நடத்திய பின்னரே, மூன்றாம் உலக நாடுகளின் தலைசிறந்த அறிஞராக இவர் அறியப்பட்டார். இயந்திரங்களைப் பயன்படுத்த வற்புறுத்தப்பட்டதாலும், வரிகள் உயர்த்தப்பட்டதாலும், காலம் தாழ்த்துவது, நாசவேலை புரிவது போன்ற சிறுசிறு எதிர்ப்புகளை மலேசிய விவசாயிகள் நிகழ்த்தினர். இக்காலப் பின்னணியில்தான் இவருடைய ‘Weapons of the weak: Everyday forms of Peasant Resistance’ (1985) (பலவீனர்களின் ஆயுதம்: விவசாயிகளுடைய எதிர்ப்பின் அன்றாட வடிவங்கள்) என்கிற நூல் பிரபலமானது.
- 1980களின் தொடக்கத்தில் பேராசிரியர் ரனஜித் குஹா தன்னுடைய விளிம்புநிலைப் பார்வைகளை ‘Subaltern Studies: Writings on South Asian History and Society’ (விளிம்புநிலை ஆய்வு: தெற்காசிய வரலாறு, சமூகம் ஆகியவை பற்றிய எழுத்து) என்கிற நூலில் தொகுத்தார். அதுவே பின்னாளில் ‘விளிம்புநிலை அறிக்கை’யாக (Subaltern Manifesto) அறியப்பட்டது. இதே கொள்கையை ஜேம்ஸ் சி.ஸ்காட்டும் ‘எதிர்ப்புவாதம்’ என்ற அடிப்படையில் பார்க்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள கான்பெர்ரா தேசியப் பல்கலைக்கழகத்தில் இருவரும் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது. மேலாதிக்கத்தை எதிர்க்கும் விவசாயிகள் மேல் இருவரும் பரிவான பார்வையைக் கொண்டிருந்தனர். எதிர்ப்பின்மை என்பது அடிமைத்தனத்தை ஏற்றுக்கொண்டதாகிவிடாது என்கிற கருத்தை ஸ்காட் முழுமையாக நம்பினார்.
- இவருடைய ‘Dominion and the Arts of Resistance’ (ஆதிக்கமும் எதிர்ப்பு என்னும் கலையும்), ‘Against the Grain’ (தானியத்தை எதிர்த்து) ஆகிய நூல்கள், மனிதன் ஏன் வேட்டைத் தொழிலைக் கைவிட்டு விலங்குகள், பயிர்களை நம்பிய நிலைத்த வாழ்வை ஏற்றான் என்கிற கேள்விக்கு விடையாக அமைந்துள்ளன. விவசாயக் குடிகளைப் புரிந்துகொள்வதிலேயே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த இவர், விவசாயப் பெருமக்கள் கையாண்ட மேலாதிக்க எதிர்ப்பின் வழிமுறைகளைப் பதிவுசெய்து சென்றிருக்கிறார்.
நன்றி: இந்து தமிழ் திசை (11 – 08 – 2024)