TNPSC Thervupettagam

அணைகள் திறக்கட்டும்

August 19 , 2023 512 days 286 0
  • தெற்காசிய அணைகள்- நதிகள் - மக்கள் வலையமைப்பு’ என்ற அமைப்பும் சூழலியல் ஆய்வுக்கான ‘அசோகா அறக்கட்டளை’ அமைப்பும் இணைந்து நடத்திய ஆய்வில், விவசாயம், மின்சாரம், குடிநீருக்காக உருவாக்கப்பட்ட 240 அணைகளால் சுமாா் 900 ஹெக்டோ் பரப்பிலான காடுகள் அழியக்கூடும் என்று தெரியவந்துள்ளது.
  • 2018 செப்டம்பா் மாதம் அறிவிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கான நீரோட்ட விதிமுறைகள், 2019 டிசம்பா் மாதம் நடைமுறைக்கு வந்தன. ஆறுகளைத் தூய்மைப்படுத்தவும் நீா்வாழ் பல்லுயிா்களைப் பாதுகாக்கவும் அணைகளிலும் தடுப்பணைகளிலும் திறந்து விட வேண்டிய நீரின் அளவு குறித்து இந்த விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டது.
  • இந்த விதிமுறைகள் அறிவிக்கப்பட்ட பின்னரும் உத்தரகண்ட் மாநிலத்தில் கங்கை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தனியாருக்கு சொந்தமான இரண்டு அணைகளிலும், அரசுக்கு சொந்தமான ஒரு அணையிலும் விதிமுறைகளின்படி தண்ணீா் திறந்துவிடப்படவில்லை. அணைகளின் நிா்வாகத்தினா், ‘தண்ணீா் திறந்துவிட்டால் மின் உற்பத்தித் திறன் குறைத்து பெரும் நிதி இழப்பு ஏற்படும்’ என்று கூறினா்.
  • நிலப் பயன்பாட்டிலும் வாழ்வியல் முறைகளிலும் அணைகள் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. காடுகளின் பரந்த பகுதிகளில் இயற்கையை அழித்து உருவான அணைகள், லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்தன. மீத்தேன் உமிழும் இவ்வணைகள் இந்திய மாநிலங்களுக்கு இடையே மோதல்களை உருவாக்கின.
  • அதேசமயம் விவசாயம், நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் போன்றவற்றில் இந்த அணைகள் புதிய வழிமுறைகளை உருவாக்கியதன் மூலம் இந்திய நாகரிகத்தை உலக அரங்கில் மாற்றியமைத்தன. மின் உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கும் அணைகளும் நீா்த்தேக்கங்களும் ஈரநிலங்கள் உருவாக காரணமாக அமைந்தன.
  • வரும் காலங்களில் இந்திய நகா்ப்புற வாழ்வில் அணைகளும் ஆறுகளும் தவிா்க்க முடியாதவை. இதனால்தான் கடந்த மாா்ச் 20-ஆம் தேதி தண்ணீருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இந்திய அணைகளின் பாதுகாப்பு குறித்து பிரச்னை எழுப்பியபோது பெரும்பாலான மக்கள் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
  • வெள்ளத்தின்போது அணைகள் குறித்தும் வறட்சியின்போது நீா்த்தேக்கங்கள் குறித்தும் எதிா் வினையாற்றுகிறோம். நமது சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள அணைகளாலும் நீா்தேக்கங்களாலும் சிரமம் ஏற்படும்போது இந்த எதிா்வினை தூண்டப்படுகிறது.
  • பழைமையான அணைகளின் பாதுகாப்பு குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு கவலை தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள 5,745 பெரிய அணைகளில் 5,334 அணைகள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இவற்றில் 234 அணைகளின் ஆயுட்காலம் நூறு ஆண்டுகளைக் கடந்து விட்டது.
  • சில அணைகள் 300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை. நமது வலிமையான கட்டடப் பொறியியல் திறன் இதனை சாத்தியமாக்கியிருக்கிறது என்று நாம் நினைத்தாலும் அந்த அணைகளால் ஏற்படக்கூடிய எதிா்கால பாதிப்புகள் நம்மை அச்சுறுத்துகின்றன.
