TNPSC Thervupettagam

அஞ்சல் வாக்கு முறையை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்

March 16 , 2021 1232 days 540 0
  • தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் வாக்களிப்பதற்கு உரிய கால அவகாசத்தை அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் அளித்துள்ள உத்தரவு முக்கியத்துவம் வாய்ந்தது.
  • தமிழ்நாடு உயர்நிலை, மேனிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர் சங்கம் சார்பில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களால் அனுப்பிவைக்கப்படும் அஞ்சல் வாக்குகள் சில சமயங்களில் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தொடர்புடைய அதிகாரிகளைச் சென்றுசேர்வதாகக் கூறப்பட்டது.
  • 2019 மக்களவைத் தேர்தலின்போது 4,35,000 அஞ்சல் வாக்குகளுக்குத் தேர்தல் ஆணையம் வாய்ப்பளித்திருந்தாலும் போதுமான தகவல்கள் அளிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் 12,915 அஞ்சல் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
  • அப்போதே அஞ்சல் வாக்குகளைக் குறித்த குழப்பங்களைத் தவிர்க்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
  • தற்போது ஆசிரியர் சங்கம் தொடர்ந்த வழக்கில், தேர்தலுக்கான கடைசிக் கட்டப் பயிற்சியின்போதே அஞ்சல் வாக்குக்கான விண்ணப்பங்கள் அளிக்கப்படுவதாகவும் கால தாமதத்துக்கு அதுவும் ஒரு காரணமாக இருப்பதாகவும் சொல்லப்பட்டதை ஏற்றுக்கொண்டுள்ள நீதிமன்றம், வாக்களிக்கத் தவறியவர்களின் எண்ணிக்கை 10%-க்குக் குறையாமல் இருப்பதை உறுதிசெய்ய உத்தரவிட்டுள்ளது.
  • ஏப்ரல் 6-ல் நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள், கரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கும் ரயில்வே, கப்பல், விமான ஓட்டுநர்களுக்கும் அத்துறைகளைச் சேர்ந்த சில ஊழியர்களுக்கும் அஞ்சல் வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
  • அதே நேரத்தில், தங்களுக்கு அத்தகைய வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று போக்குவரத்துக் கழக ஊழியர்கள் குறைபட்டுக்கொள்வதைப் பார்க்க முடிகிறது.
  • மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நகரங்களுக்கிடையே ஓடும் நெடுந்தொலைவுப் பேருந்துகளில் பணியாற்றும் ஓட்டுநர்களுக்கும் நடத்துநர்களுக்கும் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்புகள் தற்போது இல்லை.
  • அதுபோலவே அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் மருத்துவப் பணியாளர்கள், பால்வளத் துறை ஊழியர்கள், மின்சாரத் துறை ஊழியர்கள் ஆகியோருக்கும் அஞ்சல் வாக்கு செலுத்தும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
  • தங்களது தொகுதியிலிருந்து நெடுந்தொலைவில் பணியாற்றும் அத்தியாவசியப் பணிகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் அஞ்சல் வாக்கைச் செலுத்த வாய்ப்பளிக்க வேண்டும்.
  • அமைப்புசார்ந்த ஊழியர்களே தங்களது வாக்குகளை முழுமையாக அளிக்க வாய்ப்புகளை உருவாக்காத நிலையில், 100% வாக்குப் பதிவு என்ற இலக்குக்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்.

நன்றி: இந்து தமிழ் திசை (16 - 03 - 2021)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்