TNPSC Thervupettagam

அஞ்சலி: தணிகைச்செல்வன்

November 3 , 2024 63 days 70 0

அஞ்சலி: தணிகைச்செல்வன்

  • கடந்த 70 ஆண்டு​களுக்கும் மேலாகத் தொடர்ந்து தமிழ்க் கவிதையைக் காத்திரமாக எழுதிவந்தவர் கவிஞர் தணிகைச் செல்வன். 1970களில் தமிழக முற்போக்கு மேடைகளில் ஓங்கியொலித்த கவிதைக் குரலுக்குச் சொந்தக்​காரர் இவர்.
  • 1935ஆம் ஆண்டில் செங்கல்​பட்டு மாவட்​டத்தில் பாலாற்​றங்​கரையின் அருகே​யுள்ள சிறிய கிராமமான உறைக்​காட்டுப்​பேட்​டை​யில், எளிய நெசவாளர் குடும்பத்தில் தணிகைச்​செல்வன் பிறந்​தார். சிறிய வயதிலேயே புத்தகங்கள் படிப்​பதில் ஆர்வத்​துடன் இருந்​தவர். படிக்கிற காலத்​திலேயே கவிதைகள் எழுதினார். ‘தமிழ், கம்பீரமான மொழி. அம்மொழியில் கவிதை எழுது​வதென்பதே எனக்கான பெருமை’ என்று சொன்னதோடு, தன் இயற்பெயரான எத்திராஜன் என்பதை ‘தணிகைச்​செல்வன்’ என்று மாற்றிக்​கொண்​டார்.
  • மருத்​துவத் துறையில் பணியாற்றிக்​கொண்​டிருந்த தணிகைச்​செல்​வனுக்கு, பொதுவுடைமைக் கொள்கை​களின் மீது ஈடுபாடு உண்டானது. ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் 1958இல் தன்னை இணைத்​துக்​கொண்ட அவர், தான் ஏற்றுக்​கொண்ட சித்தாந்​தத்தைக் கவிதைகளாக்கி மேடைகளில் முழங்​கினார். 1962இல் நடைபெற்ற இந்தி​ய-சீனப் போரின் காரணமாக, யாரை ஆதரிப்பது எனும் முரண்​பாட்டால் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாகப் பிரிந்தது. அப்போது மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை இணைத்​துக்​கொண்​டார். மதுரையில் நடைபெற்ற அக்கட்​சியின் முதல் மாநில மாநாட்டில் செங்கல்​பட்டு மாவட்டப் பிரதி​நி​தி​யாகவும் பங்கேற்றார்.
  • கருத்​தியல் தளத்தில் உறுதியாக நின்று எரிமலையின் சீற்றத்தோடு வெளிப்​படும் தணிகைச்​செல்​வனின் கவிதைகளி​லுள்ள எளிய சொற்கள், கேட்போர் மனதில் ஆழப் பதிந்தன. ‘காவிரியைக் கடக்க/ஓடம் தேவையில்லை - இனி/ஒட்டகம் போதும்..!’ என்றெழு​தினார். ‘ஒருபுறம் கட்டுக்​கட்​டாய்க்​/கள்ள நோட்டு/மறு​புறம் எட்டாய் மடிக்​கப்​பட்ட/ கசங்கிய ஒற்றை ரூபாய் நோட்டு/இது என்ன உண்டி​யா?/இல்லை இதுதான் இண்டியா!’ என ஏற்றத்​தாழ்வான சமூக நிலை கண்டு மனம் கொதித்​தெழுந்தார் தணிகைச்​செல்வன். மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் அவர் வாசித்த கவிதையொன்று பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்த நாளே அந்தக் கவிதை புத்தகமாக அச்சிடப்பட்டு, மாநாட்டில் பங்கேற்​றவர்​களுக்கு வழங்கப்​பட்டது புது வரலாறாகும். இந்தியச் சமூகத்தில் காணப்​படும் முரண்​பாடுகளை நீக்க வேண்டும் என்கிற பேராவலில் எண்ணற்ற கவிதைகளைப் படைத்​தார். பொதுவுடைமைத் தத்து​வத்தின் வழிநின்று செயல்பட்ட போதிலும், அதன் செயல்​பாடு​களைச் சில நேரங்​களில் விமர்​சிக்​கவும் செய்தார்.
  • ‘இந்தியா என்பது/வர்க்​கங்​களால் மட்டுமல்ல/வர்ணங்​களாலும்​/பிளவுபட்​டிருக்​கிறது/இறக்​குமதி சித்தாந்​தங்​களால்​/இங்கு புரட்சி வராது’ என்றெழுதி, ‘மண்ணுக்​கேற்ற மார்க்​சியம் வேண்டும்’ என்பதைத் தொடர்ந்து வலியுறுத்​தினார்.
  • இந்தியா​வுக்கான சித்தாந்​த​மும், அதற்கான செயல்​திட்​டமும் தனியாகத் தேவை என்பதைப் பல நேரங்​களிலும் சொல்லிவந்​தார்; பலரிடத்தும் அதை விவாதித்​தார். பலர் மாற்றுக் கருத்து​களைச் சொன்னபோதிலும், தன் மனதிற்குச் சரியென்று பட்டத்தையே பேசியதோடு, தன் கவிதைகளிலும் அதனையே பிரதிபலித்தார் தணிகைச்​செல்வன்.
