TNPSC Thervupettagam

அடிப்படை மாறாமல் கல்வியில் மாற்றம் சாத்தியமா?

July 25 , 2022 745 days 451 0
  • தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு கல்வித் துறையில் புதிய முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பள்ளிக்கு உள்ளே ‘எண்ணும் எழுத்தும் இயக்கம்’, வெளியே ‘இல்லம் தேடிக் கல்வி மையம்’ எனப் பல முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன.
  • குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் என்கிற தலைப்பிலேயே ஒரு சுற்றறிக்கை வந்தபோது வாசிப்போர் நெஞ்சம் குளிர்ந்தது. ஆனால், இவற்றுடன் சேர்ந்து ‘ஆசிரியர்கள் எவ்வாறு கற்பிக்கிறார்கள்’ என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டும், இல்லையா?
  • பாடத்திட்டம், பாடநூல் தயாரிப்பு, கற்றல் கற்பித்தல் எதிர்பார்ப்புகள் குறித்து யோசிக்க வேண்டும். எந்த அடிப்படையில் இவை எழுதப்படுகின்றன? எந்த அடிப்படையில் இந்த இலக்குகள் எதிர்பார்க்கப்படுகின்றன? ஒவ்வொரு வகுப்புக்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு ஆசிரியர் இருப்பார்.
  • ஒதுக்கீடு செய்யப்பட்ட பாடவேளைகளில் வரையறுக்கப்பட்டபடி அந்தந்தப் பாடங்களை நடத்தி முடித்துவிடுகிறார் அல்லது நடத்தி முடித்துவிட வேண்டும். அந்த வகையில், சொன்னபடி செய்து முடிக்கும் விதமான கட்டமைப்பை நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம் அல்லது இந்தப் பாடநூல்கள் சென்று சேரும் முன்பு, அதற்கான கட்டமைப்புகள் உருவாகி விடும் என்கிற நம்பிக்கையில் அவை உருவாக்கப்படுகின்றன.
  • சரி, இவற்றையெல்லாம் செயல்படுத்தும் வகுப்பறைகள் என்ன சொல்கின்றன. கள நிலவரம் எப்படியிருக்கிறது? தமிழ்நாட்டின் 10 சதவீதப் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் ஐந்து வகுப்புக் குழந்தைகளையும் கையாள்கிறார். 70 சதவீதப் பள்ளிகளில் தலா இரண்டு ஆசிரியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகுப்புக் குழந்தைகளுக்குத் தன்னால் இயன்ற அளவு கற்பித்துக் கொண்டிருக்கிறார்.
  • எத்தனை அதிகாரிகள் வந்தாலும், எத்தனை ஆணைகள் போட்டாலும், தங்களால் முடியாது என்பது தெரிந்தாலும்கூட, பாவம்! அந்த சேவல்கள் முட்டை போட முயன்றுகொண்டே இருக்கின்றன. அதிகாரிகள் வந்து மிரட்டும்போதெல்லாம் அடுத்த முறை வரும்போது கண்டிப்பாக முட்டை போடுகிறேன் என்று உறுதியளிக்கின்றன. இந்த நாடகம் பல காலமாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது! ஆனால், கற்பித்தல் சார்ந்த அடிப்படைக் கோளாறு மட்டும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

அடிப்படையே பிரச்சினை

  • தரமான கல்விக்கு முதல், முக்கியமான நிபந்தனை போதுமான பள்ளிகள், போதுமான ஆசிரியர்கள். தமிழகத்தில் தேவையான அளவுக்குப் பள்ளிகள் உள்ளன. ஆனால், ஆசிரியர்கள் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆசிரியர் நியமனங்கள் நடைபெறவில்லை.
  • பல்லாயிரக்கணக்கான காலிப் பணியிடங்களைச் சமாளித்தபடியே பல கல்வி ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. லட்சக்கணக்கான குழந்தைகள் பள்ளிக் கல்வியை முடித்து வெளியேறிய படியே இருக்கின்றனர். கல்வித் துறைக்கு அது புள்ளிவிவரக் கணக்கு. கடந்துபோன குழந்தைகளுக்கோ அதுதான் வாழ்க்கை!
  • அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி மையங்களில் ஆசிரியர்கள் இல்லை. அரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்ட ஆங்கிலவழிப் பிரிவுகளுக்குப் பல இடங்களில் அதற்கான ஆசிரியர்கள் இல்லை. இருக்கிற ஆசிரியர்களின் பணி நிலை மகிழ்ச்சிகரமாக இல்லை.
  • கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு இத்தனை ஆண்டு காலத்தில் ஒரு பயிற்சியும் வழங்கப் படவில்லை என்பது வேதனையான உண்மை. இவை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாக ஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தைத் தட்டையாக உள்வாங்கிக்கொள்வதால், குழந்தைகளைப் புரிந்து கொள்வதிலும் பெரிதும் பின்தங்கியிருக்கிறோம்.
  • மழலையர் வகுப்பு தொடங்கி முதல் மூன்று வகுப்புகளுக்கு ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:10 என்றும், 4, 5 வகுப்புகளுக்கு 1:20 என்றும், மேல் வகுப்புகளுக்கு 1:30 என்றும் இருக்க வேண்டும். குழந்தைகளுக்குத் தரமான கல்வி கிடைக்கவும், தனிக் கவனம் செலுத்தப்படவும், தனித்திறன்கள் வளர்த்தெடுக்கப்படவும் கூடுதலாகக் கவனம் செலுத்தப்பட உரிய வகையில் ஆசிரியர்கள் நியமித்தால்தான் முடியும்.
  • கல்வி, சுகாதாரத்துக்கு முன்னுரிமை கொடுக்கின்ற நாடுகள்தான் உலகளாவிய தரநிலைகளில் சிறப்பிடம் பெறுகின்றன. எனவே, கல்விக்குச் செலவழிக்க அரசு கணக்குப் பார்க்கக் கூடாது. அது மனிதவள மேம்பாட்டுக்கான முதலீடு. எனவே, நிரந்தர ஆசிரியர்களாக நியமிப்பதே இதற்குத் தீர்வு.

என்ன தேவை?

  • செயல்வழிக் கற்றல், படைப்பாற்றல் கல்வி, எண்ணும் எழுத்தும் என கல்வித் துறையில் என்னென்ன மாற்றங்கள், புதுமைகள் கொண்டுவந்தாலும் கல்வி குறித்த அடிப்படைப் பார்வை மாறாமல், எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது. மாநில கல்விக் கொள்கை உருவாக்கக் குழு சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. குழுவின் முழு முதல் கவனம் இந்தத் திசையில் இருந்தால் நல்லது.
  • அதேபோல், சமூகத்தின் போக்குக்கு எதிர்த்திசையில் கல்வி இலக்குகள் அமைய முடியாது. நல்ல லட்சியங்களை இலக்காகக் கொண்ட சமுதாயம் மட்டுமே கல்வியில் உண்மையான விளைவுகளை எதிர்பார்க்க முடியும். அந்த வகையில், லட்சியங்கள் நிறைவேறுவதற்கு, இலக்குகளில் தெளிவும் திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்படவும் வேண்டும். மாநில அரசின் புதிய கல்விக் கொள்கை அந்த நோக்கில் அமைய வேண்டும்.

நன்றி: தி இந்து (25 – 07 – 2022)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்