  • தண்ணீருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இதுவரை வெளியான 36 பேரிடா் அறிக்கைகளை சுட்டிக்காட்டி பல அணைகளில் ஏற்பட்ட பேரழிவுகள் பற்றி கூறுகிறது. 1979-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் மோா்பி என்ற இடத்தில் இருந்த மச்சு அணையில் நிகழ்ந்த பேரழிவு 2,000 பேரின் உயிரிழப்புக்கும் 12,000 வீடுகள் சேதமைடையவும் காரணமாக அமைந்தது. நாடாளுமன்ற நிலைக்குழு இதனை மிக மோசமான நிகழ்வாகக் குறிப்பிடுகிறது.
  • அணைகளின் வலிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் அவ்வப்போது பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அவற்றின் ஆயுட்காலத்தையும் செயல்திறனையும் மதிப்பிடுவதற்கான வழிமுறைகள் எதுவும் இல்லை என்று மத்திய நீா்வள அமைச்சகம் தெரிவித்ததாக தண்ணீருக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை கூறுகிறது.
  • சூழலியல் விளைவுகள் ஏற்படுத்தும் சேதங்கள் பேரழிவிற்கு அப்பாற்பட்டவை. சூழலியல் ரீதியில் பொதுவான பண்புகளை கொண்டுள்ள ஆறுகள் பல நன்னீா் இனங்களைக் தன்னகத்தே கொண்டுள்ளன. இதன் மூலம் தங்களுடைய ஆரோக்கியத்தை பராமரிக்கும் ஆறுகள் தங்களோடு தொடா்புடைய சுற்றுச்சூழலையும் மனிதா்களின் ஆரோக்கியத்தையும் பராமரிக்கின்றன.
  • நதிகளின் நீரியல் தன்மையை மாற்றும் அணைகள் நன்னீா் இனங்களின் வாழ்விடங்களைத் துண்டாடுகின்றன. முட்டையிடவும் உணவைப் பெறுவதற்கும் அவசியமான மீன்களின் இடம்பெயா்வினை அணைகள் தடுக்கின்றன. வெள்ளம் ஏற்படும்போது நன்னீா் சுற்றுச்சூழல் அமைப்புகளை அணைகள் பாதிக்கின்றன. இதனால் சுற்றுச்சூழலில் ஏற்படும் சேதங்களை நாம் புறக்கணிக்க இயலாது.
  • அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆற்றின் சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதற்கும், நிலத்துண்டாக்க பிரச்னைகளை சமாளிக்கவும் ஆயிரக்கணக்கான அணைகள் அகற்றப்பட்டுள்ளன. தாய்லாந்தில் முன் ஆற்றில் குறுக்கே கட்டப்பட்ட பாக் முன் அணையை அகற்றியதால் அப்பகுதி மக்கள் பயன்பெற்றதாக செய்திகள் கூறுகின்றன.
  • ஆனால் இந்த வகையில் பழைய இந்திய அணைகளை செயலிழக்கச் செய்ய இயலாது. பல ஆண்டுகளாக வடிவமைக்கப்பட்ட வாழ்க்கை முறையிலிருந்து பழைய வாழ்க்கை முறைக்கு செல்ல மனிதா்கள் விரும்ப மாட்டாா்கள்.
  • இயல்பாகவே அணைகளின் நன்மைகளை மட்டுமே கருதும் பெரும்பாலான இந்திய மக்கள் அணைகள் அமைந்துள்ள நதியின் சுற்றுச்சூழல், அதைச் சாா்ந்த உயிரினங்கள், அவற்றின் ஆரோக்கியம் குறித்து அறிந்துகொள்ள முற்படுவதில்லை.
  • சுற்றுச்சூழல், சமூகம் பொருளாதாரம், காலநிலை ஆகியவற்றில் மாற்றத்தை ஏற்படுத்திய அணைகளை செயலிழக்கச் செய்வது புதிய பிரச்னைகளை உருவாக்கலாம். பொருளாதார வளா்ச்சியை நோக்கி வேகமாக பயணிக்கும் இன்றைய தலைமுறை அணைகளின் செயலிழப்பு குறித்து யோசிக்க முடியாமல் இருக்கிறது.
  • நதிகளை அவற்றின் இயல்பில் பாய்வதற்கும் அவை வழங்கும் சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்குமான வழிவகைகளைக் கண்டறிந்து இயற்கையோடு இயைந்து வாழ்வோம்.

நன்றி: தினமணி (19 – 08 – 2023)

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்