  • 1975இல் மதுரையில் இடதுசாரி எழுத்​தாளர்கள் ஒன்றுகூடி உருவாக்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்​தாளர் சங்கத்தின் முன்னோடிகளுள் ஒருவராகவும் இருந்​தார். முதல் மாநில மாநாட்டின் கொள்கை அறிக்கையை உருவாக்கு​வதில் முக்கியப் பங்காற்றியதோடு, மாநிலச் செயற்குழு உறுப்​பின​ராகவும் தேர்வானார்.
  • அவசர நிலைக் காலத்தில் அவர் எழுதிய ‘தீப்​பொறியே கிளம்பி வா’ எனும் கவிதை, வாசித்த அனைவரையும் உத்வேகம் கொள்ள வைத்தது. அதே ஆண்டில் ‘தணிகைச்​செல்வன் கவிதைகள்’ எனும் அவரது முதல் கவிதை நூல் வெளியானது. ‘செம்​மலர்’, ‘குடியரசு’, ‘முரசொலி’, ‘நந்தன்’, ‘தமிழர் கண்ணோட்​டம்’, ‘தாய்​மண்’, ‘சிந்​தனை​யாளன்’, ‘தினமணிக் ​க​திர்’, ‘தென்​மொழி’, ‘கவிதாசரண்’ ஆகிய இதழ்களில் கவிதைகளை எழுதினார். அவரது கவிதைகள் ‘சமூகசேவகி சேரிக்கு வந்தாள்’ (1978), ‘பூபாளம்’ (1989), ‘இந்தியாவும் நானும்’ (1983), ‘சிவப்​ப​தி​காரம்’ (1986), ‘உலக்கை​யிலும் பூப்பூக்​கும்’ (1991), ‘சகாராவின் தாகம்’ (1997) என 7 தொகுதிகளாக வெளிவந்​துள்ளன. இவை அனைத்தும் ஒரே நூலாகத் தொகுக்​கப்​பட்டு, 2001இல் ‘தணிகைச்​செல்வன் கவிதைகள்’ எனும் பெருந்​தொகுப்​பாகவும் வெளியானது.
  • ‘இலக்கும் இலக்கிய​மும்’, ‘கிழக்கு முதல் கிழக்கு வரை’, ‘கவிதைகளில் அவன் மானிடன்’, ‘தத்துவத் தலைமை’ ஆகிய கட்டுரை நூல்களையும் எழுதினார். ஈழத் தமிழர்கள் பிரச்​சினையில் கொண்ட கருத்து முரண்​பாடுகள் காரணமாக, சிபிஎம் கட்சியில்​இருந்​தும், தமுஎச-​விலிருந்தும் விலகி நின்றபோதிலும், தொடர்ந்து கவிதைகளை எழுதி வந்தார். ‘எல்லாம் இழந்தோம்​/இழப்​ப​தற்கு ஏதுமில்லை/ கணவனை இழந்த​தாலே/கண்ணகி சீற்றம் நியாயம்​/துணியினை இழந்த​தாலே/​திரௌபதை சபதம் நியாயம்​/தனது மண் இழந்த​தாலே/தரு​மனின் யுத்தம் நியாயம்​/அனைத்​தையும் இழந்த/எங்கள் ஆவேசம் நியாயம்! நியாயம்..!’ எனப் போராடுகிற மக்களின் குரலைத் தனது கவிதைகளில் எதிரொலித்​தார். கவிதைகளில் வெளிப்​படும் ஆவேசமும் அடர்த்தியும் அவரது கவிதைகளை வாசிப்​பவர்​களின் உள்ளங்​களிலும் கவியரங்​கு​களில் கேட்பவர்​களின் மனங்களிலும் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கின.
  • 1980களில் தமிழகக் கவியரங்க மேடைகளில் முழங்கிய அவரது குரல், பல இளைஞர்​களைக் கவிதைப் பக்கம் ஈர்த்தது. செயற்​கையான மேல்பூச்​சுகளோ, தேவையற்ற ஒப்பனைகளோ இல்லாத கவிதைகளைக் கேட்ட உழைக்கும் மக்களிடத்தும் அவரது கவிதைகள் நெருக்​க​மாயின. தமிழ் மொழி, தமிழ்த் தேசியம், திராவிடம், பெரியார், அம்பேத்கர், இடதுசாரி இலக்கியத் தளங்களில் தொடர்ந்து இயங்கிவந்த கவிஞர் தணிகைச்​செல்வன், தனது கலை-இலக்​கியச் செயல்​பாடு​களுக்​காகத் தமிழகமெங்கும் பயணித்​தார். அரசியல் கூர்மையும் அறச்சீற்​றமும்மிக்க கவிதைகளால் உழைக்கும் வர்க்​கத்​திற்கு உரமூட்டி வந்த தணிகைச்​செல்வன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபகாலமாக ‘செம்​மலர்’ இதழிலும் மீண்டும் கவிதைகளை எழுதி வந்தார்.
  • உலகு தழுவிய நிகழ்வுகள் தொடங்கி, உள்ளூர்ப் போராட்​டங்கள் வரை அனைத்​தையும் தன் கவிதைகளில் பதிவுசெய்து வந்த தணிகைச்​செல்வன், ‘தமிழின் உயிர் புத்தகத்தில் வாழ்வ​தில்​லீங்க - வாழும் தமிழர்​களின் உயிரிலேதான் தமிழும் வாழுங்க’ என்றெழு​தினார். தணிகைச்​செல்​வனின் கவிதைகளும் உழைக்கும் மக்களின் வாழ்வோடு கலந்து என்றும் வாழுமென்பது நிச்சயம்​.

நன்றி: இந்து தமிழ் திசை (03 – 11 – 2024)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்